கட்வாங்க மகாராஜனின் மகன் தீர்கபாஹு. அவரது
மகன் இரகு. இரகுவின் மகன் அஜன். அஜனின் மகன் தசரதர். தசரதரின் புத்திரர் பகவான் ஸ்ரீ
ராமச்சந்திரர். பரமபுருஷர் தமது பூரண சதுரங்க அம்சமாக, பகவான் ராமச்சந்திரராகவும்,
லக்ஷ்மணராகவும், பரனாகவும் மற்றும் சத்ருக்னராகவும் இவ்வுலகில் அவதரித்தார். பரம சத்தியத்தை
உண்மையாக அறிந்துள்ள வால்மீகியைப் போன்ற மாமுனிவர்கள் அவரது உன்னதமான லீலைகளை விவரித்துள்ளனர்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி இந்த லீலைகளை சுருக்கமாக விவரிக்கிறார்.
பகவான் ராமச்சந்திரர் விஸ்வாமித்திரருடன் சென்று மாரீசனைப் போன்ற இராட்சஸர்களைக் கொன்றார். ஹரதனு என்ற பருத்த, உறுதியான வில்லை உடைத்தபின், பகவான் சீதைப் பிராட்டியை மணந்தார். பிறகு பரசுராமரின் கவர்த்தை வேரறுத்தார். அதன்பிறகு தன் தந்தையின் கட்டளைப்படி, சீதையும் லக்ஷ்மணனும் பின்தொடர வனம் புகுந்தார். அங்கு சூர்ப்பநகையின் மூக்கைத் துண்டித்ததுடன், இராவணனின் சகாக்களான கரன், தூஷணன் முதலானவர்களையும் கொன்றார். இராவணன் சீதையை அபகரித்துச் சென்றது முதல், அந்த அரக்கனின் துருதிர்ஷ்டம் ஆரம்பமானது. மாரீசன் ஒரு தங்க மானின் உருவை ஏற்றபோது, சீதையை மகிழ்விக்கும் பொருட்டு, மானைப் பிடித்துவர பகவான் ராமர் சென்றார். ஆனால் ராமர் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட இராவணன் சீதையை கடத்திச் சென்றான். பிறகு பகவான் ராமச்சந்திரரும், லக்ஷ்மணனும் வனம் முழுவதிலும் சீதையைத் தேடியலைந்தனர். இவ்வாறு தேடிச் செல்லும் சமயம், அவர்கள் ஜடாயுவைச் சந்தித்தனர். பிறகு பகவான் அசுரனான கபந்தனையும், வாலியையும் கொன்று சுக்ரீவனுடன் நட்புக் கொண்டார். வானர வீரர்களின் படை பலத்தை ஒழுங்குபடுத்தியபின், அவர்களுடன் கடற்கறைக்குச் சென்ற பகவான், சமுத்திர ராஜனின் வரவுக்காகக் காத்திருந்தார். ஆனால் சமுத்திர ராஜன் வராததைக் கண்ட சமுத்திர பதியான பகவான் கோபாவேஷமானார். பிறகு விரைவாக அங்கு வந்து சேர்ந்த சமுத்திரராஜன், பகவானிடம் சரணடைந்து, எல்லா வழிகளிலும் அவருக்கு உதவத் தயாரானார். பிறகு சமுத்திரத்தில் பாலம் கட்டிய பகவான், விபீஷணரின் உதவியுடன் இராவணனின் தலைநகரான இலங்கைகையத் தாக்கினார். பகவானின் நித்தியத் தொண்டரான ஹனுமான் முன்பு இலங்கைக்குத் தீ வைத்தார். இப்பொழுது லக்ஷ்மணரின் உதவியுடன் பகவான் ராமச்சந்திரரின் படை இராட்சஸ வீரர்கள் அனைவரையும் கொன்றது. பிறகு பகவான் ராமச்சந்திரர் இராவணனைக் கொன்றார். மண்டோதரியும், பிற மனைவிகளும் இராவணனுக்காக விசனப்பட்டனர். பகவான் ராமரின் கட்டளைப்படி, மரணமடைந்த குடும்பத்தினருக்கு விபீஷணர் ஈமச்சடங்குகளைச் செய்தார். பிறகு பகவான் ராமர் விபீஷணருக்கு இலங்கையை ஆளும் உரிமையையும், நீண்ட ஆயுளையும் அளித்தார். அசோக வனத்திலிருந்து சீதையை மீட்ட பகவான், புஷ்பக விமானத்தில் அவளுடன் அயோத்திக்குச் சென்றார். அங்கு பரதன் அவரை வரவேற்றார். பகவான் ஸ்ரீ ராமர் அயோத்தியில் புகுந்ததும், பரதன் அவரது பாதுகைகளைக் கொண்டு வந்தார். விபூஷணரும், சுக்ரீவனும் வெண்சாமரத்தையும், விசிறியையும் பிடித்திருந்தனர். ஹனுமான் ஒரு குடையைப் பிடித்திருந்தார். சத்ருக்னன் பகவானின் வில்லையும், இரு அம்பறாத்தூணிகளையும் பிடித்திருந்தார். சீதாதேவி புண்ணிய தீர்த்தங்களின் நீரைக் கொண்ட ஒரு கமண்டலத்தைப் பிடித்திருந்தாள். அங்கதனும், (ரிக்ஷராஜனான) ஜாம்பவானும் முறையே ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் பிடித்திருந்தனர். பகவான் லக்ஷ்மணராலும், சீதா தேவியாலும் பின்தொடரப்பட்ட பகவான் ராமச்சந்திரர் அவரது உறவினர்கள் அனைவரையும் சந்தித்தபின், வசிஷ்ட மாமுனிவர் அவரை அரசராக முடி சூட்டினார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment