வாசுதேவ விப்ரா


 வாசுதேவ விப்ரா


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நீலாசலிருந்து, தனது தென்னிந்திய யாத்திரை போகும் வழியில், புனித தலமான கூர்ம ஸ்தலத்தில் ஒரு நாள் தங்கி, அங்கு நாள் முழுவதும் சங்கீர்த்தனம் செய்து, பக்தி பரவசத்தில் நடனமாடினார். அவருடன் இணைந்து அந்த பகுதி மக்களும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில், உற்சாகத்துடன் பங்கு கொண்டனர்.

கூர்ம ஸ்தலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற பிராமணர் வசித்து வந்தார். அவர் மிகச் சிறந்த பக்தர். ஆனால், அவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தும், தன்னடக்கம் , பணிவான குணம் போன்ற நற்குணங்கள் நிறைந்த பக்தராக இருந்தார்.

ஒரு நாள் இரவு பகவானின் அவதாரமான ஒரு சன்யாசி புனித நாமங்களைப் பாடி கொண்டு ஒவ்வொரு கிராமும் நகரமுமாய் கடந்து சென்று கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட வாசுதேவர், கண நேரம் கூட தாமதிக்காமல், உடனே அந்த மஹா புருஷரை காண கூர்ம ஸ்தலத்தை நோக்கி புறப்பட்டார்.

தன் நிலையை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பகவானின் மேலுள்ள பக்தி ஈர்ப்பினாலும், மிக உறுதியான நம்பிக்கையுடன், பகவானை காண விரைந்தார். ஆனால் அவரது உடல் ஒத்துழைக்க மறுத்தது. புண்களில் இருந்து இரத்தம் ஒழுகி, அதிலிருந்து புழுக்கள் வெளியே வந்து தொந்தரவு செய்தன. அந்தப் புழுக்கள் மட்டுமே வசுதேவரின் உறவினர்கள். மற்றவர்கள் அவர் உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தால், அவரை விட்டு வெகு தூரம் தள்ளியே இருப்பார்கள்.

அவரது உடலில் இருந்து புழுகள் வெளி வந்து கீழே விழுந்தால், மிகவும் கவனமாக அதை பிடித்து மீண்டும் தன் உடலிலேயே எடுத்து விட்டு கொள்வார். ஏனென்றால் தனது உடல் இந்த புழுக்களுக்காவது பயன்பெறட்டும் என்றெனுவார். ஆற்றொணா வலியால் துன்பப்பட்டுக் கொண்டு சில நேரம் நடந்தும், சில நேரம் உட்கார்ந்தும் சில நேரம் தவழ்ந்தும் பகவானை காண தீவிரமாக பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதேசமயம் பகவான் ஶ்ரீ சைதன்ய மாஹாபிரபு அங்கிருந்து புறப்பட்டு தன் யாத்திரையைத் தொடங்கினார். அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் , வாசுதேவர் மகா பிரபுவின் தரிசனத்திற்காக அங்கு வந்து சேர்ந்தார். அதை கேள்விபட்டதும் ஓ பகவானே எவ்வளவோ துன்பங்களுக்கிடையில் நான் வந்தும், உங்கள் தரிசனம் எனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆறா துயரில் அழுது, புலம்பி அப்படியே மயங்கி விழுந்தார் .

அதே சமயத்தில் மகாபிரபு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ கவனித்து கேட்டவராய், அவ்விடத்தில் நகராமல் நின்றவர், நானே வருகிறேன் என்று சொல்லி மீண்டும் வந்த பாதையிலேயே, திரும்பி மின்னல் வேகத்தில் நடக்க ஆரம்பித்தார். வாசுதேவர் நிலத்தில் விழுந்து கண்ணீரில் நனைந்த படி கிடந்த இடத்திற்கு வந்தவர், இரண்டு கைகளாலும், அவரை வாரி எடுத்து இறுகத் தழுவிக் கொண்டார்.

பகவானின் ஆன்மீக தேகத்தின் ஸ்பரிசம் பட்டதும், வாசுதேவரின் உடலில் இருந்த தொழுநோய் மறைந்து, உடனடியாக எல்லா துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். பளபளக்கும் ஒளி பொருந்திய தன் உடலை பார்த்து, அதில் தொழு நோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாததையும் கண்ட வாசுதேவர் வியப்படைந்தார்.

வாசுதேவர், பகவான் சைதன்ய மகாபிரபுவின் தாமரை பாதங்களில் விழுந்து, கருணை கடலே ! என்ன காரியம் செய்தீர்கள் ! என் அருகில் வரவே எல்லோரும் பயப்படுவார்கள். மகாலட்சுமி தேவி வாசம் செய்யும் உங்கள் இதயதால், என்னை கட்டி அணைத்த இத்தகைய செயல், பரம புருஷனாகிய உங்களால் தான் செய்ய முடியும். தகுதி உள்ளவரோ, தகுதியற்றவரோ, அவர் யாராக இருந்தாலும், அவரிடம் நீங்கள் கருணை உள்ளவராக இருக்கின்றீர்கள். ஆனால், என் மனம் தடுமாற்றம் அடைகிறது. வெகு காலமாக நான் தீண்டத்தகாதவனாக இருந்ததால், என் மனம் கர்வமற்று, உங்களை அடையும் தகுதி பெற்றது. ஆனால் இப்போது எனக்கு மிக அழகான உடல் கிடைத்திருப்பதால், நான் மிகவும் பயப்படுகிறேன். ஏனெனில், என்னால் பழைய படி தாழ்மையுடனும், அடக்கம் உள்ளவனாகவும், இருக்க முடியுமா ? இந்த நிலையில் எனக்கு தற்பெருமை வந்துவிட்டால், நான் உங்களை இழந்து விடுவேனோ என்று கண்ணீர் மல்க புலம்பினார்.

வாசுதேவ விப்ரரின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டதும்மகா பிரபுவின் இதயம் உருகி, கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு , " வாசுதேவ விப்ரரே இன்று நீங்கள் என்னை வெற்றி கொண்டவராவீர். உங்களை போன்ற அகந்தையை வென்றவர்களை, காண்பது அரிது என்று கூறினார். இனி உங்கள் கடமை யாதெனில் உத்கலலிலுள்ள (ஒடிசா ) மக்களை, பக்தி மார்கத்திற்கு கொண்டுவந்து அவர்களை பரமபுருஷ பகவானுக்கு நெருக்கமானவர்களாக ஆக்குவீராக. உங்கள் வாழ்க்கையை இனி பக்தி யோகத்திற்கு அர்ப்பணிப்பீராக" என்று சொல்லி, அங்கிருந்து தன் பயணத்தை துவங்கினார்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வின் வழிநடத்தலின் கீழ், வாசுதேவ விப்ரர் மருத்துவராக பணிபுரிந்து, வியாதியஸ்தர்களுக்கு உதவி செய்வதோடு, ஒடிசா மக்களுக்கு ஹரி நாம சங்கீர்த்தனம், பாகவதம் பிரசாரமும் செய்து, பக்தி மார்கத்தில் தனது வாழ்வை புனிதப்படுத்தி கொண்டார்.

ஹரே கிருஷ்ணா.!

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more