பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு தனது மாயாவிலாசத்தை காண்பித்தல்
ஆதாரம் - கர்க சம்ஹிதை
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
தேவரிஷி ஶ்ரீ நாரதர் மற்றும் பஹூலாஸ்வ மன்னருக்கும் (ஜனக மஹராஜனுக்கும் ) நிகழ்ந்த உரையாடல்.
ஶ்ரீ நாரதர் கூறினார். மன்னா ஒரு நாள் முனிவர்களில் சிறந்தவரான துர்வாசர் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனை தரிசிப்பதற்காக விரஜ மண்டலத்திற்கு வந்தார். அவர் மகாவனத்திற்கு அருகே புனிதமான காளிந்தி நதி (யமுனை நதி) கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை கண்டார். கோபால கிருஷ்ணன் சிறுவர்களுடன் அங்கு புரள்வது , மல்யுத்தம் செய்வதும், சிறுவர்களுக்கே உரியதான பாலலீலைகள் செய்து மனதைக் கொள்ளைக் கொள்பவராக திகழ்ந்தார். அவரது அங்கம் முழுவதும் மண் ஒட்டியிருந்தது. அவரது சுருண்ட கருங்குழல் சோபையுற்றது. நிர்வாணமாக சிறுவர்களுடன் ஓடிய பகவான் ஶ்ரீ ஹரியைக் கண்ட துர்வாசரின் மனதில் மிகுந்த வியப்பு உண்டாயிற்று.
இவன் ஆறு வகை ஐஸ்வர்யங்களால் (அழகு, அறிவு, செல்வம்,வலிமை, புகழ், துறவு) முழுவதும் நிரம்பிய அதே ஈஸ்வரனா ? அப்படியானால் இவன் சிறுவர்களோடு ஏன் மண்ணில் புரண்டு கொண்டிருக்கிறான் ? என் பார்வையில் இவன் நந்தனுடைய மகன் மட்டும் தான். பரம புருஷ பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அல்ல என்று துர்வாச முனிவர் மனதிற்குள் எண்ணினார்.
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'ராஜன், முனிவர் துர்வாசர் இவ்வாறு மாயையில் ஆழ்ந்து விட்டபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணர் தானாகவே துர்வாசரின் மடியில் வந்து அமர்ந்தார். பிறகு விலகி விட்டார் . ஸ்ரீ கிருஷ்ணனின் பார்வை சிங்கக் குட்டியைப் போலிருந்தது. அவர் சிரித்தபடி இனிமையாகப் பேசியவாறு மறுபடி முனிவருக்கு முன்னால் வந்தார். சிரித்த ஸ்ரீ கிருஷ்ணரின் சுவாசத்தால் இழுக்கப்பட்ட முனிவர் அவரது வாயினுள் புகுந்துவிட்டார். அங்கு ஒரு பரந்த லோகத்தைக் கண்டார். அங்கு காடுகளும் ஜனங்களற்ற பிரதேசமும் தென்பட்டன. இந்த காடுகளில் திரிந்த முனிவர் நான் எங்கிருந்து இங்கு வந்தேன் என்று கேட்டுகொண்டார்.
அதற்குள் ஒரு மலைப்பாம்பு அவரை விழுங்கி விட்டது. அதன் வயிற்றை அடைந்த முனிவர் ஏழு லோகங்களையும் பாதாளங்களோடு பிரம்மாண்டம் அனைத்தையும் தரிசித்தார். அந்தத் தீவுகளில் சஞ்சரித்தவாறு ஒரு வெள்ளை மலையில் சென்று தங்கினார். அந்த மலைமீது நூறு கோடி ஆண்டுகள் வரை பகவானை பஜித்தபடி அவர் தவம் புரிந்துகொண்டே இருந்தார். இதற்குள் உலகம் முழுவதற்கும் பயங்கரமான பிரளயகால வந்துவிட்டது. கடல்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் பூமியை மூழ்கடித்தவாறு முனிவரிடம் வந்தன. துர்வாச முனிவர் அந்தக் கடல்களால் அடித்துச் செல்லப்பட்டார். அந்த ஆழி நீருக்கு முடிவையே அவரால் காணமுடியவில்லை.
இதேபோல ஓராயிரம் யுகங்கள் கழிந்துவிட்டன. அதன்பின் முனிவர் நீரில் மூழ்கிவிட்டார். அவரது நினைவு சக்தி நசித்து விட்டது. அவர் நீருக்குள் சஞ்சரிக்கலானார். அவர் வேறு ஒரு பிரம்மாண்டத்தைக் கண்டார். அந்த பிரம்மாண்டத்தின் ஓட்டையில் புகுந்ததும் அவர் தெய்வீக சிருஷ்டிக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து, அந்த பிரம்மாண்டத்தின் உச்சிப்பகுதியில் இருந்த லோகங்களில் பிரம்மாவின் ஆயுள்வரை சஞ்சரிக்கலானார். இதேபோல அங்கு ஒரு துவாரத்தைக் கண்டு பகவான் ஸ்ரீ ஹரியை ஸ்மரணம் செய்தவாறு அதனுள் நுழைந்தார். நுழைந்ததுமே அந்த பிரம்மாண்டத்திற்கு வெளியே வந்து சேர்ந்தார். அங்கும் பெரும் நீர் தென்பட்டது.
அந்த பெரும் நீரில் கோடி கோடி பிரம்மாண்டங்களின் குவியல்கள் அடித்துச் செல்லப்படுவது அவருக்கு தென்பட்டது. முனிவர் நீரை கவனமாக பார்த்தபோது அங்கு அவருக்கு விரஜா நதியின் தரிசனம் கிட்டியது. அந்த நதியின் கரையை அடைந்த முனிவர் சாக்ஷாத் கோலோகத்தில் பிரவேசித்தார் அங்கு வரிசையாக பிருந்தாவனம், கோவர்தனம் மற்றும் அழகிய யமுனைக் கரையை தரிசித்து மிக்கமகிழ்ச்சி உண்டாயிற்று.பின் முனிவர் நிகுஞ்ஜத்தினுள் நுழைந்த போது கோடானுகோடி சூரியனுக்கு நிகரான ஒளி மண்டலத்தினுள்ளே திவ்யமான லக்ஷ் இதழ் தாமரை மீது எழுந்தருளியிருந்த சாக்ஷாத் பரிபூர்ண பரம புருஷோத்தமனான ராதாவல்லப பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எண்ணற்ற கோப-கோபியர் சூழ, கோடிக்கணக்கான பசுகளின் இடையே கண்டார். எண்ணற்ற பிரம்மாண்டங்களின் தலைவரான அந்த பகவான் ஸ்ரீ ஹரியோடு கோலோகதரிசனமும் முனிவருக்கு கிடைத்தது.
அவரைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரிக்கலானார். சிரிக்கும்போது அவரது சுவாசத்தால் இழுக்கப்பட்ட துர்வாச முனிவர் அவரது வாயினுள் புகுந்து விட்டார். அங்கிருந்து வெளியேவந்தபோது அவர், அதே பால ரூபதாரி ஸ்ரீ நந்தலாலாவை காளிந்தி ( யமுனை) கரையில் மணலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மஹாவனத்தில் அந்த ரூபத்தில் தரிசித்த துர்வாச முனிவர் ஸ்ரீ கிருஷ்ணன் சாக்ஷாத் பரம புருஷ பகவான் என்பதை அறிந்து கொண்டார் பிறகென்ன, அவர் ஶ்ரீ நந்தநந்தனை ஓயாமல் வணங்கி உத்தம ஸ்லோகங்களால் துதி செய்தார்.
துர்வாச முனிவர் கூறினார்: 'அன்றலர்ந்த நூறிதழ் தாமரைக்கு நிகராகப் பரந்த கண்களை உடையவரும், கொவ்வைக்கனியின் செம்மையை திஸ்கரிக்கும் இதழ் கொண்டவரும், நீருண்டு மேகத்தின் ச்யாம மனோஹர காந்தியை ஒக்கும் திருமேனியும், தெய்வீகப் புன்முறுவல் அழகு செய்யும் முகமும், அழகாக மெல்லச் சென்று கொண்டிருப்பவரும், குழந்தைப் பருவத்தினால் மகிழ்ச்சி கொண்டவருமான அழகிய ஸ்ரீ நந்தலாலாவை நான் எனது மனதால் வணங்குகிறேன்.
சலங்கையும் நூபுரமும் ஒலி செய்யும் திருவடிகளும் ரத்தினங்களால் அமைந்த மேகலை இடுப்பில் ஒலி செய்யவும், புலிநகம் இணைந்த யந்திரங்கள் அழகிய கண்டஹாரம் அழகுடன் விளங்க நெற்றியில் கண் பார்வை (திருஷ்டி)யை விலக்கும் மைப் பொட்டும் விளங்க காளிந்தி நதியின் (யமுனா) கரையில் சிறுவர்க்குரிய விளையாட்டில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ ஹரியை நான் துதிக்கிறேன்.பூரண சந்திரனை ஒத்த அழகிய முகத்தில் புதிய நீலமேக சியாம வைபவத்தைத் தோற்கடிக்கும் சுருண்ட கருங்குழலும் தலையில் மகுடத்துடன் மின்னும், ஸ்ரீ நந்தலாலா ஸ்ரீ கிருஷ்ணனாகிய உமக்கும் உமது தமையனான ஸ்ரீ பலராமருக்கும் எனது வணக்கங்கள். விடியற்காலையில் எழுந்து இந்த நந்த நந்தன ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்பவர்களின் கண்ணெதிரே ஸ்ரீ நந்தகுமாரன் பிரத்யக்ஷமாகிறார்.
நாரதர் கூறுகிறார்: 'இவ்விதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி அவரையே தியானித்து ஜெபித்தவாறு துர்வாச முனிவர் வடக்கே பத்ரிகாசரமம் நோக்கி சென்று விட்டார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment