சகடாசுரன் வதம் மற்றும் அவனது முற்பிறவி வர்ணனை


 சகடாசுரன்

🌼🌼🌼🌼🌼🌼🌼


 ஸ்ரீ கர்கர் கூறினார்: 'சௌனகரே! நான் ஸ்ரீகிருஷ்ணனுடைய சிறந்த திவ்ய சரித்திரத்தை வர்ணித்தேன். இதை பக்தியோடு கேட்பவன் பேறு பெற்றவனாகிறான். அவனுக்கு பரம புருஷார்த்தம் கிட்டிவிடுமென்பதில் ஐயமில்லை.


 ஸ்ரீ சௌனகர் கேட்டார்: 'முனிவரே! ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய மங்களமய சரித்திரம் அமுத ரஸத்தால் தயாரிக்கப்பட்டதான சிறந்த இனிய காண்டமாகும். (இனிப்பு பக்ஷணம்) இதை நேரடியாக தங்கள் வாயால் கேட்டு நாங்கள் தன்யமானோம். தவச்செல்வரே, சாதுக்களில் சிறந்தவரான பஹுலாஸ்வ மன்னன் ஸ்ரீகிருஷ்ணரின் பரம பக்தர். அவரது மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருந்தது. இதன் பிறகு அவர் நாரத முனிவரிடம் எந்த விஷயத்தைக் கேட்டார் என்பதைக் கூறியருளுங்கள்.


ஸ்ரீ கர்கர் கூறினார்: 'சௌனகரே! பின் மிதிலை மன்னன் பஹூலாஸ்வன் மகிழ்ச்சியும் அன்பும் ஒருங்கேயடைந்து பரவச நிலையடைந்தார். தர்மாத்மாவான அவர் பரிபூர்ணதம பகவான் ஸ்ரீகிருஷ்ணனை சிந்தித்தவாறு நாரதரிடம் கூறினார்.


பஹுலாஸ்வன் கூறினார்: 'முனிவரே! தாங்கள் மிக உயர்ந்த புண்ணியம் செய்துள்ளீர். தங்கள் சேர்க்கையால் நானும் பெறும்பேறு பெற்றவனானேன். ஏனெனில் பகவத் பக்தர்களின் சங்கம் கிடைத்தற் கரியது, துஸ்ஸாத்யமானது. அற்புத பக்தவத்ஸலனான கண்ணன் இளம்பருவத்தில் மேற்கொண்டு செய்த விசித்திர லீலைகளை எனக்குக் கூறியருள வேண்டும். 


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னா! நீ ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிடித்தமான தர்மத்தைக் கடைப்பிடிப்பவன். நீ கேட்ட வினா சிறந்ததாகும். நிச்சயம் சாதுக்களின் சங்கம் எல்லோருக்கும் நன்மையை அதிகரிப்பதாகும்.


ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணனின் ஜன்ம நக்ஷத்திர நாள் அன்று நந்தராணி யசோதா, கோப-கோபியரைத் தன் வீட்டிற்கு அழைத்து அந்தணர்கள் கூறியபடி மங்கள காரியங்களைச் செய்வித்தார். அச்சமயம் சியாம சுந்தர பாலன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சிவப்பு வண்ண ஆடை அணிவிக்கப்பட்டது. அங்கங்களில் தங்கமய அணிகளால் அலங்கரிக்கப்பட்டது. அவரை மடியில் எடுத்துக்கொண்ட தாயார் மலர்ந்த தாமரைபோன்ற அழகிய அவரது கண்களுக்கு மை தீட்டினார். கழுத்தில் புலிநகம் சேர்ந்த சந்திரஹாரம் அணிவித்தார். தேவதைகளை வணங்கி அந்தணர்களுக்குச் சிறந்த தானங்கள் அளித்தார். பின் யசோதா தன் செல்வனைத் தொட்டிலில் இட்டார். அந்த நல்ல நாளில் ஒவ்வொரு கோபியையும் வரவேற்றார். அந்த மங்கள பவனத்தில் அன்று ஏராளமான கோபர்கள் தொடர்ந்து வந்துபோய்க் கொண்டிருந்ததால் அவர்கள் சேவையிலேயே ஈடு பட்டிருந்ததால் தன் குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்க இயலவில்லை.


அதே நேரம் பாவாத்மாவான கம்சன் அனுப்பிய ஒரு அரக்கன் வந்தான். அவன் பெயர் உத்கசன். அவன் வண்டியில் - பால், தயிர்ப் பானைகள் வைக்கப்பட்டிருந்த வண்டியில் உட்கார்ந்தான். குழந்தையின் தலையில் அந்த சக்கரத்தைத் திருப்பி வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடலானான். இதற்குள் ஸ்ரீ கிருஷ்ணன் அழுதழுது அந்த சகடத்தைக் காலால் உதைத்தார். அந்தப் பெரிய வண்டி தூள்தூளாகி அரக்கன் இறந்து கீழே வந்து விழுந்தான். அத்தகைய நிலையில் அவன் வாயுமயமான உடலைவிட்டு மாசற்ற தெய்வீக உடல் பெற்றான்; ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி நூறு குதிரைகள் பூட்டப்பட்ட தெய்வீக விமானத்தில் அமர்ந்து பகவானுடைய சொந்த தாமமான (இடம்) கோலோகத்திற்குச் சென்றுவிட்டான். அச்சமயம் வ்ரஜ வாசிகளான கோப-கோபியர் அனைவரும் ஒன்றாக அங்கு வந்து சிறுவர்களிடம் வ்ரஜ குமாரர்களே! இந்த சகடம் தானாகவே விழுந்துவிட்டதா? அல்லது யாராவது இதை வீழ்த்தினார்களா? எப்படி இதற்கு இந்த நிலை வந்தது? நீங்கள் அறிந்தால் கூறுங்கள் என்று கேட்டனர்.


