🌼🌼🌼🌼🌼🌼🌼
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னார், நந்தராய்ர் கம்சனுக்கு வரி செலுத்தவும் வசுதேவரின் நலம் அறியவும், தனக்கு மகன் பிறந்த செய்தியை அவரிடம் கூறவும் மதுராவிற்குச் சென்றார். அதேசமயம் கம்சனால் அனுப்பப்பட்ட துஷ்ட ராக்ஷஸி குழந்தைகளைக் கொல்வதற்காக நகரங்களிலும், வீடுகளிலும், மாட்டுத் தொழுவங்களிலும் சஞ்சரித்தவாறு இடையர்கள் அதிகம் வசிக்கும் கோகுலத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் மூச்சு விடும்போது பன்றியைப்போல 'கர்கர்' எனும் ஒலி எழும்பியது. கோகுலத்திற்கு அருகில் வந்ததும் அவள் மாயையால் திவ்ய ரூபம் எடுத்துக் கொண்டாள். அவள் பதினாறு வயது யுவதியானாள். தன் அங்க காந்தியால் சசி, சரஸ்வதி, லக்ஷ்மி, ரம்பை, ரதி போன்றோரையும் திரஸ்கரிக்கச் செய்யும் அழகுருவை ஏற்றாள். நடக்கும்போது உயர்ந்த அவளது நகில்கள் தெய்வீக ஒளியோடு பிரகாசித்து அசைந்தாடின.
அவளைக் கண்ட ரோஹிணியும் யசோதாவும் கூட பொலிவிழந்தவர்களானார்கள். அவள் வந்ததுமே பால கோபாலனை மடியில் எடுத்துக் கொண்டாள். தொடர்ந்து கொஞ்சிக் குலாவிய அந்த மகாகோரமான அரக்கி குழந்தையின் வாயில் ஹலா-ஹல விஷம் தடவிய தனது மார்பை வைத்தாள். இதைக்கண்டு மிகுந்த கோபங்கொண்ட ஸ்ரீ ஹரி அவளது பால் முழுவதையும் அவளது உயிரோடு சேர்த்துக் குடித்துவிட்டார். அவளது நகில்களில் சகிக்கவொண்ணாத வேதனை உண்டாகவே 'விடு' 'விடு' என்று கூறியபடி அவள் எழுந்து ஓடினாள். குழந்தையுடனேயே வீட்டிற்கு வெளியே ஓடினாள். வெளியே சென்றதும் அவளது மாயை அகன்றுவிட்டது. சுய உருவில் தோன்றலானாள். அவளது கண்கள் வெளியே பிதுங்கிவிட்டன. உடல் முழுவதும் வெளிறிவிட்டது. அழுது அலறியபடி பூமியில் விழுந்துவிட்டாள்.
அவளது கூச்சல் ஏழு உலகங்களும் ஏழு பாதாளங்களும் சேர்ந்து பிரம்மாண்டம் முழுவதும் எதிரொலித்தது. தீவுகளோடு பூமி முழுவதும் தடுமாறியது. ஒரு அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது. மன்னார், பூதனையின் விசாலமான உடல் ஆறு கோஸ் (2 மைல் = 1 கோஸ்) நீளமும் எஃகைப் போல் உறுதியாகவும் இருந்தது. அவள் விழுந்ததால் அவளது முதுகின் கீழே அகப்பட்ட மிகப்பெரிய மரங்கள் அரைபட்டு தூள் தூளாகி விட்டன. அச்சமயம் ஆயர்கள் அந்த அரக்கியின் பயங்கரமான விசால சரீரத்தைக் கண்டு பரஸ்பரம் இவள் மடியிலிருந்த குழந்தை ஒருவேளை உயிரோடு இருக்காதோ என்று கூறலானார்கள். ஆனால் அந்த அற்புத பாலகன் அவளது மார்பில் அமர்ந்து கொண்டு ஆனந்தமாக விளையாடி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் பூதனையின் பாலைக் குடித்துவிட்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான். அவனை அந்த நிலையில் கண்டு, யசோதாவுடனும் ரோஹிணியுடனும் சென்று கோபியர் எடுத்து மார்போடணைத்து எல்லோரும் மிகவும் வியப்படைந்தனர். குழந்தையை எடுத்துச் சென்ற கோபியர் எல்லா வகையாலும் முறைப்படி ரக்ஷை (காப்பு) செய்தனர். யமுனையின் புனிதமான மண்ணைப் பூசி, யமுனையின் நீரைத் தெளித்து, அவனுக்குப் பசுவின் வாலால் சுற்றிப் போட்டனர். கோமூத்திரமும், பசுக்குளம்படி மண்ணும் கலந்த நீரால் அவனை நீராட்டினர். (கீழே குறிப்பிட்ட கவசத்தைப் பாடினர்.
அதன் பிறகு, குழந்தையான ஸ்ரீ கிருஷ்ணருக்கு முழு பாதுகாப்பை அளிக்க, தாய் யசோதையும். ரோகிணியும் மற்ற வயதான கோபியர்களுடன் ஒரு பசுவின் வாலைச் சுழற்றி சைகைசெய்தனர்.(ஶ்ரீமத் பாகவதம் 10.6.19)
குழந்தை கோ ஜலத்தால் நன்கு கழுவப்பட்டபிறகு, பசுக்களின் நடமாட்டத்தால் எழுந்த புழுதி குழந்தையின் மேல் பூசப்பட்டது. பிறகு பகவானின் வெவ்வேறு நாமங்களை உச்சரித்து, அவரது உடலின் பன்னிரண்டு பகுதிகளில் பசுவின் சாணம் தடவப்பட்டது. திலகமிடுவதில் செய்யப்படுவது போலவே இதுவும் நெற்றியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவ்விதமாக குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. (ஶ்ரீமத் பாகவதம் 10.6.20)
கோபியர்கள் முதலில் வலது கையிலிருந்து சிறிது நீரைக் குடித்து ஆச்சமன முறையை நிறைவேற்றினர். ன்யாஸ-மந்திரத்தால் தங்களது உடல்களையும், கரங்களையும் அவர்கள் தூய்மைப்படுத்தினர். பிறகு அதே மந்திரத்தைக் குழந்தையின் உடல்மீது பொறித்தனர் (ஶ்ரீமத் பாகவதம் 10.6.21)
(தங்களது குழந்தையான கிருஷ்ணரின் பாதுகாப்பிற்குச் சரியான வழிமுறையைப் பின்பற்றிய கோபியர்கள், பின்வரும் மந்திரத்தைச் சொல்லி அவரைப் பாதுகாத்தனர் என்று சுகதேவ கோஸ்வாமி பரீட்சித்து மகாராஜனிடம் கூறினார்:) அஜர் உனது கால்களைப் பாதுகாக்கட்டும், மணிமான் உனது முழங்கால்களையும. யக்ஞர் உனது தொடைகளையும், அச்யுதர் உனது இடையின் மேற் பகுதியையும், ஹயகிரீவர் உனது வயிற்றுப் பகுதியையும் பாதுகாக்கட்டும், கேசவர் உனது இதயத்தையும், ஈசர் உனது மார்பையும், சூரிய தேவன் உனது கழுத்தையும். விஷ்ணு உனது கரங்களையும், உருக்ரமர் உன் முகத்தையும், ஈஸ்வரர் உன் தலையையும் பாதுகாக்கட்டும். சக்ரீ உன்னை முன் புறத்திலிருந்து பாதுகாக்கட்டும்; கதையை வைத்திருப்பதால் கதாதரீ எனப்படும் ஸ்ரீ ஹரி உன்னைப் பின்னாலிருந்து பாதுகாக்கட்டும்; வில்லை வைத்திருப்பவரும், வாளை ஏந்திய பகவான் அஜனரும் உனது இரு புறங்களைப் பாதுகாக்கட்டும். சங்கை ஏந்திய பகவான் உருகாயர் எல்லா மூலைகளிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கட்டும்; உபேந்திரா உன்னை மேலிருந்து பாதுகாக்கட்டும்; கருடன் உன்னைத் தரையில் பாதுகாக்கட்டும்; மேலும் பரமபுருஷராகிய பகவான் ஹலாதரர் உன்னை எல்லாப் புறங்களிலிருந்தும் பாதுகாக்கட்டும்.(ஶ்ரீமத் பாகவதம் 10.6.22)
ரிஷீகேசர் உன் புலன்களையும், நாராயணர் உன் உயிர்க் காற்றையும் பாதுகாக்கட்டும். ஸ்வேதத்வீபத்தின் நாதர் உன் இதய மத்தியையும், பகவான் யோகேஸ்வரர் உன் மனதையும் பாதுகாக்கட்டும். (ஶ்ரீமத் பாகவதம் 10.6.23)
பகவான் பிரிஸ்னிகர்பர் உன் புத்தியையும், பரமபுருஷர் உன் ஆத்மாவையும் பாதுகாக்கட்டம். நீ விளையாடும் பொழுது கோவிந்தனும், உறங்கும் பொழுது மாதவனும் உன்னைப் பாதுகாக்கட்டும். நீ நடக்கும் பொழுது பகவான் வைகுண்டரும், அமரும்பொழுது ஸ்ரீ தேவியின் கணவரான பகவான் நாராயணரும் உன்னைப் பாதுகாக்கட்டும். அவ்வாறே, நீ வாழ்வை அனுபவிக்கும் பொழுது, துஷ்ட கிரகங்களில் பயங்கர எதிரியான பகவான் யக்ஞபுக் எப்பொழுதும் உன்னைப் பாதுகாக்கட்டும்.(ஶ்ரீமத் பாகவதம் 10.6.24)
சூனியக்காரிகளான தாகினிகள், யாதுதானிகள், மற்றும் குஷ் மாண்டங்கள் ஆகியவை குழந்தைகளின் பெரும் எதிரிகளாகும். பூதங்கள். பிரேதங்கள், பிசாசுகள், யக்ஷர்கள், இராட்சஸர்கள் மற்றும் வினாயகங்கள் போன்ற துர்தேவதைகளும், கொடரா, ரேவதீ, ஜ்யேஷ்டா, பூதனை மற்றும் மாத்ருகா போன்ற மாயக்காரிகளும், நினைவை இழக்கச் செய்தும், பித்துச் பிடிக்கச் செய்தும், கெட்ட கனவுகளை ஏற்படுத்தியும், எப்பொழுதும் உடலுக்கும், உயிர்க் காற்றுக்கும், புலன்களுக்கும் தொல்லை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. மிகவும் அனுபவமுள்ள துர் நட்சத்திரங்களைப் போல், அவை குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பெருந்துன்பங்களை விளைவிக்கின்றன. ஆனால் பகவான் விஷ்னுவின் நாமம் ஒலிக்கும் பொழுது அவை அச்சமடைந்து ஓடி மறைவதால், பகவானின் நாமத்தைக் கொண்டே அவற்றை அழித்துவிட முடியும்.(ஶ்ரீமத் பாகவதம் 10.6.25)
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார். தாய் யசோதையின் தலைமையிலான எல்லா கோபியர்களும், தாய்ப்பாசத்தால் கட்டப்பட்டிருந்தனர். இவ்வாறு குழந்தையின் பாதுகாப்பிற்குரிய மந்திரங்களை ஒதியபின், தாய் யசோதை குழந்தைக்குத் தம் முலைக் காம்பால் பாலூட்டி, அவரை அவரது படுக்கையில் படுக்கவைத்தாள்.(ஶ்ரீமத் பாகவதம் 10.6.26)
அதேசமயம் நந்தன் முதலான ஆயர்கள் மதுரையிலிருந்து கோகுலத்திற்குத் திரும்பி வந்தனர். பூதனையின் பயங்கரமான உடலைக்கண்டு அவர்களனைவரும் பயத்தால் கவலையுற்றனர். ஆயர்கள் கோடலியால் அவளது உடலை வெட்டி, யமுனையின் கரையில் பல சிதைகளை அடுக்கி அவளுக்கு எரியூட்டினார்கள். பூதனையின் உடல் மிகவும் புனிதமடைந்து விட்டது. எரித்ததும் அதிலிருந்து கிளம்பிய புகையில் ஏலக்காய், லவங்கம், சந்தனம், அகில் ஆகியவற்றின் நறுமணம் நிறைந்திருந்தது. ஆஹா, பூதனைக்கும் மோக்ஷமளித்த அந்த ஸ்ரீகிருஷ்ணனை விட்டுவிட்டு நாம் இங்கு யாரை அடைக்கலம் புகுவது?
