சபரியின் பக்தி.









ஹரி நாமத்தின் மகிமை மிக பெரியது. அதை சொல்லும் அவரது சத் பக்தர்கள் பெருமை அதையும் விட பெரியது இராமாயணத்தில் குகனின் பக்தி எந்தளவுக்கு மகிமை பெற்றதோ அதே அளவு மகிமைகளை பெற்றது சபரியின் பக்தி. சபரி அடிப்படையில் ஒரு வேடுவப் பெண், தேனை சேகரித்து கொண்டு வந்து விற்பதே அவர்களின் தொழில் சபரிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்ற போது எண்ணற்ற காட்டு விலங்குகள் கொன்று விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அடிப்படையிலேயே இளகிய மனம் படைத்த சபரி, "இத்தனை உயிர்களை கொன்று எனக்கு ஒரு திருமணமா? எனக்கு திருமண வாழ்க்கையே வேண்டாம்" என்று பெற்றோரை விட்டு பிரிந்தாள்
பெற்றோரை விட்டு பிரிந்த சபரிக்கு மாதங்க முனிவர் அடைக்கலம் கொடுத்து அவளுக்கு நல்லுபதேசங்களை வழங்கினார். மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பணிவிடைகளை செய்து தன் காலத்தை கழித்து வந்தாள் சபரி . ஒரு தாழ்த்தப்பட்ட இனத்து பெண்ணுக்கு மாதங்க முனிவர் தனது ஆசிரமத்தில் இடம் கொடுத்து அவளுக்கு சாஸ்திர ஞானங்களை போதித்து வந்தது சக முனிவர்கள் விரும்பவில்லை.
மாதங்க முனிவர் தனது இறுதி காலத்தில் சபரியை நோக்கி "சபரி நீ இப்பிறப்பில் வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய் , பகவான் ஶ்ரீ இராமர் தன் தம்பி லக்ஷ்மணரோடு இவ்விடத்தில் வந்து உனக்கு தரிசனம் தருவார் .அவரின் அருளால் நீ நற்கதி பெறுவாய்" என்று கூறினார்.
பகவான் ஶ்ரீ இராமரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சபரி தினசரி இராமநாம ஜபத்தில் ஆழ்ந்திருந்தாள்..
முனிவர் ஒருவர் பம்பையில் நீராடிவிட்டு கரையேறி வந்த போது ஆஸ்ரமதிற்கு நீர் எடுத்துச் செல்ல வந்த சபரியின் குடத்திலிருந்த நீர் தழும்பி தற்செயலாக அவர் மீது தெரித்தது. சினம் கொண்ட முனிவர் தான் தூய்மையிழந்ததாக கருதி சபரியை நோக்கி கடுமையான வார்த்தைகளை கூறி நிந்தனை செய்தார்."
தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும் தன்னை மன்னித்துவிடும்படியும் சபரி கெஞ்சி கேட்டுக்கொண்டாள். இருப்பினும் அந்த முனிவர், மீண்டும் பம்பையில் முங்கி குளித்தால் தான் இந்த தோஷம் எனக்கு போகும் என்று கூறி, நீராட சென்றார்
பரம பக்தையான சபரியை நிந்தித்ததால் முனிவர் ஆற்று நீரில் கால் வைத்ததும் அந்த நதி முழுக்க இரத்த சிவப்பாக மாறி, புழுக்கள் நெளிய ஆரம்பித்துவிட்டது பம்பை நீர் இப்படி குருதி சாக்கடையாக மாறியது கண்டு திடுக்கிட்ட முனிவர், சபரி ஏதோ சூனியம் செய்துவிட்டதாக எண்ணி அவ்விடம் விட்டு சென்றார்.
இதனிடையே மாதங்க முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, லக்ஷ்மணர் சபரியின் குடிலுக்கு வந்தனர்.
பகவான் ஶ்ரீ இராமரின் தரிசனத்தால் பக்தி பரவசதில் ஆனந்தம் கொண்ட சபரி தன்னை மறந்தாள். பின்னர் தாயுள்ளம் கொண்ட சபரி காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளை பறித்து வந்து முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து இராம, லக்ஷ்மணரிடம் சமர்ப்பித்து வணங்கினாள்.
இதை கண்டு லட்சுமணன் ஶ்ரீ ராமரிடம். சபரியின் எச்சில் பட்ட பாதி பழத்தை எப்படி ஏற்றுகொண்டீர்கள் என்று வியப்புடன் கேட்க, பக்தவத்சலனான பகவான் ஶ்ரீ ராமர், பாதிபழமும் சபரியின் தூய்மையான பக்தியும் சேர்ந்து பழம் பூரணமாக இருந்ததை நீ காணவில்லையா என்று பதிலளித்து பழத்தை ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தார்.
இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.










தன் பாதம் பணிந்து வணங்கி நின்ற சபரியை நோக்கிய பகவான் ஶ்ரீ ராமர், "அம்மா உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்க, அதற்கு சபரி, "பிரபு, பம்பா நதி முழுவதும் எவருக்கும் உதவாத வண்ணம் புழுக்கள் பெருகி அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும் இந்த வனத்தில் உள்ள ரிஷிகளும் மற்றும் மற்ற ஜீவராசிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மரவுரி தரித்து காட்சியளிக்கும் நீங்கள் ஒரு கணம் இந்த ஏழைக்காக சர்க்கரவர்த்தி திருமகனாக காட்சி தர வேண்டும்!" என்றாள்
பகவான் ஶ்ரீ ராமர் புன்முறுவல் புரிந்தவாறு, தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பை நதியை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் நீ இறங்கி ஒரு நொடி நின்றால் கூட போதும் அது தூய்மையாகிவிடும். மற்றபடி சக்கரவர்த்தி திருமகனாக நான் காட்சி தரவேண்டும் என்கிற உன் விருப்பத்தை இப்போதே பூர்த்தி செய்கிறேன்!" என்றார்
சபரியும் பம்பையில் இறங்கி, "இராமா எல்லாம் உன் கருணை" என்று கூற சபரியின் திருவடி ஸ்பரிசம் பட்ட அடுத்த நொடி பம்பை சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது. இராமபிரானும் சபரியின் அன்புக்கு கட்டுப்பட்டு அவளுக்கு மட்டும் சக்கரவர்த்தி திருமகனாக காட்சி தந்தார்
இராமனைவிட இராம நாமம் பெரிது. இராம நாமத்தைவிட அதை உச்சரிக்கும் அடியவர் தம் பெருமை பெரிது. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே
ஹரே கிருஷ்ண !
ஜெய் ஸ்ரீராம் 🙏
ReplyDelete