சிறுவர்கள் கூறினர்: தொட்டிலில் தூங்கிய இந்த பாலகன் பாலருந்துவதற்காக அழுதபடியே கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அந்தக் கால் வண்டியோடு மோதியது. அதனாலேயே இந்த வண்டி கவிழ்ந்துவிட்டது.


வ்ரஜ பாலகர்களின் இந்தப் பேச்சில் கோப-கோபியருக்கு நம்பிக்கை உண்டாகவில்லை. அவர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து 'மூன்று மாதமான இந்தச் சிறிய குழந்தை எங்கே?இவ்வளவு கனமான இந்த வண்டி எங்கே?' என்று யோசிக்கலானார்கள். குழந்தைக்கு ஏதோ பாலக்ரஹம் பிடித்துவிட்டதோ என்ற ஐயம் தோன்றிவிட்டது யசோதாவிற்கு. ஆகவே அவர் குழந்தையை மடியில் ஏந்தியவாறு அந்தணர்கள் மூலம் முறைப்படி கிரகசாந்தி செய்வித்தார். அதில் அந்தணர்களை, சிறந்த தானத்தால் திருப்தியடையும்படி செய்தார்.


பஹுலாஸ்வன் கேட்டான்: 'முனிவரே! உத்கசனெனும் இந்த அரக்கன் முற்பிறவியில் எத்தகைய புண்ணிய கர்மம் செய்ததன் பலனாக ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருவடி ஸ்பரிசத்தைப் பெற்று அக்கணமே மோக்ஷத்தை அடைந்தான்?


ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மிதிலேஷ்வரா! அந்த உத்கசன் முற்பிறவியில் ஹிரண்யாக்ஷனுடைய மகனாயிருந்தான். ஒருநாள் அவன் லோமஷ் முனிவரின் ஆச்ரமத்திற்குச் சென்று அங்கிருந்த மரங்களைப் பொடியாக்கலானான். பருமனான - மஹா பலசாலியான உத்கசனைக் கண்ட அந்தண ரிஷி கோபத்துடன் மூட மதியாளனே, நீ உடலற்றவனாகக் கடவாய் என்று சாபமளித்து விட்டார். அந்த கர்ம பலனாய் அவனது சரீரம் பாம்பு தோலுரிப்பதுபோல கீழே விழுந்துவிட்டது. அதைக்கண்ட அரக்கன் முனிவரின் திருவடிகளில் வீழ்ந்தான்.


உத்கசன் கூறினான்: 'முனிவரே! தாங்கள் கருணைக் கடலானவர். எனக்கு அருள்புரியுங்கள். நான் தங்களுடைய பெருமையை அறியாதவன். எனக்கு என் உடலைத் தாருங்கள்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னா! அந்த வேண்டுதலில் முனிவர் மகிழ்ந்துவிட்டார். பிரம்மாவின் நூறு நீதிகளைக் கண்டவர் - அதாவது நூறு பிரம்மாக்கள் இவரது வாழ்நாளில் இருந்து முடிந்துவிட்டனர். அத்தகைய சாதுவின் கோபம்கூட வரமளிப்பதாகி விடுகிறது என்றால், அவரது வரம் மோசமளிப்பதனால் கேட்க வேண்டுமா?


லோமஷ் கூறினார்: 'சாக்ஷுஷ மன்வந்தரம் வரை உன் உடல் வாயுமயமாகவே இருக்கும். அதன்பின் வைவஸ்த மன்வந்தரத்தில் (28-வது துவாபர யுக முடிவில்) ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய திருவடி ஸ்பரிசத்தால் உனக்கு முக்தி கிடைக்கும்.


ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: மேற்கூறிய வரமளிப்பதான சாபத்தின் காரணமாக, லோமஷரின் பிரதாபத்தால் உத்கசனும் பகவானுடைய பரமபதத்திற்கு அதிகாரியாகி விட்டான். வரமும் சாபமும் அளிப்பதில் பூரண சுதந்திரமுடைய அத்தகைய சிறந்த சாதுக்களுக்கு என் வணக்கம்.


ஶ்ரீ கர்க ஸம்ஹிதை அத்தியாயம் 14



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



சகடாசுரனை நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் கெட்ட பழக்கவழக்கங்களுக்கும் சோம்பேறித்தனத்திற்கும் பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். கிருஷ்ணர் தொட்டிலை உதைத்தபோது, அதன் இரண்டு சக்கரங்களும் கழண்டு கொண்டன. அதே போன்று, நாம் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரித்தால், பிறப்பு, இறப்பு என்னும் ஸம்ஸார சக்கரமும் கழண்டு விடும் என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.






Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more