பஹுலாஸ்வன் கேட்டான்: 'தேவரிஷே!, குழந்தையைக் கொல்லும் அரக்கியான பூதனை முற்பிறவியில் யாராக இருந்தாள்? இவள் மார்பில் விஷம் தடவப்பட்டிருந்ததோடு உட்கருத்தும் களங்கமுற்றிருந்தது. அப்படியிருந்தும் இவளுக்கு உத்தமமான மோக்ஷம் எவ்வாறு கிடைத்தது?
ஸ்ரீ நாரதர் கூறினார்: முன்காலத்தில் பலிச்சக்ரவர்தியின் யாகத்தில் வாமன பகவானின் மிக உத்தமமான ரூபத்தைக்கண்ட பலியின் புதல்வி ரத்தினமாலை அவரிடம் மகனைப்போன்ற பாசம் கொண்டாள். அவள் மனதிற்குள்ளாக எனக்கும் இதைப்போன்ற மகன் கிடைத்தால் புனிதமாக முறுவலிக்கும் அந்தக் குழந்தைக்கு நான் பால் புகட்டமுடியும், என்மனம் மகிழ்ச்சியுறும் என்று சங்கல்பம் செய்தாள். பலி பகவானின் சிறந்த பக்தன். ஆகவே வாமன பகவான், அவனது மகளுக்கு உன் மன விருப்பம் நிறைவேறும் என்று வரமளித்தார். பகவான் வாமனன் பலி மஹாராஜாரை வென்று அவரது உடமைகளை கைப்பற்றி போது அதே ரத்தின மாலை பாலில் விஷம் தடவி கொடுப்பேன் என்று கோபமாக கூறினாள். அதே ரத்தினமாலா துவாபரயுக முடிவில் பூதனை எனும் பெயர் பெற்ற அரக்கியானாள். ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய ஸ்பரிசத்தால் அவளது சிறந்த விருப்பம் பயனடைந்தது. மிதிலை மன்னா, ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய இந்த பூதனை மோக்ஷ கதையைக் கேட்பவர்களுக்கு பகவானுடைய பிரேமை நிறைந்த பக்தி கிடைக்கிறது, பின்அவனுக்கு தர்ம, அர்த்த, காமமெனும் மூவகைச் செல்வங்களும் கிடைக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமா?
ஶ்ரீ கர்க ஸம்ஹிதை அத்தியாயம் 13
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர், பூதனையை இதயத்தில் குடி கொண்டிருக்கும் பொய்யான ஆன்மீக குருவிற்கு ஒப்பிடுகிறார். மற்றவரின் பார்வைக்கு பூதனை கிருஷ்ணரின் ஆரோக்கியத்திற்காக அவருக்கு பாலூட்ட முனைந்ததாக தோன்றலாம், ஆனால் அவளது நோக்கம் கிருஷ்ணரைக் கொல்ல வேண்டும் என்பதே. அதுபோலவே, போலி குருமார்கள் கிருஷ்ணரின் மீதான ஆரோக்கியமான தூய அன்பை வளர்ப்பதற்கு உதவுவதுபோல காணப்பட்டாலும், பிறரை புலனுகர்ச்சி விஷயங்களில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பூதனையுடன் ஒப்பிடப்படுகின்றனர்.
பூதனை தவறான நோக்கத்தில் கிருஷ்ணரை அணுகினாலும், அவள் தாய் போன்ற ஒரு சேவையைச் செய்ததால், அதை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்ட கிருஷ்ணர், உடனடியாக பூதனைக்கு ஆன்மீக உலகில் தாய்க்கு சமமான ஸ்தானத்தை அருளினார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பூதனையை கிருஷ்ணர் வதம் செய்த இந்த லீலையை கேட்பவர்கள் நிச்சயமாக கோவிந்தரின் மீதான பற்றுதலை அடைவார்கள் ( ஶ்ரீமத் பாகவதம் 10.6.44 )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment