பக்திசாரர்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆
சிவபெருமானும் பார்வதி தேவியும் ரிஷப வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில். பார்வதிதேவி திருமழிசை ஆழ்வாரைக் காண நேரிட்டது. ஆஸ்ரமத்தின் அருகே ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் அவரை கண்டதும் அவருக்குக் காட்சியளித்து நாம் அருள்புரிவோம்’ என்று சிவபெருமானிடம் பார்வதி தேவி கூறினாள்.
“தேவி! அவர் பகவான் ஶ்ரீமன் நாராயணன் மீது பக்தி பூண்டவர். அவர் பாகவத அனுபவம் ஒன்றிலே லயித்திருக்கிறார், தவிரவும் வேறொன்றையும் அவர் விரும்ப மாட்டார். நம்மையும் கவனிக்கவும் மாட்டார்” என்றார் சிவபெருமான். ஆயினும் “அவரைக் கண்டு செல்வதே தங்கள் திருவருளுக்கு ஏற்றது” என்று அவரை வற்புறுத்த, திருமழிசையாழ்வாரின் முன் காட்சியளித்தனர்.
திருமழிசையாழ்வாரோ தன் காரியத்திலேயே கண்ணாயிருந்தார். அதை உணர்ந்த சிவபெருமான், கண்டும் காணாதவர் போல் திருமழிசையார் அருகில் சென்று, “உமக்கு அருள் புரியவே யாம் இங்கு வந்தோம். எம்மை அலட்சியம் செய்யலாமா?” என்று கேட்டார்.
“உங்களால் எனக்கு ஆக வேண்டிய பயன் என்ன? அதனாலே மௌனமாக இருக்கிறேன்” என்றார் திருமழிசையாழ்வார். “ வேண்டிய வரம் கேள்! தருகிறோம்!” என்றார் சிவபெருமான்.
“எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றார் திருமழிசையாழ்வார்.
“நம்முடைய வருகை வீணாகாமல் ஏதாவது ஒரு வரத்தைக் கேள்!” என்று மீண்டும் சிவபெருமான் புன்சிரிப்போடு கூறினார்.
திருமழிசையாழ்வாரும் புன்சிரிப்போடு “உம்மால் எனக்கு பரமபதம் தர முடிந்தால் அதையே வரமாகத் தாருங்கள்” என்று கேட்டார்.
பரமபதத்தை அருளக்கூடியவர் பரந்தாமனான வைகுந்த நாதனே! ஆகையால் என்னால் தரக் கூடிய வேறு ஏதாவது வரத்தைக் கேளும்” என்றார் சிவபெருமான்.
பரமபதம் பெற பல தவங்கள் புரிய வேண்டும். அதற்கு எனக்கு அதிக ஆயுள் வேண்டும். எனவே இன்று சாக வேண்டியவர்களை நாளை சாகும்படி செய்ய உம்மால் முடியுமா என்று கேட்டார் திருமழிசையாழ்வார்.
”அது உயிர்களின் வினைப்படி நடக்கும்” என்றார் சிவபெருமான். இதைக் கேட்டதும் எள்ளி நகையாடிய வண்ணம், துணி தைத்து கொண்டிருந்த திருமழிசையாழ்வார் , தன் கையில் இருந்த ஊசியைக் காட்டி, “இந்த ஊசியின் பின்னே நூல் வருகிறபடியாவது உம்மால் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
இந்த எள்ளல் வார்த்தை கேட்டதும் மிகுந்த சினங்கொண்டார் சிவபெருமான். முக்கண்ணனாகிய சிவபெருமான் தம் மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணைத் திறந்தார். அடுத்த கணம் அதிலிருந்து பெரும் நெருப்பு எழுந்து மூவுலகையும் சூழ்ந்தது. ஆனால் அந்நெருப்பால் திருமழிசையாழ்வாரை சிறிதும் பாதிக்கப்படவில்லை. பதிலுக்கு திருமழிசையாழ்வார் யோக வலிமையால் தம் வலது திருவடி கண்ணை திறந்தார் .அதிலிருந்து நெருப்பு ஊழித்தீ போல் பொங்கி எழுந்தது. மூவுலகையும் தாக்கி தகிக்கச் செய்தது. கங்கையை சடையில் தாங்கிய சிவபெருமானையும் அந்நெருப்பு சூழ்ந்தது. அதனால் இந்திராதி தேவர்கள் வைகுந்தம் சென்று பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த ஶ்ரீமன் நாராயணனை வணங்கி‘இந்நெருப்பிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும’ என்று வேண்டிக் கொண்டனர்.
பகவான் ஶ்ரீமன் நாராயணன், அந்தத் தேவர்களை நோக்கி, “தேவர்களே கவலையை விடுங்கள்; நாம் புஷ்கலாவர்த்தம் பொழியச்செய்து, அப்பெரு நெருப்பை அடக்குகிறோம்” என்றார். அவ்வாறே ‘புஷ்கலாவர்த்தம்’ என்னும் மேகத்தை அனுப்பினார். அம்மேகம் பெருமழையைப் பெய்வித்து பெருந்தீயை அணைத்தது. அதோடு பிரளய வெள்ளம் போல் பூமியெங்கும் நீர் நிறையலாயிற்று. ஆயினும் அதற்கு அஞ்சாதவராக திருமழிசையாழ்வார், ஶ்ரீமன் நாராயணனை மனத்தில் எண்ணியவாறு அந்தப் பெரு வெள்ளத்தினிடையேயும் அசைவற்று அமர்ந்திருந்தார்.
அவருடைய செயலைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருடைய பரம பக்தியின் வலிமையைப் போற்றிப் புகழ்ந்து, “பக்திசாரர்” என்னும் பட்டத்தைக் கொடுத்து தேவியோடு கயிலைக்குச் சென்றார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment