ரோமஹர்ஷனண் வதம்
குருவம்சத்தினரின் இரு தரப்பினரான பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே யுத்தம் நடக்கபோவதாக பகவான் ஶ்ரீ பலராமர் கேள்விப்பட்டார். அதில் பலராமர் மத்தியஸ்தராக இருப்பதென்று முடிவாகியிருந்தது. அது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் தீர்த்த யாத்திரை செய்யும் நோக்கத்துடன் துவாரகையிலிருந்து புறப்பட்டார். முதலில் அவர் பிரபாசக்ஷேத்திரம் எனும் இடத்தை அடைந்தார். அங்கு அவர் நீராடி, பிராம்மணர்களைத் திருப்திப்படுத்தி, தேவர்கள், பித்ருக்கள், முனிவர்கள், ஆகியோருக்கு வேத முறைப்படி வந்தனம் செலுத்தினார். இது தீர்த்த யாத்திரை செய்வதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள முறை. அதன் பின் மரியாதைக்குரிய சில பிராம்மணர்களுடன் சரஸ்வதி நதியின் கரையிலிருந்த புண்ணியத்தலங்களுக்கு யாத்திரை செய்வதென பலராமர் தீர்மானித்தார். ப்ருதூகரம், பிந்துசரம், திருதகூபம், சுதர்சனதீர்த்தம், விசாலதீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஆகிய தலங்களுக்கு அவர் விஜயம் செய்தார். அதன் பின் யமுனை, கங்கை நதிகளின் கரைகளிலிருந்த முக்கிய புனிதத்தலங்களுக்கு அவர் சென்று வழிபட்டு, பின் நைமிசாரண்யம் என்ற தலத்தை வந்தடைந்தார். இன்றும் இந்தியாவில் முனிவர்களும் ஞானிகளும் இத்தலத்தில் ஒன்று கூடி ஆத்ம ஞானம் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். பகவான் ஶ்ரீ பலராமர் அங்கு சென்றபோது ஆத்மஞானமடைந்த பலர் அங்கு குழுமி யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்தகைய கூட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடிக்கத்தக்கவையாக அமைந்திருக்கும். பகவான் பலராமர் அங்கு வந்ததும் அங்கு குழுமியிருந்த மாமுனிவர்களும், துறவிகளும், பிராம்மணர்களும், பண்டிதர்களும் தத்தம் இருக்கையை விட்டு எழுந்து மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றார்கள். சிலர் அவரைப் பணிவுடன் வணங்கினார்கள்; வயதில் முதிர்ந்த முனிவர்களும் பிராம்மணர்களும் நின்றபடியே ஆசீர்வதித்தார்கள். அதன் பின் அவர்கள் பகவான் பலராமரைத் தகுந்த ஆசனத்தில் அமரச் செய்து வழிபட்டார்கள். பகவான் ஶ்ரீ பலராமர் முழுமுதற்கடவுள் என்பதை அவர்கள் அறிந்திருந்தமையால் அவர் வந்ததும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்கள்.
பலராமர் பூமியில் க்ஷத்திரியராக அவதரித்திருந்தாலும் அவர் யார் என்பதை அறிந்திருந்த பிராம்மணர்கள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக, வியாசதேவரின் சிஷ்யனான ரோமஹர்ஷனர். பகவான் பலராமர் வந்ததைக் கண்டும் எழுந்து நிற்காமல் வியாசாசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தார். வியாசாசனத்தில் அமர்ந்திருந்ததால் தான் பிரபுவை விடப்பெரியவனென்ற அவன் மூடத்தனமாக எண்ணிக் கொண்டார். எனவே அவன் எழுந்து நின்று பகவான் பலராமரை வணங்கவில்லை.
பலராமர் ரோமஹர்ஷணனின் சரித்திரத்தை எண்ணிப்பார்த்தார். அவர் ஒரு ஸுதக் குடும்பத்தில், அதாவது கலப்புக் குடும்பத்தில் பிறந்தவன். அவரின் தாய் ஒரு பிராம்மணப் பெண், தந்தை க்ஷத்திரியன். எனவே அவர் பலராமரும் ஒரு க்ஷத்திரியர் தானே என்றெண்ணியிருந்தாலும் உயர்ந்த ஆசனத்தில் தொடர்ந்து இருந்திருக்கலாகாது. கற்றறிந்த பிராம்மணர்களும் முனிவர்களும் அமர்ந்திருந்த சபையில் பிறப்பில் குறைந்தவனான ரோமஹர்ஷணர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கலாகாதென பலராமர் கருதினார். ரோமஹர்ஷணரின் துணிச்சலைக் கண்ட பலராமர் மிகவும் கோபமடைந்தார். வியாசாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் சபைக்கு வரும்போது எழுந்து நின்று அவரை வரவேற்கத் தேவையில்லை. ஆனால் பலராமர் வந்தபோது இந்த விதி பொருந்தாது, ஏனெனில் அவர் சாதாரண மனிதரல்ல, முழுமுதற் கடவுள். பிராம்மணர்கள் எல்லோரும் வியாசாசனத்தில் அமர ரோமஹர்ஷணரைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் முழுமுதற் கடவுள் என்பதை அறிந்து மற்றப் பிராம்மணர்களையும் முனிவர்களையும் போல் ரோமஹர்ஷணரும் எழுந்து நின்று பலராமரை வரவேற்றிருக்க வேண்டும். கிருஷ்ணரும் பலராமரும் தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்கள். முழுமுதற் கடவுளிடம் முற்றிலுமாகச் சரணடைவது மிகவுயர்ந்த தர்மமென்று பகவத்கீதை கூறுகிறது. பகவானின் பாதகமலங்களில் பக்தித்தொண்டாற்றியிருப்பது மிகவுயர்ந்த பக்குவ நிலையென்று ஸ்ரீமத் பாகவதமும் உறுதியளிக்கிறது. வேதங்களையெல்லாம் கற்றறிந்த ரோமஹர்ஷணன் தர்மத்தின் உயர்பக்குவ நிலையை மதிக்காமல் நடந்து கொண்டதை பகவான் பலராமர் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. முழுமையான பிராம்மணனாகும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் ரோமஹர்ஷணனன் முழுமுதற் கடவுளிடம் தவறாக நடந்து கொண்டதால் அவனின் தாழ்ந்த பிறப்பை பலராமர் நினைவுகூர வேண்டியதாயிற்று. அவனுக்கு பிராம்மணனின் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. அவன் பிராம்மணக் குடும்பத்தில் பிறக்கவில்லை, பிரதிலோமக் குடும்பத்தில் பிறந்தவன். வேதமுறைப்படி இருவகையான கலப்புக் குடும்ப அமைப்புக்கள் உள்ளன. அவை அனுலோமம் மற்றும் பிரதிலோமம் ஆகும். ஒரு ஆண் தன்னைவிடக் குறைவான சாதியைச் சேர்ந்த பெண்ணை மணப்பதால் பிறக்கும் குழந்தைகள் அனுலோம வகையைச் சேர்ந்தவையாகும். ஆனால் ஒரு ஆண் தன்னைவிட உயர்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை மணப்பதால் பிறக்கும் குழந்தைகள் பிரதிலோம சார்ந்தவர்களாவார்கள். ரோமஹர்ஷணனின் தந்தை க்ஷத்திரியன், அவனின் தாய் உயர்சாதியைச் சேர்ந்த பிராம்மணப் பெண். எனவே அவன் பிரதிலோமக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ரோமஹர்ஷணன் ஆத்ம ஞானத்தில் முழுமை பெறாமலிருந்தமையால் பலராமர் அவனின் பிரதிலோமப் பிறப்பை நினைவுகூர்ந்தார். பிராம்மணனாகும் வாய்ப்பு எந்தப் பிரிவைச்சேர்ந்த மனிதனுக்கும் அளிக்கப்படலாம், ஆனால் உண்மையான ஆத்ம ஞானம், பெறாமல் அவன் தனக்களிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தினால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள பிராம்மண நிலை பயனற்றுப் போகும் என்பது கருத்து.ரோமஹர்ஷண ஸுதன் ஆத்ம ஞானத்தில் குறைந்தவன் என்பதைக் கவனித்த பலராமர் அவனின் கர்வத்தைத் தணிப்பதெனத் தீர்மானித்தார். "இவன் மரணதண்டனை பெறுவதற்குரியவன். வியாசதேவரின் சீடனாகும் தகுதியை இவன் பெற்றிருந்தாலும், அந்த மகானிடமிருந்து இவன் வேதங்களைக் கற்றிருந்தாலும் முழுமுதற் கடவுளின் முன்பு பணிவுடன் நடந்து கொள்ளவில்லை,'' என்று பலராமர் எண்ணினார். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல் உண்மையான பிராம்மணன் கற்றறிந்த காரணத்தால் மென்மையான தன்மையையும் உடையவனாகிறான். ரோமஹர்ஷண ஸுதன் கற்றவனாயிருந்தும், பிராம்மணனாகும் வாய்ப்பைப் பெற்றவனாயிருந்தும், பெறாதவனாயிருந்தான். இகவுலகச் சிறப்புக்களைப் பெற்றுச் செருக்கடைந்திருப்பவன் பிராம்மணனுக்குரிய மிருதுத் தன்மையைப் பெறுவதில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம். இத்தகையவனின் கல்வி நாகப்பாம்பின் படத்திலுள்ள மாணிக்கத்துக்குச் சமமானது. விலைமதிப்பற்ற மணியைப் பெற்றிருந்தும் நாகப்பாம்பு சாதாரணப்பாம்பைப் போலவே கொடியதாயிருக்கிறது. ஒருவன் எளிமையும் பணிவும் பெறாவிடில் அவனின் வேதசாஸ்திர புராண அறிவெல்லாம் நாடக மேடை நடிகனின் வேஷம் போன்றதே. “அகத் தூய்மையில்லாமல் புறத்தே கற்றவர்களாகவும் தர்மவான்களாகவும் நடிப்பவர்களைத் தண்டிப்பதற்காகவே நான் அவதரித்திருக்கிறேன். இவர்கள் மேலும் பாவச் செயல்களில் ஈடுபடாமலிருக்கவே இவர்களை அழிக்கிறேன்" என்று பகவான் பலராமப் பிரபு எண்ணலானார். குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்கேற்பதை பலராமர் தவிர்த்தாரென்றாலும் தர்மத்தை நிலைநாட்டுவதைத் முதன்மையான கடமையாகக் கருதினார். எனவே அவர் ஒரு குசப் புல்லை பிரயோகித்து ரோமஹர்ஷண ஸுதனைக் கொன்றார்.
ஒரு புல்லைக் கொண்டு ஒருவனை எப்படிக் கொல்ல முடியுமென்ற கேள்விக்கு ஸ்ரீமத் பாகவதம் "பிரபு"என்ற சொல்லைப் பிரயோகிப்பதன் மூலம் விடை கூறியிருக்கிறது. பரமனான கடவுளின் செயல்கள் ஜடநிலையின் வித்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அவரால் துரும்பைக் கொண்டு ரோமஹர்ஷணனைக் கொல்ல முடிந்ததில் வியப்பில்லை. ரோமஹர்ஷணன் கொல்லப்பட்டதும் அங்கிருந்த அனைவரும் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்து ஆரற்றலானார்கள். பலராமர் முழுமுதற் கடவுளென்பதை அந்த பிராம்மணர்கள் அறிந்திருந்தாலும் அவர் செய்கையை எதிர்த்துக் குரலெழுப்ப அவர்கள் தயங்கவில்லை. எனவே அவர்கள் மிகுந்த பணிவுடன் பலராமரிடம் கூறினார்கள் “அன்பார்ந்த பிரபுவே, உமது செய்கை தர்மவிரோதமானதென நாங்கள் எண்ணுகிறோம். பிராம்மணராகிய நாங்கள் இந்த யாக காலத்துக்கு மட்டும் ரோமஹர்ஷணனை அந்த உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினோம்.எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் வியாசாசனத்தில் அமர்ந்தார். வியாசாசனத்தில் அமர்ந்திருப்பவர் ஒருவரை வரவேற்பதற்காக எழுந்து நிற்பது முறையாகாது. ரோமஹர்ஷண ஸுதனுக்கு நாங்கள் இடரற்ற வாழ்வை அளித்திருந்தோம். இவ்விவரங்களை அறியாமல் நீர் அவரைக் கொன்றுவிட்டதால் ஒரு பிராம்மணனைக் கொன்ற செயலைப் புரிந்தவராகிறீர்.
பிரபுவே, வீழ்ச்சியடைந்த ஆத்மாக்களுக்கு முக்தியளிப்பவரே, வேதங்களால் அறியப்படுபவர் நீரே என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். நீர் யோகீச்வரர். எனவே வேத நியமங்கள் உமக்குப் பொருந்தமாட்டா எனினும் உமது காரணம் கடந்த கருணையால், மற்றவர்களின் நன்மைக்காக, ரோமஹர்ஷணனைக் கொன்றதற்கான பிராயசித்தத்தை நீர் மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் உம்மிடம் பிரார்த்திக்கிறோம். பிராயச் சித்தமாக நீர் என்ன செய்யவேண்டுமென்பதை நாங்கள் உமக்குக் கூறப்போவதில்லை. மற்றவர்கள் பின்பற்றும்படியாக நீர் ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்பது எங்கள் விருப்பம். ஏனெனில் பெரியவர்கள் செய்வதைச் சாதாரணமானவர்களும் பின்பற்றுவார்கள்.''
பகவான் பலராமர் பின்வருமாறு பதிலளித்தார்:"ஆம். நான் செய்தது என்னைப் பொறுத்தவரை சரியான செயலாக இருக்கலாம்; ஆனால் மற்றவர்கள் அவ்வாறு செய்யலாகாது. எனவே நான் பிராயசித்தம் செய்தாகவேண்டும். அது வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் அமைய வேண்டும். அதே சமயம் ரோமஹர்ஷண ஸுதனுக்கு மறுவாழ்வளித்து நீண்ட ஆயுளையும், நிரம்பிய பலத்தையும், சக்திவாய்ந்த புலன்களையும் தரக்கூடும். அதுமட்டுமின்றி, நீங்கள் விரும்பினால் நீங்கள் கேட்கும் வேறெதையும், அவனுக்கு அளிக்க நான் சித்தமாயிருக்கிறேன். உங்களின் திருப்திக்காக நான் இந்த வரங்களை மகிழ்ச்சியுடன் அளிக்க முன் வருகிறேன்.' முழுமுதற் கடவுள் தாம் விரும்பியபடிச் செயல்படக் கூடியவரென்பதை பலராமரின் கூற்றிலிருந்து நாம் அறிகிறோம். அவர் ரோமஹர்ஷணனைக் கொன்றது முறையல்லவென்று கருதினாலும் அதற்குக் கைமாறாக பன்மடங்கு நன்மைகளை அவர் எல்லாருக்கும் வழங்கக் கூடியவர். எனவே, முழுமுதற் கடவுளைப் போல் செயற்பட எல்லாராலும் ஆகாது.பிரபுவின் கட்டளைகளைப் பின்பற்றுவதே நமது கடமை. பலராமப் பிரபுவின் செயல் முறையற்றதென அங்கிருந்த முனிவர்கள் கருதினாலும் அவர் பன்மடங்கு நன்மைகளைப் பிரதிபலனாக அளிக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ரோமஹர்ஷணனைக் கொல்வதான பிரபுவின் நோக்கத்தை நிராகரிக்க விரும்பாமல் கூறினார்கள் :"அன்பார்ந்த பிரபுவே, குசமாகிய புல்லினால் அசாதாரணமான வகையில் ரோமஹர்ஷணனைக் நீர் கொல்ல விரும்பியதால் மீண்டும் அவனை உயிர்பிப்பது அவசியமல்ல. அதே சமயம் நாங்கள் முனிவர்களும் பிராம்மணர்களுமாக முன்வந்து அவருக்கு நீண்ட ஆயுளை அளித்தோமென்பதைப் பிரபுவாகிய தாங்கள் நினைவிற்கொண்டு அவருக்கு நாங்கள் அளித்தது வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்'' இவ்வாறு யாகம் முடியும்வரை ரோமஹர்ஷண ஸுதர் உயிருடன் இருக்க அந்தக் கற்றறிந்த பிராம்மணர்கள் வழி செய்து கொண்டார்கள். அதே சமயம் பலராமரின் நோக்கம் நிறைவேறவும் அவர்கள் வகை செய்தார்கள். முழுமுதற் கடவுளாகிய பலராமர் தமது உயர்நிலைக்கேற்ப பிரச்னைக்குத் தீர்ப்பளித்தார்: "மகன் தந்தையின் உடலிலிருந்து பெறப்படுபவனாகையால் மகன் தந்தையின் பிரதிநிதியென்று வேதங்கள் கருதுகின்றன. ரோமஹர்ஷண ஸுதரின் மகனாகிய உக்ரச்ரவாஸுதர், மேற்கோண்டு தந்தையின் பிரசங்கங்களைத் நடத்தவேண்டும், ரோமஹர்ஷணருக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்படவேண்டுமென்று நீங்கள் விரும்பியதால் அந்த வரம் அவரின் மகனுக்குத் தரப்படும். நீங்கள் வழங்கிய நலன்களான திடகாத்ரமும் நீண்ட ஆயுளும் சக்திவாய்ந்த புலன்களும் உக்ரச்ரவருக்குக் கிடைக்கும். இவை தவிர வேறு எந்த வரம் உக்ரச்ரவருக்கு அளிக்கப்பட வேண்டுமென்று முனிவர்களும் பிராம்மணர்களும் விரும்பினாலும் அதை உடனடியாக வழங்குவதாகவும் பகவான் பலராமப்பிரபு உறுதி கூறினார். இவ்வாறு முழுமுதற் கடவுளாகிய பிரபு தம்மை ஒரு சாதாரண க்ஷத்திரியனின் நிலையில் வைத்துக் கொண்டு, ரோமஹர்ஷணரைக் கொன்றதற்குப் பிராயச்சித்தமாக என்ன செய்ய வேண்டுமென்பதைத் அறியாமலிருப்பதாகவும் முனிவர்களும் பிராம்மணர்களும் கூறுகிறபடிச் செய்வதாகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பிரபுவின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அந்தப் பிராம்மணர்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஒரு பிராயச்சித்தத்தைப் பலராமர் மேற்கொள்ளலாமென்று கூறினர்.
அன்பாரந்த பிரபுவே, இங்கு பல்வலன் என்ற பெயரையுடைய ஒரு அரக்கன் இருக்கிறான். இவ்வனின் மகனான அவன் மிகுந்த பலசாலி. அவன் ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பவித்திரமான யாகசாலைகளுள் பிரவேசித்து எங்கள் வேள்விகளுக்குப் பெரும் இன்னல்களை விளைவிக்கிறான். தசார்ஹக் குடும்பத் தோன்றலே, இந்த அரக்கனை நீர் அழிக்க வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்கிறோம். அவனை கொன்றால் எங்களுக்கான பிராயச்சித்தத்தை நிறைவேற்றியவராவீர். அந்த அரக்கன் அவ்வப்போது இங்கு வந்து எங்கள் மீது சலம், இரத்தம், மலம், மூத்திரம், கள் போன்ற அசுத்தப் பொருட்களை எறிந்து யாக குண்டங்களை மாசுபடுத்துகிறான்.பல்வலனைக் கொன்ற பின் நீர் பன்னிரண்டு மாதங்கள் புண்ணியத் தலங்களுக்கு சென்று வழிபட்டு பரிசுத்தமடையலாம். இதுவே நாங்கள் உமக்கு வகுக்கும் பிராயச்சித்தம்."
பல்வலன் முக்தி
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
பல்வலனை எதிர்நோக்கி பலராமர் தம்மை ஆயத்தம் செய்து கொண்டார். புனிதத்தலங்களை அந்த அரக்கன் தாக்க வரும் போது பெரும் புயல் தோன்றி ஆகாயம் புழுதியால் நிறைந்து இருண்டு காற்றில் துர்நாற்றம் ஏற்படுவது வழக்கம். இதையடுத்து அவன் மலம், மூத்திரம் போன்ற அசுத்தப் பொருட்களை யாக குண்டங்களின் மீது மழையெனப் பொழிவான். பின் திரிசூலத்தைக் கையில் ஏந்தியபடி அவன் தோன்றுவான். பூதாகாரமான அவனின் கறுத்த உடல்கரிய மலை போலிருக்கும். அவனின் தலைமுடியும், தாடியும் மீசையும், செம்பு போன்ற சிவந்த நிறத்திலிருக்கும் வாய் பெரியதாக, பயங்கரமாகத் தோன்றும் அரக்கனைக் கண்டவுடன் பலராமன் அவனைத் தாக்க ஆயத்தமானார். அவனை எவ்வாறு துண்டம் துண்டமாகச் செய்யலாம் என்பது பற்றிச் சிந்தித்தார். பின்னர் அவர்தம் கலப்பையையும் கதையையும் வரவழைத்தார். அப்போது பல்வலன் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். பலராமர் தம் கலப்பையை பயன்படுத்தி அவனைக் கீழே இழுத்து மிகுந்த கோபத்துடன் கதையால் தாக்கி அவனின் தலையை உடைத்தார். அவனின் நெற்றியில் இரத்தம் வெள்ளமாகப் பெருகி ஓடிற்று. அவன் பயங்கரமாக அலறினான். இவ்வாறாக, புனிதமான பிராமணர்ககளுக்குத் தீங்கிழைத்து வந்த அரக்கன் சிவந்த உச்சியையுடைய மலை இடியால் தாக்குண்டு சரிவதுபோல் தரையின் மேல் விழுந்தான்.
நைமிசாரண்யவாசிகளான கற்றறிந்த முனிவர்களும் பிராமணர்களும் பல்வலனின் வீழ்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்து பலராமப் பகவானைப் பணிவுடன் வணங்கி மனமார ஆசீர்வதித்தார்கள். பலராமரின் எந்த முயற்சியும் தோல்வியடைவதில்லையென்று அவர்கள் ஏக மனதாக ஆமோதித்தார்கள். பின்னர் அவர்கள் பலராமருக்கு முறைப்படி அபிஷேகம் செய்தார்கள். இந்த அபிஷேகம் தேவேந்திரன் அசுரர்களை வெற்றிகாணும் போது அவனுக்கு தேவர்கள் செய்யும் அபிஷேகத்தைப் போன்றதாயிருந்தது. அந்தணர்களும், முனிவர்களும் பலராமருக்கு முதல்தரமான ஆடையாபரணங்களை அணிவித்து கௌரவித்ததுடன் என்றும் அழியாததும் வாடாததுமான தன்மைகளையுடையதும், அழகின் பெட்டகமுமான தாமரை மலர் மாலையையும் பகவானுக்கு அணிவித்தார்கள்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பலராமர் நைமிசாரண்யவாசிகளான அந்தணர்களிடம் விடைபெற்று, மற்றவர்கள் உடன் வர கௌசிக நதி தீர்த்தத்துக்குச் சென்றார்.
ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீ கிருஷ்ணா / புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் / அத்தியாயம் 78
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment