பிரலம்பாசுரனின் முற்பிறவி
ஆதாரம் :- கர்க சம்ஹிதை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மன்னா, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நாள் பலராமருடனும் ஆயர் குல சிறுவர்களுடனும் தன் பசுக்களை மேய்த்தபடி பாண்டிர வனத்தில் யமுனையின் கரையில் சிறுவர்களுக்கு உசிதமான விளையாட்டைக் விளையாட்டி கொண்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் , சிறுவர்கள் முதுகில் சுமக்கும் விளையாட்டை விளையாடியவாறு அழகிய பசுக்களை மேய்த்துக் கொண்டு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். (இந்த விளையாட்டில் சில பிள்ளைகள் குதிரை முதலிய வாகனங்களாகவும், இன்னும் சிலர் அவற்றின் மீது ஏறி சவாரி செய்து விளையாட்டினர் ) அச்சமயம் கம்சனால் அனுப்பப்பட்ட பிரலம்பாசுரன் என்னும் அசுரன் ஆயர் குல சிறுவனை போல் வேடம் பூண்டு அங்கு வந்தான்.
மற்ற ஆயர் குல சிறுவர்கள் அவனை அறியவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடமா அவன் மாயை மறைந்திருக்கும் ? விளையாட்டில் தோற்றுப்போகும் சிறுவன் வெல்பவனை முதுகில் ஏற்றிக் கொள்வான், ஆனால் பலராமர் வென்றபோது அவரை யாரும் முதுகில் சுமக்க தயாராக இல்லை . அப்போது பிரலம்பாசுரனே அவரை முதுகில் சுமந்து கொண்டு பாண்டீரவனத்திலிருந்து யமுனைக்கரை வரை சென்றான். முதுகில் சுமந்து செல்லும் பிள்ளை, ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் தன் முதுகிலுள்ள சிறுவனை இறக்கி விடுவான். ஆனால் பிரலம்பாசுரன் இறக்குவதற்கான இடத்தை அடைந்தும் இறக்கிவிடாமல் மதுரா வரை கொண்டு செல்ல முயன்றான்.
அவன்கருமேகத்தைப் போன்ற பயங்கர உருவம் தரித்துக்கொண்டு பெரிய மலையைப் போல கடக்க முடியாதவனாகி விட்டான். அந்த அசுரனின் முதுகில் அமர்ந்திருந்த அழகன் பலராமன் காதுகளில் ஒளியுள்ள குண்டலங்கள் அசைந்து கொண்டிருந்தன. வானில் முழு நிலவு உதயமானது போலவும் அல்லது மேகக்கூட்டத்தில் மின்னல் பளிச்சிடுவது போலவும் தோன்றியது. அந்த பயங்கர அசுரனைக்கண்டு பலசாலியான பலதேவருக்குப் பெரும் கோபமுண்டாயிற்று.
அவர் அவனுடைய தலையில் பலமாக முஷ்டியினால் அடித்தார். இந்திரன் வஜ்ரத்தால் மலையை அடிப்பது போல. அந்த அசுரனின் தலையும் வஜ்ர அடிபட்ட மலையைப் போல உடைந்து விட்டது. அவன் பூமியை நடுங்க வைத்தவாறு பூமியில் விழுந்தான். அவனது உடலிலிருந்து ஒரு ஒளி கிளம்பி பலராமரிடமே லயித்துவிட்டது. அப்போது தேவர்கள் பலராமர் மீது மலர்களைப் பொழிந்தனர். பூமியிலும் வானிலும் ஜய ஜய எனும் வெற்றி முழக்கம் எழுந்தது. மன்னா, பலராமருடைய பரம அற்புத சரித்திரத்தை நான் உன்னிடம் கூறிவிட்டேன். இன்னும் என்ன கேட்கப் போகிறாய்?
பஹூலாஸ்வன் கேட்டார்: 'முனிவரே! போரில் விருப்பம் கொண்ட அந்த அசுரன் முற்பிறவியில் யாராக இருந்தான்? ஏன் பலதேவர் கையால் அவனுக்கு முக்தி கிட்டியது ?.
ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மன்னா , யக்ஷராஜன் குபேரன் சிவ பூஜைக்காக தனது வனத்தில் ஒரு அழகிய பூந்தோட்டம் அமைத்திருந்தான். யக்ஷர்களை அங்கு மலர்களை ரக்ஷிக்க காவல் வைத்திருந்தான் என்றாலும் அந்த அழகிய தோட்டத்தின் பளபளக்கும் அழகிய மலர்களை மக்கள் எடுத்து வந்தார்கள். அதனால் கோபமுற்ற யக்ஷராஜன் குபேரன், யக்ஷனோ, மனிதனோ, தேவனோ இந்தப் பூந்தோட்டத்திலிருந்து மலரை பறிக்கும் குற்றமிழைப்பவர்கள் யாராயினும் அவர்கள் என் சாபத்தால் புவியில் அசுரனாகக்கடவது என்று குபேரன் சபித்துவிட்டான்.
ஒருநாள் ஹூஹூ எனும் கந்தர்வனின் மகன் விஜயன் தீர்த்தங்களில் சஞ்சரித்தபடியும், விஷ்ணுவின் புகழ் கீதமிசைத்தபடியும் சைத்ரரத வனத்திற்கு வந்தான். அவனது கையில் வீணை இருந்தது அப்பாவியான கந்தர்வன் சாபம் பற்றிய விஷயத்தை அறியான். ஆகவே அங்கிருந்து சில மலர்களை எடுத்துக் கொண்டான். எடுத்துமே கந்தர்வரூபம் மறைந்து அசுரனாகிவிட்டான். உடனே குபேரனிடம் சரணடைந்து வணங்கி சாபத்திலிருந்து விடுபடுவதற்கு வேண்டலானான். அவனிடம் கருணைகொண்ட குபேரன், நீ விஷ்ணு பகவான் பக்தனும் அமைதியான மகாத்மாவும் ஆவாய் ஆகவே கவலைப்படாதே. த்வாபரயுக முடிவில் பாண்டீர வனத்தின் யமுனையின் கரையில் பகவான் ஶ்ரீ பலதேவரின் கையால் உனக்கு முக்தி கிட்டும் என்பதில் ஐயமில்லை என்று வரமளித்தார்.
ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மன்னா, கந்தர்வராஜன் ஹூஹூவின் புதல்வன் விஜயனே பிரலம்பாசுரனாகி குபேரனின் வரத்தால் பரம மோக்ஷத்தை அடைந்தான் .
ஹரே கிருஷ்ண !
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment