ரோஹிதரின் மகன் ஹரிதன். ஹரிதரின் மகன் சம்பன்.
இவர் சம்பாபுரி எனும் நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். சுதேவனின் மகன்
விஜயன். விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகனான பாஹுகன் அவரது
எதிரிகளால் மிகவும் தொல்லைப்படுத்தப்பட்டார். எனவே அவர் வீட்டைத் துறந்து மனவைியுடன்
காடு சென்றார். அவர் அங்கு இறந்துபோனதும் அவருடைய மனைவி உடன்கட்டையேற விரும்பினாள்.
ஆனால் அவள் கர்ப்பவதியாக இருந்ததை அறிந்த ஓளரவ ரிஷி அவளைத் தடுத்துவிட்டார். இவளது
சக்களத்திகள் இவளுக்கு உணவுடன் விஷம் கலந்து கொடுத்துவிட்டனர். ஆயினும் அவளுடைய மகன்
விஷத்துடனேயே பிறந்தான். எனவே அம்மகன் சகரன் என்று பெயர் சூட்டப்பட்டான். (ஸ என்றால்
“உடன்”, கர என்றால் “விஷம்”) சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான
ஓளரவரின் உத்தரவுப்படி, யவனர், சகர், ஹைஹயர் மற்றும்
பர்பரஸ் முதலான பல ஜாதிகளை சீர்படுத்தினார். பிறகு மீண்டும் ஓளரவரின் உத்தரவுப்படி,
அரசர் அஸ்வமேத யாகங்களைச் செய்தார். ஆனால் யாகக் குதிரையை இந்திரன் அபகரித்துச் சென்றுவிட்டார்.
சகர மகாராஜனுக்கு சுமதி மற்றும் கேசினி என்ற இரு மனைவிகள் இருந்தனர். குதிரையைத் தேடிச்
சென்ற சுமதியின் மகன்கள் அகலமாக பூமியைத் தோண்டினார்கள். இவ்வாறு தோண்டப்பட அகழி பிறகு
சாகர சமுத்திரம் என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு தேடிக்கொண்ட செல்லும்பொழுது, மகாபுருஷரான
கபிலதேவரிடம் வந்த அவர்கள், அவருக்கருகில் குதிரை நிற்பதைக்கண்டு
“இவன்தான்
குதிரையைத் திருடியவன். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். மகா பாவியான இவனைக்
கொல்லுங்கள், கொல்லுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு. சகரனின் அறுபதாயிரம் மகன்களும்
ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு முனிவரை நோக்கி ஓடினார்கள். அப்போது அம்முனிவர் கண்களைத்
திறந்தார். குற்றமுள்ள இந்த எண்ணத்துடன் அவரைத் தாக்கிய அவர்களனைவரும் எரிந்து சாம்பலாயினர்.
அரசரின் இரண்டாவது மனைவியான கேசினிக்கு அஸமஞ்ஜஸன் என்ற ஒரு மகனிருந்தார். இவரது மகனான
அம்சுமான் பிறகு குதிரையைத் தேடிச்சென்று, தன் தந்தையுடன் பிறந்தவர்களை விடுவித்தார்.
கபிலதேவரை அணுகிய அம்சுமான். யாகக் குதிரையும், ஒரு சாம்பல் குவியலும் அங்கிருப்பதைக்
கண்டார். அம்சுமான் கபிலதேவரிடம் பிரார்த்தனைகள் செய்தார். இதனால் திருப்தியடைந்த கபிலதேவர்
குதிரையை திருப்பித் தந்தார். குதிரையைப் பெற்ற பிறகும் அம்சுமான் அங்கேயே நின்று கொண்டிருந்ததைக்
கண்ட கபிலதேவரால், அம்சுமான் தன் முனனோர்களின் விடுதலைக்காக வேண்டுவதைப் புரிந்து கொள்ள
முடிந்தது. இவ்வாறாக கங்கை நீரினால் அவர்களை விடுவிக்க இயலும் என்ற உபதேசத்தை கபிலதேவர்
அருளினார். அம்சமானும் பிறகு கபிலதேவரை வலம் வந்து அவரை வணங்கிய பிறகு, யாகக் குதிரையுடன்
அங்கிருந்து கிளம்பிச் சென்றார். யாகத்தை நிறைவேற்றிய சகர மகாராஜன், இராஜ்யத்தை அம்சுமானிடம்
ஒப்படைத்துவிட்டு, ஓளரவரின் உபதேசத்தைப் பின்பற்றி முக்தியடைந்தார்.
அம்சுமான் மகாராஜனின் மகன் திலீபன். இவர் கங்கையை
இவ்வுலகிற்குக் கொண்டு வர முயன்று அதில் வெற்றி பெறாமலேயே இறந்து போனார். திலீபனின்
மகனான பகீரதன் கங்கையை ஜட உலகிற்குக் கொண்டு வருவதென உறுதி கொண்டார். இதற்காக அவர்
கடுந் தவத்தையும் மேற்கொண்டார். அவரது தவத்தால் மகிழ்ந்த கங்கை மாதா, வரம் கொடுக்க
விரும்பி அவருக்குக் காட்சியளித்தாள். பகீரதனும் தன் முன்னோர்களை விடுவிக்கும்படி அவளைக்
கேட்டுக் கொண்டார். கங்கை பூமிக்கு வரச் சம்மதித்த போதிலும், இரு நிபந்தனைகளை விதித்தாள்:
முதலாவதாக அவளது அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த தகுதியுள்ள ஓர் ஆண்மகன் தேவை; இரண்டாவதாக
பாவிகள் கங்கையில் குளிப்பதால் அவர்களது பாவங்கள் நீங்கும் என்றாலும், அவர்களது எல்லாப்
பாவங்களையும் வைத்திருக்க கங்கை விரும்பவில்லை. இவ்விரு நிபந்தனைகளும் கருத்திற் கொள்ள
வேண்டிய விஷயங்களாகும். பகீரதனும் கங்கா மாதாவுக்குப் பின்வருமாறு விடையளித்தார்.
“சிவபெருமானால் தங்களுடைய அலைகளின் வேகத்தை முற்றிலும் கட்டுப்படுத்த இயலும். மேலும்
தூய பக்தர்கள் தங்களுடைய நீரில் குளிக்கும்போது பாவிகள் விட்டுச் சென்ற பாவங்கள் செயலிழக்கச்
செய்யப்படும்.” சுலபமாக திருப்தியடைவதால் ஆசுதோஷர் என்றழைக்கப்படும் சிவபெருமானை மகிழ்விக்கும்
பொருட்டு பகீரதன் தவங்களைச் செய்தார். கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதெனும் பகீரதனின்
திட்டத்திற்கு சிவபெருமான் சம்மதித்தார். இவ்வாறாக கங்கை நீர் தொட்ட உடனேயே பகீரதனின்
முன்னோர்கள் விடுதலையடைந்து சுவர்க்க லோகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment