சண்டிதாசர்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆
வங்காளத்தில் உள்ள பீர்பம் என்னும் மாவட்டத்தின் நன்னூரா கிராமத்தில் இரு பிராமண சகோதரர்கள் இருந்தனர். ஒருவருடைய பெயர் "சண்டிதாசர்"; ஏனெனில் அவர் காளியின் உக்கிர ரூபமான சண்டி தேவியின் பக்தராவார். அவருடைய சகோதரர் ஒரு வைஷ்ணவர். சண்டிதாசர் மிகவும் பணக்காரராக இருந்தார். ஒருவன் சண்டி தேவியை வணங்கினால் பௌதிக செல்வங்கள் நிறைய கிடைக்கப்பெறுவர். ஆகையால் அவருக்கு பெரிய பங்களாவும் அதோடு பெரிய தோட்டமும் இருந்தது. அதே நேரம், வைஷ்ணவரான அவரது சகோதரர், தினந்தோறும் பக்தியோடு சாளக்ராம வழிபாடு நடத்தி வந்தாலும், அவர் ஏழையாகவே இருந்தார். அவ்வப்போது தன் சகோதரருடைய தோட்டத்தை பார்க்கும்போது, "இவரிடம் எவ்வளவு பூக்கள் இருக்கின்றது. ஆனால் எனக்கு சாளக்ராம பூஜைக்கு கூட பூ இல்லையே", என்று நினைத்து வருந்துவார். ஒரு நாள், அந்த தோட்டத்தில் இருந்த ஒரு அழகான பூவை பார்த்து, அதை மானசீகமாக தன்னுடைய சாளக்ராமத்திற்கு அர்பணிப்பதாக நினைத்துக்கொண்டார். அடுத்த நாள் சண்டிதாசர், அதே பூவை நிஜமாக பறித்து சண்டி தேவிக்கு அர்ச்சனை செய்தார். உடனே சண்டி தேவி, அவர் முன் தோன்றி, "நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்! உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். ஆச்சரியமடைந்த சண்டிதாசர், சிறிது சந்தேகத்துடன், "நான் தினமும் தான் உங்களுக்கு அர்ச்சனை செய்கிறேன். ஆனால் இத்தனை நாட்கள் என் முன் தோன்றாமல் இன்று மட்டும் தோன்றுவதற்கு என்ன காரணம்?" என்று வினவினார். சண்டி தேவி, "ஏனென்றால் இன்று நீ எனக்கு அர்ப்பணித்த பூவானது சாளக்ராமத்தின் மகா பிரசாதம். ஆகையால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்", என்று கூறினார். சண்டிதாசர் உடனே குழப்பத்துடன், "அப்படியென்றால் நீங்கள் முழுமுதற் கடவுள் இல்லையா? பின்னர் ஏன் நான் உங்களை வழிபடும்போது இதை என்னிடம் கூறவில்லை?, "முட்டாள் சண்டிதாஸா!! என்னை ஏன் வழிபடுகிறாய்? சாளக்கிராமத்தை வழிபடு", என்று நீங்கள் கூறியிருக்க வேண்டுமல்லவா?" என்று சண்டிதேவியிடம் வாதிட்டார்.
சண்டி தேவி, "ஆனால் இத்தனை நாட்களாக, யார் முழுமுதற்கடவுள் என்பதை தெரிந்து கொள்ள நீ ஆர்வம் காட்டவில்லை. என்னிடம், 'யார் முழுமுதற்கடவுள்?' என்று கேட்டாயா? என்னிடம் நீ முன்பே கேட்டிருந்தால் நானும் முன்பே கூறியிருப்பேன். ஏனெனில் பகவான் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள் என்பது எனக்கு தெரியும். சாளக்ராமம் அவருடைய அம்சமாகும். ஆனால் நீ அதை தெரிந்து கொள்வதற்கு பதிலாக, என்னை வழிபட்டு கொண்டிருந்தாய். சரி, வழிபாடு முறைகளையாவது ஒழுங்காக நீ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நானும் பொறுத்திருந்தேன்", என்று கூறினார். சண்டி தாசர், "அப்படியானால் என் வாழ்வின் இத்தனை காலங்களை நான் முழுமுதற்கடவுளை வழிபடாமல் வீணடித்து விட்டேனா? இனியும் ஒரு நொடி கூட தாமதிக்க மாட்டேன். இப்போதே நானும் சாளக்ராம வழிபாட்டை தொடங்குகிறேன்", என்று கூறினார்.
மிகவும் மகிழ்ச்சியடைந்த சண்டிதேவி, "சரி, இன்றிலிருந்து சாளக்ராம வழிபாட்டை தொடங்குவாயாக", என்று ஆசீர்வதித்தார்.
சண்டிதாசர் , நீண்ட காலமாக மூல முழுமுதற் கடவுள் பாகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடாமல் காலத்தை கழித்த அறியாமையை எண்ணி வருந்தி பிரிவு துயரத்தில் , பல பாடல்களை இயற்றினார். இந்த பாடல்களை கேட்கும்பொழுது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அப்பாடல்கள் பிரிவுதுயரின் உணர்வுகளை பிரதிபலிப்பவையாக இருக்கும். இவ்வாறு சண்டி தாசர் பகவானின் பக்தரானார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment