ஸ்ரீ கோவிந்த தேவரின் தோற்றம்


 ஸ்ரீ கோவிந்த தேவரின் தோற்றம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சைதன்ய மஹாப்ரபுவிடமோ அல்லது அவரது சீடர்களிடமோ நம்பிக்கை கொண்டவர்களுக்கு விருந்தாவனத்தின் அழகிய லீலைகளை வெளிப்படுத்தவேண்டும் என்பது மஹாபிரபுவின் விருப்பமாகும். அவருடைய தாயான சச்சி மாதாவின் வேண்டுகோள்படி மஹாபிரபு பூரியில் இருந்த சமயம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது லீலைகள் நடத்திய திவ்யமான ஸ்தலங்களை கண்டறிந்து புதுப்பிக்க வேண்டிய பணியை ஸ்ரீ ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமியிடம் ஒப்படைத்தார்.

மஹாபிரபுவின் விருப்பப்படி பகவான் கிருஷ்ணர் லீலைகள் செய்த பெரும்பாலான இடங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி கண்டறிந்தார். இருப்பினும் அவர் திருப்தி அடையவில்லை. ஏனெனில் ஸ்ரீ கோவிந்த தேவரின் விக்ரஹம், விருந்தாவனத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீ ரூப கோஸ்வாமியால் கோவிந்த தேவரை கண்டறிய முடியவில்லை. அவரும் விருந்தாவனத்தின் மூலை முடுக்கிலெல்லாம் தேடிபார்த்துவிட்டார்; பல புத்தகங்களை புரட்டிப்பார்த்துவிட்டார்; வ்ரஜவாசிகளின் இல்லங்களில் கூட தேடிவிட்டார்; ஆனால் கோவிந்த தேவரை கண்டறிய முடியவில்லை. மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றமுடியாததால் மிகவும் வருத்தமடைந்தார் ஸ்ரீ ரூப கோஸ்வாமி. இதல்லவோ வைஷ்ணவ குணம். நாமெல்லாம் கையளவு விஷயங்களை மட்டுமே கற்றுக்கொண்டு மிகவும் ஆணவத்துடன் இருக்கிறோம். ஆனால் ரூப கோஸ்வாமியோ மஹாப்ரபுவிற்காக ஆயிரக்கணக்கான விஷயங்களை செய்து மஹாபிரபுவின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக தன் வாழ்வையும் ஆத்மாவையும் அர்ப்பணித்து வந்தபோதும் மஹாபிரபுவின் ஒரு கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக மிகவும் சோகத்தில் மூழ்கினார்.

ஒரு நாள் ஸ்ரீ ரூப கோஸ்வாமி வருத்தத்துடன் யமுனை நதிக்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சிறுவன் அவரிடம், ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று வினவினான். அந்த சிறுவனுடைய தோற்றம், அவனுடைய பேச்சு, அவனுடைய குணாதிசியங்கள் - இவற்றை பார்த்தவுடன் ஸ்ரீ ரூப கோஸ்வாமி மிகவும் கவரப்பட்டார். ஆகையால் அவனிடம் நடந்ததை விவரித்தார் ரூப கோஸ்வாமி. அந்த சிறுவன் சிரித்துக்கொண்டே , இதற்காகவா சோகமாக இருக்கிறீர்கள்? இனி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் கோவிந்த தேவர் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியும். அருகில் கோமதி மலை என்ற ஒரு இடத்தில் தெய்வீக பசுவான சுரபி தினமும் வந்து தன்னுடைய பாலை குறிப்பிட்ட ஒரு இடத்தில் தானாக சுரக்கும். அந்த இடத்தில் பூமிக்கு கீழே ஸ்ரீ கோவிந்த தேவர் மறைந்துள்ளார். வாருங்கள் நான் உங்களுக்கு காண்பிக்கிறேன் என்று கூறினான்.

அந்த சிறுவன் கூறியதை கேட்ட ஸ்ரீ ரூப கோஸ்வாமி மிகவும் ஆனந்தமடைந்தார். அவரை அந்த இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன் அந்த இடம் வந்ததும் மறைந்துவிட்டான். இதை பார்த்த ரூப கோஸ்வாமிக்கு வந்தது யார் என்று தெரிந்துவிட்டது. ஆம் வந்தது கோவிந்த தேவரேதான். "பகவான் கிருஷ்ணர் என் முன் தோன்றியபோதும், அவரை அறிய தவறிவிட்டேன்! அவ்வளவு அறியாமையில் இருக்கின்றேன்! பகவானை போற்றி ஆராதிக்கவில்லை; பகவானை நான் நமஸ்காரம் கூட செய்யவில்லை; என்னே ஒரு முட்டாள் நான்!”, என்று நினைத்தபடி பகவானின் மீதிருந்த அதீத அன்பினால் மயங்கி விழுந்தார்.

நீண்ட நேரத்திற்கு பின், சுய நினைவிற்கு வந்த அவர், பகவானின் நினைவில் மீண்டும் லயித்து உணர்வுபூர்வமாக அழ ஆரம்பித்தார். பின்னர் பகவானின் கட்டளைப்படி, வ்ரஜவாசிகளிடம் கோவிந்த தேவரின் இருப்பிடத்தை கூறினார். விரைவில் அந்த இடத்தில் பெரும் கூட்டம் கூடி விட்டது. மக்கள் அனைவரும் ஸ்ரீ ரூப கோஸ்வாமியின் அறிவுரைப்படி நிலத்தை தோண்ட ஆரம்பித்தனர். திடீரென்று ஒரு தெய்வீக அசரீரி கேட்டது. அது பகவான் பலராமரின் குரல் ஆகும். அவர், குறிப்பிட்ட இடத்தில் நிலத்தை தோண்ட வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதற்கான பலத்தையும் வ்ரஜவாசிகளுக்கு அருளினார்.

வ்ரஜவாசிகளும் மிகுந்த பக்தியோடும் கவனத்தோடும் நிலத்தை தோண்டினர். ஒரு வழியாக ஸ்ரீ கோவிந்த தேவரின் உன்னத விகிரஹத்தை கண்டறிந்தனர். பகவான் கோவிந்த தேவரின் அழகு, லட்சக்கணக்கான மன்மதன்களையும் மிஞ்சும் அழகாகும். பகவான் கோவிந்த தேவரின் விகிரஹத்தை பார்த்தவுடன் அனைவரும் பக்தி வெள்ளத்தில், "ஸ்ரீ கோவிந்த தேவ் கி ஜெய்!!!!" என்று உச்சாடனம் செய்தனர். பின்னர் வ்ரஜவாசிகள் கோவிந்த தேவருக்கு சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பினர்; இதன் மூலம் ஸ்ரீ ரூப கோஸ்வாமியின் ஆசை நிறைவேறியது.

ஸ்ரீ ரூப கோஸ்வாமி முதல் ஆரத்தி செய்த போது, பிரம்மதேவர் போன்ற பல தேவர்கள், மனிதர்களை போல் உருமாறி ஆராதியில் கலந்துகொண்டு கோவிந்த தேவருக்கு வணக்கங்களை செலுத்தினர். ஸ்ரீ ரூப கோஸ்வாமி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். உடனடியாக பூரியிலுள்ள ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு, தான் கோவிந்த தேவரை கண்டுபிடித்து விட்டதாக கடிதம் எழுதினார்.

ஶ்ரீ ஶ்ரீ ராதா கோவிந்தருக்கு ஜெய்

ஹரே கிருஷ்ண ! 

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more