ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி
ஜகாய், மாதாய் விடுதலை









நித்யானந்த பிரபுவையும் ஹரிதாஸரையும் நவத்வீபத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அங்குள்ள ஒவ்வொருவரையும் கிருஷ்ணரை வழிபடும்படியும் அவரது திருநாமங்களை உச்சரிக்கும்படியும் அவரது போதனைகளைக் கற்கும்படியும் வேண்டிக் கேட்பதற்காக பகவான் கௌராங்கர் அனுப்புவது வழக்கம். ஒருமுறை அவ்வாறு அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில், குடிகாரர்கள், மாமிசம் உண்பவர்கள், கொடூரக் குற்றவாளிகளிலேயே மிகவும் மோசமானவர்கள் என்றெல்லாம் அவப்பேர் பெற்றிருந்த ஜகாய், மாதாய் என்ற இரு சகோதரர்களைச் சந்திக்க நேர்ந்தது. தெய்வீக கருணையின் கடலாகத் திகழும் பகவான் நித்யானந்தர், அந்த அயோக்கியர்களையும் விடுவிக்க விரும்பி கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அவர்களை வேண்டிக் கொண்டார். அதற்குப் பிரதிபலனாக, மண்பானையின் ஒரு பாகத்தை மாதாய் தூக்கியெறிய, அது நித்யானந்த பிரபுவின் தலையில் பட்டு இரத்தம் கொட்டியபோது, மாதாயைத் தடுக்க ஜகாய் முயன்றான்.
தனது உயிரைக் காட்டிலும் பிரியமான நித்யானந்த பிரபு தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டு, கௌராங்கர் கடும் கோபம் கொண்டார். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து, ஜகாய், மாதாயைக் கொல்வதற்காகத் தனது நித்திய ஆயுதமான சுதர்ஸன சக்கரத்தை அவர் அழைத்தார். பகவானின் ஆவேசத்தைக் கண்ட ஜகாய், செய்த தவறுக்காக வருந்தினான், மன்னிக்கும்படி கெஞ்சினான். ஆனால் மாதாய் அவ்வாறு செய்யாததால், நித்யானந்தர் பகவான் சைதன்யரைத் தடுக்க வேண்டியிருந்தது: எம்பெருமானே! தயவுசெய்து இவனைக் கொல்லாதீர். தாழ்ந்தவர்கள், இழிவானவர்கள், பரிதாபமான பாவிகள் என அனைவரையும் காப்பதற்காக நாம் இவ்வுலகிற்கு வந்தோம். நாம் ஜகாய், மாதாயை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் தாழ்ந்தவர்களைத் தூய்மைப்படுத்துபவர்கள் (பதீத பாவன) என்னும் நமது நற்பெயரை நாம் காப்பாற்றுவோம். மற்ற யுகங்களில் நாம் பல்வேறு அரக்கர்களைக் கொன்றுள்ளோம்; தற்போது இவ்விரு பாவிகளையும் விடுவிப்போமாக.”
பாவச் செயல்களை விட்டுவிட்டு இறைவனின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் இருவரையும் பகவான் கௌராங்கர் மன்னித்தார். அன்று முதல், நவத்வீபத்தின் முன்னாள் போக்கிரிகள் உயர்ந்த பக்தர்களாகப் பிரபலமடைந்தனர்.
இஸ்லாமிய காஜியுடன் உரையாடல்









நகரம் முழுவதும் ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாகக் கூடிய மக்கள், தங்களது வீடுகளில் நாம ஸங்கீர்த்தனத்தில் ஈடுபட்டனர். ஆனால் நவத்வீபத்தைச் சேர்ந்த வைதீக பிராமணர்களோ கௌராங்கரை அபாயமாகக் கருதினர். தெருக்களுக்குச் சென்று பலதரப்பட்ட ஜாதியைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து கடவுளின் நாமத்தை எவ்வாறு உச்சரிக்க முடியும்? இஃது அனைத்து மதப் பழக்கங்களையும் நிச்சயமாகக் கெடுத்துவிடும்,” என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
அப்பகுதியின் நீதிபதியாகப் பொறுப்பு வகித்திருந்த இஸ்லாமிய காஜியிடம் சென்று பிராமணர்கள் புகார் கூறினர். உடனே ஸங்கீர்த்தனம் நிறுத்தப்பட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார். வலுவான கீர்த்தனம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வீட்டினுள் அவரே நுழைந்து மிருதங்கத்தை உடைத்தார். கீர்த்தனம் செய்வதை நிறுத்தாவிடில் கொடிய பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அங்கு வசிப்பவர்களிடம் எச்சரிக்கையும் விடுத்தார். தனது அடியார்களின் மனத்தளர்ச்சியைக் கண்ட நிமாய், பயப்பட வேண்டாம். இன்று மாலை நாம் மிகப்பெரிய ஸங்கீர்த்தனக் குழுவை ஏற்படுத்துவோம். எந்த காஜி நம்மை நிறுத்த முயல்வான் என்று பார்க்கலாம்,” என உறுதியளித்தார். அன்று மாலை காஜியின் வீட்டை நோக்கி நவத்வீபத்தின் தெருக்கள், சந்துகள் மற்றும் கங்கைக் கரையின் வழியாக மாபெரும் பேரணியொன்றை கௌராங்கர் நடத்திச் சென்றார். நிமாயின் அடியார்களில் சிலர் காஜியின் வீட்டையும் தோட்டத்தையும் அழிக்கத் தொடங்கினர். ஆனால் நிமாய் அவர்களைத் தடுத்து காஜியைச் சந்திக்கத் தூது அனுப்பினார்.
விரோதமான எண்ணத்துடன் தான் வரவில்லை என்று விளக்கமளித்து, காஜியை சமாதானப்படுத்திய பின்னர், நிமாய் அவருடன் நீண்ட நேரம் விவாதித்தார். நிமாய் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் பேச, காஜி குரானை விவரித்தார். இறுதியில், பசுவதை மதத்தின் உண்மையான கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை ஒப்புக் கொண்ட காஜி, நானோ எனது சந்ததியினரோ ஒருபோதும் தங்களின் ஸங்கீர்த்தன இயக்கத்திற்குத் தடையாக இருக்க மாட்டோம்,” என கௌராங்கரிடம் சத்தியம் அளித்தார். நவத்வீபத்தின் தெருக்கள் வழியாகத் திரும்பிச் சென்ற ஸங்கீர்த்தன பேரணியில் அவரும் இணைந்து கொண்டார்.
சந்நியாசத்திற்கான எண்ணம்









மஹாபிரபுவின் நெருங்கிய பக்தர்களைத் தவிர, மற்றவர்கள் அவரை ஒரு சாதாரண மனிதராகக் கருதியதுடன் ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தைப் பரப்புவதால் உலகிலுள்ள அனைவரையும் முக்தி பெறச் செய்யும் அவரது விருப்பத்தையும் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் சந்நியாசம் ஏற்றுக் கொண்டால் மக்கள் எனது போதனைகளை தீவிரமாக ஏற்றுக்கொள்வர். குறைந்தபட்சம் சந்நியாசிக்கு வந்தனம் செலுத்துதல் என்னும் நற்பழக்கத்தைப் பின்பற்றி, அவர்கள் என்முன் விழுந்து வணங்குவர். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாகிய என்முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதால் அவர்களும் பயனடைவர். மேலும், சந்நியாசம் எடுப்பதால், குடும்பப் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு, எங்கும் பயணம் செய்து பிரச்சாரம் செய்ய தடையற்றவனாகி விடுவேன்,” என்று பகவான் சைதன்யர் கருதினார். இவ்வாறாக, சந்நியாசம் ஏற்று உலகம் முழுவதையும் காப்பாற்றத் தீர்மானித்தார் பகவான்.
நாளை . .
சந்நியாசம் ஏற்று புரியை அடைதல்
தொடரும் . . .
( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment