சியமந்தக மணி


 சியமந்தக மணி

__________________________________________________________________________________________________________

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமக்கெதிரான பொய்க் குற்றச்சாட்டை போக்கிக் கொள்ள சியமந்தக மணியைத் தேடிக் கண்டு பிடித்த வரலாற்றையும், ஜாம்பவான், சத்ராஜித் ஆகியோரின் புதல்விகளை அவர் மணந்த வரலாற்றையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. இந்த சியமந்தக மணி தொடர்பான லீலைகளை நடத்தியதன் மூலம், பௌதிக செல்வத்தின் பயனின்மையை பகவான் நிரூபித்துக் காட்டினார்.

    சியமந்தக மணியின் காரணமாக சத்ராஜித் மகாராஜன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவமரியாதை செய்தார் என்று சுகதேவ கோஸ்வாமி குறிப்பிட்டார். இதைக் கேட்ட பரீட்சித்து மகாராஜன் இச்சம்பவத்தை விவரமாக அறிய ஆவல் கொண்டார். இவ்விதமாக சுகதேவ கோஸ்வாமியும் அந்த வரலாற்றைக் கூறினார். சத்ராஜித் மகாராஜன், தான் ஆராதிக்கும் சூரிய தேவனின் கருணையால் சியமந்தக மணியைப் பெற்றார். அந்த மணியை ஒரு சங்கிலியில் பிணைத்து, அதைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு சத்ராஜித் துவாரகைக்குப் பயணமானார். அவரைக் கண்டு சூரிய தேவனே கிருஷ்ணரைக் காண வந்திருப்பதாக எண்ணிய மக்கள், சூரியதேவன் வந்திருப்பதாகக் கிருஷ்ணரிடம் கூறினர். ஆனால் வந்திருப்பது சூரிய தேவனல்ல, சத்ராஜித் மகாராஜன் என்றும், சியமந்தக மணியை அவர் அணிந்திருப்பதால் பிரகாசமாகக் காணப்படுகிறார் என்றும் கிருஷ்ணர் பதிலளித்தார்.

    சத்ராஜித் விலைமதிப்பற்ற அந்த மணியை, துவாரகையிலுள்ள தன் வீட்டில், விசேஷ பீடம் அமைத்து, அதில் பிரதிஷ்டை செய்தார். தினமும் அந்த மணி பெருமளவு தங்கத்தை உற்பத்தி செய்தது. மேலும் அது முறையாக ஆராதிக்கப்படும் எந்த இடத்திலும், எவ்வித துன்பமும் ஏற்படாது என்ற சக்தியையும் அது பெற்றிருந்தது.

    ஒருசமயம், அந்த மணியை யாதவர்களின் அரசரான உக்ரசேனருக்குக் கொடுக்கும்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சத்ராஜித்திடம் கூறினார். ஆனால் பேராசையால் பீடிக்கப்பட்ட சத்ராஜித் அதற்கு மறுத்துவிட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு சத்ராஜித்தின் சகோதரரான பிரசேனர், நகரைவிட்டு குதிரையிலேறி வேட்டையாடச் சென்றார். அப்படிச் செல்லும்பொழுது அவர் தன் கழுத்தில் சியமந்தக மணியை அணிந்திருந்தார். சாலையில் பிரசேனரை ஒரு சிங்கம் கொன்று, அந்த மணியை ஒரு மலைக்குகைக்கு எடுத்துச் சென்றது. அங்கு கரடிராஜனான ஜாம்பவான் வசித்து வந்தார். ஜாம்பவானும் சிங்கத்தைக் கொன்று, அந்த மணியைத் தன் மகளிடம் விளையாடுவதற்குக் கொடுத்தார்.

    தன் சகோதரன் திரும்பி வராததைக் கண்ட சத்ராஜித் மகாராஜன், சியமந்தக மணிக்காக ஸ்ரீ கிருஷ்ணர்தான் தன் சகோதரனைக் கொன்றிருக்க வேண்டும் என்றெண்ணினார். பொது மக்களுக்கிடையில் பரவிவரும் இந்த வதந்தியைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கேள்விப்பட்டார். இந்த வீண் பழியைப் போக்கிக்கொள்ள விரும்பிய கிருஷ்ணர், சில பிரஜைகளுடன் பிரசேனரை தேடிக் கொண்டு சென்றார். இப்படிச் சென்ற அவர்கள் வழியில் பிரசேனரின் உடலையும், அவரது குதிரையின் உடலையும் கண்டனர். இன்னும் கொஞ்ச தூரத்தில் ஜாம்பாவானால் கொல்லப்பட்ட சிங்கத்தின் உடலையும் கண்டனர். அருகிலிருந்த குகைக்குள் சென்று பரிசோதிக்க விரும்பிய கிருஷ்ணர் பிரஜைகளை குகைக்கு வெளியிலேயே இருக்கும்படி கூறினார்.

    ஜாம்பவானின் குகைக்குள் புகுந்த பகவான், அந்த சியமந்தக மணி ஒரு குழந்தையின் அருகில் இருப்பதைக் கண்டு அதை எடுக்க முயன்றார். ஆனால் குழந்தையின் தாதி ஓசையெழுப்ப, ஜாம்பவானும் விரைவாக அங்கு வந்து சேர்ந்தார். கிருஷ்ணரை ஒரு சாதாரண மனிதரென்று எண்ணிய ஜாம்பவான் அவருடன் போரிடத் துவங்கினார். இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்து போர் நிகழ்ந்தது. இறுதியில் பகவானின் தாக்குதலால் ஜாம்பவான் பலவீனமடைந்தார். கிருஷ்ணர் பரமபுருஷரென்பதை இப்பொழுது புரிந்து கொண்ட ஜாம்பவான் அவரை போற்றத் துவங்கினார். பகவான் தமது தாமரைக் கரத்தால் ஜாம்பவானைத் தொட்டு அவரது பயத்தைப் போக்கிய பிறகு சியமந்தக மணியைப் பற்றிய வரலாற்றை விளக்கினார். பெருமகிழ்ச்சியடைந்த ஜாம்பவான், சியமந்தக மணியை மட்டுமல்லாமல் கன்னிப் பெண்ணான தன் மகள் ஜாம்பவதியையும் பகவானிடம் ஒப்படைத்தார்.

    இதற்கிடையில் கிருஷ்ணருடன் வந்தவர்கள் பன்னிரண்டு நாட்கள் குகைக்கு வெளியில் காத்திருந்தபின் மனச் சோர்வுடன் துவாரகைக்குத் திரும்பினர். கிருஷ்ணரின் நண்பர்களும், குடும்ப அங்கத்தினர்களும் மிகவும் மனவருத்தமடைந்து, பகவானின் பாதுகாப்பான வரவிற்காக துர்காதேவியை தினமும் வழிபடத் துவங்கினர். இந்த வழிபாட்டை அவர்கள் செய்து கொண்டிருக்கும் பொழுதே, பகவான் ஸ்ரீ கிஷ்ணர் தமது புதிய மனைவியுடன் பட்டணத்தில் பிரவேசித்தார். பிறகு அரச சபைக்கு சத்ராஜித்தை அழைத்த கிருஷ்ணர், சியமந்தக மணி தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட முழு கதையையும் கூறியபின் மணியை அவரிடம் ஒப்படைத்தார். சத்ராஜித் பெருத்த அவமானத்துடனும், வருத்தத்துடனும் அந்த மணியைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பகவானின் தாமரைப் பாதங்களில் இழைத்த குற்றத்திற்குப் பிராயச்சித்தமாக சியமந்தக மணியை மட்டுமின்றி, தன் மகளையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குக் கொடுப்பதென முடிவு செய்தார். சத்ராஜித்தின் மகளும், தெய்வீக குணங்களை பூரணமாகப் பெற்றவளுமான சத்தியபாமாவின் கரத்தை ஸ்ரீ கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டார். ஆனால் மணியை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதை சத்ராஜித் மகாராஜனிடமே திருப்பிக் கொடுத்தார்

(ஶ்ரீமத் பாகவதம் / அத்தியாயம் ஐம்பத்தாறு )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற கதைகளை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more