சொன்ன வண்ணம் செய்த பெருமாள்


 சொன்ன வண்ணம் செய்த பெருமாள்


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆




திருமழிசையாழ்வாரின் சீடன் கணிக்கண்ணன். இவர், நாள்தோறும் தனக்கும் தன் குருவுக்கும் சேர்த்து உஞ்சவிருத்தி எடுத்துவந்து சேவை செய்தார். இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மை செய்துவந்தார் ஒரு மூதாட்டி. அவரின் சேவையைக்கண்டு மனம் மகிழ்ந்த ஆழ்வார், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று மூதாட்டியிடம் கேட்டார். மூதாட்டியும், 'தங்களுக்கு மேலும் தொண்டு செய்ய எனக்கு நல்ல உடல் பலம் வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். அடுத்த கணம் அவரின் முதுமை நீங்கி இளமை திரும்பியது.

காஞ்சியை ஆண்ட பல்லவராயன் என்ற மன்னன் அப்பெண்ணின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டான். காலம் செல்லச் செல்ல மன்னன் இளமை குன்றி முதுமை பெறத்துவங்கினான். ஆனால் தன் மனைவி இளமை குன்றாமல் இருப்பதன் காரணத்தை அவளிடம் வினவினான். அவள் திருமழிசை ஆழ்வாரின் புகழை மன்னனுக்கு எடுத்துரைத்தாள். இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட மன்னன் கணிக்கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கணிக்கண்ணன் மீதும், ஆழ்வார் மீதும் பொறாமை கொண்டிருந்த சிலர், கணிக்கண்ணன் சொன்னால் ஆழ்வார் எதையும் செய்வார் என்று சொல்லி மன்னரின் பேராசையைத் தூண்டினர்.

அரண்மனை வந்த கணிக்கண்ணனிடம் மன்னன், 'தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும் ' என்று கேட்டார். கணிக்கண்ணனோ, " குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய உத்தரவின் வழியாகப் பெறமுடியாது" என்று சொல்லி மறுத்தார். சரி என்னை புகழ்ந்து ஒரு பாடலேனும் பாடுமாறு ஆழ்வாரிடம் கூறும் என்று கணிகண்ணனுக்கு மன்னன் உத்தரவிட்டான். நானே உங்களை பற்றி பாட மாட்டேன் அப்படி இருக்கையில் பரந்தாமனை பற்றி மட்டுமே பாடும் அவரை ஒரு பாமரனை பற்றி பாட சொல்வதா ? அது என்னால் இயலாது என்று கணிகண்ணன் மீண்டும் மறுக்கவே. தன் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் அவரை நாடு கடத்தும்படி மன்னர் உத்தரவிட்டார்.

இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். 'தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார்.' இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், 'வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்' என்று சொல்லிக் கோயிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுமாறு ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்

"கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்"

'என் சீடன் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன். பக்தர்கள் இல்லாத ஊரில் உனக்கு என்ன வேலை. நீயும் உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு என் பின்னாலேயே வா" என்பது இதன் பொருள்.

சீடன் முன்னே செல்ல, ஆழ்வார் பின்னே செல்ல, அவர்களைத் தொடர்ந்து பெருமாளும் தன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். பின்பு அவர்கள் மூவரும் ஊர் எல்லையைக் கடந்து ஓர் ஊரில் தங்கினர். நாராயணன் வெளியேறியதும், அவன் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். திருவும் இறையும் இல்லாத ஊரை விட்டு அனைத்து தேவர்களும் நீங்கினர். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.

மறுநாள் பூஜை செய்யவந்த அர்ச்சகர்கள் கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். இந்தத் தகவல் மன்னனுக்குப் போனது. மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். ஓடோடி வந்து ஆழ்வாரின் காலடியில் வீழ்ந்து பணிந்து தன் பிழை பொறுத்தருளுமாறு வேண்டினான். ஆழ்வாரும் அவனை மன்னித்து "கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்" என்று பாடினார்.

உடனே பெருமாள் மீண்டும் தன் பைந்நாகப் பாயை சுருட்டிக்கொண்டு திருவெக்கா வந்து மீண்டும் படுத்துக்கொண்டார். ஓர்நாள் இரவில் பெருமாள் தங்கிய ஊர் ஓரிக்கை (ஓர் இருக்கை) என்றானது. மற்ற தலங்களில் எல்லாம் பெருமாள் இடமிருந்து வலமாகச் சயனித்திருக்க, திருவெக்காவிலோ வலமிருந்து இடமாகச் சயனித்திருப்பார். ஆழ்வாரின் சொல் கேட்டு எழுந்து நடந்து மீண்டும் வந்து படுத்ததால் இந்தப் பெருமாளுக்கு 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று திருநாமம் ஏற்பட்டது.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more