ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒருநாள் விருந்தாவனத்தில் , ஶ்ரீல ரூப கோஸ்வாமி தனது ஆழ்ந்த தியானத்தில் இதயம் முழுக்க பேரின்பத்தில் திளைத்திருந்தார். அவர் தனது சமாதிநிலையில் கோபியர்களின் அதியற்புதமான லீலைகளை கண்டு லயித்திருந்தார். கோபியர்கள் ஸ்ரீமதி ராதாராணியை அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணர் தனது வருகையை கோபியர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுடைய இதயங்களை மகிழ்ச்சி திருவிழாவாக்கினார், இது எதுவுமே ராதாராணிக்கு தெரியாது.
கோபியர்கள் ராதாராணிக்கு அழகாக பின்னலிட்டு மலர்களால் அருமையாக அலங்கரித்தனர். அவளுடைய அழகை காண்பதற்காக கண்ணாடியை காண்பித்தனர். தனது தாமரைமுக அழகை ரசித்தபோது, கண்ணாடியில் கிருஷ்ணருடைய நிலவுமுகமும் தெரிவதைக் கண்டாள். இதனால் வெட்கமடைந்த ராதை தனது முகத்தை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டாள். இதனைக் கண்ட கோபியர்கள் சிரித்தபோது, ரூபகோஸ்வாமியும் சிரித்தார்.
அதே சமயத்தில் ரூபகோஸ்வாமியை காண கிருஷ்ணதாஸர் என்ற வைஷ்ணவர் அங்கு வந்தார். ரூப கோஸ்வாமியின் சிரிப்பைக்கண்ட கிருஷ்ணதாஸர், தான் முடவன் என்பதால் தன்னை பரிகசித்து ரூபகோஸ்வாமி சிரிப்பதாக நினைத்துக்கொண்டார் இருப்பினும் மனதில் வேதனையுடன் ரூப கோஸ்வாமியின் சகோதரரான ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியை காணச்சென்றார்.
கிருஷ்ணதாஸர், ஸநாதரிடம் , “நான் ஸ்ரீல ரூபகோஸ்வாமியை காணச்சென்றேன், ஆனால் அவரோ என்னைக் கண்டதும் சிரித்துவிட்டார். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு புரியவில்லை. அவரிடம் எதுவும் பேசாமல் நேராக உங்களிடம் வந்துவிட்டேன்.” என்று கூறினார்.
இதை கேட்ட ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி சிறிது நேரம் மௌனமாக தியானத்தில் ஆழ்ந்து ரூப கோஸ்வாமியின் நிலையை அறிந்தார். ரூப கோஸ்வாமி கண்ட அதே காட்சிகளை தானும் கண்டு பரவசதில் மூழ்கினார். பின்னர் ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி, ரூப கோஸ்வாமி சிரித்ததற்கான காரணத்தை கிருஷ்ணதாஸரிடம் விளக்கினார்.
இதனைக் கேட்ட கிருஷ்ணதாஸர் மிகவுமே வருந்தினார். துக்கம் தொண்டையை அடைக்க " நான் அச்சமயத்தில் அங்கு சென்றிருக்ககூடாது. அவருடைய மனதைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு குற்றம் புரிந்துவிட்டேன்.” என்று கூறினார்
கிருஷ்ணதாஸரின் குமுறலைக் கண்ட ஸநானதர் அவரை சிரமப்பட்டு சமாதானப்படுத்தினார். இதற்கிடையில், கிருஷ்ணதாஸர் ரூப கோஸ்வாமியை தவறாக நினைத்த குற்றத்திற்காக வருந்தியவுடனேயே, இங்கு ரூப கோஸ்வாமிக்கு பகவானுடைய லீலைகள் திடீரென்று அவருடைய பார்வையிலிருந்து மறைந்தது. இதனால் வருத்தமடைந்தவராக, சுற்றும் முற்றும் பார்த்தார்.
சூழ்நிலையை ஆராய்ந்தபோது, கிருஷ்ணருடைய லீலைகளில் தான் மூழ்கியிருந்த சமயத்தில், யாரோ ஒரு தூய பக்தர் இங்கு வந்திருக்க வேண்டும். கிருஷ்ணரின் லீலைகளை தரிசனம் செய்து கொண்டிருந்த தான் அவரை சரியான முறையில் வரவேற்க தவறிவிட்டேன்.அதனால் அவர் மனவருத்ததுடன் இவ்விடம் விட்டு சென்று இருப்பார்.அதனால் எனது நிஷ்டை தடைபட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
“என்னைத் தேடிவந்தவரை நான் கண்டு கொள்ளாமல், அவருக்கு குற்றம் செய்துவிட்டேன்” என்று எண்ணியவராக, ரூப கோஸ்வாமியும் ஸநாதனரைக் காணச் சென்றார்.
அங்கே ரூப கோஸ்வாமியும் கிருஷ்ணதாஸரும் நமஸ்கரித்து ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். ஒருவரையொருவர் மன்னித்து இருவருமே மகிழ்ச்சியடைந்தனர். இருவருமாக இணைந்து ஸநாதன கோஸ்வாமியை நமஸ்கரித்தனர். பின்னர் நீண்டநேரம் அவர்கள் அனைவரும் கிருஷ்ணருடைய இத்தகைய அமிர்தமயமான லீலையின் சுவையில் மூழ்கியிருந்தனர். இத்தகைய நிகழ்ச்சிகளைக் கேட்ட அனைவரும் அதிசயத்தனர்.
கதையின் நீதி:
🍁🍁🍁🍁🍁🍁🍁
இத்தகைய அற்புதமான லீலை நமக்கு மிகப்பெரிய பாடமாகும்.
முதலாவதாக நாம் தூய பக்தர்களுக்கு மட்டும்தான் அபராதம் (குற்றம்) செய்யகூடாது என்று நினைத்துக்கொண்டு, யார் தூய வைஷ்ணவர் என்பதை ஆராய்வதில் நமது அபராதங்களை(குற்றங்களை) நியாயப்படுத்துகிறோம்.
அதற்கு பதிலாக, “நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவருமே தூய பக்தர்களே” என்று நினைக்கவேண்டும். இத்தகைய உணர்வுதான், நாம் மற்றவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அவர்களை துளியளவும் புண்படுத்தாமல் பழகவேண்டும் என்பதில் நம்மை வழிநடத்தும்.
எதனால் நாம் பல வருடங்களாக பக்தி சேவையில் ஈடுபட்டும் எந்தவொரு சுவையையும் அடையமுடியாமல் இருக்கின்றோம் என்ற கேள்விக்கான பதிலாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
ஸ்ரீமத் பாகவதம் 4.9.23ல் ஸ்ரீல பிரபுபாதர் தனது பொருளுரையில் கூறுகின்றார், “ஒரு வைஷ்ணவரின் தாமரைப்பாதத்தில் செய்யும் குற்றமே இந்த உலகில் மிகப்பெரிய குற்றமாகும். துருவ மன்னரை அவமதித்த காரணத்தால், சுருசி தனது மகனை இழந்து, பைத்தியமாகி, அவனைத் தேடி காட்டுக்குள் சென்றபோது, காட்டுத்தீக்கு இரையாகினாள், இவ்விதமாக அவளுடைய வாழ்க்கை முடிவுற்றது.” இந்த பாடத்தின் மூலமாக நாம் ஒரு வைஷ்ணவரை ஒருபோதும் நிந்திக்க கூடாது என்ற பாடத்தை கற்கவேண்டும்.
சுருசி துருவ மன்னரை அவமதித்தபோது அவர் சிறு குழந்தையாகத்தான் இருந்தார். துருவ மன்னர் சிறந்த வைஷ்ணவர் என்பதை அவள் அச்சமயத்தில் அறிந்திக்கவில்லை, எனவே அவளுடைய குற்றம் அறியாமல் இழைக்கப்பட்டதே.
ஒரு வைஷ்ணவருக்கு அறியாமல் செய்யும் சேவையினால் ஒருவர் நற்பலன்களை அடைகிறார், அதேசமயம், அறியாமல் செய்யும் குற்றத்திற்காக அவர் துர்பலன்களை அடைகிறார்.
வைஷ்ணவர்கள் பரம புருஷ பகவானுக்கு மிகமிக பிரியமானவர்கள். வைஷ்ணவரை மகிழ்விப்பதும், வருத்தமடையச் செய்வதும் பரம புருஷரை நேரடியாக பாதிக்கின்றது. நாம் நமது சுயகௌரவத்தை விட்டொழித்து அறிந்தோ அறியாமலோ அனைவரிடமும் செய்துள்ள குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஸ்ரீமத் பாகவதம் 9.4.68ல், தனது பொருளுரையில் ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிடுகின்றார், “ஸாதவோ ஹ்ருதயம் மஹ்யம்” – தூய பக்தர்கள் எப்போதும் எனது இதயத்தில் குடிகொண்டுள்ளனர்.” என்று பகவான் நாராயணன் மாமுனிவர் துர்வாசரிடம் கூறிகிறார் .
தனது குழந்தையின் வருத்தத்தைக் கண்டு துயரப்படும் தந்தையைப் போலவே பகவான் துயரப்படுகிறார். எனவே வைஷ்ணவர்களுடைய தாமரைப் பாதங்களில் குற்றம் இழைக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும். வைஷ்ணவரை மட்டுமல்ல வேறு எவரையும் நிந்திக்கக்கூடாது.
ஒரு பக்தரின் தாமரைப்பாதங்களில் எந்தவொரு குற்றமும் செய்துவிடக்கூடாது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உறுதியாக வலியுறுத்துகின்றார்.
இத்தகைய குற்றம் மத யானையுடன் ஒப்பிடப்படுகிறது. மதம்கொண்ட யானை தோட்டத்திற்குள் நுழைந்தால் அனைத்தையும் அழித்து பாழாகிவிடும்.
எனவே ஒருவர் ஒரு தூய பக்தரின் தாமரைப் பாதங்களில் குற்றமிழைத்து விடாமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.” என்று பக்தி ரத்னாகரின் ஐந்தாவது அலை கூறுகிறது.
பக்த-ஸ்தானே ஸபதான ஹபே ஸர்வ மதே
யேன கோன அகௌஸல நஹே தாந்ர சிதே
அகௌஸல ஹைலே ஸப ஹய அந்தரய
ப்ரஸங்க பலிய கிச்சு கஹியே யேதய
“பக்தர்களுடன் பழகுவதில் கவனமாக இருங்கள், அவர்களுடைய மனதை துளியளவும் வருத்தம் கொள்ளச் செய்துவிடாதீர்கள். பக்தர்களை வருத்தமடைச் செய்வது உங்களுடைய பக்திப்பாதைக்கான தடைக்கற்களாகும்.”
வைஷ்ணவ பிரணாமம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
வாஞ்சா-கல்பதருப் யஷ், ச க்ருபா-ஸிந்துப்ய ஏவ ச
பதிதானாம் பாவனேப் யோ வைஷ்ணவேப் யோ நமோ நம:
நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லாரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர் களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.
ஹரே கிருஷ்ண !
Comments
Post a Comment