🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு சமயம் நந்த மகாராஜாவும் பிற ஆயர்களும் சிவபெருமானை வழிபடுவதற்காகத் தமது குடும்பத்தினருடன் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து அம்பிகா வனம் என்னும் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் சரஸ்வதி நதியில் நீராடி பகவான் விஷ்ணுவின் ஒரு வடிவமான பகவான் சதாசிவனை வழிபட்ட பின்னர் அன்றைய இரவுப் பொழுதை அக்காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் துயில் கொண்டிருந்த பொழுது மிகுந்த பசியுடைய ஒரு பாம்பு அங்கு வந்து நந்த மகாராஜாவை விழுங்கத் தொடங்கியது. ஆபத்தில் சிக்கிக் கொண்ட நந்தமகாராஜா “ஓ, கிருஷ்ணர்! என் மைந்தனே, சரணடைந்த இந்த ஆத்மாவைக் காப்பாயாக” என்று கூக்குரலிட்டுக் கதறினார். நந்தமகாராஜாவின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்த ஆயர்கள் அங்கு கிடந்த மரக் கொம்புகளைக் கொண்டு அப்பாம்பை அடிக்கத் தொடங்கினர். ஆனால் அப்பாம்போ நந்த மகாராஜாவை விடுவதாக இல்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அப்பாம்பினைத் தனது தாமரைத் திருவடிகளினால் தீண்டினார். உடனே அங்கிருந்த பாம்பு மறைந்து அந்த இடத்தில் ஒரு தேவகுமாரன் தோன்றினான்.
(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பரே, தாங்கள் மிக்க எழிலுடன் மிகவும் அற்புதமாகத் தோன்றுகின்றீர். தாங்கள் யார்? யாருடைய பலவந்தத்தினால் நீர் இப்பாம்பு வடிவம் பெற்றீர்?
பாம்பு பதில் கூறியது: நானே நன்கறியப்பட்ட சுதர்ஸனன் என்னும் பெயருடைய வித்யாதரன் ஆவேன். நான் வளமிக்கவனாகவும், எழில் மிக்கவனாகவும் இருந்தேன். நான் எல்லாத் திசைகளிலும், எனது விருப்பம் போல் என்னுடைய விமானத்தில் பறந்த திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒரு முறை ஆங்கிரஸ முனிவரின் சீடபரம் பரையில் வந்த சில முனிவர்களைப் பார்த்தேன். எனது அழகினால் கர்வம் கொண்டு நான் அவர்களை ஏளனம் செய்தேன். நான் செய்த பாவத்தினால் அவர்கள் இந்த இழிவடிவினைப் பெறுமாறு செய்தனர். உண்மையில் எனது நன்மைக்காகவே என்னை அக்கருணை மிகு முனிவர்கள் சபித்துள்ளனர். ஏனென்றால் இப்போது அனைத்து உலகங்களின் தலைவராகிய பரமகுருவின் பாதம் என் மீது பட்டு, அதன் காரணமாக எனது அனைத்துப் பாவங்களும் நீங்கிவிட்டன. எம்பெருமானே, பௌதீக உலகிற்கு அஞ்சி உம்மைச் சரண் புகுந்தவர்களின் அனைத்து பயங்களையும் நீர் அழிக்கின்றீர். உமது பாதம் தொட்டதால் நான் இப்போது முனிவர்களின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றுள்ளேன். ஒ, துன்பங்களை அழிப்பவரே, எனது உலகிற்கு என்னைத் திரும்பிச் செல்ல அருள்கூர்ந்து அனுமதிப்பீராக. ஓ, மகாயோகியே, மகாபுருஷரே, பக்தர்களின் தலைவரே, நான் உம்மைச் சரண் புகுந்தேன். உமது விருப்பம் போல் எனக்குக் கட்டைளையிடுவீராக. ஓ, பிரபஞ்சத்தை ஆள்பவர்களின் பகவானான பரமபுருஷ பகவானே.ஓ, குற்றமற்றவரே, உமது தரிசனத்தால் அந்தணர்களின் தண்டனையிலிருந்து உடனே நான் விடுதலை பெற்றுவிட்டேன். உமது பெயரானது அதனை ஓதுகின்ற வரையும், அவ்வோதுதலைக் கேட்கின்றவர்களையும் தூய்மை செய்கின்றது. அவ்வாறிருக்க உமது தாமரைத் திருவடிகளின் ஸ்பரிசம் எத்தனை அதிகம் நன்மை செய்வதாகும்?
பகவான் கிருஷ்ணரிடமிருந்து இவ்வாறு அனுமதி பெற்ற தேவனான சுதர்ஸனன் அவரைச் சுற்றி வலம் வந்து, வீழ்ந்து வணங்கித் தனது தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான். நந்தமகாராஜாவும் கூட அவரது துன்பத்திலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டார்.
ஸ்ரீமத் பாகவதம் 10.34
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment