ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி










இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.
ஸ்ரீ சைதன்யரின் பிறப்பு







வங்காளத்தின் கங்கைக் கரையில் அமைந்திருந்த நவத்வீபம் என்ற ஊரில், வைஷ்ணவ சமூகத்திற்குத் தலைவராகத் திகழ்ந்த ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் மீண்டும் தோன்றி கலி யுக மக்களை விடுவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் துளசியையும் கங்கை நீரையும் கொண்டு பகவான் கிருஷ்ணரை வழிபட்டார். அச்சமயத்தில் நவத்வீபத்தின் மாயாபுரில் ஜகந்நாத மிஸ்ரர், ஸச்சி தேவி என்ற பிராமண தம்பதியர் பக்தியுடன் வாழ்ந்து வந்தனர். அத்வைத ஆச்சாரியரின் பிரார்த்தனையின் பலனாக பகவான் கிருஷ்ணர் ஸச்சி தேவியின் கருப்பையில் பிரவேசித்தார். அவளது கருவுற்ற தன்மை பதிமூன்று மாதங்கள் நீடித்தது.
அதன்படி, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், 1407 ஷகாப்த வருடம் (கி.பி. 1486, பிப்ரவரி 18) பால்குன மாதத்தின் பௌர்ணமி நாளன்று மாயாபுரில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றினார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரண சந்திர கிரகணத்தின்போது தோன்றினார். நவத்வீப இந்துக்கள் கிரகணத்தின்போது கங்கை நதியில் நின்று ஹரி நாமத்தை உச்சரிப்பது வழக்கம், அன்றைய தினத்திலும் அவர்கள் ஹரி நாமத்தை பலமாக உரைத்தனர். அவர்கள் அவ்வாறு ஹரி! ஹரி!” என்று உச்சரிப்பதைக் கேட்ட முஸ்லீம்கள் பலரும், விளையாட்டாக அவர்களைப் போல் பரிகாசம் செய்தனர். நவத்வீபம் முழுவதும் ஸ்ரீ ஹரியின் நாமம் ஒலித்துக் கொண்டிருந்த சமயத்தில், கௌரஹரி எனப்படும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றினார்.
பெயர் சூட்டுதல்








புதிதாகப் பிறந்த குழந்தையைக் காண வந்த அத்வைத ஆச்சாரியரின் மனைவி ஸ்ரீமதி சீதாதேவி, இந்த அழகிய பொன்னிறக் குழந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய அங்க இலட்சணங்களைக் கொண்டுள்ளார் என்றும், உண்மையில் கிருஷ்ணர்தான் வேறு மேனி நிறத்துடன் உள்ளார் என்றும் உறுதியாகக் கண்டு கொண்டாள். குழந்தை வேப்ப மரத்தடியில் பிறந்த காரணத்தாலும், ஸச்சிமாதாவின் பிற குழந்தைகள் பெரும்பாலும் அகால மரணமடைந்த காரணத்தாலும், வேப்ப மரம் தீய ஆவிகளின் தாக்கத்தை (வெளிப்புற ரீதியில்) எதிர்ப்பதில் திறனுடையது என்று அறியப்பட்டிருந்ததாலும், சீதாதேவி, குழந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, நிமாய்” என்று பெயரிட்டாள்.
பகவான் சைதன்யரின் தாய்வழித் தாத்தாவான நீலாம்பர சக்ரவர்த்தி கற்றறிந்த ஜோதிடராவார். தமது பேரனின் ஜாதகக் குறிப்புகளை அமைக்கும்பொழுது, இக்குழந்தை சாக்ஷாத் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்பதை அவர் கண்டறிந்தார்; இருப்பினும், அந்த இரகசியமான உண்மையினை மறைமுகமாக வைத்தார். குழந்தைக்கு அவர் விஸ்வம்பரர் (உலகங்களை இரட்சிப்பவர்) என்று பெயரிட்டார், நிமாய் என்பது இரண்டாவது பெயராகத் தொடர்ந்தது.
குழந்தையாகப் புரிந்த லீலைகளில் சில








குழந்தை நிமாயை அளவின்றி நேசித்த அண்டை வீட்டுப் பெண்கள் அவரைக் காண அடிக்கடி வருவர். அவர்களிடம் நிமாய் விளையாடும் விளையாட்டு என்னவெனில், அழுகை: அவர் அழத் தொடங்குவார், பெண்கள் ஹரி! ஹரி!” என்று பாடினால் மட்டுமே தமது அழுகையை நிறுத்துவார். இவ்வாறாக இவர் தமது அண்டைவீட்டினர் அனைவரையும் நாள் முழுவதும் பாடச் சொல்லித் தூண்டியதால், கிருஷ்ணரின் திருநாமம் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டில் இடையறாது எதிரொலித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள், நிமாய் ஒரு பெரிய பாம்புடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஸச்சிமாதாவும் ஜகந்நாத மிஸ்ரரும் திகைப்புற்றனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஆனால் சற்று நேரத்தில், அப்பாம்பு பகவானின் சரீரத்தைச் சுற்றி ஊர்ந்து, தீங்கின்றி நழுவிச் சென்றது. உண்மையில் பகவான் விஷ்ணுவின் படுக்கையான அனந்த தேவரே அப்பாம்பின் வடிவில் வந்திருந்தார்.
ஒரு முறை நிமாய் இருந்த பகுதியில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். குழந்தைகளைக் கடத்தி அவர்களிடமிருந்து நகைகளைத் திருடுவது இவர்களின் தொழில். நிமாயைக் கண்ட இத்திருடர்கள், அவரைத் தூக்கிக் கொண்டு ஓடினர். தமது அன்பிற்குரிய நிமாயைக் காண இயலாததால் மிகுந்த கலக்கமுற்ற ஸச்சிதேவி, குழந்தையைத் தேடு வதற்காக அண்டை வீட்டிலுள்ளோரை அழைத்தாள். இதற்கிடையில் இறைவனின் மாயைச் சக்தியின் தாக்கத்தினால் குழப்பமுற்ற வஞ்சகர்கள், ஒரு முழு வட்டமடித்து மீண்டும் ஜகந்நாத மிஸ்ரரின் வீட்டிற்கே வந்து சேர்ந்தனர். மக்கள் பலர் குழந்தையைத் தேடுவதைக் கண்டு, உடனே நிமாயை வேகமாக கீழே இறக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
ஒருமுறை நிமாய் மண் சாப்பிடுவதைக் கண்ட அவரது தாய், நான் இப்போதுதானே உனக்கு அருமையான இனிப்புகளைக் கொடுத்தேன், ஏன் மண் சாப்பிடுகிறாய்?” என்று வினவினாள். என்ன வித்தியாசம்? இவையனைத்தும் ஒன்றே. இனிப்புகள் பூமியிலிருந்தே உருவாக்கப்படுவதால், நான் இனிப்பைச் சாப்பிட்டாலும் மண்ணைச் சாப்பிட்டாலும் இரண்டும் ஒன்றே,” என்று நிமாய் பதிலளித்தார். ஸச்சிமாதா ஒரு கற்றறிந்த வைஷ்ணவ பிராமணரின் மனைவி என்ற காரணத்தினால், நிமாய் தவறான கொள்கையான பூரண அருவவாதத்தை (அத்வைத வாதத்தை) விவரிக்கின்றார் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஸச்சிமாதா உதாரணம் கொடுத்தாள்: மண் பானையானது நிலத்தின் ஒருவகை மாற்றமே என்றாலும், வெறும் களிமண் கட்டியை பானையைப் போன்று உபயோகிக்க இயலாது. நிலம் பானையாக மாற்றமடைந்த பின்னரே அதில் நீரைத் தேக்கி வைக்க இயலும். அதுபோலவே இனிப்புகள் பூமியிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பண்படாத மண்ணானது இனிப்புகளைப் போல உடலுக்கு சக்தியளிக்க இயலாது.” நடைமுறைக்கு ஒவ்வாத அருவவாதத்தின் தன்மையை ஒப்புக்கொண்ட விஸ்வம்பரர், இனிமேல் எனக்கு இனிப்புகளைக் கொடுக்கவும், ஒருபோதும் மண் சாப்பிட மாட்டேன்,” என்று முன்மொழிந்தார்.
தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த பிராமணர் ஒருவர் நவத்வீபத்திற்கு வந்தபொழுது, ஜகந்நாத மிஸ்ரர் அவரை வரவேற்று, அவரது சாலக்ராம சிலாவிற்கு சமைப்பதற்காக, அரிசி மற்றும் இதரப் பொருட்களை அளித்தார். அப்பிராமணரும் உணவு தயாரித்து நைவேத்தியம் செய்தார். உடனே அங்கு வந்த நிமாய் சிறிது சாதத்தை உட்கொண்டார். அவர் மீண்டும் சமைக்க, நிமாய் மீண்டும் உண்ண என மூன்று முறை அவரது நைவேத்தியம் தடைபட்டது. அதனால், பிராமணர் கண்ணீரில் மூழ்கினார். அப்போது நிமாய் அவரிடம் உரைத்தார், யாருக்காக நீ தினமும் நைவேத்தியங்களைத் தயாரிக்கின்றாயோ, அந்த பகவான் விஷ்ணு நானே என்பது உனக்குத் தெரியவில்லையா?” அதனைத் தொடர்ந்து, நிமாய் நான்கு கரங்களுடைய தமது விஷ்ணு ரூபத்தை அப்பிராமணருக்குக் காண்பித்தார். தன்னைத் தொந்தரவு செய்த குழந்தை தனது அன்பிற்குரிய இறைவனே என்பதை உணர்ந்து கொண்ட அப்பிராமணர் தெய்வீகப் பேரானந்தத்தினால் மூர்ச்சையடைந்தார்.








நாளை
சிறுவனாகப் புரிந்த லீலைகளில் சில
தொடரும் . . .








Comments
Post a Comment