ஏகாதசி தோன்றிய கதை



 ஏகாதசி தோன்றிய கதை


(பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது)



கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர். அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீக) உறக்கத்திலிருந்த விஷ்ணுவிடம் போரிட விரும்பியபோது, ஸ்ரீ விஷ்ணுவின் உடலிலிருந்து, பற்பல ஆயூதங்களுடனும் அஸ்திரங்களுடனும் ஓர் அழகான மங்களகரமான மகள் தோன்றினாள். அசுரனுடன் தொடர்ந்து போரிட்ட தேவி, இறுதியில் அவனது தலையை வெட்டி வீழ்த்தினாள். பகவான் விஷ்ணு துயிலெழுந்த போது, முராசுரன் மரணமடைந்திருப் பதையும், தன்முன் கூப்பிய கரங்களுடன் இருக்கும் தேவியையும் கண்டு, “நீ யார்?” என்று வினவினார். “தங்கள் உடலிலிருந்து தோன்றியவள் நான், உறக்கத்திலிருந்த தங்களை இந்த அசுரன் கொல்ல முயன்றதால், நான் இவனைக் கொன்று விட்டேன்,” என்று அவள் பதிலளித்தாள். மகிழ்ச்சியுற்ற பகவான், “என்னுடைய ஆன்மீக சக்தியான நீ, ஏகாதசி (பதினொன்றாவது) திதியில் தோன்றியதால், ஏகாதசி என்று அழைக்கப்படுவாய். நீ தோன்றிய நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நிலையை அடைவர்,” என்று வரம் நல்கினார். பின்னர், சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி, ஒவ்வொரு மாதத்திலும் இருமுறை வெவ்வேறு ரூபங்களில் தோன்றினாள்.

ஏகாதசி விரதம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🙏


ஏகாதசி விரதம் ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உள்ளன: அமாவாசைக்குப் பின் பதினொன்றாவது நாள், பௌர்ணமிக்குப் பின் பதினொன்றாவது நாள். ஏகாதசி என்னும் சொல்லுக்கு, “பதினொன்றாவது நாள்” என்று பொருள். ஏகாதசி என்பது அனைத்து பக்தர்களும் விரதம் அனுசரிக்க வேண்டிய திருநாளாகும். இதில் தவறுவது மிகப்பெரிய குற்றம். ஏகாதசியன்று கொடூரமான பாவங்கள் தானியங்களில் தங்குவதால், உன்னத நன்மையைப் பெற விரும்புவோர், அன்றைய நாளில் தானியங்களைத் தவிர்த்து, விரதம் அனுசரித்தல் அவசியம். லௌகீக வாழ்வில் இன்பமடைவதற்கும் பொருள் சேகரிப்பதற்காகவும் ஏகாதசியைப் பின்பற்றுதல் கூடாது. ஏகாதசி விரதமானது முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹரியைத் திருப்தி செய்வதற்காக மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். ஏகாதசி விரதத்தை அனுசரிப்பதால் வரக்கூடிய பல்வேறு பௌதிக நன்மைகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபோதிலும், இதன் முக்கியமான பலன், முழுமுதற் கடவுளின் மீது ஆழமான அன்பை வளர்த்துக்கொள்வதே என்பதை நாம் அறிந்துகொள்ளுதல் அவசியம். நூறு பிறவிகளில் சேர்ந்த பாவங்கள் ஒருமுறை ஏகாதசியை அனுசரிப்பதால் விலகிவிடும். மேலும், ஏகாதசி திருநாளில் பகவான் ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றி (குறிப்பாக, ஸ்ரீமத் பாகவதம், மற்றும் பகவத் கீதையிலிருந்து) கேட்பவர்கள், மிகவுயர்ந்த பலனை அடைவர். பாம்புகளில் அனந்தரும், பறவைகளில் கருடனும், மரங்களில் ஆல மரமும், இலைகளில் துளசி இலையும் சிறப்பானதாகத் திகழ்வதைப் போன்று, விரதங்களில் ஏகாதசி விரதமே மிகச்சிறந்ததாகும்.

விரதம் அனுசரிக்கும் முறை

(ஸ்ரீபாத் பக்தி விகாஸ ஸ்வாமி அருளிய “பக்தி யோகம்–ஓர் அறிமுகம்” என்னும் புத்தகத்திலிருந்து)

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீல பிரபுபாதர் சாஸ்திரங்களின் பரிந்துரைப்படி, தானியங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், பயிறு வகைகள் ஆகியவற்றை உண்ணாமல் எளிய முறையில் விரதம் இருந்தார். சில பக்தர்கள் ஏகாதசியன்று பழங்கள் மட்டும் உண்பர், சிலர் நீர் மட்டும் பருகுவர், சிலர் நீர்கூட அருந்த மாட்டார்கள். (இதற்கு நிர்ஜல விரதம் என்று பெயர்) அனைத்து பக்தர்களும் பின்வரும் உணவுப் பொருள்களை ஏகாதசியன்று அறவே தவிர்க்க வேண்டும்: எல்லா விதமான தானியங்கள், பருப்பு, பயிறு வகைகள், பீன்ஸ் போன்ற காய்கள், கடுகு, இவற்றிலிருந்து தயாரித்தவை (கோதுமை மாவு, கடுகு எண்ணெய், இத்யாதி), மற்றும் இவை அடங்கிய உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். பொடி செய்யப்பட்ட நறுமணச் சரக்குப் பொருள்களைப் பார்த்து வாங்கவும். அவற்றில் மாவு கலந்திருந்தால் ஏகாதசியன்று பயன்படுத்தக் கூடாது. ஏகாதசியன்று சவரம் செய்து கொள்வதும் நகம் வெட்டுவதையும் தவிர்த்தல் அவசியம். ஏகாதசி விரதமானது, மறுநாள் துவாதசி அன்று முடிக்கப்படுகிறது. தானியங்களால் தயார் செய்த பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் விரதம் முடிக்கப்பட வேண்டும். ஏகாதசி நாள்களையும் விரதம் முடிக்க வேண்டிய நேரத்தையும் அறிய, கௌடீய வைஷ்ணவ நாள்காட்டியைப் பார்க்கவும் இஸ்கானில் பயன்படுத்தப்படும் வைஷ்ணவ நாள்காட்டியை மட்டும் உபயோகிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், ஏகாதசி நாள்களும் பிற விசேஷ நாள்களும் மற்ற சம்பிரதாய பண்டிதர்களின் கணிப்பில் சற்று மாறுபடலாம். ஏகாதசி விரதத்தின் உண்மையான குறிக்கோள், வெறுமனே உண்ணாமலிருப்பது அல்ல; கோவிந்தனைப் பற்றிக் கேட்கவும் சொல்லவும் மிகுந்த நேரம் ஒதுக்குவதே. ஏகாதசியன்று போதுமான நேரமுடைய பக்தர்கள் இருபத்தைந்து அல்லது அதற்கு மேற்பட்ட சுற்று ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டுமென்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார்.

பாவத்தை ஏற்றல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஏகாதசியன்று தானியங்களை உண்பதால், பிராமணனை அல்லது பசுவைக் கொன்ற பாவத்திற்கு நிகரான பாவத்தை ஏற்க வேண்டியிருக்கும். ஏகாதசி திருநாளில் தானிய உணவுகளை உண்டு, பாவ வாழ்வில் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஆனால் யாரொருவர் பக்தித் தொண்டின் விதிமுறைகளை முறையாக ஏற்றுக் கடைப்பிடிக்கின்றாரோ, அவர் பக்திதேவியின் அருளைப் பெறுவது மிக மிக எளிதாகும். எனவே பக்தர்கள் அல்லாதவர்களின் சங்கத்தை தவிர்த்து ஏகாதசி விரதத்தை தவறாது கடைபிடித்து பரமபுருஷ பகவானின் திருநாமத்தை ஜெபிப்பதில் உற்சாகத்தை வளர்க்க வேண்டும் என்று மஹாபிரபு நமக்கு கட்டளையிடுகிறார்.

பின்பற்றுவோம், வாரீர்!

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஏகாதசி திருநாளில் முழு உபவாசம் இருக்கலாம்; அல்லது தானியமற்ற உணவுகளை எளிய முறையில் பிரசாதமாக ஏற்று, முழு நேரத்தையும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் புகழைப் பாடுவதிலும் கேட்பதிலும் நினைவுகூர்வதிலும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே சாஸ்திர விதியாகும். குருவின் கருணையையும் பகவானின் கருணையையும் எளிதில் பெற்றுத்தரும் மிக எளிய வழியாக ஏகாதசி அமையும். அனைவரும் பின்பற்றலாம், வாரீர்!

"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

  1. It is really useful information for following Ekadhasi fasting for different types of followers and all devotees.

    ReplyDelete
  2. ஹரே கிருஷ்ண ! மிகவும் நன்றி 🙏

    ReplyDelete
  3. Thank you 🙏 🙏🙏

    ReplyDelete
  4. Thank you so much 🙏

    ReplyDelete

Post a Comment

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more