ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை



 ஶ்ரீ ராதா கிருஷ்ணரின் ஊஞ்சல் திருவிழா லீலை


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாபெரும் பக்தரான ஶ்ரீ நாரத முனிவர், விரஜ லீலைகளை தரிசிக்கவும் , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளை கண்டு ஆனந்தமடையவும் விருந்தாவனம் செல்வார் . அப்படி செல்லும் போது ஸ்ரீமதி ராதாராணியை தொடர்ந்து தரிசிப்பது வழக்கம் .இதை கவனித்து வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாரணியிடம், நாரதர் கலகம் செய்வதில் கைதேர்ந்தவர் ஆகையால், அவரிடம் கவனமாக பழக வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நாரதர் முனிவர் தனக்கும் ராதாரணிக்கும் இடையே ஏதேனும் கலகம் செய்துவிடுவார் என்று நினைத்தார்.

ஶ்ரீமதி ராதாராணி, தன்னக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள அன்பு பிணைப்பில் யாரும் கலகம் ஏற்படுத்த முடியாது என்று ஆணித்தனமாக நினைத்தார். அவரது ஆழ்ந்த பிரேமபக்தியினால் கிருஷ்ணரின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், "நான் கூறும் வார்த்தையின் தீவிரத்தை உணராமல் இருக்கிறாய்; நாரத முனிவரால் பிரச்சினை அனுபவிக்கும்போதுதான் உனக்கு நான் சொல்வது விளங்கும் ", என்று மீண்டும் ஶ்ரீமதி ராதாராணியை எச்சரித்தார்.

ஒருமுறை, வ்ரஜ பூமிக்கு வந்த நாரத முனிவர், தன வீணையை மிக அழகாக வாசித்தார். இதை கேட்டு மயங்கிய பகவான் கிருஷ்ணர், நாரத முனிவருக்கு வேண்டிய வரமளிக்க தயாராக இருந்தார்.

நாரதர், "எனக்கு இப்போது எந்த வரமும் தேவையில்லை. தேவைப்படும்போது நானே கேட்டுக்கொள்கிறேன்", என்று கூறினார். கிருஷ்ணரும் சம்மதித்தார்.

ஒரு நாள், அணைத்து சகிகளும் ஒன்று சேர்ந்து, லலிதா குண்டத்திற்கு அருகில், கிருஷ்ணருக்கும் ராதாரணிக்கும் ஒரு ஊஞ்சல் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதற்காக ஒரு ஊஞ்சலை தயார் செய்து அதனை அலங்காரம் செய்து, அணைத்து சகிகளும் பகவான் கிருஷ்ணரும் தயாராக இருந்தனர். எனினும் ஸ்ரீமதி ராதாராணி அங்கு வரவில்லை. அவரில்லாமல் விழா தொடங்க முடியாது.எனவே அனைவரும் அவருக்காக காத்திருந்தினர். அப்போது அங்கு வந்த நாரத முனிவர், நடக்கவிருக்கும் விழா பற்றி அறிந்துகொண்டார். பகவான் கிருஷ்ணரிடம், "அன்றொருநாள் தாங்கள் எனக்கு வரமளிப்பதாக கூறினீர்களே. அந்த வரத்தை நான் இப்போது கேட்க போகிறேன் அதை மறுக்காமல் தரவேண்டும்", என்று கூறினார்.பகவான் கிருஷ்ணரும் ஒப்புக்கொண்டார்.

நாரதர், "நீங்களும் லலிதா சகியும் ஒன்றாக ஊஞ்சல் ஆடுவதை பார்க்க நான் ஆசை கொள்கிறேன்", என்று கூறினார். இதை கேட்ட பகவான் கிருஷ்ணர், "இது மிகவும் எளிது. ஊஞ்சல் தயாராக உள்ளது. ராதாராணியும் இன்னும் வரவில்லை. ஆகையால் நானும் லலிதாவும் ஊஞ்சல் ஆடுகிறோம்" என்று கூறினார். இதை கேட்ட நாரத முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் லலிதா சகி வருத்தமடைந்தார். ஏனெனில் அவர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடன் , அவரது பிரிய தோழி ஶ்ரீமதி ராதாராணியுன் ஊஞ்சலில் ஆடுவதையே விரும்பினார்.

லலித சகியின் தயக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர், லலிதா சகியின் கரத்தை பிடித்து தன் அருகில் அமர வைத்து ஊஞ்சலில் ஆட துவங்கினார். இதை கண்ட நாரத முனிவர் மற்றும் சகிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நாரத முனிவர் உடனடியாக அங்கிருந்து மறைந்தார்.

லலிதகுண்டத்திலிருந்து ஸ்ரீமதி ராதாராணியின் இருப்பிடத்திற்கு சென்ற நாரதர், ஶ்ரீமதி ராதாராணியின் அறைக்கு சென்று அவரிடம், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?", என்று வினவினார். ராதாராணி மிகவும் மகிழ்ச்சியாக, "நான் கிருஷ்ணருடனான ஊஞ்சல் திருவிழாவிற்கு என்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறேன்", என்று பதிலளித்தார். நாரதர், சிரித்துக்கொண்டே, "பாவம் நீங்கள். இங்கே அலங்காரம் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் அங்கே என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் இல்லாமல், லலிதா சகியுடன் ஊஞ்சல் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது", என்று கூறினார். ராதாராணியால் இதை நம்ப முடியவில்லை.

நாரதர், "வேண்டுமென்றால், நீங்களே லலிதா குண்டத்திற்கு சென்று உறுதி செய்து கொள்ளுங்கள்", என்று கூறினார். உடனடியாக ஶ்ரீமதி ராதாராணி லலிதா குண்டத்திற்கு விரைந்தார். தூரத்திலிருந்து பார்த்த அவருக்கு, கிருஷ்ணரும் லலிதா சகியும் ஊஞ்சல் ஆடுவது தெரிந்தது. மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து சென்றார்.

வெகு நேரமாகியும் ராதாராணி வராததால் கிருஷ்ணர் சந்தேகமடைந்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். நாரத முனிவரை காணவில்லை. நாரதர் தான் ஏதோ கலகம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், ராதாராணியை அழைத்து வர தானே சென்றார். பல இடங்களில் தேடிய பிறகு, ராதாராணி ஒரு பாறையின் மேல் அமர்ந்து மிகவும் கோபமாக, அழுதுகொண்டிருந்ததை பார்த்தார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் ராதாராணியின் அருகில் சென்று அவரை சமாதான படுத்த முயற்சித்தார். ஆனால் ராதாராணி எதையும் கேட்க தயாராக இல்லை. மிகவும் கோபமாக " இனி நான் உங்களுக்கு தேவையில்லை, ஊஞ்சலாட இன்று முதல் உங்களுக்கு லலிதா கிடைத்துவிட்டாளே , அவளுடன் ஊஞ்சல் ஆடுவதால் உங்களுக்கு மகிழ்ச்சியெனில் நீங்கள் லலிதாவுடனே மகிழ்ச்சியாக இருங்கள். நான் உங்கள் விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் சொல்லபோவதில்லை ", என்று வருத்ததுடன் கூறினார்.

கிருஷ்ணர், "நான் லலிதாவுடன் ஊஞ்சல் ஆடியது உனக்கு எப்படி தெரியும்?", என்று கேட்டார். "நாரதர் கூறினார்", என்று பதிலளித்தார் ராதாராணி. கிருஷ்ணருக்கு இப்போது புரிந்தது, நாரதரின் கலகம்.

ராதாரணியிடம், தான் அளித்த வரத்தை பற்றியும், நாரதரின் வேண்டுகோள் பற்றியும் விளக்கிய கிருஷ்ணர், எவ்வாறு நாரதர் தங்களுக்குள் கலகம் ஏற்படுத்தியுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார். லலிதாவிற்கு தன்னுடன் ஆட விருப்பமில்லை என்பதையும் தான் தான் நாரதரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக லலிதாவை வற்புறுத்தினேன் என்பதையும் விளக்கினார் கிருஷ்ணர்.

இந்த விளக்கங்களை கேட்ட ராதாராணி சமாதானமடைந்தார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக ஊஞ்சல் ஆடுவதற்காக லலிதா குண்டம் நோக்கி நடந்தனர்.

கிருஷ்ணரின் விருப்பத்தை பூர்த்தி செய்த நாரத முனிவர்.

🍁🍁🍁🍁🍁🍁


பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் ஶ்ரீமதி ராதாராணிக்கும் பிரேம ரசத்தை பெருக்கவே , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் விருபத்தை பூர்த்தி செய்ய நாரத முனிவர் இது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி அனைவரையும் ஆனந்த படித்தினார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more