மன்னன் யயாதி


 மன்னன் யயாதி


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁




முன்னொரு காலத்தில் பாற்கடல்  கடையப்பட்டு அமிர்தம் எடுக்கப்பட்டது. அமிர்த கலசத்தை கண்ட அசுரர்கள், அதை வலுக்கட்டாயமாக பிடிங்கி எடுத்துச் சென்றனர். பகவான் மோகினி ரூபம் எடுத்து  அசுரர்களால் திருடி செல்லப்பட்ட அமிர்த கலசத்தை தந்திரமாக வாங்கி தேவர்களுக்கு வழங்கினார். இதனால் ஏமாற்றமும் கோபமும் அடைந்த அசுரர்கள் தேவர்களிடையே யுத்தம் செய்தனர். போரில் பல பலசாலி அசுரர்கள் மாண்டனர். அசுரர்களின் அரசன் பலிச்சக்கரவர்த்தி  போரில் இறந்து போனான். அசுரகுரு சுக்கிராசாரியார் இறந்தவர்களை பிழைக்கவைக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை அறிந்திருந்தார்.அசுரர்கள் தம் தலைவன் உயிர் பெற்று எழ வேண்டும் என்று சுக்கிராசரியாரை கேட்டுக்கொள்ள, சுக்கிராசாரியாரும்  மிருத சஞ்சீவினி மந்திரத்தை பயன்படுத்தி அசுரத்தலைவன் பலியை உயிர் பிழைக்கச்செய்து விட்டார்.


இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் தேவர்கள் நமக்கும் அந்த மிருதசஞ்சீவினி மந்திரத்தை சித்திக்க வேண்டும் என்று எண்ணி தேவகுரு பிரகஸ்பதியிடம் சென்றனர். பிரகஸ்பதி ஒரு உபாயத்தை கூறினார். என் மகன் கசன் சுக்கிராசாரியாரிடம் சென்று சிஷ்யனாக இருந்து குரு சேவை செய்து அந்த மந்திரத்தை கற்றுக்கொண்டு வரட்டும் என்றார். தேவர்களின் திட்டப்படி கசன் சுக்கிராசாரியாரிடம் வந்து கூறினான்.


“பகவானே நான் பிரகஸ்பதியின் புதல்வன். பலவித சாஸ்திரங்களை கற்றவன், ஆயினும் கற்க வேண்டிய கல்விக்கோ எல்லையே இல்லை. முற்றிலும் கற்றவர் எவரும் இல்லை. நான் தங்களிடம் விஷேச வித்தையை கற்க வந்திருக்கிறேன். கற்பதில் ஆர்வம் கொண்ட மாணவனை நல்லாசிரியர்கள் புறக்கணிக்க மாட்டார்கள். தங்கள் மாணாக்கனாக சேர்ந்து நான் குருசேவை செய்ய விரும்புகிறேன். தாங்கள் மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சுக்கிராசாரியாரை சரண் அடைந்தான். சுக்கிராசாரியார் அப்படியே ஆகட்டும் என்று அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார். கசன் குருவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். காட்டிற்க்கு சென்று மாடுகளை மேய்த்துக்கொண்டு வருவான்.        


கசன் சிஷ்யனாக சேர்ந்த செய்தியை அசுரர்கள் அறிந்து கொண்டனர். அசுரகுலத்திற்கு ஆபத்து வரும் என்று நினைத்தனர். ஒருநாள் அவர்கள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த கசனை கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டனர். சுக்கிராசாரியாரின்  மகள் தேவயானி கசன் மீது அன்பும் காதலும் கொண்டிருந்தாள். அவள் தந்தையிடம் கூறினாள். “காட்டிற்கு சென்ற தங்கள் சிஷ்யன் கசன் திரும்பவில்லையே அவர் ஆபத்தில் சிக்கிக்கொண்டார் போலும்” என்றாள். சுக்கிராசாரியார்  ஞானதிருஷ்டியில் அனைத்தையும் அறிந்து மிருத சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து கசனை உயிர் பிழைக்க வைத்து விட்டார்.


சமித்துகளை சேகரிக்க, மாடுகளை மேய்க்க, விறகு வெட்ட, பழங்கள் பறிக்க, அல்லது பூஜைக்கு மலர்கள் கொண்டு வர காட்டிற்க்கு சென்ற போது ஒவ்வொரு முறையும் கசனை அசுரர்கள் கொன்றனர். கசன் மீது வைத்த காதலால் தேவயானி கசன் திரும்பவில்லை என்று அழுவாள். சுக்கிராசரியார் மகள் மீது இருந்த பாசத்தினால் ஒவ்வொரு முறையும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை கொண்டு கசனை பிழைக்கவைத்துக் கொண்டு இருந்தார். இறுதியில் ஒருநாள் கசன் காட்டிற்கு சென்றிருந்தபோது அவனை வெட்டி அசுரர்கள் தீயிட்டு எரித்தார்கள். அந்த சாம்பலை எடுத்து வந்து சுக்கிராசரியாருக்கு தெரியாமல் பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர். சுக்கிராசரியாரும் அதை குடித்து விட்டார். தேவயானி வழக்கம் போல் கசனை நினைத்து அழுதாள். அவர் சஞ்சீவினி மந்திரத்தை ஜபிக்க பானம் கலந்த சாம்பலுடன் வயிற்றில் சென்ற கசன் பேசினான். “குரு தேவா நான் இங்கு உமது வயிற்றில் உயிர் பெற்று இருக்கிறேன். நான் வெளியில் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தால் தாங்கள் இறந்து விடுவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.


சுக்கிராசாரியார் வேறு வழியின்றி வயிற்றில் இருக்கும் கசனுக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். கசன் சுக்கிராசாரியார் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தான். கசன் இறந்து போன சுக்கிராசாரியார் குறித்து மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தான். சுக்கிராசாரியார் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார். இந்த நிகழ்ச்சியால் மனம் திருந்திய சுக்கிராசாரியார் வானகத்து தேவர்கள் கேட்டுக்கொண்டிருக்க பஞ்ச பூதங்கள் சாட்சியாக தர்ம சாஸ்திர சட்டப்பூர்வமாக வாக்கு கொடுத்தார். “இன்றிலிருந்து பிராமணர்கள் மது அருந்த கூடாது. மாமிசம் புசிக்க கூடாது. அவ்வாறு மீறி நடந்தால் அவர்கள் பிராமண தன்மையை இழந்து பெரும் பாவத்திற்குள்ளாவார்கள்” என்றார். இதனை தேவர்களும் ரிஷிகளும் ததாஸ்து(அப்படியே ஆகட்டும்) என்று ஆமோதித்தனர்.


தேவயானி கசனை நோக்கி கூறினாள். “பிருகஸ்பதி மகனாரே இது நாள் வரை உங்களை நான் காதலித்து வந்தேன். அதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் என்னை மணந்து கொள்ள வேண்டும். நான் பலமுறை உங்களை உயிர் பிழைக்க வைத்தேன்.” தேவயானி திடீரென இவ்வாறு கூறியதும் கசன் கூறினான். “ குருவின் மகளே இது வரை உன்னை மணக்கும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. நான் உன்னை காதலிக்கவும் இல்லை. மேலும் நான் இப்போது உன் தந்தையின் வயிற்றிலிருந்து மறுபிறவி எடுத்து விட்டேன். சுக்கிராசாரியார் எனக்கு தந்தை முறை ஆகி விட்டார். ஆதலால் நான் உன்னை மணக்க முடியாது.”


கசன் இவ்வாறு கூறியதும் தேவயானி கோபமாக கூறினாள். “தேவகுரு மகனே எந்த லட்சியத்திற்காக இங்கு வந்தீர்களோ (கற்ற மிருதசஞ்சீவினி மந்திரத்தை )உமக்கு மறந்து போக்கக்கடவது” என்று சபித்தாள். இதை கேட்டு கசன் பதிலுக்கு சாபமிட்டான். “ தேவயானி நீ பிராமணப்பெண்ணாக இருந்தாலும் உன்னை எந்த பிராமணனும் மணந்துகொள்ள மாட்டான். என்று சபித்து விட்டு தேவலோகம் போய் சேர்ந்தான்.




யயாதி தேவயானி திருமணம் 




அசுர குலத்தவருக்கு அரசனாக விருஷபர்வா என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் சர்மிஷ்டா என்பவள் அழகும் குணங்களும் நிறைந்தவளாக இருந்தாள். சுக்கிராசாரியார் மன்னன் விருஷபர்வாவிடம் ராஜகுருவாக இருந்தார். அதனால் தேவயானி சர்மிஷ்டாவின் தோழியாக இருந்தார்.



ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில்  சர்மிஷ்டா, தேவயானியுடன் ஆயிரம் தோழிகள் சூழ மலர்கள்,செடிகொடிகள் பக்கம் உலவிக்கொண்டிருந்தாள். அங்கே தாமரைகள் பூத்த ஒரு குளத்தில் நீராட மனம் கொண்டாள். தேவயானியுடன் நீருக்குள் இறங்கி ஒருவர் மீது ஒருவர் நீரை அடித்து நீராட முனைந்தனர். அரண்மனையிலிருந்து தோழிகள் பட்டாடைகளை கொண்டுவந்து கரையில் வைத்தனர். நீரில் விளையாடிக் கொண்டிருந்த அம்மங்கைகள் திடீரென்று சிவபெருமான் மனைவி பார்வதியுடன் தன் எருதின்மேல் அமர்ந்தபடி கடந்து செல்வதைக் கண்டனர். நிர்வாணமாக இருந்ததால் வெட்கத்திற்குள்ளான அப்பெண்கள் விரைவாக நீரிலிருந்து வெளியேறி, தங்களுடைய அடைகளால் தங்களை மூடிக்கொண்டனர் அவசரத்தில் தவறுதலாக சர்மிஷ்டா தேவயானியின் ஆடைகளை உடுத்திக்கொண்டாள். இதைக்கண்டு தேவயானி கொந்தளித்து பேசினாள்.



ஐயோ! பணிப்பெண்ணான இந்த சர்மிஷ்டையின் செயலைப் பாருங்கள். வேள்வியில் உபயோகிப்பதற்கென உள்ள நெய்யைப் பறித்துச் செல்லும் ஒரு நாயைப் போல், எந்த மரியாதையையும் பொருட்படுத்தாமல், என்னுடைய ஆடையை இவள் அணிந்து கொண்டாள். நாங்கள், பரமபுருஷரின் முகமாக ஏற்றுக் கொள்ளப்படும் தகுதி பெற்ற பிராமணர்களுக்கு இடையில் உள்ளவர்களாவோம்.  பிராமணர்கள் தங்கள் தவத்தினால் முழு பிரபஞ்சத்தையும் படைத்துள்ளனர். அவர்கள் பரமபுருஷரை எப்பொழுதும் தங்கள் இதயத்தின் ஆழத்தில் வைத்துள்ளனர். அவர்கள் நல்லதிர்ஷ்டத்திற்கான வழியை, வேதப் பண்பாடு எனும் வழியில் கற்பித்துள்ளனர். இவ்வுலகில் வழிபடத்தக்கவர்களாக இருப்பவர்கள் அவர்கள் மட்டுமே என்பதால், அவர்கள் லோக பாலகர்களான தேவர்களாலும், பரமாத்மாவும், தூய்மைப்படுத்துபவரும், லக்ஷ்மிதேவியின் கணவருமான பரமபுருஷராலும் கூட துதிக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர். மேலும் நாங்கள் பிருகு வம்சத்தில் வந்திருப்பதால், இன்னும் அதிக மரியாதைக்கு உரியவர்களாவோம். அப்படியிருந்தும், அசுர குலத்தைச் சேர்ந்த இவளது தந்தை எங்களுடைய சீடர் என்ற போதிலும், வேத அறிவுக்குப் பொறுப்பேற்கும் ஒரு சூத்திரனைப் போல், இவள் என் உடையை உடுத்திக் கொண்டாள்.



தேவயானி இவ்வாறு கடுமையான வார்த்தைகளால் அவமானப்படுத்தி பேசியதை கேட்டு சர்மிஷ்டா கடுங்கோபமடைந்தாள். அவள் பாம்பு போல் பெருமூச்சு விட்டபடி உதட்டைத் தன் பற்களால் கடித்துக்கொண்டு, சுக்ராசாரியரின் மகளிடம் பின்வருமாறு பேசலானாள், காக்கைகளுக்குச் சுதந்திரமான வாழ்வு கிடையாது; குடும்பஸ்தர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்படும் மிச்ச உணவையே அவை முழுமையாக நம்பியுள்ளன. எனவே, ஒரு பிராமணர் அவரது சீடர்களை நம்யுள்ளார் என்பதால், தேவயானியால் கடும் சொற்களால் திட்டப்பட்ட சர்மிஷ்டை, தேவயானி காக்கை போன்ற பிச்சைக்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று அவள்மீது பழி சுமத்தினாள். கோபமூட்டும் சிறு விஷயத்திற்குக் கூட வாய்ச்சண்டை செய்வது பெண்களின் இயற்கையாகும். இச்சம்பவத்திலிருந்து நாம் காண்பதுபோல், இது அவர்களுடைய நீண்ட காலத்து சுபாவமாகும். குரு புத்திரியான தேவயானியை இத்தகைய இரக்கமற்ற வார்த்தைகளால் சர்மிஷ்டை அவமதித்து, கோபத்தால் அவளுடைய ஆடைகளைப் பறித்துக் கொண்டு அவளைக் கிணற்றில் தள்ளினாள். தேவயானியைக் கிணற்றில் தள்ளியபின் சர்மிஷ்டை தன் வீடு திரும்பினாள். 



ஒரு சமயம் இந்திரன் விருதாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் பிரம்ம ஹத்தியதி பாவ தோஷத்திற்கு ஆளானான். அதனால் இந்திர பதவியை இழந்து தாமரை தண்டிற்குள் நுழைந்து வாசம் செய்தான். தேவலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தகுந்த தேவராஜாவை தேவர்கள் பூலோகமெங்கும் தேடினார்கள். அச்சமயம் அறம் வழுவாமல் நஹூஷன் என்பவன் பூமியில் நல்லாட்சி செய்து வந்தான். தேவலோகத்திற்கு அரசனாக தேவர்கள் கேட்டுக்கொண்டபடியால் நஹூஷன் இந்திரனானான். சிறிது காலம் சென்ற பின் நஹூஷனுக்கு கர்வம் தலைக்கேறியது.அவன் இந்திரன் மனைவி மீது ஆசைப்பட ஆரம்பித்தான். தமக்கு இந்திராணியாக வரவேண்டும் என்று இந்திராணியை ஓயாது கேட்டுக்கொண்டு இருந்தான். அதற்கு இந்திராணி நஹூஷனிடம் கூறினாள். “ தாங்கள் ஸப்தரிஷிகள் தூக்கிக்கொண்டு வரும் பல்லக்கில் என் இல்லம் வருவீர்களானால் நான் உமக்கு இந்திராணி ஆவேன். இதை கேட்டு சப்தரிஷிகளை அழைத்து அவர்களை பல்லக்கு தூக்கவைத்து அதில் ஏறி அமர்ந்து பயணப்பட்டான். நடு வழியில் அகஸ்தியர் குள்ளமாக இருந்ததால் பல்லக்கு சரி சமமாக இல்லாமல் ஆடியது. அதனால் பல்லக்கு ஏன் சரிசமமாக தூக்கப்படவில்லை என்று நஹூஷன் அகஸ்திய முனிவரை காலால் எட்டி உதைத்தான். அதனால் கோபம் கொண்ட அகஸ்தியர் நஹூஷனை நீ மலைபாம்பாக போய் விடுவாய் என்று சபித்தார். அந்த புகழ் மிக்க இந்திர பதவியை அடைந்த நஹூஷனின் மகன் யயாதி பூலோகத்தில் பட்டத்திற்க்கு வந்தான். தந்தையின் நிலைமையை அறிந்து மிக கவனமாக அறம் வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான்.  


ஒருநாள் யயாதி மன்னன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். தாகம் அதிகமாக தண்ணீரை தேடி வந்தவன் கிணற்றுக்குள் பார்த்தான். அங்கு ஒரு அழகான பெண் குறைந்த வஸ்திரம் அணிந்து பரிதாபமாக இருப்பதை கண்டான். யயாதி முதலில் அவளுக்கு தன் அங்கவஸ்த்திரத்தை கொடுத்தான். பின் அவளை கிணற்றில் இருந்து கை தூக்கி விட்டான்.   


தேவயானி கூறினாள்.-“வீரரே உங்களை பார்த்தால் அரசனை போல தெரிகிறது. நீங்கள் என் கரத்தை பற்றி தூக்கி விட்டீர்கள். இனி நான் வேறு எவர் கரத்தையும் பிடிக்க மாட்டேன். என்றாள். மன்னன் தான் யயாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.


தேவயானி கூறினாள். “ இன்று தெய்வாதீனமாக உங்கள் தரிசனம் கிடைத்தது. இதை பகவானின் விருப்பம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் சுக்கிராசாரியாரின் மகள் பிராமணப்பெண்ணான என்னை எந்த பிராமணனும் மணந்து கொள்ள மாட்டான். என்று பிரகஸ்பதியின் மகன் கசன் முன்பு எனக்கு சாபமிட்டு விட்டான். ஏனெனில் அவனுக்கு. “நீ கற்ற வித்தையை மறந்துவிடுவாய்” என்று   நான் ஒரு சாபம் கொடுத்தேன்.


பிராமணப்பெண்ணான என்னை க்ஷத்திரியன் மணப்பது முறையன்று என்று அறிந்திருந்தும் இதை தெய்வ சங்கல்பம் என்றே நினைக்கிறேன். மேலும் தேவயானியை கண்டதும் அவன் மனம் காதல் வயப்பட்டது. தேவயானியை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு தன் தலைநகரம் சென்று அடைந்தான். தேவயானி கதறி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள்.தந்தையிடம் தமக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அநியாயத்தையும் சொல்லி அழுதாள். சுக்கிராசாரியார் அதை கேட்டு மனம் வருந்தி கூறினார்.  “பிறரை அண்டி பிழைக்கும் பிழைப்பு மோசமானது. அதற்கு பதில் வயலில் சிந்திக்கிடப்பதை புறா போல பொறுக்கி எடுத்து வந்து வாழ்க்கை நடத்தலாம்.” என்று நினைத்தார்.




( பிராமணரொருவர் ஒரு புறாவின் (கபோத) தொழிலை ஏற்கும் பொழுது, அவர் வயலில் மிஞ்சிய தானியங்களைச் சேகரிப்பதன் மூலம் தன் வாழ்க்கையை நடத்துகிறார். இது உஞ்ச-வ்ருத்தி என்று அழைக்கப்படுகிறது. உஞ்ச-வ்ருத்தி எனும் இத்தொழிலை ஏற்கும் பிராமணர் முதல்தர பிராமணர் எனப்படுகிறார். ஏனெனில் அவர் எவரிடமும் யாசிக்காமல் பரமபுருஷரின் கருணையையே முழுமையாக நம்பியிருக்கிறார். ஒரு பிராமணருக்கு அல்லது சந்நியாசிக்கு யாசகத் தொழில் அனுமதிக்கப்படுகிறது என்றாலும், அவர் அதைத் தவிர்த்து தன் பராமரிப்புக்கு பரமபுருஷரின் கருணையையே முற்றிலும் நம்பியிருப்பாரானால் அது சாலச்சிறந்ததாகும். சுக்ராசாரியர் புரோகிதத் தொழிலை ஏற்றுக் கொண்டிருந்த காரணத்தால், அவர் தன் மகளுடைய புகாரின் நிமித்தம் அவருடைய சீடரிடம் சென்று யாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுக்ராசாரியர் இத்தொழிலை விரும்பவில்லை என்றாலும், தன் மகளின் வருத்தத்தைப் போக்கும் பொருட்டு, விருப்பமின்றி தன் சீடரிடம் சென்று கையேந்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 


( ஶ்ரீல பிரபுபாதர் ஶ்ரீமத் பாகவதம் 8. 18. 25 பொருளுரை ) 




மன்னன் விருஷபர்வா, குரு சுக்ராசாரியர் தன் ஆசிரமத்தை விட்டு மகளுடன் வெளியேறும் செய்தியை அறிந்து குரு தேவர் போய் விட்டால் தமக்கும் அசுர குலத்திற்க்கும் நல்லதல்ல என்று எண்ணி சுக்கிரரை சமாதானப்படுத்த அரண்மனையை விட்டு வந்து அவசரமாக அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.


சுக்ராசாரியர் சில நொடிகள் கோபங் கொண்டார் என்றாலும், விருஷபர்வரால் திருப்திப்படுத்தப்பட்டு அவரிடம் பின்வருமாறு கூறினார். அரசே, இவ்வுலகில் என் மகளான இவளை என்னால் கைவிடவோ, அலட்சியப்படுத்தவோ முடியாது. எனவே தயவு செய்து இந்த தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றுவீராக.


**********


( சிலசமயங்களில் சுக்ராசாரியரைப் போன்ற சக்திவாய்ந்த புருஷர்களால் தங்கள் மகன்களையும், மகள்களையும் அலட்சியப்படுத்த முடிவதில்லை. ஏனெனில் குழந்தைகள் இயல்பாகவே தங்கள் தந்தையை நம்பியுள்ளனர். தந்தையும் அவர்களிடம் பாசம் கொண்டுள்ளார். தேவயானிக்கும், சர்மிஷ்டைக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை குழந்தைத்தனமானது என்பதை சுக்ராசாரியர் அறிவார் என்றாலும், தேவயானியின் தந்தை என்ற முறையில் அவர் தன் மகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியதாயிற்று. அன்புக்குக் கட்டுப்பட்ட காரணத்தால் விருப்பமில்லாமலேயே இதை அவர் செய்ய வேண்டியிருந்தது. தன் மகளின் கோரிக்கையை நிறைவேற்றும்படி அரசரிடம் தான் கேட்டிருக்கக் கூடாது என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் என்றாலும், அன்பின் காரணத்தால் இவ்வாறு செய்வதை அவரால் தவிர்க்க இயலவில்லை 


(ஶ்ரீல பிரபுபாதர் ஶ்ரீமத் பாகவதம் 8. 18. 27 பொருளுரை )


**********


 சுக்ராசாரியர் கூறினார்.-“மன்னா எனக்கு என் மகள் தான் முக்கியம். அவளை சமாதானப்படுத்தி அவள் விருப்பப்படி நடந்தால் நான் ஆசிரமத்தை விட்டு செல்ல மாட்டேன்.” என்றார். மன்னர் விருஷபர்வா அப்படியே ஆகட்டும் என்றான்.



சுக்ராசாரியரின் வார்த்தைகளைக் கேட்ட விருஷபர்வர் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு அவளது வார்த்தைக்களுக்காகக் காத்திருந்தார். தேவயானியும் பிறகு பின்வருமாறு தன் விருப்பத்தைக் கூறினாள்:



 “ என் தந்தையால் எவருடன் நான் மணம் முடிக்கப்பட்டு எங்கு செல்கிறேனோ அங்கெல்லாம் சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளோடு பணிப்பெண்ணாக வந்து எனக்கு சேவை செய்ய வேண்டும்.” என்றாள். தன் தந்தையின் இக்கட்டான நிலைமை அறிந்து அசுர குலத்தின் நலனையும் கருதி சர்மிஷ்டா தேவயானியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.



சுக்கிராசாரியார் அரசன் யயாதியை அழைத்து திருமணம் பேசி முடித்தார். விருஷபர்வா ராஜ மரியாதைகளுடன் தேவயானியின் திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தான். தேவயானியின் விருப்பப்படி சர்மிஷ்டா தன் ஆயிரம் தோழிகளுடன் பணிப்பெண்ணாக சென்றாள். ஆனால் சுக்கிராசாரியார் யயாதியிடம் “அரசே, இப்பெண் சர்மிஷ்டையை உம்முடன் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்று அரசரை எச்சரித்தார்.



யயாதியின் குடும்ப வாழ்க்கை. மற்றும் சுக்கிராசாரியாரின் சாபம்




சிறிது காலத்தில் தேவயானி இரண்டு புதல்வர்களை பெற்றெடுத்தாள். தேவயானியின் புதல்வர்களை பார்த்து சர்மிஷ்டா தானும் புதல்வர்களை பெற்றால் அவர்களும் அரசாள்வார்கள். என்று நினைத்தாள். யயாதி மன்னனை ரகசியமாக சந்தித்து அவனை மணந்து கொண்டாள். யயாதியும் க்ஷத்திரிய ராஜகுமாரியை மணப்பது தர்மத்திற்க்கு விரோதமானதல்ல என்றெண்ணியவர் சுக்ராசாரியரின் எச்சரிக்கை நினைவிருந்தது என்ற போதிலும், சர்மிஷ்டையை அவரால் மறுக்க இயலவில்லை. அவளுக்கு ஒரு மகனைக் கொடுப்பது நல்லது என்றெண்ணிய அவர் அவளை ஏற்றுக்கொண்டார். யது, துர்வசு என்ற புத்திரர்களை தேவயானி பெற்றாள். விருஷபர்வரின் மகளான சர்மிஷ்டை துருஹ்யன், அனு, பூரு என்பவர்களைப் பெற்றாள்.



சர்மிஷ்டையிடம் தோன்றிய கரு தன் கணவருடையது என்பதையறிந்த கர்வமுள்ள தேவயானி கோபத்தினால் ஆவேசமடைந்து, தன் தந்தையின் வீடு சென்றாள் அதிக காம இச்சையுள்ள யயாதி மகாராஜன் தன் மனைவியைப் பின்தொடர்ந்து சென்று, இனிய வார்த்தைகளைப் பேசியும், அவளது பாதங்களைப் பிடித்துவிட்டும் அவளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த வழியினாலும் அவளை அவரால் சமாதானப்படுத்த முடியவில்லை. கடுங்கோபங்கொண்ட சுக்ராசாரியர் அரசரை நோக்கி, “பொய்யனான மூடனே, பெண்களிடம் மயங்கியவனே! நீ பெரும் தவறிழைத்தாய். எனவே அழகைக் கெடுக்கும் முதுமை உன்னிடம் புகுந்து கொள்ளட்டும்” என்று சபித்தார். யயாதி மிகவும் வருந்தி கூறினார். “பிரம்மரிஷியே அரசாங்கம் நடத்த முடியாத, எதையும் சாதிக்க முடியாத, இந்த கிழப்பருவத்தை உங்கள் மகளும் விரும்பமாட்டாள்.  வழிபாட்டுக்குரிய கற்றறிந்த பிராமணரே, உமது மகளிடம் நான் கொண்ட காம இச்சைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.” என்றார். அதற்கு சுக்ராசாரியர் பதிலளித்தார், “தன் இளமையை உமக்களிக்கச் சம்மதிக்கும் ஒருவனுடன் உமது முதுமையை நீர் மாற்றிக் கொள்ளலாம்.”என்றார்.



சுக்ராசாரியரிடமிருந்து இவ்வரத்தைப் பெற்ற யயாதி, தன் மூத்த மகனிடம், “என் பிரிய மகனே யது, என் மூப்பை நீ ஏற்றுக்கொண்டு, உனது இளமையை எனக்குக் கொடுப்பாயா?” என்று வேண்டினார். பிரிய மகனே, என் சிற்றின்ப இச்சைகளில் நான் இன்னும் திருப்தியடையவில்லை. என்னிடம் உனக்கு அன்பு இருக்குமானால், உன் தாய் வழி பாட்டனாரால் கொடுக்கப்பட்ட மூப்பை நீ ஏற்றுக் கொண்டு, உன் இளமையை எனக்குக் கொடுத்தால் இன்னும் சில ஆண்டுகள் நான் வாழ்வை அனுபவிப்பேன் என்றார். ஆனால் யது மறுத்து விட்டார். யயாதி அவ்வாறே தன் மகன்களான துர்வசு, துருஹ்யு, அனு ஆகியோரிடம் அவர்களுடைய இளமைக்குப் பதிலாக தன் முதுமையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவர்கள் தர்மத்தை அறியாதவர்கள் என்பதால், நிலையற்ற இளமையை நிலையானது என்றெண்ணி தங்கள் தந்தையின் உத்தரவை ஏற்க மறுத்து விட்டனர்.


🌾🌾🌾🌾🌾🌾🌾



( 🌷இதுதான் காம இச்சையின் தன்மை. பகவத்கீதை (7.20) பின்வருமாறு கூறுகிறது: காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத-க்ஞானா: ஒருவன் புலன்நுகர்வில் அளவுக்கதிகமாக பற்றுக்கொள்ளும் பொழுது, அவன் உண்மையில் தன் அறிவையே இழந்து விடுகிறான். ஹ்ருத-க்ஞானா: எனும் சொல், தன் அறிவை இழந்துவிட்ட ஒருவனைக் குறிக்கிறது. அதற்கு உதாரணம் இதோ: தந்தை வெட்கமின்றி தன் மூப்பை ஏற்றுக் கொண்டு இளமையைக் கொடுக்கும்படி தன் மகனிடமே கேட்கிறார். உண்மையில் உலகம் முழுவதும் இத்தகைய மாயையின் கீழ்தான் உள்ளது. எனவேதான் அனைவரும் மிகவும் பித்துப்பிடித்த நிலையில் உள்ளனர் (ப்ரமத்த:) என்று கூறப்படுகிறது. நூனம் ப்ரமத்த: குருதே விக்ரம: ஒருவன் கிட்டத்தட்ட பித்துப்பிடித்தவன்போல் ஆகும் பொழுது, அவன் உடலுறவிலும், புலன்நுகர்விலும் ஈடுபடுகிறான். காம சுகத்தையும், புலன் நுகர்வையும் கட்டுப்படுத்த முடியும். உடலுறவு ஆசைகள் இல்லாதவன் பூரணத்துவம் அடைகிறான். ஒருவன் பூரண கிருஷ்ண உணர்வு உள்ளவனாக ஆகும்பொழுது இது சாத்தியமாகும்.


யதவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே

நவ-நவ-ரஸ-தாமனி உத்யதம் ரந்தும் ஆஸீத்

ததவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே

 பவதி முக-விகார: ஸுஷ்டு-நிஷ்டீவனம் ச


“நான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத அன்புத் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டு, அவரில் புதுப்புது இன்பங்களை அனுபவிப்பதால், காம சுகத்தை நினைக்கும் போதெல்லாம், அந்த எண்ணத்தில் நான் காரித் துப்புகிறேன். விருப்பமின்மையால் என் உதடுகள் பிதுங்குகின்றன.” ஒருவன் முழு கிருஷ்ண உணர்வினன் ஆகும்பொழுது மட்டுமே காம இச்சையை நிறுத்த முடியும். காம இச்சைகள் இருக்கும் வரை, வெவ்வேறு உயிரனங்களில் அல்லது ரூபங்களில் உடலுறவை அனுபவிக்க ஒருவன் உடல்களை மாற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும். ரூபங்கள் வேறுபடக்கூடும் என்றாலும், உடலுறவு ஒன்றுதான். எனவே, புன: புனஸ் சர்வித-சர்வணானாம்: உடலுறவில் அதிக பற்றுக் கொண்டுள்ளவர்கள், “சுவைத்ததையே திரும்பத் திரும்ப சுவைக்கின்றனர்”. அதாவது ஒரு நாயாகவும், ஒரு பன்றியாகவும், ஒரு தேவனாகவும், அல்லது வேறாகவும் இருந்து கொண்டு அதே காம சுகத்தை ஒருவன் அனுபவிக்கிறான். இவ்வாறாக அவன் உடல்களை மாற்றிக் கொண்டே போகிறான். ) 


ஶ்ரீமத் பாகவதம் 9.18.39 / பொருளுரை 


🌾🌾🌾🌾🌾🌾🌾


மன்னர் யயாதி பிறகு, இம்மூன்று சகோதர்களுக்கும் இளையவனும், ஆனால் அதிக தகுதியுடையவனுமான பூருவிடம், “பிரிய மகனே, உன் தமையன்களைப் போல், நீ உத்தரவை மீறுபவனாக இருக்காதே, ஏனெனில் அது உன் கடமையல்ல.” என்று வேண்டிக் கொண்டார்.


பூரு: மனிதரில் சிறந்தவரே, இவ்வுலகில் யார்தான் தன் தந்தையிடம் பட்ட கடனை அடைக்க இயலும்? தன் தந்தையின் கருணையால் ஒருவன் மனித ரூபத்தைப் பெறுகிறான். அந்த மனித ரூபத்தைக் கொண்டு, ஒருவனால் பரமபுருஷரின் ஒரு சகாவாக ஆகமுடியும் என்று பதிலளித்தான் மேலும் தந்தையின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்ப செயற்படுபவன் உத்தமன். தந்தையின் உத்தரவைக் கேட்டு செயற்படுபவன் மத்தியமன். தந்தையின் உத்தரவைக் கேட்டு சிரத்தையின்றி செயற்படுபவன் அதமன். ஆனால் தந்தையின் உத்தரவை நிறைவேற்ற மறுப்பவன் தந்தையின் மலத்துக்கொப்பானவன். என்று கூறி  தன் தந்தையான யயாதியின் முதுமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். யயாதியும் தன் மகனின் இளமையைப் பெற்றுக்கொண்டு, தேவைக்கேற்ப இந்த ஜட உலகை அனுபவித்தார்.



🌾🌾🌾🌾🌾🌾🌾


( தந்தை உடலுக்கான வித்தை அளிக்கிறார். இந்த வித்தானது, இறுதியில் ஒருவன் விருத்தியடைந்த மனித உடலை அடையும் வரை படிப்படியாக வளர்கிறது. மனித உடல் மிருகங்களை விட உயர்வாக உணர்வைப் பெறுகிறது. மனித உடலிலுள்ள ஒருவனால் உயர் கிரகங்களுக்கு ஏற்றம்பெற இயலும். மேலும், மனித உடலைப் பெற்றவன் கிருஷ்ண உணர்வை விருத்தி செய்வானாயின், அவனால் பரமபதம் அடையவும் முடியும். முக்கியமான இந்த மனித உடல் தந்தையின் கருணையால் அடையப்படுகிறது. எனவே ஒவ்வொருவனும் அவனது தந்தைக்குக் கடன்பட்டவனாவான். மற்ற உயிரினங்கள் கூட தாய் தந்தையரைப் பெறுவது உண்மைதான்; நாய் பூனைகளுக்கும் தாய் தந்தையர் உண்டு. ஆனால் மனித வாழ்வைப் பெற்ற ஒருவனுக்கு, ஒரு பக்தனாக ஆகும்படி போதிப்பதன் மூலமாக, அவனுடைய தாய் தந்தையர் அவனுக்கு மிகச் சிறந்த வரத்தை அளிக்க முடியும். ஒருவன் பக்தனாகும் பொழுது, மிகச் சிறந்த வரத்தை அடைகிறான். ஏனெனில், பிறவிச் சக்கரத்தை அவன் முழுமையாகத் தடுத்து விடுகிறான். எனவே தன் குழந்தையை கிருஷ்ண உணர்வில் பயிற்றுவிக்கும் தந்தை இவ்வுலகிலேயே மிகச் சிறந்த நன்மை செய்பவராவார்.


ஜனமே ஜனமே ஸபே பிதாமாதா பாய

க்ருஷ்ண குரு நஹி மிலே பஜ ஹரி ஏய்


ஒவ்வொருவரும் தாய் தந்தையரைப் பெறுகின்றனர். ஆனால் குருவையும், கிருஷ்ணரையும் அடையும் வரத்தை ஒருவன் பெறுவானாயின், அவனால் ஜட இயற்கையை வென்று, ஆன்மீக உலகிற்குத் திரும்ப முடியும்.) 


ஶ்ரீமத் பாகவதம் 9.18.43 / பொருளுரை 


🌾🌾🌾🌾🌾🌾🌾


யயாதி தன் மகனின் இளமையை எடுத்துக் கொண்டதால் அவரது புலன்கள் பழுதற்றவையாக இருந்தன.புதிய பலம் பெற்று, அரசு காரியங்களை செயலாற்றினார். அரசர்களை ஜெயித்து ஏழு தீவுகள் கொண்ட மேதினியை வெண் கொற்றக்கொடையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்தார். மகனிடம் பெற்ற இளமையால் வலிமை பெற்று அரச போகங்களை அனுபவித்தார். தேவயானியிடம் பிரியமாக நடந்து கொண்டார். லோக நன்மைகளுக்கு வேண்டி பல ராஜசூய யாகங்களை செய்தா. அனைத்து தேவர்களுக்கும் இருப்பிடமும், அனைத்து வேத ஞானத்தின் இலக்கும், பரமபுருஷருமான ஸ்ரீ ஹரியை மகிழ்விக்கும் பொருட்டு, மன்னர் யயாதி பல்வேறு யக்ஞங்களைச் செய்து, பிராமணர்களுக்கு ஏராளமான காணிக்கைகளைக் கொடுத்தார். நாராயணராக எல்லோர் இதயங்களிலும் இருப்பவரும், எங்கும் பரவியிருப்பினும் பௌதிக கண்களுக்குப் புலப்படாதவருமான பரம புருஷரை யயாதி மகாராஜன் பௌதிக ஆசைகளின்றி வழிபட்டார். மன்னர் யயாதி பௌதிக சுகபோகத்தில் அதிக விருப்பமுள்ளவர் போல் வெளிப்படையாகக் காணப்பட்ட போதிலும், மனதிற்குள் பகவானின் ஒரு நித்தியத் தொண்டர் ஆகவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்.


யயாதி மகாராஜன் முக்தியடைதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மன்னர் யயாதி இந்த ஜட உலகில், பற்பல ஆண்டுகள் சிற்றின்ப வாழ்வையும், சுகபோகங்களையும் அனுபவித்தபின், இறுதியில் அத்தகைய பௌதிக சுகத்தில் வெறுப்புக் கொண்டார். பின்னர் தேவயானியிடம் மன்னர் யயாதி கூறினார். ஒருவன் காமுகனாகவும், பேராசைக்காரனாகவும் இருந்தால், இவ்வுலகிலுள்ள மொத்த பெண்கள் கூட அவனது காம இச்சையை திருப்திப்படுத்த முடியாது. இந்த ஆசைகள் நெருப்பு போன்றவை. ஒருவன் கொழுந்து விட்டெரியும் தீயில் நெய்யை ஊற்றக் கூடும். இதனால் நெருப்பு அணைந்துவிடும் என்று அவன் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய ஒரு தீயை அணைக்க அவன் வேறொரு முறையைக் கையாள வேண்டியிருக்கும். எனவே புத்தியைக் கொண்டு ஒருவன் வாழ்வின் சுகத்தைத் துறக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் உபதேசிக்கின்றன. பெருமுயற்சி இல்லாமல், அறிவற்றவர்களால் விஷய சுகத்தை குறிப்பாக உடலுறவு சுகத்தை விட முடியாது. ஏனெனில் ஓர் அழகிய பெண் மிகவும் கற்றறிந்த ஒரு மனிதனைக் கூட தடுமாறச் செய்கிறாள். இவ்வாறு தேவயானியிடம் கூறிவிட்டு யயாதி ஞானிகளையும் வீழ்த்தும் புலனின்பங்களையும், பகையையும் துறந்தார். சர்மிஷ்டா மகன் புருவை அழைத்து தன்னிடம் இருந்த இளமையை அவனுக்கு தந்து விட்டு முதுமையை ஏற்றுக்கொண்டார். தென்கிழக்கு நாடுகளை த்ருஹ்யுவுக்கும், தென்திசை நாடுகளை யதுவுக்கும், மேற்கு திசை நாடுகளை துர்வசுவுக்கும் வடதிசை நாடுகளை அனுவுக்கும் தந்தார். அண்ணன்களை சிற்றரசர்களாக்கி சகல பூ மண்டலத்திற்க்கும், சம்பத்து சொத்துக்களுக்கும் உரிமையாளன் சர்மிஷ்டா மகன் புருவுக்கு (தந்தைக்கு இளமை கொடுத்ததால்) பேரரசு பதவியை அளித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.


ஆனால் மன்னர் யயாதி உலக வாழ்வைத் துறந்து, தன் சொத்தைத் தன் மகன்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவர் பௌதிக சுகத்திலுள்ள கவர்ச்சியை முற்றும் துறந்து ஒரு சந்நியாசியின் வாழ்வை ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் பகவானின் பக்தித் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வாறாக அவர் பூரணத்துவம் அடைந்தார். பிற்காலத்தில் அவரது மனைவியான தேவயானி தவறான வாழ்வு முறையிலிருந்து விடுபட்டு, பகவானின் பக்தித் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.



( சிற்றரசனாக்கப்பட்ட தேவயானியின் மகன் யதுவிலிருந்து யாதவகுலம் தோன்றியது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் யாதவ குலத்தில் தோன்றினார். சர்மிஷ்டா மகன் பேரரசன் புருவிலிருந்து சந்திர வம்சம் தோன்றியது. சந்திரவம்ஸத்திலிருந்து கௌரவர்களும், பாண்டவர்களும் தோன்றினார்கள். )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more