பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை


 பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை


,


ஒரு முறை நாரத முனிவர், வைகுந்தம் சென்று லட்சுமி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லட்சுமி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத லட்சுமி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லட்சுமி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லட்சுமி தேவி, செய்வதறியாது தவித்தார். அன்று மதியம் பகவானுக்கு அன்போடும் கவனத்தோடும் உணவு பரிமாறினார் லட்சுமி தேவி. இருப்பினும் பகவான் நாராயணர், தன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்று அறிந்து அதற்கான காரணத்தை கேட்டார். பகவானின் பாதகமலங்களில் சரணடைந்த படியே, வேதனையுடன் தன்னுடைய சூழ்நிலையை எடுத்துரைத்தார் லட்சுமி தேவி. மிகவும் பரிவோடு பகவான், தன் மனைவியிடம், "இன்றொருநாள் என்னுடைய ஆணையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிட்ட தட்டை நீ நாரதருக்கு வழங்கலாம். ஆனால் நான் என் முகத்தை எதிர்திசையில் திருப்பியவுடன், எனக்கு தெரியாமல் நீ தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, அவ்வாறே செய்தார். நாரத முனிவரிடம் மகா பிரசாதத்தை வழங்கினார்.

அதை பெற்ற நாரதர் மிகவும் மரியாதையுடன் அதனை உண்டு மகிழ்ந்தார். மகா பிரசாதத்தை உண்டவுடன் நாரதர், மெய் மறந்த நிலையில் பகவானின் நாமங்களை பாடியபடி இடைவிடாது ஆடவும் செய்தார். அவருடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்ஒரு பைத்தியக்காரனை போல் அண்டம் முழுவதும் ஒவ்வொரு கிரகமாக ஓடி கொண்டிருந்தார். இறுதியாக சிவ பெருமானின் இருப்பிடமான கையிலாயத்திற்கு வந்தடைந்தார்.

சிவபெருமான் நாரதருடைய நிலை கண்டு ஆச்சரியமடைந்தார். பகவான் விஷ்ணுவின் பக்திக்கடலில் மூழ்கியிருந்த நாரதர், தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த சிவபெருமான், நாரதரை சமாதானப்படுத்தி அவரிடம் அதற்கான காரணத்தை வினவினார். நாரத முனிவர், பகவானின் மகா பிரசாதம் கிடைத்த கதையை கூறினார். சிவபெருமான் மிகவும் ஆச்சர்யத்துடன் நாரத முனிவரிடம், "நாரத முனிவரே! பகவான் நாராயணருடைய மகா பிரசாதத்தை உண்ணக்கூடிய பெரும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். எனக்கு சிறிது மகா பிரசாதத்தை கொண்டு வந்துள்ளீர்களா?" என்று வினவினார். நாரதர், தான் மகா பிரசாதம் ஏதும் எடுத்து வரவில்லை என்று கை கூப்பிய படி தன் வருத்தத்தை சிவபெருமானிடம் தெரிவித்தார். அப்போது தன் கைவிரலின் நகக்கண்ணில் ஒரு சிறுதுளி மகா பிரசாதம் இருந்ததை பார்த்த நாரதர், மகிழ்ச்சியில் துள்ளியபடி, சிவபெருமானிடம் காண்பித்தார். அதை தன் வாயில் வைத்தவுடன், சிவபெருமான் மிகவும் பக்திக்கடலில் மூழ்கியபடி, பிரளயம் ஏற்படும்போது மட்டும் ஆடும் சிவதாண்டவத்தை ஆடினார். இதனால் அண்டம் முழுவதும் அதிர்ந்தது. தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இது பிரளயத்திற்கான சமயம் இல்லை. பிறகு ஏன் சிவபெருமான் தாண்டவம் ஆடுகின்றார்? என்று குழம்பினர். இருப்பினும் சிவபெருமானை நெருங்க பயந்து, அனைவரும் பார்வதி தேவியை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமானை சமாதானப்படுத்தாவிடில், பிரளயம் ஏற்படும் என்று கூறினர்.

பார்வதி தேவியும் இதற்கு சம்மதித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிக்கொண்டிருந்த சிவபெருமானை நெருங்கிய பொது, அவர் சுய நினைவிற்கு வந்தார். பார்வதி தேவி, சிவபெருமானிடம், "ஐயனே! தங்களுக்கு என்னவாயிற்று? எதற்காக தாண்டவம் ஆடினீர்கள்?" என்று வினவினார். சிவபெருமான் நடந்ததை விவரித்தார். பார்வதி தேவி மிகவும் ஆச்சரியமடைந்தார். அதோடு சிவபெருமானிடம், "எனக்கு மகா பிரசாதம் வைத்துள்ளீர்களா?", என்று வினவினார். சிவபெருமான், "எனக்கே நாரதருடைய நகக்கண்ணில் இருந்த ஒரு துளி மகா பிரசாதம் மட்டும் தான் கிடைத்தது. அதில் நான் எப்படி மீதம் வைக்கமுடியும்?" என்று பதிலளித்தார்.

இதை கேட்ட பார்வதி தேவி மிகவும் கோபம் கொண்டார். அவருடைய கோபத்தினால் எழுந்த அக்னி, அண்டம் முழுவதும் வெட்பத்தை உண்டாக்கியது. பாதாள லோகங்கள் முதல் பிரம்மலோகம் வரை இருக்கும் அனைவராலும் அந்த வெட்பத்தை உணர முடிந்தது. ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். உடனடியாக பிரம்மதேவரின் தலைமையில் அணைத்து தேவர்களும் பகவான் விஷ்ணுவிடம் இதை தெரிவிப்பதற்காக வைகுந்தம் விரைந்தனர். பகவான் விஷ்ணு, உடனடியாக கருட வாகனத்தில், கயிலாயம் நோக்கி புறப்பட்டார்.

பகவான் விஷ்ணுவை கண்டவுடன், பார்வதி தேவி, தனது வணக்கங்களை தெரிவித்தார். பகவான் விஷ்ணு, பார்வதி தேவியை ஆசீர்வதித்து, "உனக்கு எவ்வளவு மகா பிரசாதம் வேண்டுமென்றாலும் நான் தருகிறேன். தயவு செய்து உன்னுடைய கோபத்தை கைவிடுவாயாக. இல்லையென்றால் அகிலம் முழுவதும் அழிந்து விடும்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பார்வதி தேவி இதற்கு சம்மதிக்கவில்லை. "எனக்கு மட்டும் நீங்கள் மகா பிரசாதம் கொடுத்தால் போதாது. என்னுடைய பிள்ளைகளான அகிலத்து வாசிகள் அனைவருக்கும் உங்களுடைய மகா பிரசாதம் கொடுக்க வேண்டும். உங்களுடைய மஹாபிரசாதம் கிடைக்காமல் நான் தவித்ததுபோல் என்னுடைய பிள்ளைகளும் தவிக்க நான் விரும்பவில்லை" என்று கூறினார். இதை கேட்ட பகவான் விஷ்ணு, "ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)" என்று கூறினார். மேலும், பார்வதி தேவியிடம், "உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் நீலாசால தாமம் என்ற இடத்தில அவதரிப்பேன். என்னுடைய இந்த கோவிலானது பிரசாத விநியோகத்திற்கென்றே பிரசித்தி பெறும். இங்கு வந்து யார் பிரசாதம் உண்டாலும் அவர்கள் முக்தி அடைவார்கள். என்னுடைய பிரசாதம் அனைத்தும் உனக்கு முதலில் நெய்வேத்தியம் செய்யப்படும். அதன் பிறகே அது மகா பிரசாதம் என்று ஏற்கப்படும். இந்த மகா பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நீ என்னுடனேயே இருக்க வேண்டும். என்னுடைய கோவிலின் சந்நிதானத்திலேயே உன்னுடைய ஆலயமும் இருக்கும். உன்னுடைய கணவர் உனக்கு மகா பிரசாதம் கொடுக்க தவறியதால் அவருடைய ஆலயம் என்னுடைய சந்நிதானத்திற்கு வெளியே இருக்கும்" என்று கூறினார்.

பகவான் விஷ்ணு, பூரியில். ஜெகந்நாதராக அவதரித்தார். பார்வதி தேவி அங்கு விமலா தேவியாக அவதரித்தார். பகவான் ஜெகந்நாதருக்கு நெய்வேத்தியம் செய்யப்படும் அனைத்தும் விமலா தேவிக்கும் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே அது மஹாபிரசாதமாக ஏற்கப்படுகிறது. இந்த மகா பிரசாதத்தை அனைத்து மக்களும் பாகுபாடின்றி பெற்றுக்கொள்ளலாம். சாஸ்திரங்கள் கூறுவது யாதெனில், "ஒரு நாயின் வாயிலிருந்து கூட ஒரு பிராமணர் மஹாபிரசாதத்தை எடுத்து உண்ணலாம். எந்த வித தீட்டும் கிடையாது. இதுவே பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை".

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more