பூந்தானம் வழங்கிய ஶ்ரீமத் பாகவத உபன்யாசம்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆
பூந்தானம் நம்பூதிரி பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குருவாயூரப்பனின் பக்தராவார். இவரின் தூய பக்தியால் இவர் நிறைய பாடல்கள் இயற்றியுள்ளார்.இவர் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூர் என்ற இடத்தில் வசித்து வந்தார். பூந்தானம் என்பது அவரின் குலப் பெயர் ஆகும். மலையாள மொழியில் இவர் இயற்றிய "ஞானப்பானா" (தெய்வீக ஞானத்தின் அமிர்தம்) மிகவும் பிரசித்தி பெற்றது. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் லீலைகளில் மூழ்கி, இவர் வழங்கும் பாகவத உபன்யாசங்களை கேட்க பக்தர்கள் எப்போதும் ஆவலுடன் இருப்பார்கள்.
கேரளாவில், கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.அப்படி திறந்திருக்கும் சமயம் தரிசனத்திற்காக பூந்தானம் இவ்விடம் வந்தார். கொட்டியூர் வந்தடைந்த பூந்தானம் அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார். தினசரி திருகோவிலில் பகவான் சிவன் முன்னால் பூந்தானத்தின் ஶ்ரீமத் பாகவத உபன்யாசம் நடைபெறும் . நூற்றுக்கணக்கான பக்தர்கள் அவருடைய இனிமையான ஆழ்ந்த பக்தி உணர்வு பிரதிபளிக்கும் உபன்யாசத்தை கேட்டு தங்களையே மறந்து கிருஷ்ண லீலைகளில் லயித்திருந்தனர்.
அன்றைய தினம் ஶ்ரீமத் பாகவத உபன்யாசத்தில், கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாசமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் அத்தியாயத்தை உபன்யாசம் செய்தார். பூந்தானம் அத்தியாயத்தின் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார்.
மறுநாள் பாகவத உபன்யாசத்தை தொடங்கியவர் ஆச்சர்யப்படும் வகையில், அவர் அத்தியாயத்தின் முடிவில் வைத்த அடையாளம், அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அதே அத்தியாயத்தையே வாசித்தார். இப்படியாக மீண்டும், மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. பக்தர்களும் அதே லீலையை தொடர்ந்து ஸ்ரவணம் செய்தனர்.
வருடத்தில் சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இக் கோவில் திருநடையடைக்க வேண்டிய நேரம் வந்தது.
பூந்தானம் உபன்யாசத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடையடைத்துவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை. ஆனால் அவர் உபன்யாசம் செய்த ஶ்ரீமத் பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து வாசிப்பதை கேட்க முடிந்தது. சாவி துவாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அப்போது ,அங்கே ஒர் அற்புதமான காட்சியை கண்டார்.
சிவபெருமான் ஶ்ரீமத் பாகவதம் படித்து, பின்பு உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானுமும் ஆச்சரியத்துடன், தனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் என்று எண்ணி, கவனம் சிதறாமல் அதைக் கேட்டுகொண்டிருந்தார். இறுதியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத அத்தியாயம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினார். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க விரும்பினேன், அதனால்தான், தினமும் அவர் அத்தியாயத்தின் முடிவில் வைத்த அடையாளத்தை நான் அத்தியாயத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார். வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண ,கிருஷ்ண என்று உரக்கக் கண்ணீர் மல்க சொல்வதரியாது சிறு பிள்ளை போல் கிருஷ்ணரை பிரார்த்தனை செய்தார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர்.
நீதி
பரிபூரண முக்திபெற்ற ஆத்மாக்கள் கூட ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதிலும், கூறுவதிலும் பேராவல் கொண்டுள்னர் என்று ஶ்ரீமத் பாகவதம் 12.13.18 உறுதிபடுத்துகிறது.
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஶ்ரீமத் பாகவதம் 12.13.18
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீமத் பாகவதம் புராணம் அமலம் யத் வைஷ்ணவானாம் ப்ரியம்
யஸ்மின் பாரமஹம்ஸ்ய ம் ஏகம் அமலம் ஞானம் பரம் கீயதே
தத்ர க்ஞான-விகார பக்தி-ஸஹிதம் நைஷ்கர்ம்யம் ஆவிஷ்க்ருதம்
தச் ச்ருண்வன் ஸு-படன் விசாரண-பரோ பக்த்யா விமுச்யேன் நர :
மொழிபெயர்ப்பு
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீமத் பாகவதம் பரிசுத்தமான புராணமாகும். இது பரமஹம்சர்களுக்குரிய பரமான தூய ஞானத்தை வர்ணிப்பதால் வைஷ்ணவர்களுக்கு மிக பிரியமானதாகும். உன்னத ஞானம், துறவு, பக்தி ஆகிய முறைகளினால் அனைத்து பௌதிக செயல்களிலிருந்தும் விடுபடும் வழியை ஸ்ரீமத் பாகவதம் வெளிப்படுத்துகிறது. ஸ்ரீமத் பாகவத்தைப் புரிந்து கொள்வதில் உறுதியாக முயன்று, அதை பக்தியுடன் கேட்பவனும் படிப்பவனுமாகிய ஒருவன் பரிபூரண முக்தியைப் பெறுகிறான்.
பொருளுரை
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீமத் பாகவதம் இயற்கைக் குணங்களின் களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதால், இது அசாதாரணமான ஆன்மீக அழகு பெற்று விளங்குகிறது. இதனால் பகவானின் தூய பக்தர்களுக்கு இது மிக பிரியமானதாக உள்ளது. பரிபூரண முக்திபெற்ற ஆத்மாக்கள் கூட ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதிலும், கூறுவதிலும் பேராவல் கொண்டுள்னர். என்பதையே "பாரமஹம்ஸ்யம்" என்ற சொல் குறிப்பிடுகிறது. முக்தி பெற முயற்சிப்பவர்கள் பக்தி சிரத்தையுடன் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பதாலும், கூறுவதாலும் இச்சிறந்த இலக்கியத்திற்கு விசுவாசத்துடன் தொண்டு புரிய வேண்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment