ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 1 / அத்தியாயம் 1 /
பதம் 1
*************************************************************************
மொழிபெயர்ப்பு
எம்பெருமானே, ஸ்ரீ கிருஷ்ணா, வசுதேவரின் புதல்வரே, எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன். தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும், பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன். எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார். மேலும் அவருக்கப்பால் வேறெந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார். முதல் ஜீவனான பிரம்மாவின் இதயத்தில் ஆதியில் வேத அறிவைப் புகட்டியவர் அவரேயாவார். நெருப்பினுள் காணப்படும் நீராகவும், நீர் மேல் காணப்படும் நிலமாகவும் தோற்றமளிக்கும் மாயாஜாலத்தினால் ஒருவன் குழப்பமடைவதைப் போல், ஸ்ரீ கிருஷ்ணரால் பெரும் முனிவர்களும், தேவர்களும் கூட மாயையில் புகுத்தப்படுகின்றனர். இயற்கையின் முக்குண பிரதிபலன்களால் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஜடப் பிரபஞ்சங்கள் பொய்யானவை ஆயினும், அவை உண்மையானவையாக காட்சியளிப்பதற்கு உரிய ஒரே காரணப் பொருளும் அவரேயாவார். எனவே, ஜடவுலக மாயைகளிலிருந்து நிரந்தரமாக விடுபட்டுள்ள பரலோகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நித்திய வாசம் புரிகின்றார். அவரே பூரண உண்மையாகையால் நான் அவரைத் தியானிக்கின்றேன்.
Comments
Post a Comment