ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி








பாகம் 3
சிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில








காலப்போக்கில் நிமாய்க்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்திய ஜகந்நாத மிஸ்ரர், அவரை கங்காதாஸ பண்டிதரின் பள்ளிக்கு அனுப்பினார். நியாயம், இலக்கணம் மற்றும் தத்துவத்தில் விரைவாகப் புலமை பெற்று, சிறந்த பண்டிதர் என்று நிமாய் விரைவில் புகழ் பெற்றார். எனினும், அச்சமயத்தில் நிகழ்ந்த தமது தந்தையின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துக்கத்தை அனுபவித்தார். அதன் பிறகு, அவரது குறும்புத்தனமான நடத்தைகள் தணிந்தன. சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பள்ளியைத் திறந்தார்; அப்பள்ளி மாணவர்கள் உயர் நியமங்களுடன் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.
ஒருமுறை நிமாய் ஒரு ஜோதிடரைக் காண நேர்ந்தபோது, தமது முற்பிறவி வாழ்வைப் பற்றிய விவரங்களைக் கூறுமாறு வினவினார். ஜாதகத்தைக் கணக்கிட்ட ஜோதிடர், தமது தியானத்தின் மூலம், இந்த அழகிய இளம் பிராமணர் அனைத்து பிரபஞ்சங்களுக்கும் மூலமான பூரண சத்தியம் என்பதைக் கண்டார். திகைப்புற்ற அவர், நீர் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள், அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடிய எஜமானர்,” என்று பயபக்தியுடன் மொழிந்தார். நிமாயோ, நீங்கள் நல்ல ஜோதிடர் அல்ல. எனக்குத் தெரியவந்தது யாதெனில் எனது முந்தைய வாழ்வில் நான் ஓர் இடையர் குலச் சிறுவனாக இருந்தேன்,” என்று பதிலளித்தார்
கிழக்கு வங்காளப் பயணம்







லக்ஷ்மிபிரியா என்னும் பெண்ணை நிமாய் திருமணம் செய்து கொண்டார். சீரிய மனைவியாகத் திகழ்ந்த லக்ஷ்மிபிரியா குடும்பப் பொறுப்புக்களை விசுவாசத்துடன் செயலாற்றினாள். தாய் ஸச்சியிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொண்டாள். தன்னைக் கணவனுக்கு அர்ப்பணித்த லக்ஷ்மிபிரியா, தமது எஜமானருக்காகத் தளிகை செய்து அவரது விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியுடன் பரிமாறுவாள்.
ஆசிரியர் தொழிலின் மூலம் தமது குடும்பத்திற்குச் சிறிது வருமானம் ஈட்டுவதென்னும் வெளிக்காரணத்துடன் நிமாய் கிழக்கு வங்காளத்திற்குச் செல்ல முடிவு செய்தார். அங்கு திருநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதே அவருடைய உண்மையான குறிக்கோளாகும். கிழக்கு வங்காளத்தில் அவர் வசித்த குறுகிய காலகட்டத்தில், அங்கே அவரைக் காண பலரும் வருவர். ஜொலிக்கின்ற அவரது பொன்னிற மேனியைக் கண்டும் அவரது அருமையான சாஸ்திர வியாக்கியானங்களைக் கேட்டும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தபன மிஸ்ரர் என்ற ஒரு பிராமணர் கிழக்கு வங்காளத்தில் வசித்து வந்தார். வாழ்வின் பொருளையும் அதை எவ்வாறு அடைவது என்பதையும் அறியும் ஆவலுடன் தபன மிஸ்ரர் பல புத்தகங்களைப் படிப்பது வழக்கம். ஆனால் அவர் அதிகம் படிக்கப் படிக்க அதிக குழப்பமுடையவரானார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய தெய்வீக நபர், மிஸ்ரரே, நீங்கள் ஏன் பல்வேறு புத்தகங்களைப் படித்துக் கொண்டுள்ளீர்? நிமாய் பண்டிதர் அருகில் உள்ளார். அவரை அணுகுங்கள்,” என்று வழிகாட்டினார். மறுநாள் காலை நிமாயை அணுகிய தபன மிஸ்ரர் தமது நிலையை எடுத்துரைத்தார்.
புத்தகப் புழுவாக மாறுவதால் வாழ்வின் பொருளைக் கண்டறிய இயலாது என்றும், இக்கலி யுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்வதே போதுமானது என்றும் நிமாய் விளக்கினார். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே, என்னும் மஹா மந்திரத்தை உச்சரிக்கும்படி தபன மிஸ்ரரை நிமாய் அறிவுறுத்தினார்.
நிமாய் கிழக்கு வங்காளத்தில் இருந்தபோது, அவரது பிரிவினால் லக்ஷ்மிபிரியாவிற்கு ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகள், ஒரு பாம்பின் ரூபத்தை எடுத்து அவளைக் கடித்து, அவளது வாழ்வை எடுத்துக் கொண்டது. குவித்து வைத்த பெரும் செல்வத்துடன் நவத்வீபத்திற்கு நிமாய் திரும்பினார்; தாயை சமாதானப்படுத்தி, அவளின் வேண்டுகோளுக்கிணங்கி விஷ்ணுபிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
நாளை . .
கேசவ காஷ்மீரியைத் தோற்கடித்தல்
தொடரும் . . .
Comments
Post a Comment