ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி



ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம். 


வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் 


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் மாவட்டத்தில் ஜமத்புர் என்னும் ஊரில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இவ்வூர் சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற கட்வா என்னும் திருத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இவரது தாய்தந்தையரைப் பற்றிய தெளிவான தகவல் இல்லை. சிலரது அபிப்பிராயத்தின்படி, இவரது தந்தையின் பெயர் ஸ்ரீ பகீரதர் என்றும், தாயின் பெயர் ஸ்ரீ சுனந்தா என்றும் அறியப்படுகிறது. கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமிக்கு ஓர் இளைய சகோதரரும் இருந்தார். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி, அறுபதிற்கும் மேற்பட்ட சாஸ்திரங்களின் மேற்கோளுடன், சுமார் 11,555 ஸ்லோகங்களுடன் சைதன்ய சரிதாம்ருதம் என்னும் புகழ்பெற்ற நூலை இயற்றியுள்ளார். 


இல்லத்தில் நிகழ்ந்த வாக்குவாதம் 


🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆச்சாரியர்கள் இவ்வுலகில் சாதாரண மக்களைப் போன்று தோன்றினாலும், அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னரே அவர்களின் அற்புத செயல்கள் பெரிதும் போற்றப்படுகின்றன. சைதன்ய சரிதாம்ருதம், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கும் ஒரு விலையுயர்ந்த பொக்கிஷமாகும். கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்றுவதற்கு அவரின் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது. 


கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் இல்லத்தில் நடைபெற்ற ஹரி நாம ஸங்கீர்த்தனத்திற்கு நித்யானந்த பிரபுவின் சேவகரான மீனகேதன ராமதாஸர் வருகை புரிந்தார். சைதன்ய மஹாபிரபுவின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்த மீனகேதன ராமதாஸரின் கண்களில் எப்போதும் கண்ணீர் தொடர்ச்சியாக பெருக்கெடுத்து ஓடும். மீனகேதன ராமதாஸரின் கண்களைப் பார்ப்பவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கும். மீனகேதன ராமதாஸர் இம்மாதிரியான தெய்வீகப் பரவச நிலையை கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் இல்லத்தில் வெளிப்படுத்தியபோது, பிராமணரான ஸ்ரீ குணார்னவ மிஸ்ரர் அவ்விடத்தில் விக்ரஹத்திற்கு சேவை செய்து கொண்டிருந்தார்.


  மீனகேதன ராமதாஸர் இல்லத்தின் முற்றத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டும், குணார்னவ மிஸ்ரர் சேவையின் காரணமாக அவருக்கு மரியாதை செலுத்தத் தவறினார். அப்போது மீனகேதன ராமதாஸருக்கும் கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


அந்த சகோதரருக்கு சைதன்ய மஹாபிரபுவின் மீது முழு நம்பிக்கை இருந்தது என்றபோதிலும், நித்யானந்த பிரபுவிடம் சொற்ப அளவிலான நம்பிக்கையே இருந்தது. இதை அறிந்த நித்யானந்த பிரபுவின் சேவகரான மீனகேதன ராமதாஸர் அதிருப்தியுற்று தம் கையில் வைத்திருந்த புல்லாங்குழலை உடைத்து விட்டு இல்லத்திலிருந்து வெளியேறினார். 


நித்யானந்த பிரபு கனவில் தோன்றுதல் 


🍁🍁🍁🍁🍁🍁🍁


இச்சம்பவத்தை அறிந்த கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி தம் சகோதரரின் மீது கோபம் கொண்டு கூறலானார், சைதன்ய மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் ஓர் உடலைப் போன்றவர்கள். அவர்கள் இருவரும் ஒருவரே என்பதை அறியாமல் நித்யானந்த பிரபுவின் மீது நீ நம்பிக்கையின்றி இருப்பதால், விரைவிலேயே உன் நிலையிலிருந்து வீழ்ச்சியடைவாய்.” அதன்படி, குறுகிய காலத்தில் கிருஷ்ணதாஸரின் சகோதரர் தம் நிலையிலிருந்து விழுந்தார். மறுபுறம், கிருஷ்ணதாஸர் தமது சகோதரனைக் கடிந்து கொண்ட நாளின் இரவில், அவரது செயலைக் கண்டு அகமகிழ்ந்த நித்யானந்த பிரபு, அவரது கனவில் தோன்றி, எனதருமை கிருஷ்ணதாஸரே, பயமின்றி உடனே விருந்தாவனத்திற்குச் செல்வீராக, அங்கே உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்,” என்று கட்டளையிட்டார். (சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை 5.195) அச்சமயத்தில், தாம் கண்ட ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் தோற்றத்தினை கிருஷ்ணதாஸர் பின்வருமாறு வர்ணித்துள்ளார்: 


அவர் (நித்யானந்தர்) பளபளக்கும் கருமை நிறத் திருமேனியில் மிக உயரமாகவும் பலமாகவும் மன்மதனைப் போன்ற நாயகத் தோற்றத்துடனும் காணப்பட்டார். அவரது கரங்கள், கால்கள், தாமரை மலரைப் போன்ற கண்கள் என அனைத்தும் அழகாக வடிக்கப்பட்டிருந்தன. அவர் பட்டாடை உடுத்தி, தமது தலையில் பட்டுத் தலைப்பாகையை அணிந்திருந்தார். அவர் காதில் தங்கக் குண்டலங்களை அணிந்திருந்தார், கையில் தங்கக் காப்புகளையும் வளையல்களையும் அணிந்திருந்தார், காலில் சலங்கை அணிந்திருந்தார், கழுத்தைச் சுற்றி மலர்மாலையும் அணிந்திருந்தார். அவருடைய திருமேனி சந்தனத்தினால் பூசப்பட்டு, திலகத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய அசைவுகள் மதம் பிடித்த யானையை மிஞ்சக்கூடியவையாக இருந்தன. அவருடைய திருமுகம் கோடிக்கணக்கான சந்திரனைக் காட்டிலும் அழகாக இருந்தது. அவருடைய பற்கள் தாம்பூலத்தை மென்றதால் மாதுளை முத்துக்களைப் போல காணப்பட்டன. அவர் பரவசத்தில் மூழ்கியிருந்ததால், அவரது திருமேனி முன்னும் பின்னும், இடமும் வலமும் அசைந்தது. கிருஷ்ண, கிருஷ்ண” என ஆழ்ந்த குரலில் அவர் உச்சரித்தார். சிவப்பு நிற கைத்தடி ஒன்று கையில் அசைந்திட, அவர் ஒரு பித்துப் பிடித்த சிங்கத்தைப் போன்று தோற்றமளித்தார். அவருடைய திருவடிகளின் நாலாபுறமும் வண்டுகள் சூழ்ந்திருந்தன. இடையர்குலச் சிறுவர்களைப் போல உடையுடுத்திய அவரது பக்தர்கள் வண்டுகளைப் போன்று அவரது திருவடிகளைச் சுற்றியிருந்தனர், பரவச அன்பில் மூழ்கி அவர்களும் கிருஷ்ண, கிருஷ்ண” என்று உச்சரித்தனர். அவர்களில் சிலர் கொம்புகளையும் குழல்களையும் ஊதினர், மற்றவர்கள் ஆடிப் பாடினர், சிலர் தாம்பூலம் அளித்தனர், மற்றவர்கள் அவருக்கு சாமரம் வீசினர். 


இவ்வாறாக, பகவான் நித்யானந்த ஸ்வரூபரின் வைபவத்தைக் கண்டேன். அவருடைய அற்புதமான ரூபம், குணங்கள், லீலைகள் என அனைத்தும் தெய்வீகமானவை.” (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 5.184-193)



விருந்தாவனப் பயணம் 


🍁🍁🍁🍁🍁🍁🍁


நித்யானந்த பிரபுவின் கருணையைப் பெற்ற கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி உடனடியாக விருந்தாவனம் நோக்கி புறப்பட்டார். விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளான ஸ்ரீ ரூபர், ஸ்ரீ ஸநாதனர், ஸ்ரீ ஜீவர், ஸ்ரீ ரகுநாததாஸர், ஸ்ரீ ரகுநாத பட்டர் மற்றும் ஸ்ரீ கோபாலபட்டரை தமது சிக்ஷா குருவாக, கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி ஏற்றுக் கொண்டார். 


நவத்வீபத்தில் வசித்த முராரி குப்தரும் ஜகந்நாத புரியில் வசித்த ஸ்வரூப தாமோதரரும் சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை குறிப்பெடுத்திருந்தனர். ஸ்வரூப தாமோதரரின் உதவியாளராக இருந்த ரகுநாத தாஸ கோஸ்வாமி சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை அவரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டார். அதன்படி, பிற்காலத்தில் ரகுநாத தாஸ கோஸ்வாமி விருந்தாவனத்தின் ராதா குண்டத்தில் தினந்தோறும் குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைப்பார். ரகுநாத தாஸ கோஸ்வாமியின் சொற்பொழிவை கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி ஒருநாளும் தவறவிட மாட்டார். 


அதனை அவர் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் (அந்திய லீலை, 3.269-270) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகள்குறித்து தமது கையேடுகளில் ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி பதிவு செய்தவை அனைத்தையும் நான் ரகுநாத தாஸ கோஸ்வாமியின் திருவாயிலிருந்து கேட்டுள்ளேன். அவ்வெல்லா லீலைகளையும் நான் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளேன். நான் ஓர் அற்பமான உயிர்வாழி, நான் எழுதியுள்ளவை அனைத்தும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையே.”


சைதன்ய சரிதாம்ருதம் எழுதுவதற்கான ஆசி 


🍁🍁🍁🍁🍁🍁🍁


அச்சமயத்தில் வைஷ்ணவர்கள் விருந்தா வனத்தின் கோவிந்தஜி கோயிலில் ஒன்றுகூடி சைதன்ய பாகவதத்தை ஹரிதாஸ பண்டிதரிடம் (ஹரிதாஸ தாகூர் அல்ல) கேட்பர். சைதன்ய பாகவதம் அதிகமாக சைதன்ய மஹாபிரபுவின் பால்ய லீலைகளையும், வாழ்வின் முற்பாதி செயல்களையும் எடுத்துரைக்கிறது. அதனால் பக்தர்கள் மஹாபிரபுவின் பிற்பாதி லீலையை எழுதும்படி கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியை வேண்டினர். கிருஷ்ணதாஸ கவிராஜர் அந்த வயது முதிர்ந்த காலத்தில், சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்றுவதற்கு பகவானின் உத்தரவை வேண்டி, மதன-மோஹனரிடம் பிரார்த்தனை செய்தபோது, விக்ரஹத்தின் மாலை கீழே விழுந்தது. 


இச்சம்பவத்தை அவர் மதன-மோஹனரின் கருணையாகவும் அங்கீகாரமாகவும் எடுத்துக் கொண்டு, உடனடியாக சைதன்ய சரிதாம்ருதத்தை கிருஷ்ணர் மற்றும் முந்தைய ஆச்சாரியர்களின் கருணையால் இயற்றினார். வெளியுலகிற்குத் தெரியாத சைதன்ய மஹாபிரபுவின் லீலைகள் பலவற்றையும் கிருஷ்ணதாஸ கவிராஜர் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு நித்யானந்த பிரபுவின் கருணையே ஆதாரமாக இருந்தது. சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியை கருவியாக வைத்து நித்யானந்த பிரபு வெளிப்படுத்தினார். 


மதன-மோஹனரின் கருணையினை கிருஷ்ணதாஸர் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி லீலை, 8.78-79) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: உண்மையில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னுடைய எழுத்துப்பணி அன்று, மாறாக, ஸ்ரீ மதன-மோஹனரால் உரைக்கப்பட்ட ஒன்று. என்னுடைய பணி சொல்வதைச் சொல்லும் கிளியைப் போன்றதாகும். வித்தைக்காரனால் ஆட்டுவிக்கப்படும் மர பொம்மையைப் போன்று, மதன-மோஹனர் எழுதச் சொல்வதை நான் எழுதுன்கிறேன்.”


நூலின் மகிமை 


🍁🍁🍁🍁🍁🍁🍁


சைதன்ய சரிதாம்ருதத்தை சாதாரண நபரால் இயற்ற முடியாது. பணிவிற்கும் பொறுமைக்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்த கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் மட்டுமே அது சாத்தியமானது. சைதன்யரின் உபதேசம், சித்தாந்தம் மற்றும் லீலைகளை அறிந்துகொள்வதற்கு சைதன்ய சரிதாம்ருதமே அங்கீகரிக்கப்பட்ட நூலாகும். 


சைதன்ய மஹாபிரபு மற்றும் நித்யானந்த பிரபுவின் மீது பக்தி கொள்வதற்கும், உற்சாகத்துடன் சேவை செய்வதற்கும், பணிவை வளர்த்து கொள்வதற்கும் சைதன்ய சரிதாம்ருதத்தில் இருக்கும் ஒவ்வொரு வரியும் அமிர்தமாகத் திகழ்கிறது. கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் பணிவு சைதன்ய சரிதாம்ருதத்தைப் படிப்பவர்களின் இதயத்தைக் கவருகிறது. பணிவிற்கு இலக்கணமாகத் திகழும் கிருஷ்ணதாஸ கவிராஜரின் கருணையினாலேயே ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் அதிவிரைவில் முன்னேற்றம் அடைய இயலும்.


 அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக குரு ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், ஒருவன் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது ஒரேயொரு புத்தகத்தை மட்டுமே அவனால் பிடித்துக்கொள்ள முடியும் என்றால், அது சைதன்ய சரிதாம்ருதமாக இருக்கட்டும் என்று உரைத்துள்ளார்.




கருணையின் அவதாரம் 


🍁🍁🍁🍁🍁🍁🍁


சைதன்ய மஹாபிரபுவே கலி யுக மக்களுக்கு கருணைமிக்கவர், அதைப் போலவே சைதன்ய சரிதாம்ருதமே கலி யுக மக்களுக்கு கருணையின் பொக்கிஷமாகும். இந்நூலைப் படிப்பதால் ஒருவருக்கு வைஷ்ணவர்களின் குணங்களான பணிவு, சமநிலை, கண்ணியம், தூய்மை, தன்னலமற்ற நிலை, பொறுமை, தயவு, பௌதிக விருப்பத்திலிருந்து விடுதலை, புலனடக்கம், நட்பு, சரணாகதி முதலியவை எளிமையாக கிடைக்கப் பெறுகிறது. 


கிருஷ்ணதாஸர் தாம் இயற்றிய கோவிந்த லீலாம்ருதம் என்னும் நூலிற்காக, கவிராஜர்” என்ற பட்டத்தைப் பெற்றார். இவருடைய ஆன்மீக அடையாளம் ரத்னரேக மஞ்சரி என்றும் கஸ்தூரி மஞ்சரி என்றும் அறியப்படுகிறார். 


கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர். அவரால் இவ்வுலகில் படைக்கப்பட்ட சைதன்ய சரிதாம்ருதம் மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி, ஸார்வபௌம பட்டாசாரியர், பிரகாசானந்த சரஸ்வதி, இராமானந்த ராயர் முதலியோருடன் சைதன்ய மஹாபிரபு மேற்கொண்ட தத்துவ உரையாடல்களின் சாரத்தைப் புரிந்து கொண்டவர்கள் பௌதிக பந்தத்திலிருந்து எளிமையாக விடுபட இயலும். சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பக்தர்களை எந்தவொரு பௌதிக விஷயமும் பாதிக்காது. இதுவே சைதன்ய மஹாபிரபு நமக்கு அருளியிருக்கும் வரமாகும். 



கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸமாதி விருந்தாவனத்தின் ராதா குண்டத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.


( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com" )



 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more