வஞ்சகன்—கண்ணனா ? கர்ணனா?


வஞ்சகன்—கண்ணனா ? கர்ணனா?

திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ்



கர்ணன்–மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில் அவமானப்படுத்தும் சிறுஉள்ளம். ஒருபக்கம் நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கின்றது. மொத்தத்தில், கர்ணன் முரண்பாடுகளில் சிக்கிய ஒரு கதாபாத்திரம்.

கர்ணன்–நல்லவனா, கெட்டவனா என்பது பலருக்கும் புரியாத புதிர். நற்குணம் படைத்தவன், ஆனால் தீயோரின் சகவாசத்தினால் அதர்மத்திற்கு துணை நின்று அழிந்து போனவன் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இருப்பினும், சுமார் 50 வருடங்களுக்கு முன்பு (1964இல்) தமிழில் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும், 1977இல் திரு. என்.டி. இராமராவ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த தான வீர சூர கர்ணன் திரைப்படமும், வெறும் திரைப்படங்களாக மட்டும் வந்து செல்லாமல் மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி, கர்ணன் நல்லவன் என்ற எண்ணத்தையும் கர்ணனை சதியால் வீழ்த்திய காரணத்தினால் அர்ஜுனனும் கிருஷ்ணரும் வஞ்சகர்கள் என்ற எண்ணத்தையும் பதித்துவிட்டன.

பிரபல திரைப்பட நடிகர்கள் எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும், அதில் அவர்கள் நல்லவர்களாக சித்தரிக்கப்படுவது திரைப்படத் துறையின் வழக்கம். எத்தனையோ படங்களில் பிரபல நடிகர்கள் திருடர்களாகவும் வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கப்பட்டு நல்லவர்களாகவே காட்டப்படுகின்றனர். இதுவே கர்ணனின் கதையிலும் நிகழ்ந்துள்ளது. ஆனால் கர்ணன் வெறும் திரைப்படமாக செல்லாமல், மக்களின் மனதில் மஹாபாரத கதையை எடுத்துரைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படத் துவங்கிய காரணத்தினால், திரைப்படத்தைப் பார்த்து மஹாபாரதம் கற்றுக் கொண்ட பல்வேறு துரதிர்ஷ்டசாலிகளும் கர்ணனை நல்லவனாகவே நினைத்து போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். கர்ணனின் உண்மையான கதாபாத்திரம் திரைப்படத்திலிருந்து பல்வேறு விதங்களில் மாறுபட்ட ஒன்றாகும்.


திரௌபதியை அவமானப்படுத்திய கர்ணன்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


கர்ணன் செய்த தீய செயல்களில் முக்கியமானதாக கருதப்படுவது திரௌபதியை குரு வம்ச சபையில் அவமானப்படுத்திய செயலாகும். பாண்டவர்களை போரில் சந்திக்கத் திறமையும் தைரியமும் இல்லாத துரியோதனனுடன் இணைந்து, சகுனியின் உதவியுடன் நிகழ்ந்த சூதாட்டத்தில் கர்ணனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
சகுனியின் வஞ்சகத்தினால் மாமன்னர் யுதிஷ்டிரர் தனது மனைவியான திரௌபதி உட்பட அனைத்தையும் இழந்தார். மாபெரும் சபையில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குலப் பெண்மணியான திரௌபதியைத் தர தரவென்று முடியைப் பிடித்து இழுத்து வந்த துச்சாதனனின் செயல் அனைவருக்கும் வேதனையைக் கொடுத்தபோதிலும் கர்ணன் பெருமகிழ்ச்சியில் பொங்கினான். திரௌபதியைத் தன்னால் மணக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் வெறியும் அவனது மனதில் நீண்ட காலமாக எரிந்து கொண்டிருந்தது, அதனால் புத்தி பேதலித்து திரௌபதியை அவமானப்படுத்த துணிந்தான். மலை உச்சியில் இருக்கும் தேனுக்கு ஆசைப்பட்ட கர்ணன் அதற்கு அருகிலிருக்கும் பெரும் சரிவைக் காணத் தவறிவிட்டான்.

அச்சூழ்நிலையில் துரியோதனனின் சகோதரர்களில் ஒருவனான விகர்ணன், திரௌபதிக்கு ஆதரவு தெரிவித்தும் சூதாட்டத்தினை எதிர்த்தும் பேசினான். அவனது பேச்சினால் கடும் கோபமுற்ற கர்ணன், விகர்ணனைக் கண்டித்து பெரும் சப்தத்துடன் குரல் எழுப்பினான். திரௌபதியை சபைக்கு அழைத்து வந்ததில் எந்த தவறும் இல்லை என்றும், திரௌபதி கற்பற்றவள் என்றும், உண்மையில் அவளை நிர்வாணமாக அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பிய கர்ணன், அவளது உடையை முற்றிலுமாக அவிழ்த்து நிர்வாணமாக்கும்படி துச்சாதனனுக்கு கட்டளையிட்டான். ஒரு குலப் பெண்மணியை நிர்வாணமாக்கும்படி கட்டளையிட்ட கர்ணனின் செயல் மன்னிக்கக்கூடிய ஒன்றா? கர்ணனின் தீய குணத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா? கர்ணனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோரில் யாரேனும் அத்தகைய அவமானத்தை தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா? (கர்ணன் திரைப்படத்தில் இக்காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை)


கர்ணனின் இதர வஞ்சகச் செயல்கள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

திரௌபதிக்கு நிகழ்ந்த அவமானத்தை சரிப்படுத்தும் நோக்கத்துடன் திருதராஷ்டிரர் இராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால் கர்ணனின் ஆலோசனையின் பேரில் மீண்டும் சூதாட்டம் அரங்கேற்றப்பட்டு பாண்டவர்கள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, தவம் நிறைந்த வாழ்வினால் அவர்களின் பலம் குன்றியிருக்கும் என்றும், இதுவே அவர்களை முற்றிலுமாக அழிப்பதற்கு உகந்த தருணம் என்றும் கர்ணன் அறிவுரை கூற, துரியோதனன் தனது நண்பர்கள் மற்றும் படைகளுடன் காட்டிற்குச் செல்ல முற்பட்டான்.

அர்ஜுனனைக் காட்டிலும் சிறந்த வீரனாக வர வேண்டும் என்று விரும்பிய கர்ணன், தன்னை ஒரு பிராமணன் என்று கூறி பரசுராமரிடம் போர்க்கலையைக் கற்றான். குருவிடமே பொய் சொல்வது நற்குணம் படைத்தோருக்கு அழகல்ல.

பதினாறு வயது இளைஞனான அபிமன்யுவை கர்ணனின் தூண்டுதலின் பேரிலேயே ஆறு மகாரதிகள் (மாபெரும் போர் வீரர்கள்) இணைந்து, ஆயுதம் இல்லாத சூழ்நிலையில் போர் விதிகளை மீறிக் கொன்றனர். அதற்கு தண்டனையாகவே கர்ணன் அவ்வாறே கொல்லப்பட்டான்.

கர்ணன் கொல்லப்பட்ட காட்சி
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கர்ணன் கொல்லப்பட்ட காட்சியை திரைப்படத்தில் கண்டவர்கள் அதிலுள்ள பல்வேறு தவறான தகவல்களிலிருந்து வெளிவரும் பொருட்டு, மஹாபாரதத்தின் அந்த முக்கிய பகுதியின் சுருக்கத்தினை சற்று படிக்கலாம். குருக்ஷேத்திரப் போரின் பதினேழாம் நாளில், அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையில் கடும் போர் மூண்டது. சில சமயங்களில் அர்ஜுனனின் கரங்கள் உயர்வதுபோலவும், வேறு சில சமயங்களில் கர்ணனின் கரங்கள் உயர்வதுபோலவும் தோன்றியது. இருவருக்கும் இடையிலான போர் அவ்வளவு எளிதில் முடியக்கூடியது அல்ல என்று அனைவரும் எண்ணினர்.

தனது குரு பரசுராமரிடமிருந்து பெற்ற பார்கவ அஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்க விரும்பினான், ஆனால் அதற்குரிய மந்திரங்களை அவனால் நினைவுகொள்ள முடியவில்லை. அச்சமயத்தில் அவனது ரதத்தின் சக்கரம் பூமிக்குள் புதைந்தது. கர்ணனின் தேரோட்டியாக இருந்த மன்னர் சல்லியன் அதனை வெளியில் எடுக்க கடும் முயற்சி செய்தபோதிலும் ரதத்தை வெளியே எடுக்க முடியவில்லை. (சல்லியன் ரதத்தை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை என்பதை கவனிக்கவும்.) கர்ணன் தனது விதியை கடுமையாக திட்டத் தொடங்கினான். போரின் நடுவே சிறிய சந்தர்பம் கிடைத்தபோது, கர்ணன் தானாகவே சக்கரத்தை பூமியிலிருந்து உயர்த்த நினைத்தான். மொத்த பூமியும் குலுங்கியது, ஆனால் தேர் வெளியே வரவில்லை.

சக்கரத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த கர்ணனைக் கொல்லும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிட்டார். அர்ஜுனன் அக்கட்டளையை நிறைவேற்ற தயாராவதைக் கண்ட கர்ணன் விரக்தியில் அழத் தொடங்கினான். “அர்ஜுனா, என்னைத் தாக்க வேண்டாம். ரதத்தில் இல்லாத என்னைத் தாக்குவதற்கு நீ ஒரு கோழையல்ல, இஃது உனக்கு அழகல்ல. சில நிமிடங்கள் பொறுத்துக்கொள், போரைத் தொடங்கலாம். போரின் விதிமுறைகளையும் தர்மத்தையும் நினைத்துப் பார்,” என்று அர்ஜுனனை நோக்கி குரல் எழுப்பினான்.

அப்போது கர்ணனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வரும் பதிலை முன்வைத்தார்: கர்ணா, உனக்குக்கூட தர்மத்தின் கொள்கைகள் நினைவிற்கு வருகின்றதோ! துன்பத்தில் இருப்பவன் எப்போதும் விதியைத் திட்டுவதும், தான் செய்த தவறுகளை மறந்துவிடுவதும் வழக்கம். கதறக் கதற திரௌபதியை கௌரவ சபைக்கு அழைத்து வந்தபோது உன்னுடைய தர்மம் எங்கே? யுதிஷ்டிரரிடமிருந்து இராஜ்ஜியத்தைப் பறித்தபோது உன்னுடைய தர்மம் எங்கே? பதிமூன்று வருட வனவாசத்திற்குப் பின் நாட்டை திருப்பிக் கேட்டபோது உன்னுடைய தர்மம் எங்கே? வாரணாவதத்தில் அரக்கு மாளிகைக்கு தீ வைத்து பாண்டவர்களைக் கொல்ல முனைந்தபோது உன்னுடைய தர்மம் எங்கே? “மற்றொரு கணவனை ஏற்றுக்கொள்” என்று பெரும் சிரிப்புடன் திரௌபதியிடம் கூறியபோது உன்னுடைய தர்மம் எங்கே? நீ விரும்பும் தர்மம்தான் திரௌபதியின் ஆடைகளை அவிழ்க்கும்படி துச்சாதனனுக்கு கட்டளையிட்டதா? ஆறு மகாரதிகளுடன் இணைந்து 16 வயது அபிமன்யுவை சுற்றி வளைத்துக் கொன்றபோது உன்னுடைய தர்மம் எங்கே? அப்போதெல்லாம் தர்மம் உனது மனதில் தோன்றவில்லையா? அப்போதெல்லாம் தர்மத்தை நினைக்காமல், இப்போது தர்மத்தைக் கூப்பிடாதே. நாங்கள் நீதிப்படி நடக்க வேண்டும் என்று நீ விரும்பலாம், ஆனால் இன்று நீ உயிருடன் செல்ல இயலாது.”

கிருஷ்ணரின் கூற்றில் இருந்த உண்மையை எண்ணி வெட்கத்தில் தலைகுனிந்தான் கர்ணன். தயக்கமின்றி கர்ணனைத் தாக்கும்படி கிருஷ்ணர் கட்டளையிட, கர்ணன் மீண்டும் ரதத்தில் ஏறி போர் புரியத் தொடங்கினான். மீண்டும் கடும் போர் மூண்டது. தனது அம்புகளால் சில நிமிடங்கள் அர்ஜுனனை திகைக்க வைத்த கர்ணன், மீண்டும் ரதத்தின் சக்கரத்தை வெளியே எடுக்க கீழே இறங்கினான். கடும் பிரயத்தனம் செய்தான், சக்கரம் வெளியில் வரவே இல்லை. கோபத்தில் சீறினான் கர்ணன்.

அஞ்சலிகா என்னும் அஸ்திரத்தை வில்லில் பொருத்திய அர்ஜுனன் அதற்கு இந்திரனின் வஜ்ராயுதத்தின் சக்தியை அளித்தான். அர்ஜுனனின் தேரை கர்ணனுக்கு அருகில் கொண்டு வந்த கிருஷ்ணர், “உடனடியாக இந்த அஸ்திரத்தை ஏவுவாயாக. கர்ணன் மீண்டும் இரதத்தில் ஏறுவதற்கு முன்பாக உனது எதிரியை வீழ்த்து,” என்று கட்டளையிட்டார். நான் எப்போதும் பெரியோர்களை மதித்து, அவர்களின் அறிவுரைப்படி நடந்தேன் என்பது உண்மையாக இருந்தால், இந்த அஸ்திரம் கர்ணனைக் கொல்லட்டும்,” என்று கூறியபடி அர்ஜுனன் அதனை ஏவினான். கர்ணனின் வலுவான அகல கழுத்தினைத் தாக்கிய அந்த அஸ்திரம், அதனை உடலிலிருந்து துண்டித்தது. கர்ணன் மரணம் எய்தினான்

கர்ணன் பெற்ற சாபங்கள்
🍁🍁🍁🍁🍁🍁🍁

கர்ணனின் மரணத்தில் அர்ஜுனன் மட்டுமின்றி அவன் பெற்ற இரண்டு சாபங்களும் முக்கிய பங்காற்றின.

(1) பொய் சொல்லி தன்னிடமிருந்து கலையைக் கற்றுக் கொண்டான் கர்ணன் என்பதை பரசுராமர் கண்டறிந்தபோது, “தெய்வீக அஸ்திரத்தை பிரயோகிப்பதற்கான மந்திரத்தை உனது வாழ்வின் மிக முக்கியமான காலக்கட்டத்தில் மறந்துவிடுவாய்,” என்று சாபமிட்டார். அந்த சாபத்தினாலேயே அர்ஜுனனுடனான போரில் கர்ணனால் மந்திரங்களை நினைவிற்கு கொண்டு வர இயலவில்லை.
(2) ஒருமுறை பரசுராமரின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வில் வித்தையை பயிற்சி செய்துவந்த கர்ணன் ஒரு பசுவினை தனது அம்பினால் அறியாமல் கொன்றுவிட்டான். அப்பசு ஓர் ஏழை பிராமணரின் ஒரே சொத்தாக இருந்துவந்தது. அதனால் கோபம் கொண்ட பிராமணர், “இந்த அப்பாவி பசு உதவியின்றி உன்னிடம் மாட்டிக் கொண்டதைப் போலவே, உனது வாழ்வின் முக்கியமான தருணத்தில் உனது தேரின் சக்கரம் பூமியினுள் புதைந்து நீயும் உதவியற்றவனாக தவிப்பாய்,” என்று சாபம் கொடுத்தார். அந்த சாபமே கர்ணனின் தேர் சக்கரம் பூமியில் சிக்கிக் கொள்வதற்கு காரணமாக அமைந்தது.

ஆயுதமின்றி இருந்த கர்ணனை அர்ஜுனன் கொன்றது நியாயமா?
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பொதுவான கேள்வி. மேலோட்டமாகப் பார்த்தால் நியாயம் அல்ல என்று சொல்லலாம், ஆனால் ஆழமாகப் பார்ப்பவர்கள் முற்றிலும் சரியே என்று உறுதியுடன் உரைப்பர். கர்ணனை அர்ஜுனன் கொன்றதில் எந்த தவறும் இல்லை என்பதை அறிந்துகொள்வதற்கு கர்ணனிடம் கிருஷ்ணர் எடுத்துரைத்த வாதங்களே போதும். இருப்பினும் ஓர் உதாரணம் காண்போம்.

ஏதேனும் ஒரு சாலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ என்று இருப்பதாக எடுத்துக்கொள்வோம். யாரேனும் ஒருவன் அச்சாலையில் மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணம் செய்தால், அவனைப் பிடித்து தண்டிக்க வேண்டியது போக்குவரத்து காவலரின் கடமை. தனது கடமையை நிறைவேற்ற காவலர் குறைந்தது மணிக்கு 80 கிமீ வேகத்தில் சென்றால் மட்டுமே குற்றவாளியைப் பிடிக்க முடியும். அவ்வாறு 80 கிமீ வேகத்தில் பயணம் செய்யும் காவலர், அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ” என்னும் விதியை மீறுவதுபோலத் தோன்றலாம்; ஆனால் அதற்காக அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது பழமொழி.
அதுபோல அதர்மத்தில் ஈடுபடுவோரை தண்டிக்க சில சமயங்களில் தர்மத்தைக் காப்பவர்களும் நெறிகளை மீற வேண்டியது அவசியமாகிறது; ஆனால் அதற்காக அவர்களை குறை கூறுவது நன்றல்ல. சக்தி வாய்ந்த எதிரிகளை வீழ்த்துவதற்கு சில நேரங்களில் தந்திரங்கள் அவசியமாகின்றனஶீஅதுவும் குறிப்பாக அந்த எதிரிகள் தந்திரத்துடன் செயல்படும்போது அதனை முறியடிக்க நாமும் தந்திரமாக செயல்பட வேண்டும் என்று கிருஷ்ணரே இதற்கு மஹாபாரதத்தில் பதிலளித்துள்ளார்.

கர்ணன் அர்ஜுனனைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவனா?
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அப்படித்தான் பலரும் நினைக்கின்றனர். மஹாபாரதத்தை முறையாகப் படித்தவர்கள் அதிகபட்சம் கர்ணனை அர்ஜுனனுக்கு சமமான வீரன் என்று வேண்டுமானால் ஏற்கலாம். சில சமயங்களில் கர்ணன் அர்ஜுனனைக் காட்டிலும் சிறந்த வீரன் என்று கூறப்பட்டுள்ளபோதிலும், கிருஷ்ணர் துணையாக இருந்த காரணத்தினால், கர்ணன் மட்டுமின்றி அர்ஜுனனுக்கு சமமான வீரர்கள் மூவுலகிலும் எவருமில்லை என்று கூறலாம்.

குருக்ஷேத்திரப் போருக்கு முன்பாக அர்ஜுனனும் கர்ணனும் இரண்டு முறை நேருக்கு நேராக போரிட்டனர்: (1) திரௌபதியை அர்ஜுனன் மணமுடித்த பின்னர் நிகழ்ந்த யுத்தம், (2) அஞ்ஞான வாசம் (யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழும் வாழ்க்கை) மேற்கொண்டிருந்த பாண்டவர்களைக் கண்டறிவதற்காக நிகழ்ந்த விராட யுத்தம். இந்த இரண்டிலும் அர்ஜுனனே வெற்றி வாகை சூடினான். திரௌபதியை மணந்த பின்னர், நிகழ்ந்த யுத்தத்தில் கர்ணன், துரியோதனன் உட்பட பல்வேறு மன்னர்களை அர்ஜுனனும் பீமனும் மட்டும் இணைந்து தோற்கடித்தனர். விராட யுத்தத்தில் அர்ஜுனன் தனி ஆளாக நின்று, கர்ணன், துரியோதனன், பீஷ்மர், துரோணர், உட்பட அனைத்து குரு வம்ச தலைவர்களையும் வெற்றி கொண்டான். இவை போதாதா, அர்ஜுனன் கர்ணனைக் காட்டிலும் சிறந்த வீரன் என்பதை நிரூபிப்பதற்கு? இருப்பினும், மேலும் மூன்று நிகழ்ச்சிகளைக் காண்போம்.

(1) துரோணருக்கு குரு தட்சணை செலுத்துவதற்காக பெரும்படையுடன் பாஞ்சால தேசத்தின் துருபதனை தாக்கிய கர்ணனும் துரியோதனனும் தோல்வியைத் தழுவினர். ஆனால் அதே துருபதனுடன் நிகழ்ந்த போரில், படைகள் ஏதுமின்றி, பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வர் மட்டும் தனியாகச் சென்று வெற்றி வாகை சூடினர். (2) துவைதவனத்தில் கந்தர்வர்களுடன் நடைபெற்ற போரில் கர்ணன் புறமுதுகிட்டு வெளியேற, துரியோதனன் சிறைப்படுத்தப்பட்டான். ஆனால் யுதிஷ்டிரரின் கட்டளைப்படி துரியோதனனை விடுவிப்பதற்காக கந்தர்வர்களுடன் போர் புரிந்த அர்ஜுனன் வெற்றியை ருசித்தான். (3) அர்ஜுனனின் மகனான அபிமன்யுவால்கூட கர்ணன் தோற்கடிக்கப்பட்டவன். அபிமன்யு தனி ஆளாக குரு வம்சத்தினர் அனைவரையும் தோற்கடிக்க, அதனால் பெருத்த அவமானமடைந்த கர்ணன் இதர மாவீரர்களுடன் இணைந்து கூட்டாக அபிமன்யுவைக் கொன்றான்; தனிப்பட்ட ரீதியில் அபிமன்யுவை சமாளிக்கும் திறன் கர்ணனுக்கு இல்லாமல் போனது. இந்நிகழ்ச்சி கர்ணனுக்கு பெருத்த அவப்பெயரைப் பெற்றுத் தந்தது.

சில சமயங்களில் கர்ணன் அர்ஜுனனுக்கு சமமான வில்லாளியாகத் தோன்றலாம். ஆனால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதால், ஆத்திர குணம் கொண்ட கர்ணனை எப்போதும் அர்ஜுனனைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவே பீஷ்மர், துரோணர் போன்ற பெரியோர்கள் கருதினர். துரியோதனன் மட்டுமே கர்ணனை அர்ஜுனனைக் காட்டிலும் சிறந்தவனாக எண்ணினான். துரியோதனனின் சகவாசத்தினால், கர்ணனும் தன்னை பெரிய பலசாலியாகவே நினைத்து வந்தான். கர்ணன் வெறும் வாய்ச்சொல் வீரன் என்றும், அவனது பேச்சுகள் நீர் இல்லாத மேகத்தின் இடியோசைகள் என்றும் பீஷ்மர் கூறியுள்ளார்.

கிருஷ்ணரின் திட்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பது கிருஷ்ணர் அவதரித்ததற்கான முக்கிய காரணமாகும். அதனால் அதர்மத்தின் பக்கம் நின்ற கர்ணன் அழிக்கப்பட வேண்டும் என்பதும் தர்மத்தின் பக்கம் நின்ற அர்ஜுனன் வெல்ல வேண்டும் என்பதும் கிருஷ்ணரின் திட்டம். முழுமுதற் கடவுளின் திட்டத்தை யாராலும் முறியடிக்க முடியாது. மாரே க்ருஷ்ண ராகே கே, ராகே க்ருஷ்ண மாரே கே, கிருஷ்ணர் யாரையேனும் காப்பாற்ற நினைத்தால் அவரை யாராலும் கொல்ல முடியாது; கிருஷ்ணர் யாரையேனும் கொல்ல நினைத்தால் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. கர்ணன் மட்டுமின்றி பீஷ்மர், துரோணர் போன்ற பல்வேறு மாவீரர்களை அர்ஜுனனால் வெல்ல முடிந்ததற்கு கிருஷ்ணரே காரணம். அதர்மத்தின் பக்கம் இணைபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

கர்ணனின் தயாள குணம்
🍁🍁🍁🍁🍁🍁🍁

கையேந்தி வருவோருக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கும் தாராள மனம் கொண்டவன் கர்ணன். வள்ளல்களின் பட்டியலில் கர்ணனின் பெயர் நிச்சயம் என்றென்றும் நிலைத்திருக்கும். “கொடுத்துச் சிவந்த கரங்கள்” என்று அவனது வள்ளல் தன்மையை பலரும் ஆமோதிக்கின்றனர். தானத்தில் சிறந்தவன் கர்ணன் என்பதால், மாமன்னர் யுதிஷ்டிரர்கூட தான் நிகழ்த்திய அஸ்வமேத யாகத்தின்போது, தானம் வழங்குவதற்கு கர்ணனைப் பொறுப்பாளியாக நியமித்தார்.

கர்ணன் தன்னுடைய கவசத்தையும் குண்டலத்தையும் இந்திரனுக்கு தானமளித்த செயல், மிகவும் முக்கியமாக பேசப்படுவதாகும். கர்ணன் தானத்தில் சிறந்தவன் என்பதை யாம் மறுக்கவில்லை என்றபோதிலும், கவச குண்டல தானத்தைப் பற்றி ஆழமாகப் படிக்கும்போது அதில் சில சிக்கல்கள் இருப்பதை உணரலாம்.

“யார் தானம் கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பேன்” என்று கர்ணன் உறுதியெடுத்த சூழ்நிலையை சற்று பார்ப்போம். துரியோதனன் ராஜஸுய யாகம் நடத்த விரும்ப, யுதிஷ்டிரர் ஏற்கனவே அதனை செய்துவிட்டதால், அவர் இருக்கும்வரை வேறு யாரும் அதைச் செய்ய முடியாது என்று முனிவர்கள் கூறினர். பாண்டவர்களை வதைத்து ராஜஸுய யாகத்தை எப்போது நிறைவேற்றுவேன் என்று ஏங்கிய துரியோதனனை உற்சாகப்படுத்தும் விதத்தில் கர்ணன் சபதம் மேற்கொண்டான்: “அர்ஜுனனைக் கொல்லும்வரை எனது வாழ்வில் எந்தவொரு சௌகரியத்தையும் ஏற்க மாட்டேன். யார் என்னிடம் எதைக் கேட்டாலும் கொடுப்பேன். தானம் கொடுங்கள் என்று யார் கேட்டாலும், இல்லை என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன்.” கர்ணனின் அந்த சபதம் கௌரவர்களை ஆனந்தத்தில் மிதக்க வைத்தது.

தற்பெருமைக்காக செய்யப்படும் தானங்கள் உயர்ந்தவை அல்ல என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம். கவச குண்டலத்தை தானமளித்த சூழ்நிலையைப் பார்க்கலாம்.

பிராமண வேடத்தில் வந்த இந்திரன் கர்ணனிடம் கவச குண்டலத்தை கேட்டபோது, வந்திருப்பது இந்திரன் என்பதை சூரியனின் முன்னறிவிப்பினால் கர்ணன் தெரிந்துகொண்டான். “உங்களுடைய விருப்பத்தை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். ஆனால் ஏன் கவசத்தை மட்டும் கேட்கிறீர்கள். உங்களுடைய சந்ததியினர் மொத்தமும் வாழ்வதற்குரிய செல்வத்தை என்னால் தர முடியும்,” போன்ற வார்த்தைகளைக் கூறி பல விதத்தில் இந்திரனை திசைத்திருப்ப கர்ணன் முயற்சி செய்தான். ஆனால் இந்திரனின் உறுதியைக் கண்ட பின்னர், “நீங்கள் இந்திரன் என்பதை நான் அறிவேன், பாண்டவர்களுக்கு உதவ வந்துள்ள தாங்கள் எனக்கு வரமளிக்க முன்வந்தால், நான் எனது கவச குண்டலத்தைத் தந்து விடுகிறேன்,” என்று ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்து, விரும்பிய எதிரியைக் கொல்லும் வலிமை பெற்ற சக்தி என்னும் அஸ்திரத்தை வேண்டினான். அதற்கு இந்திரனும் இசைய, கர்ணன் தனது கவசத்தையும் குண்டலத்தையும் அளித்து சக்தி அஸ்திரத்தைப் பெற்றான். ஒரு விதத்தில் கர்ணனின் செயல் போற்றத்தக்கது என்றபோதிலும், ஏதேனும் ஒன்றை வேண்டி அதற்காக தானம் கொடுப்பது முறையான தானமா? ஆழமாகப் பார்த்தால் இஃது ஒரு வியாபாரம் போலத் தோன்றுகிறதே!

கர்ணனின் குணங்களைப் பற்றிய இதர கருத்துகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁

கிருஷ்ணர்: துரியோதனன் என்னும் மரம் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் பாவ எண்ணங்களால் நிறைந்த ஒன்று, கர்ணன் அதன் அடிமரம். யுதிஷ்டிரரோ பிறருக்கு நன்மை விளைவிக்கும் புண்ணியமான மரம், அர்ஜுனன் அதன் அடிமரம்.
பீஷ்மர்: நீதியையும் தர்மத்தையும் பற்றி யோசிக்காமல் மனதில் தோன்றியதை பேசும் சுபாவம் கொண்டவன் கர்ணன். திருதராஷ்டிரரின் மகன்களை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய அழிவிற்கு இந்த முட்டாளே முக்கிய பொறுப்பு. இவனிடம் நிதான புத்தி இல்லை, அவசரமும் ஆத்திரமும் அகங்காரமும் நிறைந்தவன். பரசுராமரை ஏமாற்றிய அந்த தருணத்திலேயே இவனது எல்லா புண்ணியமும் தவ வலிமையும் இவனை விட்டு அகன்று விட்டன.

கர்ணனின் தர்ம சங்கடம்
🍁🍁🍁🍁🍁🍁🍁

தர்மம் எது என்பதை முடிவு செய்தல் அவ்வளவு எளிதல்ல, ஆழ்ந்த சாஸ்திர அறிவும் பெரியோர்களின் வழிநடத்துதலும் அவசியம். துரியோதனன் அதர்மத்தின் பக்கம் செல்வதை பலமுறை கர்ணன் உணர்ந்தான், ஆனால் தனது உயிர் நண்பனை விட்டு வெளியேற அவனுக்கு மனம் வரவில்லை. தீயோர்களுடன் நட்பு கொள்வது அதர்மம், துன்பத்தில் இருந்தபோது உதவிய நண்பனை விட்டுச் செல்வதும் அதர்மம்–இந்த தர்ம சங்கடத்தை கர்ணன் பலமுறை உணர்ந்தான்.

ஆனால் பெரியவர்களின் அறிவுரையை மதிக்காமல் செயல்படுவதே கர்ணனின் சுபாவமாக இருந்த காரணத்தினால், அவர்கள் நல்லறிவுரை வழங்கியபோது அதனை ஏற்க மறுத்துவிட்டான். “நாக்கை அறுத்துவிடுவேன்” என்று கிருபாசாரியரிடம் கூறுமளவிற்கு அகந்தை கொண்டிருந்தான். பீஷ்மரும் விதுரரும் பலமுறை கர்ணனையும் துரியோதனனையும் திருத்த முயற்சி செய்தனர், ஆனால் பலன் கிடைக்கவில்லை. “கர்ணா, நீ எனது மகன். பாண்டவர்களுடன் இணைந்து நாட்டை ஆட்சி செய்,” என்று குந்தி அறிவுறுத்தியபோது, அதை கர்ணனால் பின்பற்ற இயலவில்லை. குந்தியின் பேச்சைக் கேட்பதே சிறந்தது என்று சூரியதேவனும் பரிந்துரைத்தார். கர்ணனோ அதையும் கேட்கவில்லை. தாய் சொல்லையும் தந்தை சொல்லையும் மீறினான்.

“பாண்டவர்களின் அண்ணனாக உலகை ஆளலாம், துரியோதனனின் நட்பைக் கைவிடு,” என்று கிருஷ்ணரும் அறிவுறுத்தினார். கிருஷ்ணர் கூறுவது தனது நன்மைக்கே என்பதை கர்ணன் உணர்ந்தான், ஆனால் துரியோதனனுக்கு தான் பட்ட நன்றிக் கடனை செலுத்த வேண்டும் என்று நினைத்தான், திரௌபதிக்கு எதிராக உரைத்த வார்த்தைகளை எண்ணி மனம் வருந்தினான். பாண்டவர்களின் வெற்றியையும் அர்ஜுனனால் தான் கொல்லப்படுவதையும் கனவில் கண்டதாகக் கூறினான். எல்லாம் விதிப்படி நடக்கின்றது என்றும் எதையும் தடுக்க முடியாது என்றும் வாதிட்டான். ஆனால் கிருஷ்ணரோ, விதிப்படி நடக்கும் என்பது உண்மை, ஆனால் தனது அறிவுரையைப் பின்பற்றினால் அதனை மாற்றலாம் என்று எடுத்துரைத்தார். கர்ணனோ அதற்கும் இசையவில்லை. எல்லோரின் அறிவுரைகளையும் ஏற்க மறுத்த கர்ணனை என்னவென்று சொல்வது?

கர்ணனிடம் நற்குணங்களே இல்லை என்பதா?
🍁🍁🍁🍁🍁🍁🍁

கர்ணன் நற்குணங்கள் அற்றவன் என்று கூறுவதற்கு இல்லை. அவன் ஒரு மிகச்சிறந்த வீரன், கடமையைச் செய்வதில் உறுதி கொண்டவன், தானமளிப்பதில் பெரும் பெயர் பெற்றவன். கர்ணன் ஒரு தெய்வீகப் பிறவி, ஆனால் அவனது பிறப்பிலேயே பாவம் தொற்றிக் கொண்டிருந்ததால், அவன் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலேயே கழிந்தது.

கர்ணனிடம் இருந்த முக்கிய பிரச்சனை, பொறாமை. பாண்டவர்களில் நால்வரின் மீது சற்று மதிப்பு வைத்திருந்த கர்ணன் அர்ஜுனனை அறவே வெறுத்தான். அதற்கு முக்கிய காரணம், துரோணர். தனக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க மறுத்த துரோணரின் தலைசிறந்த சீடனை வீழ்த்த வேண்டும் என்னும் வெறியும் பொறாமையும் கர்ணனின் அறிவை வாழ்நாள் முழுவதும் மறைத்து விட்டன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தனான அர்ஜுனனின் மீது வெறுப்பும் பொறாமையும் கொண்டிருந்த காரணத்தினால், கர்ணனிடம் இருந்த நற்குணங்கள் பயனற்றுப் போயின. முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே நேரில் வந்து உபதேசித்தபோதிலும் அதைப் பின்பற்ற அவன் முன்வரவில்லை. அதனாலேயே கர்ணன் பாவியாக, வஞ்சகனாகக் கருதப்படுகிறான்.

கீழ்காணும் சாஸ்திரக் கூற்றுகள், எமது கருத்தினை ஆதரிப்பவை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

யஸ்யாஸ்தி பக்திர் பகவத்யகிஞ்சனா
ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரா:
ஹராவபக்தஸ்ய குதோ மஹத்-குணா
மனோரதேனாஸதி தாவதோ பஹி:

“எல்லா தேவர்களும் அவர்களது எல்லா நற்குணங்களும் முழுமுதற் கடவுளான வாஸுதேவரிடம் களங்கமற்ற தூய பக்தியை வளர்த்துக் கொண்டவர்களின் உடலில் தோன்றுகின்றன. ஆனால், பக்தித் தொண்டில் ஈடுபடாமல் பௌதிகச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் எந்தவொரு நற்குணமும் இருப்பதில்லை.” (ஸ்ரீமத் பாகவதம் 5.18.12)

பகவத்-பக்தி-ஹீனஸ்ய ஜாதி: ஷாஸ்திரம் ஜபஸ் தப:
அப்ராணஸ்யைவ தேஹஸ்ய மண்டனம் லோக-ரஞ்ஜனம்

“உயர்குடியில் பிறத்தல், சாஸ்திரத்தில் நிபுணனாக இருத்தல், வேதங்களை துல்லியமாக உச்சரித்தல், கடும் தவம் புரிதல் என பல்வேறு நற்குணங்கள் ஒருவனிடம் இருந்தாலும், அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனாக இல்லாவிடில், அவனது நற்குணங்கள் அனைத்தும் பிணத்திற்கு செய்யும் அலங்காரத்தைப் போன்றவையே. அந்த அலங்காரங்கள் சாதாரண பொதுமக்களுக்கு வேண்டுமானால் சற்று இன்பத்தைக் கொடுக்கலாம்.” (ஹரி-பக்தி-ஸுதோதய 3.11)

கர்ணன் திரைப்படம்–ஒரு பார்வை
🍁🍁🍁🍁🍁🍁🍁

1964ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தின் மணிக்கொடி இதழில் வெளிவந்த விமர்சனத்தின் ஒரு பகுதி: “அர்ஜுனன் என்றதும் ஒவ்வோர் உள்ளத்திலும் திறமை மிகுந்த வீரன்தான் தோன்றக்கூடுமேயல்லாது, இப்படி முத்துராமனின் தொங்கிய மீசையையோ, செத்த பாம்பைக் கொல்வது போன்று கடைசியில் அம்பெய்யும் கோழைத்தனத்தையோ யாரும் எண்ணியிருக்க மாட்டான். தொலையட்டும்; பாரதக் கதைக்கே ஏன் இப்படி ஒரு புது கற்பனையைக் கொண்டு வந்தார்களோ… நமக்கு புரியவே இல்லை! பாரதக் கதை பெரும்பாலான மக்களுக்கு நன்றாகத் தெரிந்த தெய்வீகக் கதை! அதில் வருகிற பாத்திரங்களில் கர்ணன் பாத்திரம் சிறப்பான பாத்திரம் என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள்! ஆனால் அந்த பாத்திரத்தை சிவாஜி ஏற்று நடித்தார் என்பதற்காக இப்படி பாண்டவர்களை பஞ்சத்தில் அடிபட்டவர்களாகவும் கதையைக் குளறுபடியாகவும் செய்திருக்க வேண்டாம்…. இந்த ‘நாகரிக’ கர்ணனைப் பார்த்துவிட்டு, மறுபடியும் ஒரு தடவை மகாபாரதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது!”

இந்த விமர்சனத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் யாம் தெரிவிப்பது என்னவெனில், ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது. ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடுகின்றனர். அதே கர்ணன் இன்று புத்துயிர் பெற்று மக்களிடையே புதிய தொழில்நுட்பத்துடன் வலம் வருகிறான். அதன் அபாயங்களை வெளிப்படுத்தி உண்மையை விளக்க விரும்புகிறோம்.

இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி: இறுதியில் கிருஷ்ணர் கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி. எடுத்துச் சொல்வதற்கு ஆள் இல்லை என்பதால், பெரும்பாலான தமிழக மக்கள், கிருஷ்ணர் கர்ணனிடம் பிராமண ரூபத்தில் வந்து அவன் செய்த தானத்தின் பலன்களை தானமாகப் பெற்றார் என்று இன்றும் நம்பிக் கொண்டுள்ளனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை, இஃது ஏமாற்றுத்தனத்தின் உச்சகட்டம். கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்குக் காட்டியதாகக் கூறுவதும் பொய், “வஞ்சகன் கண்ணனடா” என்பது துளியும் ஏற்கத்தக்கதல்ல. கதாநாயகர்களுக்காக வடிவமைக்கப்படும் இத்தகைய காட்சிகள் பெரும் கண்டனங்களுக்கு உரியவை. அந்தோ பரிதாபம்! கண்டிக்கத்தான் ஆள் இல்லை!

இதர சில குளறுபடிகள்
🍁🍁🍁🍁🍁🍁🍁
திரைப்படத்தின் குளறுபடிகள் சொல்லி மாளாதவை, அவை எமது நோக்கமும் அல்ல. இருப்பினும், முக்கிய குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதை கடமையாக உணர்கிறோம்.
* கர்ணன் செய்த அனைத்து அட்டூழியங்களும் மறைக்கப் பட்டுள்ளன.
* கர்ணன் அர்ஜுனனால் தோற்கடிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றையும் காணோம்.
* குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பது வேதனைக்குரியதாகும்.
* கர்ணனின் மகன் விருஷஷேணன், அவனது கண்களுக்கு முன்பாக முறையான போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். அவன் ஒரு சிறுவனும் அல்ல, பின்னால் இருந்து தாக்கப்பட்டவனும் அல்ல. விருஷஷேணனை சிறுவனாகக் காட்டியதும் பின்னால் இருந்து கொல்லப்பட்டதாகக் காட்டியதும் வெற்று அனுதாபங்களை கர்ணனுக்கு சேகரிப்பதற்காகவே.
* சல்லியன் தேரிலிருந்து ஓடியவனா? இல்லை. சல்லியன் பெரும் முயற்சி செய்தும் தேரை உயர்த்த முடியாததால், கர்ணனே இறங்க வேண்டியிருந்தது என்பதே உண்மை.

* நாக அஸ்திரத்தை இரண்டாம் முறை பிரயோகிக்க கர்ணன் மறுத்ததற்கு, “நான் எனது வெற்றிக்கு நாகங்களைச் சார்ந்தவன் அல்ல,” என்ற கர்ணனின் அகந்தையே காரணம். குந்தி அவ்வாறு வரம் கேட்டதாக வருவது கற்பனை. *
கர்ணன் பரசுராமரிடம் பொய் சொல்லி கலை கற்றது துரியோதனனின் தூண்டுதலினால் அல்ல. துரியோதனனைச் சந்திப்பதற்கு முன்பாகவே கர்ணன் பரசுராமரிடம் கலை கற்றிருந்தான்.

* மனைவியைப் பணயம் வைத்ததை கர்ணன் திட்டுவது போன்ற காட்சிகள் உண்மையை திருப்பிப் போடுகின்றன. திரௌபதியை அவமானப்படுத்தியதில் கர்ணன் மிக முக்கிய பங்கு வகித்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

* அதர்மத்தின் பக்கம் நின்ற கர்ணனைக் காண தர்ம தேவதை வருவதுபோன்ற காட்சிகள் எதற்காக?

* கர்ணனின் திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் கற்பனைகளால் மூழ்கியுள்ளன.

மொத்தத்தில் சினிமா பார்த்து மஹாபாரதம் கற்க வேண்டாம் என்பதை இதன் மூலமாக பகவத் தரிசன வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more