🌼🌼🌼🌼🌼🌼🌼
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்து
லீலைகளைக் கேட்பதற்குப் பரீட்சித்து மகாராஜன் ஆவலுடன் காத்திருந்தைக் கண்ட சுகதேவ கோஸ்வாமி,
மிகவும் மகிழ்ந்து, தொடர்ந்து பேசத் துவங்கினார். மூன்று மாதக் குழந்தையாக இருந்த கிருஷ்ணர்
குப்புறத் திரும்ப முயன்ற சமயத்தில், தவழ்ந்து செல்ல முயலும் முன்பாகவே, குழந்தையின்
நல்லதிர்ஷ்டத்திற்காகத் தன் தோழிகளுடன் ஒரு சடங்கைச் செய்ய தாய் யசோதை விரும்பினாள்.
இத்தகைய ஒரு சடங்கு, பொதுவாக, சிறு குழந்தைகளையுடைய மற்ற பெண்களுடன் நடத்தப்படுவதாகும்.
மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த தாய் யசோதை, கிருஷ்ணர் தூங்கி விழுவதைக் கண்டு, வீட்டு
உபயோகத்திற்காக உள்ள சகடம் என்ற ஒரு வண்டிக்கடியில் குழந்தையைப் படுக்க வைத்தாள். குழந்தை
உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், குழந்தைக்கு மங்களச் சடங்கு செய்வது சம்பந்தமான வேறு
வேலைகளில் அவள் ஈடுபட்டிருந்தாள். அந்த வண்டிக்கடியில் ஒரு தொட்டில் இருந்ததுது. அதில்தான்
அவள் குழந்தையைத் தூங்க வைத்தாள். குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று
விழித்துக் கொண்ட குழந்தை, வழக்கமாக எல்லாக் குழந்தைகளும் கால்களை உதைப்பது போல், தன்
சிறு கால்களால் உதைக்கத் துவங்கியது. இவ்வுதையினால் அதிர்ந்துபோன வண்டி பெரும் ஓசையுடன்
உடைந்து விழுந்தது. அதிலிருந்து பொருட்களெல்லாம் கீழேவிழுந்து சிதறின. அருகில் விளையாடிக்
கொண்டிருந்த குழந்தைகள் வண்டி உடைந்ததைப் பற்றி உடனே தாய் யசோதையிடம் அறிவித்தனர்.
எனவே மிகவும் கவலையுடன் மற்ற கோபியர்கள் பின்தொடர் அவள் அந்த இடத்திற்கு விரைந்த சென்றாள்.
தாய் யசோதை உடனே குழந்தையை எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு, தன் முலைப் பாலை
ஊட்டினாள். பிறகு பிராமணர்களின் உதவியுடன் பலவகையான வேதச் சடங்குகள் செய்யப்பட்டன.
குழந்தையின் உண்மையான சொரூபத்தை அறியாத பிராமணர்கள் குழந்தையை ஆசீர்வதித்தனர்.
மற்றொரு நாள், குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு
அமர்ந்திருந்த தாய் யசோதை, திடீரென்று குழந்தை பிரபஞ்சத்தைப் போல் கடப்பதைக் கண்டாள்,
இதனால் ஆச்சரியமடைந்த யசோதை, குழந்தையைக் கீழே வைக்க வேண்டியதாயிற்று. இதற்கிடையில்,
கம்சனின் ஆட்களுள் ஒருவனான திருணாவர்தன் சுழற்காற்றாக அங்கு தோன்றி குழந்தையைத் தூக்கிச்
சென்று விட்டான். அந்த சுழற்காற்றினால் கோகுலம் முழுவதும் புழுகி மண்டலமாக மாறியது.
குழந்தை எங்கு தூக்கிச் செல்லப்படுகிறது என்பதை யாராலும் காண முடியவில்லை. இதனால் கோபியர்கள்
மிகவும் கவலைப்படாடனர். ஆனால் குழந்தையுடன் ஆகாயத்தில் சென்ற அசுரனால் குழந்தையின்
பாரத்தைத் தாங்க முடியாததால் இன்னும் உயரமாகச் செல்ல முடியவில்லை. குழந்தை அவனை இறுக்கமாகப்
பற்றிக் கொண்டிருந்ததால், குழந்தையைக் கீழே எறியவும் அவனால் முடியவில்லை. இவ்வாறு குழந்தையின்
பாரத்தைத் தாங்க முடியாமல் கீழே விழுந்து திருணாவர்தன் உடனே உயிற் துறந்தான். குழந்தையைத்
தூக்கிக் கொண்ட கோபியர்கள் தாய் யசோதையின் மடியில் அவரை வைத்தனர். இவ்விதமாக தாய் யசோதை
ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போனாள். ஆனால் யோக மாயையிவ் வசியத்தினால் கிருஷ்ணர் யார்
என்பதையோ, உண்மையில் என்ன நடந்தது என்பதையோ யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மாறாக,
இத்தகைய ஆபத்திலிருந்து தப்பியதற்காக, குழந்தையின் நல்லதிர்ஷ்டத்தை எல்லோரும் போற்றத்
துவங்கினார். பிறகு, தாய் யசோதையின் மடியிலிருந்த குழந்தை கொட்டாவி
விட்டபொழுது, அவரது வாய்க்குள் முழு பிரபஞ்சத் தோற்றமும் இருப்பதை தாய் யசோதையால் காண
முடிந்தது.
- ஶ்ரீமத் பாகவதம் 10.7
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: குழந்தை கிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் நந்தன் முதலான கோப-கோபியர் அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் எல்லோருடனும் குழந்தையின் நலம் பற்றிக் கூறினார். யசோதா குழந்தை கண்ணனை எடுத்துச் சென்று தன் பாலமுதூட்டி உச்சி முகர்ந்து, புடவைத் தலைப்பால் மார்பில் மறைத்துக் கொண்டு அன்புமோக வசப்பட்டு ரோஹிணியிடம் கூறலானார்.
ஸ்ரீ யசோதா கூறினார்: 'சோதரி/ தெய்வம் எனக்கு இந்த ஒரே மகனை அளித்திருக்கிறது. எனக்கு பல குழந்தைகள் இல்லை. இந்த ஒரு மகனுக்கோ அடிக்கடி பல தீமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று இவன் யமன் (மரணம்) வாயிலிருந்து மீண்டுள்ளான். இதைவிடப் பெரிய வேதனை எதுவாக இருக்கும்? எனவே நான் இப்போது என்ன செய்வது? எங்கு செல்வது? வேறு எங்கு வசிக்க ஏற்பாடு செய்வேன்? செல்வம், உடல், மாளிகை, பலவகை ரத்தினங்கள் இவையனைத்தைக் காட்டிலும் எனக்கு என் மகன் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பது சிறந்ததல்லவா? என் மகன் இந்த அரிஷ்டங்களை வென்றுவிட்டால் நான் ஸ்ரீ ஹரியை பூஜித்து தான, யக்ஞங்கள் செய்வேன், குளம் முதலியவை அமைப்பேன், நூற்றுக்கணக்கான கோயில்களைக் கட்டுவிப்பேன். அன்பே ரோஹிE குருடனுக்குத் தடியைப் போல என் சுகமனைத்தும் இந்த பாலகனையே சார்ந்திருக்கிறது. ஆகவே என் செல்ல மகனை பயமே இல்லாத இடத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னா! அதே சமயம் நந்தபவனத்திற்கு பல வித்வான் அந்தணர்கள் வந்தனர். ஆசனத்தில் அமர்ந்தனர். நந்த-யசோதா முறைப்படி அவர்களை பூஜித்தனர்.
மகா பாக்யவானான அந்தணர்கள் கூறினர், வ்ரஜபதி நந்தா!, வ்ரஜேஸ்வரி யசோதே, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் கவச முதலானவற்றினால் இக்குழந்தையை ரக்ஷிக்கிறோம். இவன் நீண்ட நாள் வாழ்வான்.
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னா! சிறந்த அந்த அந்தணர்கள் தர்ப்பை, புதிய இலை, புனித கலசம், தூய நீர், ருக், யஜுர், சாம வேத தோத்திரங்கள் மற்றும் மிகச் சிறந்த வாழ்த்துக்கள் மூலம் முறைப்படி யாகம் செய்வித்து அக்னி பூஜை செய்வித்தனர். பின் ஸ்ரீகிருஷ்ணனுக்குக் (கீழே குறிப்பிட்ட) கவசம் படித்து காப்பு செய்தனர்.
அந்தணர்கள் கூறினர்: 'தாமோதர பகவான் உன் திருவடியைக் காக்கட்டும். விஷ்டரஸ்ரவா முழங்காலையும் ஸ்ரீவிஷ்ணு தொடைகளையும் ஸ்வயம் பரிபூர்ணதமரான ஸ்ரீ கிருஷ்ணன் உன் நாபியையும் காக்கட்டும். ராதா வல்லபன் உன் இடுப்பையும் பீதாம்பரதாரி உனது வயிற்றையும் காக்கட்டும். பகவான் பத்மநாபன் இதயத்தையும் கோவர்தனதாரி கைகளையும் மதுராபதி முகத்தையும் துவாரகா நாதன் தலையையும் ரக்ஷிக்கட்டும். அசுரர்களை அழிக்கும் பகவான் முதுகையும் சாக்ஷாத் கோவிந்தன் எல்லாப் பக்கங்களிலும் உன்னைக் காக்கட்டும். மூன்று ஸ்லோகங்களுடைய இந்தத் துதியை நிரந்தரம் படிக்கும் மனிதன் பரமசுகத்தை அடைவான். அவன் எங்கும் பயத்தை எதிர்கொள்ள நேராது.
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'பின் நந்தராய் அந்தணர்களுக்கு லக்ஷம் பசுக்களும் பத்து லக்ஷம் தங்கக் காசுகளும் ஆயிரம் புதிய ரத்தினங்களும் லக்ஷம் புதிய ஆடைகளும் அளித்தார். அவர்கள் சென்றபின் நந்தர் ஆயர்களை அழைத்து போஜனம் செய்வித்து மனங்கவர் ஆடையணிகளால் எல்லோருக்கும் கௌரவம் அளித்தார்.
ஸ்ரீ பஹூலாஸ்வன் கேட்டான்: 'முனிவரே! இந்த த்ருணாவர்தன் முற்பிறவியில் எத்தகைய புண்ணிய செயலைச் செய்து சாக்ஷாத் பரிபூர்ணதம பகவான் ஸ்ரீகிஷ்ணனோடு ஐக்யமானான்?
ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மன்னா! பாண்டுதேசத்தில் ஸஹஸ்ராக்ஷன் என்னும் பிரசித்தி பெற்ற அரசன் இருந்தார். அவர் புகழ் எங்கும் பரவியிருந்தது. விஷ்ணு பகவானிடம் எல்லையற்ற சிரத்தை கொண்டவர். தர்மத்தில் ருசியுள்ளவர். யக்ஞத்திலும் தானத்திலும் விருப்பமுடையவர். ஒருநாள் அவர் நர்மதை நதிக்கரைக்குச் சென்றார். கொடிகளும் பிரம்பும் அழகூட்டிக் கொண்டிருந்தன. அங்கு ஆயிரக்கணக்கான பெண்களுடன் ஆனந்தமாக சஞ்சரிக்கலானார். அதேசமயம் துர்வாச முனிவர் அங்கு எழுந்தருளினார். மன்னன் அவரை வணங்கவில்லை. எனவே முனிவர்துர்மதி கொண்டவனே, நீ அசுரனாகி விடு என்று சாபமளித்து விட்டார். அரசன் முனிவரின் திருவடிகளில் விழ அவர் ஸ்ரீகிருஷ்ண பகவானின் உடல் ஸ்பரிசத்தால் உனக்கு முக்தி கிட்டும் என்று வரமளித்தார்.
ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'ராஜன்/ அந்த ஸஹஸ்ரா மன்னனே துர்வாசரின் சாபத்தினால் த்ருணாவர்தனெனும் அசுரனானான். ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருமேனியைத் தீண்டப் பெற்றதால் அவனுக்கு மிகச் சிறந்த மோக்ஷம் (கோலோக தாமம்) கிடைத்துவிட்டது
ஶ்ரீ கர்க ஸம்ஹிதை அத்தியாயம் 14
அதிகமான பௌதிகப் படிப்பை மேற்கொண்டவர்களின் கால்கள் பொதுவாக தரையில் படுவதில்லை, ஆகாயத்தில் மிதப்பதைப் போன்று உணருகின்றனர். இவர்கள் கிருஷ்ணரின் இருப்பை நிராகரித்து வறட்டு தத்துவங்களைப் பேசுகின்றனர். ஆன்மீக ஞானம் ஒருவரை பணிவான சேவையில் ஈடுபடுத்தும், பௌதிக ஞானமோ ஒருவரை ஆகாயத்தில் பறக்கவிட்டு பிறகு குழியில் தள்ளிவிடும். எனவே, பௌதிகப் படிப்பு இந்த உடலைப் பராமரிப்பதற்கு மட்டுமே உதவும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆத்மாவின் நலனுக்காக ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment