கோவர்தன பர்வதத்தின் சக்திகளும் மகிமைகளும்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஒருமுறை, விஜயா என்ற பிராமணர், தன் முன்னோர்களுக்கும் சாதுக்களுக்கும் செய்யவேண்டிய காரியங்களை செய்வதற்காக, பாவங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய புண்ணிய ஸ்தலமான மதுராவிற்கு சென்றார். தான் வந்த வேலை முடிந்தவுடன், அங்கிருந்து புறப்படுகையில், கோவர்தன கிரியிலிருந்து ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வைத்துக்கொண்டார். ஒவ்வொரு காடாக கடந்து ஒரு வழியாக வ்ரஜ பூமியை நீங்கியபோது, ஒரு ராட்சசன் தன் முன் வருவதை உணர்ந்தார்.
மூன்று தலைகள், மூன்று உடம்புகள், ஆறு கரங்கள், ஆறு கால்கள், பெரிய வாய் மற்றும் மூக்கு என்று, பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தான் அந்த ராட்சசன். அவனுடைய கரங்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன; அவனுடைய ஏழு முழங்கை நீல அளவுள்ள நாக்கு முன்னும் பின்னும் ஆடியது; அவனது கண்கள் சிவந்திருந்தன; அவனுடைய பற்கள் மிகவும் கோரமாக இருந்தது. பிராமணரை விழுங்குவதற்காக அவன் முன்னேறி வந்தான். பிராமணர் செய்வதறியாது, அவனை கோவர்தன கிரியின் கல்லை கொண்டு தாக்கினார். அந்த ராட்சசன் தன் உடலை விட்டான்.
அந்த உடலிலிருந்து, தீடீரென்று ஒரு அழகான ரூபம் தோன்றியது. அழகிய தாமரை இதழ் போல் உள்ள கண்கள், மஞ்சள் ஆடைகள், மலர் மாலை, கிரீடம், குண்டலங்கள், புல்லாங்குழல் மற்றும் கம்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட அந்த முக்தியடைந்த ஆத்மா ஒரு மன்மதனை போல் அழகாகவும், பகவான் கிருஷ்ணரை போன்றும் காட்சியளித்தது. அந்த ஆத்மா, பிராமணருக்கு தன் மரியாதை கலந்த வணக்கங்களை தெரிவித்தது. பின்னர், "பிராமணர்களில் சிறந்தவரே! நீங்கள் என்னுடைய முக்திக்கு வழிவகுத்துளீர்கள். என்னை ஒரு ராட்சசனின் உடலிலிருந்து விடுவித்து விட்டீர்கள். இந்த கல் என் மீது பட்டதால் நான் சௌபாக்கியம் அடைந்தேன். இதற்கு காரணம் நீங்கள் தான்" என்று பிராமணரிடம் கூறியது.
இதை கேட்ட பிராமணர், "உனது வார்த்தைகள் ஆச்சர்யமளிக்கின்றது. உன்னை விடுவிக்கும் அளவிற்கு என்னிடம் எந்த சக்தியும் இல்லை. இந்த கல்லினால் எவ்வாறு நீ விடுதலை அடைந்தாய் என்பதும் எனக்கு தெரியவில்லை. தயை கூர்ந்து எனக்கு விளக்கு" என்று கூறினார்.
ஸ்ரீ சித்த உவாச
கிரிராஜோ ஹரே ரூபம் ஸ்ரீமான் கோவர்தனோ கிரி
தஸ்ய தர்ஷன மாத்ரேன நரோ யாதி க்ரிதார்த்ததாம்
அந்த ஆத்மா கூறியது,
"மலைகளுக்கெல்லாம் அரசரான கோவர்தன கிரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபம் ஆகும். அதை பார்ப்பதாலேயே, ஒருவர் தன் வாழ்வின் உன்னத இலக்கை அடைய முடியும்".(10.15)
கந்தமாதன யாத்ராயாம் யத் பாலம் லபதே அரா:
தஸ்மாத் கோடி குணம் புண்யம் கிரி ராஜஸ்ய தர்ஷனே
"கோவர்தன கிரியை ஒருவர் தரிசிப்பதாலேயே, கந்தமதன மலையை தரிசித்த புண்ணியம் போல் லட்சம் மடங்கு அதிக புண்ணியம் கிட்டும்".(10.16)
பஞ்ச வர்ஷா சஹஸ்ராணி கேதாரே யத் தப: பலம்
டச் ச கோவர்தனே விப்ர க்ஷனென லபதே நர:
"பிராமணரே! கேதாரி மலையில் ஐயாயிரம் வருடங்கள் தவம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் கோவர்தன கிரியில் ஒரு நொடி செய்தால் கிடைக்கும்".(10.17)
மலையாதரோவ் சுவர்ண பார தான்ஸயாபி ச யத் பலம்
தஸ்மாத் கோடி குணம் புண்யம் கிரிராஜே ஹி மாசிகம்
"மலேயா மலையில் ஒரு கூடை நிறைய தங்கத்தை தானமளிக்கும் புண்ணியத்தை விட, கோவர்தன கிரியில் ஒரு மாதம் தங்குவதால் கிடைக்கும் புண்ணியம் பல ஆயிரம் மடங்கு அதிகமாகும்".(10.18)
பர்வதே மங்கள - பிரஸ்தே யோ தத்யாதி தேமா - தக்ஷிணாம்
ச யாதி விஷ்ணு ஸாரூப்யம் யுக்த: பாபா சாத்தைர் அபி
தத் பதம் ஹி நரோ யாதி கிரிராஜஸ்ய தர்ஷனாத்
கிரிராஜா சமம் புண்யம் அந்யத் தீர்த்தம் ந வித்யதே
"கணக்கிலடங்காத பாவங்களை ஒருவன் செய்திருந்தாலும், மங்கள மலையில் தங்கத்தை தானமாக வழங்கினால், அவன் பகவான் விஷ்ணுவின் ரூபத்தை அடைவான். இந்த பாக்கியம் கோவர்தன மலையை தரிசிப்பதாலேயே கிடைத்து விடும். கோவர்தன மலையை போல் ஒரு புனித ஸ்தலம் வேறெதுவும் இல்லை".(10.19,20)
ரிஷபாதரோவ் குடாகாதரோவ் கொலொஹாத்ரோவ் தத நர:
சுவர்ண ஸ்ரங்க யுக்தானாம் கவாம் கோடிற் ததாதி யா
மஹா புண்யம் லபெத் சோ அபி விப்ரான் ஸம்பூஜ்ய யத்னத:
தஸ்மால் லக்ஷ - குணம் புண்யம் கிரி கோவர்தனே த்விஜ
"பிராமணரே! ரிஷப, கூடாக, கோலாக மலைகளில் பிராமணர்களை வணங்கி, அவர்களுக்கு பத்து மில்லியன் சுவர்ண கொம்புகளையுடைய பசுக்களை தானமளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட லட்சம் மடங்கு அதிக புண்ணியம், கோவர்தன கிரியை வணங்குவதால் கிடைக்கிறது".(10.21, 22)
ரிஷ்யமுக ஸஹ்யஷ்ய ததா தேவா கிரி புனஹ
யாத்ராயாம் லபதே புண்யம் சமஸ்தாய புவ பலம்
கிரிராஜஸ்ய யாத்ராயாம் தஸ்மாத் கோடி குணம் பலம்
கிரிராஜா சமம் தீர்த்தம் ந பூத்தம் ந பவிஷ்யதி
"ரிஷ்யமுகத்திற்கோ தேவகிரிக்கோ யாத்திரை செல்லும் பிரிவருக்கு கிடைக்கும் பலனை விட லட்சம் மடங்கு அதிக பலன், கோவர்தன கிரிக்கு யாத்திரை செல்வதால் கிடைக்கிறது. கோவர்தன மலையை போல் ஒரு புண்ணிய ஸ்தலம் வேறெதுவும் இல்லை".(10.23, 24)
ஸ்ரீ சைலே தச வர்ஷானி குண்டே வித்யாதரே நர
ஸ்நானம் கரோதி சுக்ரிதி சதா யஜ்ன பலம் லபெத்
கோவர்தனே பூச்ச குண்டே திணைகம் ஸ்நான கர்ன் நர
கோடி யஜ்ன பலம் சாக்ஷத் புண்யம் ஏதி ந சம்சய:
"ஸ்ரீ சைலத்தில் அமைந்துள்ள வித்யாதர குண்டத்தில் பத்து வருடங்களுக்கு தினமும் நீராடினால், நூறு யாகங்கள் செய்த பலனை ஒருவர் அடைகிறார். கோவர்தன கிரியிலுள்ள பூச்ச குண்டத்தில் யாரொருவர் ஒருமுறை நீராடினாலும், ஒரு கோடி யாகங்கள் செய்த பலனை அடைவார்கள். இதை சந்தேகமே இல்லை".(10.25,26)
சித்ராகூடே பயஸ்வினியாம் ஸ்ரீ ராம நவமி தினே
பரியாதரே த்ரிதீயாயாம் வைஷாகஸ்ய த்விஜோத்தம:
குருராத்ரோவ் ச பூர்ணாயாம் நிலாத்ரோவ் துவாதசி தினே
இந்திரகிலே ச சப்தமியாம் ஸ்நானம் தானம் தப: க்ரியா:
தத் சர்வம் கோடி குணிதம் பாவாதிதாஹம் ஹி பாரதே
கோவர்தனே து தத் சர்வம் ஆனந்தம் ஜாயதே த்விஜ
"பிராமணர்களில் சிறந்தவரே! புனித நதிகளில் நீராடுவது, தானமளிப்பது, தவங்கள் புரிவது, புண்ணிய காரியங்கள் செய்வது போன்றவற்றை, ராம நவமி அன்று சித்ரகூடத்திலும், பரியாத்திரையில் விஷாகா மாதத்தில் மூன்றாம் தினத்திலும், குக்குரா மலையில் பௌர்ணமி அன்றும், நீல மலையில் த்வாதசி அன்றும், இந்திரகிலத்தில் சப்தமி அன்றும் செய்வது மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகும். இதன் பலன் பாரத வரஷத்தை அடைவதால் ஒரு கோடி மடங்கு பெருகுகிறது. கோவர்தன கிரியை அடைவதால் எண்ணற்ற மடங்கு பலன் பெருகுகிறது".(10.29,30,31)
கோவிந்தா குண்டே விசாதே யா ஸ்னாதி கிருஷ்ணா மானஸ:
ப்ராப்னோதி கிருஷ்ணா - ஸாரூப்யம் மைத்திலேந்திர ந சம்சய:
"மிதிலையின் தலைவரே! பகவான் கிருஷ்ணரை நினைத்துக்கொண்டு, யாரொருவர் கோவிந்தா குண்டத்தில் நீராடுகிறார்களோ, அவர்கள் பகவான் கிருஷ்ணரை போன்றே நித்தியமான அத்தோற்றத்தை பெறுவார்கள். இதில் சந்தேகமே இல்லை".(10.39)
அஸ்வமேத சஹஸ்ராணி ராஜசூய சதானி ச
மானசி கங்காய துல்யம் ந பவந்தி அதிர நோ கிரௌ
"கோவர்தன கிரியிலுள்ள மானசி கங்கையில் நீராடுவதால் கிடைக்கும் பலன், ஆயிரம் அஸ்வமேத யாகங்களாலும் நூறு ராஜசூய யாகங்களாலும் கூட கிடைக்க பெறாது".(10.40)
"ஓ பிராமணரே! நீங்கள் கோவர்தன கிரியை நீரால் தரிசித்து அதிலுள்ள புனித தீர்த்தங்களில் நீராடியிருக்கிறீர்கள். உங்களை காட்டிலும் அதிர்ஷ்டசாலி வேறொருவர் இருக்க முடியாது. எனது வார்த்தைகளில் நம்பிக்கை இல்லையென்றால் நான் கூறப்போகும் இந்த கதையையும் கேளுங்கள். மிகுந்த பாவங்களை செய்த ஒருவன், கோவர்தன ஸீலையை தொட்டதால் பகவான் கிருஷ்ணரை போன்ற ரூபத்தை அடைந்த கதை இது.
அந்த ஆத்மாவின் வார்த்தைகளை கேட்க கேட்க பிராமணர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார். பிராமணர், "நீ முற்பிறவியில் என்னவாக இருந்தாய்? என்ன பாவம் செய்தாய்? உன்னால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என்று எனக்கு தெரியும். தயவு செய்து விளக்குவாயாக" என்று கேட்டார்.
அந்த ஆத்மா கூறியது, "முற்பிறவியில் நான் ஒரு செல்வச்செழிப்பு மிக்க வைஷியரின் மகன். சிறு வயதிலிருந்தே எனக்கு சூதாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். வளர்ந்த பிறகு, மது அருந்துவது, விலைமாதுகளை தேடி செல்வது என அணைத்து பாவங்களையும் செய்தேன். எனது தாய், தந்தை மற்றும் மனைவி அனைவரும் என்னை கண்டித்த போதிலும் நான் மாறவில்லை. ஒரு நாள் எனது பெற்றோர்களுக்கு விஷம் வைத்து கொன்று விட்டேன். மேலும் எனது மனைவியின் உயிரை வாள் கொண்டு பறித்து விட்டேன். அவர்களுடைய செல்வம் அனைத்தும் எடுத்துக்கொண்டு, எனக்கு பிடித்த விலைமாதுவுடன் அந்த ஊரிலிருந்து புறப்பட்டேன். பின்னர் ஒரு ஈவு இரக்கமற்ற திருடனாக மாறினேன். நூற்றுக்கணக்கான மக்களை திருடுவதற்காக கொன்றேன். மேலும் என்னுடன் வந்த விலை மாதுவை ஒரு கிணற்றில் தள்ளி அவளையும் கொன்றேன். மேலும் நூற்றுக்கணக்கான பிராமணர்கள், ஆயிரக்கணக்கான க்ஷத்ரியர்கள், வைஷ்யர்கள் மற்றும் சூத்திரர்கள் என அனைவரையும் கொன்றேன்.
ஒரு முறை வனத்தில் ஒரு மானை வேட்டையாடி கொண்டிருக்கும்போது, ஒரு பாம்பை மிதித்து விட்டேன். அது என்னை தீண்டியதால் இறந்து விட்டேன். அகோரமான யமதூதர்கள் வந்து என்னை அடித்து இழுத்து சென்றார்கள். கும்பிபாகம் என்னும் கொடூரமான நரகத்தில் ஒரு மன்வந்தரம் முழுவதும் துன்பம் அனுபவித்தேன். பின்னர் ஒரு கல்பம் முழுவதும் என்னை ஒரு பழுக்க காய்ச்சிய ஒரு பெண்ணின் இரும்பு சிலையை கட்டி தழுவ வைத்தார்கள். மிகவும் வேதனை அடைந்தேன். பின்னர் யமதர்மராஜனின் ஆணைப்படி, என்பதினான்கு லட்சம் வகையான நரகங்களிலும் துன்பம் அனுபவித்தேன். அதன் பின்னர் என் கர்மாவிற்கு ஏற்ப பாரத வர்ஷத்தில் பிறந்தேன். பத்து பிறவிகளுக்கு பன்றியாகவும், நூறு பிறவிகளுக்கு புலியாகவும், மேலும் நூறு பிறவிகளுக்கு ஒட்டகமாகவும், மேலும் நூறு பிறவிகளுக்கு எருமையாகவும் பிறந்தேன். அதன் பின்னர் ஆயிரம் பிறவிகளுக்கு பாம்பாக பிறந்தேன். மனிதர்கள் மீண்டும் மீண்டும் என்னை கொன்றனர். இறுதியாக ஒரு பாலைவனத்தில் மிகவும் கோரமான ராட்சசனாக பிறந்தேன்.
ஒரு நாள் ஒரு சூத்திரனின் உடலை தரித்து வ்ரஜ பூமிக்குள் நுழைய முற்பட்டேன். வ்ரிந்தாவனத்திலுள்ள யமுனை நதிக்கு நீரருந்த சென்றேன். அங்கிருந்த பகவான் கிருஷ்ணரின் நண்பர்கள் என்னை அடித்து விரட்டினார்கள். பசியால் பல நாட்கள் வாடிய நான், உங்களை கண்டவுடன் விழுங்குவதற்காக வந்தேன். ஆனால் நீங்கள் என்னை கோவர்தன கிரியின் கல்லை கொண்டு தாக்கியதால், ராட்சச உடலை விடுத்தது முக்தி அடைந்தேன்".
இவ்வாறு அந்த ஆத்மா தன் கதையை கூறி முடித்தவுடன், ஆயிரம் சூரியன்கள் பிரகாசமும், பத்தாயிரம் அஸ்வங்கள் பூட்டப்பட்ட ஒரு ரதம் கோலோகத்திலிருந்து வந்தது. அதில் ஆயிரம் சக்கரங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான பகவானுடைய சகாக்கள் ரதத்தில் இருந்தனர். மணிகளும் வஸ்துக்களும் கொண்டு அந்த ரதம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிராமணரும் அந்த ஆத்மாவும் ரதத்திற்கு முன் வணங்கினர். அந்த ரதத்தில் ஏறிய அந்த கணமே, அணைத்து பௌதிக ஆசைகளும் அந்த ஆத்மாவின் மனதை விட்டு நீங்கியது. அந்த ரதம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடமான கோலாக வ்ரிந்தாவனத்தை
அடைந்தது . அந்த பிராமணர் கோவர்தன கிரிக்கு திரும்பினார். மலைகளின் அரசரான கோவர்தன கிரியின் சக்திகளையும் மகிமைகளையும் இப்போது நன்கு அறிந்திருந்த அவர், கோவர்தன கிரியை வணங்கி சுற்றி வந்தார்.
யா ஸ்ரனோதி கிரிராஜா யசஸ்யாம்
கோப ராஜா நவ கேலி ரஹஸ்யம்
தேவா ராஜா இவை சோ அதிர சம்மதி
நந்தா ராஜ இவை ஷாந்திம் அமுத்ரா
"யாரொருவர், மிகவும் பொக்கிஷமான பகவான் கிருஷ்ணரின் லீலைகள் நிறைந்த கோவர்தன மலையின் மகிமைகளை கேட்கிறார்களோ, அவர்கள் இந்த பிறவியில் தேவேந்திரரை போல் பாக்கியம் செய்தவராகள் ஆவார்கள்; அடுத்த பிறவியில் நந்த மகாராஜாவை போல் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்".(11.26)
(கர்க சம்ஹிதை / ஸ்கந்தம் 3. அத்யாயம் 10 மற்றும் 11)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment