தேனுகாசுரன் வதம்
தமது பால பருவ (பௌகண்ட) லீலைகளை வெளிப்படுத்துகின்ற காலகட்டத்தில் பலராமரும், கிருஷ்ணரும் ஒரு நாள் தமது ஆநிரை களை மேய்த்துக்கொண்டு எழில்மிக்க குளமுடையதும், மனதினை வசீகரிக்கக் கூடியதுமான ஒரு வனத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள் தமது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட் டனர். விளையாண்ட களைப்பின் மிகுதியினால் பகவான் பலராமர் ஓர் ஆயர்குலச் சிறுவனின் மடியின் மீது தனது தலையினை வைத்துப் படுத்துக்கொள்ள பகவான் கிருஷ்ணர் அவரது பாதங்களைத் தடவிக்கொடுத்தார். பிறகு மற்றொரு சிறுவனின் மடியில் கிருஷ்ணர் தனது தலையினை வைத்துப்படுத்துக்கொள்ள, அவரது பாதங்களை வேறொரு சிறுவன் தடவிக் கொடுத்தான். இவ்வாறு கிருஷ்ணரும், பலராமரும், தமது நண்பர்களான ஆயர்குலச் சிறுவர்களுடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.
இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ தாமா, சுபலன், ஸ்தோக கிருஷ்ணன் போன்றோரும், பிற சிறுவர்களும் கிருஷ்ண பலராமரிடம், "கோவர்தன மலைக்கு அருகில் தாளவனம் என்று ஒரு
பகுதி இருப்பதாகவும், அங்கே மிக்க இனிமையுடைய பல்வேறு கனி மரங்கள் இருப்பதாகவும், ஆனால் கழுதை வடிவம் கொண்ட, அழிப்பதற்கு அரிய, தீய தேனுகாசுரன் என்று ஒருவன் அவ்வனத்தில் வசிப்பதினால் அங்கு செல்வதற்கு எல்லோரும் அஞ்சுகின்றனர் என்றும், யாரேனும் ஒருவர் தேனுகாசுரனைக் கொன்றுவிட்டால், நாம் எல்லோரும் அங்கு போய் பல்வகையானப் பழங்களைப் பறித்து உண்ணலாம்" என்றும் கூறினர். இதனைக் கேட்டவுடன் பகவான் பலராமரும் கிருஷ்ணரும், தமது நண்பர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்காக உடனே தாளவனத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
தாள வனத்தினை அடைந்தவுடன், பகவான் பலராமர், அங்கிருந்த மரங்களை உலுக்கி ஏராளமான ஈச்சம்பழங்களை விழச் செய்தார். இதனைக் கண்டு அங்கிருந்த தேனுகாசுரன் பலராமரைத் தாக்குவதற்காக மிகவும் வேகமாக ஓடிவந்தான். ஆனால் பலராமனோ ஒரு கையால் அவனது பின்னங்கால்களைப் பற்றித் தூக்கிச் சுழற்றி ஒரு மரத்தின் மீது வீசி அவனைக் கொன்றார். இதனைக் கண்டு ஆத்திரங்கொண்ட தேனுகாசுரனின் நண்பர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் தாக்க ஓடி வந்தனர். கிருஷ்ணரும், பலராமரும் அவர்களை ஒவ்வொருவராகப் பிடித்து உயரே தூக்கி எறிந்து கொன்றனர். இவ்வாறு எல்லோரையும் கொன்ற பிறகு கிருஷ்ணரும், பலராமரும் தமது நண்பர்களுடன் ஆயர்பாடிக்குத் திரும்பினர். அங்கே அவர்களை யசோதையும், ரோகிணியும் தமது மடியின்மீது தூக்கி வைத்துக் கொண்டு அன்புடன் முத்தமிட்டு மகிழ்ந்தனர். அவர்களுக்கு சுவையான உணவளித்து, சுகமாக நித்திரை கொள்ளச் செய்தனர்.








தேனுகாசுரன் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஆன்மீக அறியாமையையும் மற்றும் பௌதிக புத்தி கூர்மையையும் குறிப்பதாக பக்திவினோத தாகூர் தெரிவிக்கிறார்.
ஹரே கிருஷ்ண!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment