****************************************
“யோக இந்த்ரிய-ஸம்யம்” - யோகமுறை இந்திரியங்களை வசப்படுத்துவதற்காக ஏற்பட்டது. மனம் புலன்களுக்கு மேற்பட்டதாகையால், நாம் மனதைக் கட்டுப்படுத்த முடியுமானால் புலன்கள் தாமாகவே கட்டுப்படும். நாக்கு எதையாவது சாப்பிட விரும்பும், ஆனால் மனம் பலமாகவிருந்தால், “இதை நீ சாப்பிடக் கூடாது. கிருஷ்ணப் பிரசாதம் மட்டுமே சாப்பிடலாம்” என்று சொல்லும். இப்படியாக நாக்கையும் மற்றப் புலன்களையும் மனதால் கட்டுப்படுத்தலாம். “இந்த்ரியாணி பராணி ஆஹுர் இந்த்ரியேப்ய: பரம் மன:” ஜடவுடல் புலன்களால் ஆனது; ஆகையால் உடலின் செயல்கள் புலன்களைச் சார்ந்துள்ளன. ஆனால், புலன்களுக்கு மேல் மனமும், மனத்திற்கு மேல் புத்தியும், புத்திக்கு மேல் ஆத்மாவும் உள்ளது. ஆத்ம தளத்தில் இருப்பவனின் புத்தி, மனம், புலன்கள் இவையெல்லாம் ஆன்மமயமாகிவிடும். புலன்களையும், மனதையும், புத்தியையும் உண்மையாகவே ஆன்மீகமாக்குவது கிருஷ்ண உணர்வு முறையின் நோக்கம். ஆன்மா இவையெல்லாவற்றையும்விட சக்தி வாய்ந்தது. ஆனால் அது உறங்கிக் கொண்டிருப்பதால் தன் அதிகாரத்தை சலன இயல்புடைய மனதிடம் ஒப்படைத்துள்ளது. அனால் ஆன்மா விழிப்படையும்போது அது மீண்டும் அதிகாரியாகிவிடுவதால், அதிகாரத்திற்குக் கட்டுப்பட்ட மனம் முறை தவறி நடக்காது. கிருஷ்ண உணர்வில் நாம் விழிப்புறும்போது புத்தி, மனம், புலன்கள் ஆகியவை அபத்தமாகச் செயல்படமாட்டா. அவை ஆன்மாவின் கட்டளைப்படி நடந்தாக வேண்டும். அதுவே ஆன்மீகமடைவது, புனிதமடைவது.
(ஶ்ரீல பிரபுபாதர் / பக்குவநிலைக்கான வழி/ அத்தியாயம் இரண்டு.)
Comments
Post a Comment