ஸ்ரீ முக்த சரிதம்








கோபியர்கள் கிருஷ்ணருக்கு முத்துக்கள் வழங்குவதற்கு மறுத்தல்.








ஒருநாள் துவாரகையில், அரசி சத்யபாமா கிருஷ்ணரிடம், “ நீங்கள் விருந்தாவனத்தின் தோட்டத்தில் முத்துக்களை விளைவித்த சுவாரசியமான கதையைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அதனை எனக்கு கூறுவீர்களா?” என்றாள்.
கிருஷ்ணர் கூறியதாவது :
கார்த்திகை மாதத்தில் தீபாவளி நாளன்று, ராதாராணியும் கோபியர்களும் மால்யஹார குண்டத்தில் ஒன்றுகூடினர். இதனை கிருஷ்ணருடைய கிளியான விசக்ஷ்ணா கிருஷ்ணரிடம் தெரிவித்தது. உடனே மால்யஹார குண்டத்திற்கு வந்த கிருஷ்ணர் அங்கு ராதாராணியும் அவளுடைய சகிகளும் (தோழிகளும்) அழகழகான முத்துக்களால் ஆரங்கள் செய்து கொண்டிருப்பதை கண்டார்.
கிருஷ்ணர் ராதை மற்றும் கோபியர்களிடம், நீங்கள் செய்து கொண்டிருக்கும் முத்து ஆபரணங்களில் சிலவற்றை தந்தால், நான் எனது பசுக்களான ஹரிணி மற்றும் ஹம்சியை அலங்கரிப்பேன் என்றார். அதற்கு கோபியர்கள் மறுத்துவிட்டனர். இருப்பினும் கிருஷ்ணர் கோபியர்களிடம், “தயவுசெய்து எனது பசுக்களுக்கு முத்துக்கள் கொடுங்கள்” என்று வேண்டினார்.
லலித சகி பையிலிருந்த முத்துக்களில் ஒரு உடைந்த முத்தை எடுத்துக் கொடுத்து, “இதனை வைத்துக் கொள்” என்றாள்.
இதனால் சியாமசுந்தரர் வருத்தமடைந்தார். உடனே அன்னை யசோதையிடம் சென்று, “நான் முத்துக்களை தோட்டத்தில் விளைவிக்க விரும்புகிறேன். எனவே எனக்கு சில முத்துக்கள் வேண்டும்” என்றார்.
அதற்கு யசோத மயி, கண்ணே ! முத்துக்களை நிலத்தில் விளைவிக்க முடியாது . முத்துக்கள் கடலிலிருந்து கிடைப்பவை” என்று கூறிபுன்னகைத்தாள்.
ஆனால் கோபாலனோ, “நான் நிலத்தில் நட்டு வைத்து வளர்ப்பேன். அப்பா வளர்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் விதைகளை நிலத்தில் விதைப்பதைப் பார்த்திருக்கிறேன். நானும் அதைப்போலவே முத்துக்களை விதைத்து வளர்ப்பேன்” என்று அடம்பிடித்தார்.
கிருஷ்ணர் முத்துக்களை விதைத்தல்








கிருஷ்ணருடைய பிடிவாதத்தைக் கண்ட யசோதா மயி அவனை சமாதானப்படுத்துவதற்காக சில முத்துக்களை அவனுக்கு கொடுத்தாள். அவனும் அதனை எடுத்துக் கொண்டு யமுனை கரைக்கு சென்று, குழிதோண்டி முத்துக்களை விதைத்தார். அதன்பிறகு கோபியர்களிடம் சென்று முத்துக்களை வளர்ப்பதற்காக பால் வாங்கிவருமாறு மதுமங்களிடம் சொன்னார்.
உடனே மதுமங்களும் ராதாராணி மற்றும் கோபியர்களிடம் சென்று கிருஷ்ணருடைய முத்துக்களை வளர்ப்பதற்கு பால் வேண்டும் என்றபோது கோபியர்கள் சிரித்தனர். இவ்வாறாக கேட்ட அனைவருமே சிரிக்கவே மதுமங்கள் திரும்பிவந்தார்.
உடனே கிருஷ்ணர் அன்னை யசோதையிடமே சென்று முத்துக்களை வளர்ப்பதற்கு பால் கேட்க அவளும் வேண்டிய அளவிற்கு தந்தாள். கிருஷ்ணரும் அதனை எடுத்துக் கொண்டு யமுனை கரைக்கு சென்று முத்துக்களை விதைத்த இடத்தில் பாலூற்றினார்.
சில நாட்களில் நிலத்திலிருந்து துளிர்கள் வெளிப்பட்டன. இதனால் கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்தார். கிருஷ்ணர் இதனை கோபியர்களிடம் தெரிவித்தபோது அவர்களும் வந்துபார்த்துவிட்டு, “இது முத்துக்களுக்கான துளிர் அல்ல, இது முள்ளுச் செடியே” என்று கூறி சிரித்தனர்.
கிருஷ்ணருடைய பெரியதான, அழகான முத்து கொடிகள்








சில நாட்களுக்கு பிறகு, செடியானது கிடுகிடுவென வளர்ந்து பரவி வண்ணமயான முத்துக்களுடன் பூத்துக் குலுங்கின. அந்த முத்துக்கள் அனைத்தும் சிறப்புமிக்கதாக அதனுடைய இனிமையான நறுமணத்தை விருந்தாவன தாமம் முழுவதையுமே பரப்பியது.
கிருஷ்ணர் கோபியர்களை பார்த்து, “எனது முத்துக்கள் அனைத்தும் உங்களுடைய முத்துக்களைவிட அளவிலும் பெரியது, நறுமணமும் உடையது” என்றுகூறி சிரித்தார். இதனால் கோபியர்களிடம் போட்டி மனப்பான்மை உருவாகியது. எனவே அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, கிருஷ்ணருடைய முத்துக்களைவிட சிறப்பான முத்துக்களை வளர்த்துக் காண்பிப்போம் என்று சபதம் செய்தனர்.
உடனடியாக தங்களுடைய முத்து ஆபரணங்கள் அனைத்தையும் நிலத்தில் விதைத்தனர். மேலும் தங்களுடைய இல்லங்களுக்கு சென்று வீட்டில் இருக்கும் அனைத்து முத்துக்களையும் கொண்டுவந்து நட்டுவைத்து. அவர்கள் தினமும் மூன்று வேளை அவைகளுக்கு பால், தயிர், வெண்ணைய், நெய் என்று ஊற்றிவந்தனர்.
சிலநாட்களுக்குபிறகு, துளிரானது வெளிவந்தது. அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்னும் சில நாட்களில் முள்புதர்களாக வளர்ந்தன.
கிருஷ்ணரும் கோபாலர்களும் முள் புதர்களை கண்டு கைகொட்டி சிரித்தனர். கிருஷ்ணர் கோபியர்களை அவர்களுடைய செயல்களுக்காக நாணமடைய செய்ய விரும்பினார்.
கிருஷ்ணர் தனது நண்பர்களுடன் இணைந்து பெரிய பெரிய அழகழகான வண்ண வண்ண நறுமணமிக்க முத்துக்களால் மாலைகளை உருவாக்கி விருந்தாவன பசுக்கள் அனைத்தையும் அலங்கரித்தார். அதுமட்டுமின்றி, எருதுகள், ஆடுகள் செம்மாறியாடுகளையும் அலங்கரித்தார். விரஜதாமத்தில் உள்ள குரங்குகள் கூட முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டன. ஆனால் கோபியர்களால் ஒரு முத்துகூட பெறமுடியவில்லை.
கிருஷ்ணருக்கும் கோபியர்களுக்கும் இடையிலான அன்பு பரிமாற்றம்








தங்களுடைய இல்லங்களிலிருந்த முத்துக்கள் அனைத்தையும் எடுத்துவந்திருந்த கோபியர்கள், அவைகள் அனைத்தும் தற்போது புதர்களாக மாறியிருப்பதை கண்டு வருத்தமடைந்திருந்தனர். தங்களுடைய பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது? என்று வருந்தினர். எனவே அவர்கள் சந்த்ரமுகி மற்றும் காஞ்சனலதா என்ற இரு கோபியர்களிடம் தங்களுடைய தங்க ஆபரணங்களை கொடுத்து அதற்கு ஈடாக முத்துக்களை வாங்கிவருமாறு கிருஷ்ணரிடம் அனுப்பிவைத்தனர்.
அவர்களைக் கண்ட கிருஷ்ணர், “நாராயணருடைய கெளஸ்துப மாலைகூட எனது ஒரு முத்தின் ஒரு துகளுக்கு ஈடாகாது” என்றார்.
பண்டமாற்றம் செய்வற்காக ஒவ்வொரு கோபியும் எதை எதையோ செய்துபார்த்தனர், ஆனால் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. கிருஷ்ணர் காணாதவாறு அருகிலுள்ள குஞ்சத்தில்-ராதாராணி மறைந்திருந்து நடப்பதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு கோபியாக வந்துபோய் கொண்டிருந்தாள்.
கிருஷ்ணர் ஒரு பெரிய பெட்டி நிறைய முத்துக்களை விளைவித்திருந்தார். ஆனால் கோபியர்களுக்கு ஒரு முத்துகூட தரமறுத்தார். இறுதியாக கிருஷ்ணர் விசாகா கோபியிடம், “நான் ராதாராணிக்கு சிறிதளவு முத்துக்களை தருகிறேன். ஆனால் அதற்கு ஈடாக நான் கேட்பதை அவள் உடனடியாக தந்துவிட வேண்டும். இல்லையென்றால் எனது குஞ்சங்கள் ஒன்றில் அவளை சிறைவைத்துவிடுவேன்” என்றார்.
வேறு எதுவும் செய்யமுடியாமல் இருந்ததால் மிகப்பெரிய விவாதம் தொடர்ந்தது. இத்தகைய அன்புப்பரிமாற்ற விவாதங்களை ரகுநாத தாஸ கோஸ்வாமி தான் எழுதிய "முக்த சரிதத்தில்" மிக அழகாக வர்ணிக்கின்றார். விவாதம் முடிவற்றதாக தொடர்ந்ததால் சுபலா மத்தியஸ்தராக வைக்கப்பட்டார். தொடர்ந்த விவாதத்தின் முடிவாக, முத்துக்களுக்கு ஈடாக தங்களாலும் தங்களது சகி ராதையாலும் எதுவும் தரமுடியாது என்று கோபியர்கள் மறுத்தனர்.
இவைகள் அனைத்தையும் ராதாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். மற்ற கோபியர்கள் அனைவரும் சோகத்துடன் ராதாராணியிடம் வர, அனைவருமாக ராதாகுண்டத்திற்கு சென்றனர்.
கிருஷ்ணருடைய பரிசும் ராதாராணியின் அன்பு பரிமாற்றமும்








ராதாகுண்டம் மால்யஹாரி குண்டத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. கோபியர்கள் ராதாகுண்டத்தில் இருந்தபோது, கிருஷ்ணர் மிகச் சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுத்து, தனது கையால் ஆபரணங்களை உருவாக்கினார். அவைகளை அழகான தங்கப்பெட்டிக்குள் வைத்தார். பெட்டியின்மேல், தனது அன்பான கையால், ராதாராணி என்று எழுதினார். அதன்பிறகு மற்றொரு பெட்டியில் மற்றொரு கோபியின் பெயரை எழுதி முத்து ஆபரணங்களை வைத்தார்.
இவ்வாறாக அவர் தனது கைகளால் ஆபரணங்களை தயாரித்து, ராதாராணி மற்றும் அவளுடைய தோழிகளான ஒவ்வொரு கோபியின் பெயரிலும் ஒரு பெட்டி நிறைய முத்து ஆபரணங்களை நிரப்பிவைத்தார். இதனை தனது பரிசாக ராதாகுண்டத்திற்கு அனுப்பிவைத்தார்.
இதனைக் கண்ட கோபிகள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டனர். ஸ்ரீமதி ராதாராணி மலர்களை பறித்து, அழகான, நறுமணமிக்க மாலையை உருவாக்கினாள். மேலும் விதவிதமான பலகாரங்களை தயாரித்து, பழவகைகளுடன் தனது அன்பு காணிக்கையாக கிருஷ்ணருக்கு அனுப்பிவைத்தாள்.
அதன்பிறகு கோபியர்கள் அனைவரும் விதவிதமான முத்து மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு மகிழ்ந்தனர். அவரவர் வீட்டிற்கு சென்றபோது அவர்களுடைய பெற்றோர்களும் மிகவுமே மகிழ்ந்தனர்.
ஹரே கிருஷ்ண!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment