பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான அஷ்டவக்ர முனிவர்
ஆதாரம் :- பிரம்மவைவர்த்த புராணம்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் ராதையும் காட்டின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆலமரத்தின் கீழ் ஓய்வு எடுப்பதற்காக வந்தனர். அப்போது கிருஷ்ணர் பல பழமையான இனிமையான கதைகளையும் அதனுள் மறைந்திருக்கும் அர்த்தத்தையும் ராதையிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது மாமுனிவரான அஷ்டவக்ரர் அவ்வழியே கடந்து சென்றார்.
அஷ்டவக்ரர் மிகக் குள்ளமாகவும் உடல் கருமையான நிறத்துடனும் தேகத்தில் வஸ்திரம் எதுவும் இல்லாமலும், அவரது உடல் ஒரு அமைப்பு இல்லாமலும் காணப்பட்டார். அஷ்டவக்ரரின் தவவலிமையின் காரணமாக அவரது வாயிலிருந்து தீச்சுவாலை வெளிப்பட்டது. வித்தியாசமான அவரது தோற்றத்தைப் பார்த்து ராதை சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணர் அவளைக் கட்டுப்படுத்தினார். முனிவர் கிருஷ்ணரின் முன் தனது சிரம் தாழ்த்தி வணங்கி தான் முன்பு சிவபெருமானிடமிருந்து பெற்ற ஸ்தோத்திரங்களை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் முன்பு ஓதினார். பின் கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் விழுந்து உடனே தன் உடலை துறந்தார். அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட ஆத்மா பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதத்தில் சரண்புகுந்தது..
நாரத முனிவர் நாராயண ரிஷியிடம் , "அஷ்டவக்ரரின் மறைவிற்குப் பிறகு கிருஷ்ணர் என்ன செய்தார்?." சிதைந்தது போன்ற அஷ்டவக்ரரின் தோற்றத்தின் பின் உள்ள மர்மம் என்ன? என்று வினவினார்.
நாராயண ரிஷி கூறினார், " பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அஷ்டவக்கிரரின் உடலை தன் கைகளால் தூக்கி சந்தனக்கட்டைகளின் மேல் கிடத்தி தீ மூட்டினார் அவரது உடல் எரிந்து சாம்பலாகும் போது வானத்திலிருந்து சொர்க்க லோகத்தின் வாசிகள் இசைக்கருவிகளை இசைத்து மலர்களை தூவினார். அச்சமயம் கோலோக விருந்தாவனத்திலிருந்து வந்த ஒரு விமானம் அஷ்டவக்கிரரை ஏற்றிக் கொண்டு பகவான் கிருஷ்ணரின் நித்ய வாசஸ்தலமான கோலோகத்தை நோக்கிச் சென்றது.
அஷ்டவக்ரர் கோலோகம் சென்ற பிறகு ராதை கிருஷ்ணரிடம் கேட்டாள், "கிருஷ்ணா ஏன் இந்த உயர்ந்த முனிவரின் கை கால்கள் ஓர் அமைப்பே இல்லாமல் இருந்தது? அவர் கருமை நிறத்துடன் ஒரு குள்ள மீன் போன்று காணப்பட்டதால் பார்ப்பதற்கு மிக பயங்கரமாக தெரிந்தார். இருப்பினும் அவர் மிக உயர்ந்தவராகவே கருதப்படுகிறார். அவரை நீங்கள் வரவேற்கும் போது உங்கள் கண்களில் நீர் துளிர்த்தது. தயவுசெய்து அம் முனிவரைப் பற்றி எனக்குக் கூறுங்கள் என கேட்டார்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறினார். "அஷ்டவக்ரர் இந்த பிரபஞ்சத்தில் மிக பிரசித்தி பெற்ற மாமுனிவராவார். பிரளயத்தின் போது மூன்று உலகங்களும் நீரில் மூழ்கிய பின் பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்தார். அவரது முதல் சிருஷ்டி அவரது மனதிலிருந்து பிறந்த நான்கு குமாரர்களாவர்.
பிரம்மதேவர் அவர்களிடம் "இந்த பிரபஞ்சத்தில் பிரஜைகளின் உற்பத்தியைப் பெருக்குவதில் உங்களை ஈடுபடுத்துங்கள்" என்றார். இருப்பினும் குமாரர்கள் துறவையும் தவத்தையும் மேற்கொள்ளும் பொருட்டு தன் தந்தையின் கட்டளையை புறக்கணித்தனர்.
அவர்கள் சென்ற பிறகு பிரம்மதேவர் தன் தேகத்திலிருந்து பல மக்களை உற்பத்தி செய்தார். தந்தைக்கு கீழ்ப்படிந்த மகன்களான இவர்கள் பிரஜைகளை உற்பத்திசெய்யும் பிரம்மாவின் கட்டளையை ஏற்றனர்.
அந்தப் பிரஜாபதிகளில் ஒருவர் தான் "பிரசேதா" அவருக்கு இரண்டு மகன்கள் ஸ்ரீமான் மற்றும் அசிதர். அசிதர் தன் மனைவியுடன் ஆயிரம் தேவ ஆண்டுகள், பல யாகங்களையும் தவங்ககளையும் மேற்கொண்டார் இருப்பினும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. விரக்தியடைந்த அவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள எத்தனித்த போது , வானிலிருந்து அசரீரி வாக்கு கேட்டது. அதில் "சிவபெருமானிடமிருந்து குழந்தைக்கான ஒரு மந்திரத்தைப் பெற்றுக" என்றது
அவர்கள் மகாதேவரை பல பிரார்த்தனைகள் மூலம் போற்றிப் புகழ்ந்தார்கள். சிவபெருமான் கூறினார், " முனிவர்களில் சிறந்தவரே உங்கள் விருப்பம் யாதென்பதை நான் நன்கு அறிவேன். என்னுடைய அம்சமாக ஒரு மகனை நீங்கள் பெறுவீர்கள். உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் ஒரு மந்திரத்தை தருகின்றேன். அசித்தர் மந்திரத்தை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். நூறு வருடங்கள் அம்மந்திரத்தை கவனத்துடன் உச்சாடனம் செய்தார். ராதையான நீ அவர்முன் தோன்றி, "ஒரு சிறந்த மகனை விரைவில் பெறுவாய்" என்று உறுதி அளித்துக் கொண்டு நீ கோலோகம் புறப்பட்டுச் சென்று விட்டாய். பின்னர் சரியான நேரத்தில் அசிதர் தேவலர் என்ற மகனை பெற்றார். அவர் வளர்ந்ததும் சுயக்ஞாவின் மகளான ரத்னமாலாவதியை மணம் புரிந்தார். அவர் தன் மனைவியுடன் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். பின் பௌதிக ஆசைகளில் பற்றற்றவர் ஆனார்.
ஒருநாள் இரவு தன் மனைவி உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டைத் துறந்து காட்டில் கந்தமாதன பர்வதத்தில் உள்ள ஒரு குகையில் தவம் மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் ரத்னமாலாவதி தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டதை அறிந்து மிகுந்த வருத்தத்திற்கும் புலம்பலுக்கும் உள்ளானார். இதனால் அவள் உண்ணாமல் விரதம் இருந்து உயிர் துறந்தார்.
அதன்பிறகு தேவலர் ஆயிரம் ஆண்டுகள் கந்தமாதன பர்வதத்தில் உள்ள தனது குகையில் தவங்கள் மேற்கொண்டார். ஒருநாள் இந்திரனின் விருப்பப்படி அதி அற்புத அழகும் கவர்ச்சியும் கொண்ட தேவலோக மங்கையான ரம்பை அவர் முன் தோன்றினாள். இந்த மூன்று உலகங்களில் யாரை வேண்டுமானாலும் அவளது அழகால் கவர்ந்து இழுக்க முடியும்.
ரம்பை தேவலரை அணுகி,. "எனது அன்பு முனிவரே, சிறிது காலத்திற்கு உங்களது தவத்தை நிறுத்தி வையுங்கள். இதனால் நம்முடைய அன்பை பரிமாறி இன்பத்தை அனுபவிக்கலாம் என்றாள். சொர்கத்தின் இன்பத்தை அனுபவிக்க பலபேர் பல தவங்களை மேற்கொள்கின்றனர். இதோ அந்த சொர்க்கத்தின் இன்பங்கள் அனைத்தும் இப்போது உங்கள் முன்னே நிற்கிறது. என் அழகான அங்கங்கள் மற்றும் புன்னகை தவழும் என் முகத்திலும் இன்பத்தை காணாத மனிதன் என்ன மனிதன்?. உலகிலுள்ள அனைத்து இன்பத்திலும் அழகிய பெண் ஒருவருடன் சங்கம் வைப்பதால் வரும் இன்பமே சிறந்தது. ஒரு பெண் சுயமாக முன்வந்தும் அவளது சங்கத்தை அனுபவிக்காத சுயக்கட்டுப்பாடு உள்ள மனிதன் நிச்சயம் நரகத்திலே தள்ளப்படுவான். ஒரு மனிதனுக்கு கற்புள்ள பெண்ணொருத்தி கொடுக்கும் இன்பத்தை விட அதிக இன்பத்தை ஒரு முறையற்ற பெண்ணால் கொடுக்க முடியும். அத்தகைய ஒரு பெண்ணை நிராகரிக்கும் மனிதனின் செயல் தன்னையே அழித்துக் கொள்வது போன்றதாகும். அதனால் எனது அன்பு முனிவரே சிறிதுகாலம் என்னுடன் இன்பமாக இருங்கள்".என்றாள்.
தேவலர் பதிலளித்தார், " , வேதங்கள் நமக்கு இட்ட கட்டளையின் படி ஒரு பிராமணன் அவன் தன் மனைவியுடன் மட்டுமே அதுவும் பரிந்துரைக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே இன்பமாக இருக்க வேண்டும். ஒரு பிராமணன், சத்திரியன், அல்லது ஒரு வைசியன் தன் மனைவியுடன் கட்டுப்பாடில்லாமல் இன்பமாக இருக்கின்றவன், அவன் தானே இழிவு அடைவதுமில்லாமல், லட்சுமி தேவியின் கோபத்தையும் சம்பாதித்து கொள்கிறான். அப்படிப்பட்டவன் மரியாதைக்குரிய சமூகத்திலிருந்து நிராகரிக்கப்படுகிறான். இறந்தபின் நரகத்திலும் வீழ்கிறான். மேலும் என்னைப் போன்ற ஒரு துறவியை அடைவதில் நீ என்ன பயனை சாதிக்கப் போகிறாய்?. எனவே பௌதிக உணர்வு கொண்ட ஒரு மனிதனை நீ அணுகுவது நல்லது.என்றார்.
முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ரம்பை எரிச்சலுடன் கூறினாள், "நீங்கள் மன்மதனைப் போன்று அழகானவர் உங்களது தவத்தின் காரணமாக அற்புதமான வலிமையை அடைந்து விட்டீர்கள். உங்களால் எந்த பெண்ணையும் கவர முடியும். உங்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு எவ்வாறு உங்களை விட சிறந்த மனிதரை நான் அணுகுவது?. நான் காமத் தீயில் எரிந்து கொண்டு இருக்கின்றேன். நீங்கள் என் அரவணைப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நான் உங்களை சபித்து விடுவேன். ஏனெனில் அன்பின் உறவால் கிடைக்கும் அமிர்தத்தை சுவைக்கும் விருப்பத்தினால் என் இதயம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதைக் கேட்ட தேவலர் பதிலேதும் கூறாமல் தன்னுடைய தவத்தை மேற் கொள்வதற்காக அங்கிருந்து கிளம்பினார்.
இதனால் மிகுந்த கோபம் அடைந்த ரம்பை "ஓ பொல்லாத பிராமணரே, உமது இந்த உடல் சிதைந்து ஒரு அமைப்பு இல்லாமல் போவதாக!! உமது நிறம் நிலக்கரி போல் கருமை நிறமாக போகட்டும். உமது இளமை எல்லாம் தொலைந்து போகட்டும். நீர் அழகற்று விடுவீர். இதனால் மக்கள் உம்மை கண்டு நகைப்பார்கள். இது தவிர நீர் இயற்றிய அனைத்து தவங்களும் பயனற்றுப் போகும் . என சபித்தாள்.
பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார், தேவலரை சபித்த ரம்பை தனது லோகத்திற்கு திரும்பிச் சென்றாள். அதன்பிறகு தேவலர் தன் தவத்தை தொடர்ந்து செய்தாலும் அவரால் பகவானின் தரிசனத்தை காண முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த கவலையும் வருத்தமும் அடைந்தார். அவரது உடலும் கோரமாக மாறியதால் அவர் மிக மனச்சோர்வு அடைந்தார். எனவே அக்னியில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
இதைப் பார்த்த நான் (கிருஷ்ணர்) அவர் முன் தோன்றி, "திவ்விய ஞான ஒளி கிடைக்கப் பெறுவாய் என்று உத்திரவாதம் அளித்தேன்". அவரது உடல் எட்டாக வளைந்து இருப்பதை கருத்தில் கொண்டு விளையாட்டாக நான் அவருக்கு "அஷ்டவக்கிரர்" என்று பெயரிட்டேன். அதன் பிறகு என்னுடைய அறிவுரையின்படி அவர் "மலய மலையில்" சென்று 60000 ஆண்டுகள் தவம் இயற்றினார். பின்னர் இந்த பௌதிக உலகத்தில் இருந்து விடுதலை பெற்றார்.
எனது அன்பு ராதையே, "என்னுடைய பக்தர்களில் அஷ்டவக்கிரர் போன்ற சிறந்த பக்தர் வேறு எவரும் இல்லை. இனி வரும் காலத்திலும் இருக்கப்போவதில்லை. அவர் மிகச்சிறந்த சன்னியாசி மற்றும் பக்தராவார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
சுத்த பக்தி :- https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
உத்வேக கதைகள்:- https://t.me/udvegakathaigal
Comments
Post a Comment