கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்


 கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல் 


🍁🍁🍁🍁🍁🍁🍁


காளிங்கனின் கொடிய விஷத்தினால் கெட்டுப் போயிருந்த யமுனை நதியினை மீண்டும் தூய்மை பெறச் செய்வதற்காக பகவான் கிருஷ்ணர் கரையருகே நின்றிருந்த “கதம்ப” மரத்தின் மீது ஏறி யமுனை நதியினுள் குதித்தார். பிறகு அவர் ஒரு மதங் கொண்ட யானையைப் போல் யமுனை நதியில் விளையாடி மகிழ்ந்தார். கிருஷ்ணர் அத்துமீறி தனது எல்லைக்குள் நுழைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத காளிங்கன் மிகுந்த சீற்றத்துடன் பகவானிடம் வந்து அவரது மார்பில் கொத்தினான். இதனைக் கண்ட கிருஷ்ணரின் நண்பர்கள் அதிர்ச்சியினால் மூர்ச்சையடைந்து நிலத்தில் வீழ்ந்தனர். அச்சமயம் விரஜத்தில், நிலநடுக்கம், விண்மீன்கள் உதிர்தல், பல்வேறு உயிர்களின் இடதுபுறம் துடித்தல் போன்ற தீக்குறிகள் தோன்றின.


விரஜத்திலிருந்தோர் “பலராமரின் துணையின்றி கிருஷ்ணன் இன்று காட்டிற்குச் சென்றிருக்கிறான், அதனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லையே” என்று மனம் வருந்தினர். இவ்வாறு வருந்திய அவர்கள் கிருஷ்ணரின் காலடித் தடத்தினைப் பின்பற்றி யமுனை நதிக்கரைக்கு வந்தனர். நதியினை ஒட்டியிருந்த குளத்தில் அவர்களது உயிருக்கு உயிரான பகவான் கிருஷ்ணர் கருநாகத்தின் படியில் சிக்கிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். மூவுலகும் சூனியமாகி விட்டது போல் அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் அனைவரும் ஆற்றினுள் இறங்கத் தலைப்பட்டனர். கிருஷ்ணரின் சக்தி எப்படிப்பட்டது என்பதை நன்கறிந்திருந்த பகவான் பலராமர் அவர்கள் அனைவரையும் நீரினுள் இறங்க விடாது தடுத்து நிறுத்தினார்.


தனது நண்பர்களும் உறவினர்களும் மிகவும் வருந்துவதைக் கண்ட பகவான் கிருஷ்ணர் தனது உடலினைப் பெரியதாக விரிவடையச் செய்து காளிங்கனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பிறகு பகவான் அந்த நாகத்தின் படங்களின் மீது ஆனந்த நர்த்தனமாடத் தொடங்கினார். ஊழிக்கூத்தினைப் போல் காளிங்கனின் தலையில் நர்த்தனமாடிய ஸ்ரீ கிருஷ்ணர் அவனது ஆயிரந்தலைகளையும் தமது பாதங்களினால் மிதித்துத் துவம்சம் செய்தார். பிறகு அவனது உடலினை செயலற்றதாக்கினார். தனது வாய்களிலிருந்து இரத்தம் கக்கிய காளிங்கன், அசையும் அசையா உயிர்கள் அனைத்திற்கும் ஆன்மீக குருவாக விளங்கும் ஆதிபுருஷரான பகவான் நாராயணரே கிருஷ்ணர் என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டான்.


குளைத்து வீழ்ந்திருந்த காளிங்கனைக் கண்ட அவனது மனைவியர்களான நாக பத்தினிகள் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கினர். பின்னர் அவர்கள் தனது கணவனுக்கு அருள் புரிய வேண்டி பகவானைப் பின்வருமாறு பிரார்த்தினர்: “எமது கொடிய கணவனை நீர் இவ்வாறு தண்டித்தது சரியான செயலேயாகும். உண்மையில் உமது கோபத்தினால் அவர் சிறந்த நன்மைகளை எய்திருக்கிறார். காளிங்கன் தனது முந்தைய பிறவிகளில் என்ன புண்ணியம் செய்தாரோ? இன்று அவர் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளிலுள்ள தூசியினைத் தனது தலையில் தாங்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார். இப்பாக்கியம் பெறுவது பிரபஞ்சத்தின் தாயான லட்சுமி தேவிக்கும் அரியதாகும். அதனால் அறியாமையினால் காளிங்கன் செய்த தவறினை மன்னித்து அவருக்கு உயிர்ப்பிச்சையளிக்க வேண்டும்.”


நாக பத்தினிகளின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த பகவான் கிருஷ்ணர் காளிங்கனை உடனே விடுவித்தார். பிறகு காளிங்கன் மெதுவாக சுய உணர்வும், சக்தியும் திரும்பப் பெற்றான். ஊணர்வு பெற்றெழுந்த காளிங்கன் வருந்திய குரலில், பகவானுக்குத் தான் இழைத்தக் குற்றத்தினை ஒத்துக் கொண்டு, அவரைப் பல்வேறு வழிகளில் துதித்து, இறுதியில் பகவான் தனக்கிடும் கட்டளை எதுவாயினும் அதற்கு அடங்கி நடக்கத் தான் தயாராக இருப்பதாகக் கூறினான். கிருஷ்ணர், அவனிடம், அவன் உடனே யமுனைக் குளத்தினின்று நீங்கி தனது குடும்பத்தினருடன் ரமணகத் தீவிற்குச் செல்லவேண்டும் என்று கூறினார்.


காளிங்கனின் வரலாறு


🍁🍁🍁🍁🍁🍁


ரமணகத் தீவிலுள்ள நாகங்கள் எல்லாம், தாம் கருடனால் விழுங்கப்பட்டு விடுவோமேவென்று அஞ்சின. கருடனை மகிழ்விக்கும் வண்ணம் அவை ஒவ்வொரு மாதமும் ஓர் ஆலமரத்தின் அடியில் அவருக்கு வேண்டிய உணவினைப் படைத்து வந்தன. ஆனால் கர்வம் மிகக் கொண்ட காளிங்கனோ அவ்வுணவுப் பொருட்களை எல்லாம் தானே உண்டு வந்தான். இதனைச் செவியுற்றக் கருடன் மிக்கச் சினங்கொண்டு காளிங்கனைக் கொல்ல வந்தார். அப்போது காளிங்கன் கருனைக் கடிக்கத் தொடங்கினான். கருடன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யமுனை நதியின் அருகிலுள்ள குளத்திற்கு ஓடும்படிச் செய்தார்.


இச்சம்பவத்திற்கு முன்பு ஒருமுறை கருடன் யமுனை நதிக்கு வந்து அங்குள்ள மீன்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சௌபரி ரிஷி என்பவர் கருடனைத் தடுத்தார், ஆனால் மிகுந்த பசியுடன் இருந்த கருடன் முனிவரின் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகச் சினமுற்ற முனிவர், கருடன் மீண்டும் யமுனை நதிக்கு வந்தால் அவர் இறந்துவிட வேண்டும் என்று சபித்து விட்டார். இதனால்தான் காளிங்கன் யமுனை நதியினைத் தஞ்சம் புகுந்து அங்கு அச்சமின்றி வாழ்ந்து வந்தான். எனினும் அவன் இறுதியில் அங்கிருந்து பகவான் கிருஷ்ணரால் விரட்டியடிக்கப்பட்டான்.


பல்வேறு இரத்தினங்களும், ஆபரணங்களும் பூண்டு பகவான் கிருஷ்ணர் குளத்திலிருந்து வெளிவந்தவுடன் அவரை பகவான் பலராமரும், விருந்தாவனவாசிகளும் மிக்க மகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டனர். பின்னர் ஆன்மீகக் குருக்களும், புரோகிதர்களும், கற்றறிந்த அந்தணர்களும் ஆயர்குலத் தலைவரான நந்த மகாராஜா விடம் அவரது புதல்வர், காளிங்கனின் பிடியில் சிக்கிக் கொண்ட போதிலும், நந்த மகாராஜாவின் நல்லதிர்ஷ்டத்தின் காரணமாக அவர் தப்பித்து விட்டார் என்று கூறினர்.


பசி, தாகம் போன்றவற்றினால் களைப்புற்றிருந்த விருந்தாவனவாசிகள் யமுனை நதிக் கரையிலேயே அன்றைய இரவுப் பொழுதினைக் கழித்தனர். 



(ஶ்ரீமத் பாகவதம் 10.16 &17 )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more