கடவுளைக் காண்பிக்க இயலுமா?


 

கடவுளைக் காண்பிக்க இயலுமா?


**************************

நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர் பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகின்றது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும்பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கின்றோம்! என்னே மூடத்தனம்! மக்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக அயோக்கியர்களாக இருக்கின்றனர் என்றால் தங்களது கற்பனையான தகுதிகளைக் கொண்டு கடவுளைக் காண அவர்கள் முயல்கின்றனர்.

கீதையில் கிருஷ்ணர், நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:, நான் அனைவருக்கும் என்னை வெளிப்படுத்துவதில்லை, யோக மாயையின் மூலமாக என்னை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்கிறேன்,” என்று கூறுகிறார். ஆகவே, கடவுளை உங்களால் எவ்வாறு காண இயலும்? நிலைமை இவ்வாறு இருக்கையில், நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என்பன போன்ற மடத்தனமான கேள்விகள் அவ்வப்போது கேட்கப்படுகின்றன. கடவுள் அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகிவிட்டார்; ஆகவே, இந்த ஏமாற்று பேர்வழிகள் யாரோ ஒரு சாதாரண மனிதனைக் காண்பித்து, கடவுள் இங்கு இருக்கிறார், இவரே கடவுளின் அவதாரம் என்று பிரகடனப்படுத்துகின்றனர்.

ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:, கடவுளைக் காண்பிக்க முடியுமா என்னும் கேள்வியை கீழ்நிலையோர், முட்டாள், அயோக்கியன் முதலியவர்களே கேட்பர். கடவுளைக் காண்பதற்கு முதலில் உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? அவரைக் காண்பதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றுள்ளீர்களா? அந்த தகுதியானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தச் ச்ரத்ததானா முனய:, ஒருவன் முதலில் நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும், அதுவே கடவுளைக் காண்பதற்கான முதல் தகுதி. அதை விடுத்து, கடவுளை எனக்குக் காட்ட முடியுமா?” என்று வீம்புக்கு சவால் விடுத்தல் நல்லதன்று. கடவுளைக் காண்பது என்பதை அவர்கள் ஏதோ ஒரு மேஜிக் மாதிரி நினைக்கின்றனர். இல்லை. கடவுளைப் பற்றி தொடர்ந்து செவியுற்று, அவரைக் காண வேண்டும் என்பதைப் பற்றி ஒருவன் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

கிருஷ்ணரைக் காண்பதற்கான தகுதி
****************************

இது தொடர்பான சுவாரஸ்யமிக்க கதை ஒன்றினை கவனமுடன் கேளுங்கள். பாகவத உபன்யாசகர் ஒருவர் தமது உபன்யாசத்தில், பகவான் கிருஷ்ணர் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு காட்டில் மாடுகளை மேய்க்கச் செல்வதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அந்த உபன்யாசத்தில் ஒரு திருடனும் இருந்தான். உபன்யாசத்தைக் கேட்ட அவன், நான் ஏன் விருந்தாவனக் காட்டிற்கு சென்று கிருஷ்ணரிடமுள்ள நகைகளைக் கொள்ளையடிக்கக் கூடாது?” என்று யோசிக்கலானான். அவன் இதைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தான், கிருஷ்ணரைக் கண்டு அவர் அணிந்திருக்கும் நகைகளைக் கொள்ளையடித்தால், ஒரே நாளில் நான் கோடீஸ்வரனாகி விடுவேன்” என்று தீவிரமாக சிந்திக்கலானான்,

கிருஷ்ணரைக் காண வேண்டும் என்ற உணர்வு திருடனிடம் இருந்தது, அதுவே அவனது தகுதி. அவனது அந்த ஆர்வமிகுதியுடன் விருந்தாவனத்திற்குச் செல்ல, அங்கே அவன் பகவான் கிருஷ்ணரை நேரில் கண்டான். பாகவத உபன்யாசகர் விவரித்த விதத்திலேயே அவன் கிருஷ்ணரைக் கண்டான். அப்போது, அவன் கிருஷ்ணருக்கு அருகில் சென்று, கிருஷ்ணா! நீ மிகவும் நல்ல பையன், செல்வந்த குடும்பத்தைச் சார்ந்தவன், நான் உனது நகைகளைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று கூறினான்.

கிருஷ்ணர், இல்லை, இல்லை. என் அம்மா கோபம் கொள்வாள்! ஆகையால், என்னால் தர இயலாது,” என்றார். இவ்வாறாக, கிருஷ்ணர் ஒரு குழந்தையைப் போல லீலை செய்தார். கிருஷ்ணரின் குழந்தைத்தனத்தினால் கவரப்பட்ட அவனுக்கு கிருஷ்ணரின் மீதான ஆர்வம் மேன்மேலும் வளரத் துவங்கியது. இறுதியில், கிருஷ்ணர் நகைகளை எடுத்துக்கொள்ள அவனை அனுமதித்தார். ஆயினும், அச்சமயத்தில் அவன் கிருஷ்ணரது சங்கத்தினால் தூய்மை அடைந்திருந்தான். அதனால் அவன் உடனடியாக பக்தனாக மாறினான். இவ்வாறாக, எவ்வகையிலாவது நாம் கிருஷ்ணரின் சங்கத்தைப் பெற்றால் நாமும் தூய்மை பெறுவோம்.

கிருஷ்ணரைக் காணுதல்
************************

கிருஷ்ணரைக் காண்பதற்கு நாம் எந்தளவிற்கு ஆர்வமாக உள்ளோம் என்பதைப் பொறுத்து கிருஷ்ணர் நமக்கு பலனளிக்கிறார். கிருஷ்ணரைக் காண்பதற்கான ஆர்வம் உங்களிடம் இருந்தால், அதற்கான உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும்.

- வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

*****************************
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more