ஸ்ரீ மதனமோஹனனின் வரலாறு


 ஸ்ரீ மதனமோஹனனின் வரலாறு


அருளியவர் :- தவத்திரு ராதாநாத் சுவாமி மஹராஜ்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகைவிட்டுச் சென்றபின், மகாராஜா யுதிஷ்டிரர், பகவானுடைய பிரிவைத் தாங்க முடியாமல், தானும் இவ்வுலகைவிட்டுச் செல்லத் தீர்மானித்தார். அவர் செல்லும்முன், மகாராஜா பரீக்ஷித்தை இந்த உலகுக்கே மன்னனாக முடிசூட்டி, பகவான் கிருஷ்ணருடைய கொள்ளுப் பேரன் வஜ்ரநாபரை, மதுராவின் மன்னனாக முடி சூட்டினார்.

விருந்தாவனத்தின் மகிமைகளை மீண்டும் நிலைநிறுத்துமாறு, தூய பக்தர்கள் வஜ்ரநாபரிடம் வேண்டினர். பகவான் கிருஷ்ணரின் லீலைகள் நிகழ்ந்த விருந்தாவனத்தின் புனித இடங்களை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்து, முக்கிய இடங்களில், பகவானின் புனிதமான அழகிய திருவுருவை, அர்சா விக்ரகமாக நிறுவ, வஜ்ரநாபர் முடிவுசெய்தார். பின், யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு கல்பதருவின் (கற்பகவிருக்ஷம் மரத்தின் ) கீழ் அமர்ந்து, ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரை தியானித்தார். கல்பதருவின் தெய்வீக அருளால், ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணரின் கருணை, அவர் உள்ளத்தில் புகுந்து, ஸ்ரீ கிருஷ்ண லீலை நடந்த இடங்களை அவருக்குத் தெரிவித்தது. பின்னர், பகவானின் அர்சா விக்ரகத்தை நிறுவ, தேவர்களின் கட்டடக்கலை நிபுணரான விஸ்வகர்மாவை அவர் அழைத்தார். அவரால் வடிவமைக்கப்பட்ட மூன்று திருவுருவங்கள் 'ராதா மதன்மோஹன், ராதா கோவிந்தன் மற்றும் ராதா கோபிநாதன் ஆகும்.

பகவான் கிருஷ்ணரை நேரிடையாகக் கண்ட அபிமன்யுவின் மனைவியும், பரீக்ஷித் மஹராஜனின் தாயுமான உத்தரா, அப்போது அங்கு இருந்தார். ராதா மதனமோஹனனின் அழகிய வடிவைக் கண்ட உத்தரா, முழுமுதற்கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்கள், அவ்விக்ரகத்தில் சரியாக வெளிப்பட்டிருப்பதாகக் கூறினார். ராதா கோவிந்தனின் அழகிய உருவைக் கண்ட உத்தரா, பகவானின் மார்பும் புல்லாங்குழலும் சரியாக அமைந்துள்ளதாகக் கூறினார். ஸ்ரீ ராதா கோபிநாதரின் தெய்வீக உருவைக் கண்ட அவள், ஸ்ரீ கிருஷ்ணரின் அழகிய புன்னகை தவழும் முகம், மிகச் சரியாக இருப்பதாகக் கூறினார். இம்மூன்றும் விருந்தாவனத்திலே உள்ள பகவானின் முக்கியமான திருவுருவங்களாகும்.

நீண்ட காலம் மதனமோஹனன், இவ்வுலகத்தில் தோன்றாமல் தன் லீலையை நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் அன்பான, நெருங்கிய பக்தரான ஸ்ரீ அத்வைத ஆசார்யர் பூமியில் தோன்றி, பல புனிதத் தலங்களுக்குப் பயணித்தார். அவர் விருந்தாவனத்திலே வாழ்ந்தபோது, யமுனை நதிக் கரையில் உள்ள ஒரு மரத்தின் அடியில் தங்கியிருந்தார் [அத்வைத வட]. அப்போது, கௌடிய வைணவர்களால் மதன கோபால் என அறியப்படும் மதன மோஹனன் தன்னை ஸ்ரீ அத்வைத ஆசாரியருக்கு வெளிப்படுத்திக்கொண்டார். விருந்தாவனத்தைவிட்டு வெளியேறும்முன், ஸ்ரீ அத்வைத ஆசாரியார், மதனகோபாலை வழிபடும் பொறுப்பை, மதுராவில் இருந்த தூய உள்ளம் கொண்ட புருஷோத்த சாபே என்னும் அந்தணனிடம், அன்புடன் ஒப்படைத்தார். பெளதிகப்பற்று சிறிதும் இல்லாத இம்மாபெரும் பக்தர், மதன கோபாலைத் தன் சொந்தக் குழந்தையாகப் பாவித்து, வழிபட்டார்.

பின்னர், பகவான் ஶ்ரீ சைதன்யரின் ஆணைக்கிணங்க, சனாதன கோஸ்வாமி விருந்தாவனம் வந்தார். விருந்தாவனத்திலே ஒரு சாதாரண யாசகரைப்போல் வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச்சென்று சிறிது பிரசாதம் யாசகம் பெறுவார். [மதுகரி]. விருந்தாவனத்திலே, முக்கிய உணவு ரொட்டி. எனவே அவர், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ரொட்டியைப் பெற்றுக் கொள்வார் . இம்முறையில் அவர் மக்களைச் சந்திக்கும்போது, அவர்களின் வீடுகளுக்கு அவர் அழைக்கப்படுவார். அங்கு அவர் கீர்த்தனம் செய்து, ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் ஆன்மீக உபதேசங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்வார்

ஒருமுறை மதுரா நகரத்தில் அவர் யாசகம் பெறும்போது, தனித்துவமான ஒன்றைக் கண்டார். ஸ்ரீமன் புருஷோத்தம சாபே அவரை வீட்டினுள்ளே அழைத்து அவரிடம், 'நான் உனக்கு நல்ல பிரசாதம் தருகிறேன், சனாதனா. பகவானின் பூஜை மண்டபத்திலிருந்து, நான் அதனை எடுத்துக்கொடுக்கிறேன்' என்றார். சனாதன கோஸ்வாமியின் கண் முன்பாகவே, புருஷோத்தம சாபே, பகவானின் திருவிக்கிரஹத்தைத் தன் குழந்தையைப்போலக் கடிந்து கொண்டார். 'நான் உனக்குக் கொடுக்கும் உணவை நீ ஏன் உண்டு தீர்க்கவில்லை? என்று. கோல் ஒன்று எடுத்து, பகவானின் திருவிக்கிரஹத்தைத் தண்டிப்பதுபோல் மிரட்டினார். பகவானின் திருவிக்கிரஹ வழிபாட்டின் அதிகாரபூர்வ நூலான ஹரி பக்த விலாசத்தை எழுதியவரான சனாதன கோஸ்வாமி இதனைக் கண்டு, புருஷோத்தம சாபேயிடம் கூறினார். "பகவானின் திருவிக்கிரஹம், பகவானிலிருந்து வேறானதல்ல; அவர் முழுமுதற்கடவுள்; பூரண உண்மை; காரணங்கள் அனைத்திற்கும் காரணம்; பக்திகலந்த மரியாதையுடன் அவரை அணுகவேண்டும்; உன் குழந்தையைப்போல அவரை நடத்தக்கூடாது". புருஷோத்தம சாபே பணிவுடன் மன்னிப்புக் கோரி, "நான் வருந்துகிறேன்; உங்கள் கருணையால், திருவிக்கிரஹ வழிபாட்டின் சரியான முறையை அறிந்துகொண்டேன்" எனக் கூறினார்

அன்று இரவு மதனமோஹனனின் அழகிய வடிவம் சநாதனரின் முன்பு தோன்றியது. மதனமோஹனன் கூறினார்: என் பெயர் மதனமோஹனன். பல ஆண்டுகள் முன்பு, கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்நபரால் நான் பிரதிஷ்டை செய்யப்பட்டேன். ஆனால், பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு, புருஷோத்தம சாபே என்னும் இந்த அந்தணனின் பாதுகாப்பைப் பெற்றேன். அவர் தூய பக்தர். வாத்சல்ய பாவத்தில் என்னை வணங்குகிறார். தூய அன்பினால் என்னைத்தன் குழந்தையாகப் பார்க்கிறார். அனால், நீ அவரை முறைப்படுத்தப்பட்ட அர்ச்சனை வழிபாட்டில் பயிற்சி கொடுக்கிறாய் . எனக்கு இதில் திருப்தியில்லை. எனவே, வெகு விரைவில் இந்த அந்தணர் வந்து, என் இந்த ஆன்மீக உருவை உனக்கு தக்ஷிணையாகத் தருவார். என்னை நீ, முழு கவனத்துடனும், பூரண அன்புடனும், உன் ஆன்மாவாக, உன் உயிராக, வழிபடவேண்டும்.

இந்த முறையிலே, மதனமோஹனன் சனாதன கோஸ்வாமியின் அன்பான கவனிப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஸ்ரீமதி ராதாரணியின் விக்கிரகம் அங்கு எப்படி வந்தது?

கோவிந்தனின், கோபிநாதனின், மதனமோஹனனின் இதயத்தின் பேரரசி ஸ்ரீமதி ராதாராணி என்பதை பக்தர்கள் அறிவர். ஆனால் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரகம் அங்கே பிரதிஷ்டை செய்யபடாமல் இருந்தது.தங்கள் வணக்கத்தின் ‘மூலபொருள்’ விக்கிரகத்தின் இதயத்தில் உள்ளது என்ற எண்ணத்தில் கோஸ்வாமிகள் ஸ்ரீமதி ராதாராணியை வழிபட்டனர். இதேமுறையில் அவர்கள், ராதாகோவிந்தனையும், ராதா மதனமோஹனனையும், ராதா கோபிநாதனையும் வழிபட்டனர். ஜெகந்நாதபுரியின் அரசன் பிரதபிருத்ராவின் மகன் புருஷோத்தமன் ஜனா பின்வருமாறு எண்ணினார். சாதாரண மக்களும், ஸ்ரீமதி ராதாராணியைத் தங்கள் கண்களால் பார்த்தால், மிகவும் மகிழ்வர், என்று. கோவிந்ததேவன் மற்றும் மதனமோஹனனோடு ஸ்ரீமதி ராதாராணியையம் சேர்த்து வழிபடவேண்டும் என அவர் மிகவும் விரும்பினார். எனவே அவர், பல பக்தர்களோடு ஸ்ரீமதி ராதிகாவின் இரு அழகிய விக்கிரஹங்களை விருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தார். பக்தர்களின் பரிவாரங்கள் விக்கிரஹங்களோடு விருந்தாவனம் வந்தபோது, விருந்தாவனவாசிகள் மிகவும் மகிழ்ந்தனர். அவர்களை வரவேற்க, மாபெரும் திருவிழா நடந்தது

மதன மோஹன விக்கிரஹத்தின் அர்ச்சகர் ஒரு கனவு கண்டார். அக்கனவிலே, ஸ்ரீமதி ராதாராணி தோன்றி, பின்வருமாறு கூறினாள்: இந்த விக்கிரஹங்களை அனுப்பியவருக்குத் தெரியாது: அவைகளுள் ஒன்று நான் ( ஸ்ரீமதி ராதாராணி) மற்றொன்று லலிதா சகி என்று . ஸ்ரீ மதனமோஹனனின் வலப்புறம் லலிதா சகியும், இடப்புறம் நானும் [ஸ்ரீமதி ராதாராணி] பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். பூஜாரி பரிசுத்த இதயம் கொண்டவர். அதனால் அனைவருக்கும் அவர்மீது நம்பிக்கை இருந்தது. தான் கண்டா கனவை அவர் அனைத்து விருந்தாவன மக்ககளுக்கும், கோஸ்வாமிகளுக்கும் தெரிவித்தார். அனைவரும் ஸ்ரீமதி ராதாராணியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீ ஸ்ரீ ராதா மதனமோஹனனின் கோவிலிலே, மாபெரும் பிரதிஷ்டை உத்சவம் நடந்தது. விக்கிரஹங்கள், அவர்களின் ஆசைக்கேற்ப, பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ஹரே கிருஷ்ண!

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more