கூர்ம அவதாரம்


 கூர்ம அவதாரம் 

வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

🍁🍁🍁🍁🍁🍁🍁



ஒரு முறை துருவாசமுனிவர் நடந்து சென்று கொண்டிருக்கையில், தேவர்களின் அதிபதியான தேவேந்திரர் தன்னுடைய வாகனமான ஐராவதத்தின் மீது சென்றுகொண்டிருப்பதை பார்த்தார். உடனே துருவாசர், தன்னுடைய கழுத்தில் இருந்த ஒரு சாமந்தி பூ மாலையை, அவருக்கு கொடுத்தார். துருவாசரின் இந்த செயலை சிறிதும் மதிக்காத தேவேந்திரர், தன்னுடைய கர்வத்தின் காரணமாக, அந்த மாலையை தன்னுடைய யானையின் துதிக்கையில் வைத்தார். மாலையின் மனம் பிடிக்காத யானை, உடனே அந்த மலையை தரையில் தூக்கி எரிந்து தனது காலால் நசுக்கியது. 


மிகவும் கோபமடைந்த துருவாச முனிவர், "உன்னுடைய ஆணவத்தின் காரணமாக உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் நீ இழப்பாய்", என்று தேவேந்திரருக்கு சாபமளித்தார்.


இந்த சம்பவம் நடந்த சிறிது காலத்திலேயே, தேவலோகங்களின் மீது அசுரர்கள் தாக்குதல் நடத்தினர். துருவாச முனிவரின் சாபத்தினால், தேவர்கள் பெரும் தோல்வியை சந்தித்தனர். வேறு வழியின்றி தேவர்கள், பாற்கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவிடம் தஞ்சமடைந்தரர். மகா விஷ்ணுவை போற்றி வணங்கிய பின்னர், மகா விஷ்ணு அவர்களிடம், "தேவர்களே! உங்களுக்கு வேறு வழி இல்லை. அசுரர்களுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவதாக கூறுங்கள்", என்று கூறிய பிறகு, அதன் மூலம் தனது திட்டத்தை தேவர்களுக்கு விளக்கினார். 



முழுமுதற்கடவுளின் உபதேசங்களைப் பின்பற்றி, அசுரர்களின் அரசனான பலி மகாராஜனுடன் தேவர்கள் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு அசுரர்களும், தேவர்களும் மந்தார மலையை தங்களுடன் எடுத்துக்கொண்டு கடலை நோக்கிக் கிளம்பினர். அம்மலையின் பெரும் பாரத்தினால் தேவர்களும், அசுரர்களும் கலைப்படைந்தனர். மேலும் அவர்களில் சிலர் உண்மையாகவே மரணமும் அடைந்தனர். பிறகு முழுமுதற்கடவுளாகிய விஷ்ணு தமது கருட வாகனத்தின் மீது அமர்ந்தவாறு தோன்றி, அவரது கருணையால் இறந்து போன தேவர்களையும், அசுரர்களையும் மீண்டும் உயிர்ப்பித்தார். பகவான் பிறகு தமது கரங்களுள் ஒன்றினால் மலையைத் தூக்கி கருடனின் மீது வைத்துவிட்டு, அந்த மலையின் மேல் அமர்ந்து கொண்டார். பிறகு அந்த மலை கடல் கடையப்படவிருக்கும் இடத்திற்கு கருடனால் தூக்கிச் செல்லப்பட்டு கடலின் நடுவில் வைக்கப்பட்டது. பிறகு கருடன் அங்கு இருக்கும் வரை, வாசுகியால் அந்த இடத்திற்கு வர முடியாது என்பதால், அங்கிருந்து சென்றுவிடும்படி கருடனுக்கு பகவான் உத்தரவிட்டார்.


அமிர்தம் உற்பத்தி செய்யப்படும்போது அதை தேவர்களும், அசுரர்களும் சமமாகப் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டதும், மத்துக்கு கயிறாகப் பாவிக்க அவர்கள் வாசுகியைக் கொண்டு வந்தனர். முழுமுதற் கடவுளின் திறமையான ஏற்பாட்டினால் பாம்பின் வாய்க்கு அருகிலுள்ள பகுதியை அசுரர்கள் பற்றிக் கொண்டனர். ஆனால் தேவர்கள் அப்பெரிய பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டனர். பிறகு, பெரும் முயற்சியுடன், பாம்பை அவர்கள் இரு திசைகளிலும் இழுக்கத் துவங்கினர். மத்தாக இருந்த மந்தர மலை மிகவும் பாரமாக இருந்ததுடன், நீரினுள் எதனாலும் அது தாங்கிக் கொள்ளப்படாமல் இருந்ததால் அது கடலில் முழுகிவிட்டது. இவ்வாறாக தேவாசுரர்களின் திறமை முறியடிக்கப்பட்டது. பிறகு பரமபுருஷ பகவான் ஓர் ஆமையின் உருவில் தோன்றி, மந்தார மலையைத் தமது முதுகின் மீது தாங்கிக் கொண்டார். 



ஆலகால விஷத்தை சிவபெருமான்  குடித்த லீலை


🍁🍁🍁🍁🍁🍁🍁


அதன் பிறகு கடலைக் கடைதல் பெரும் பலத்துடன் திரும்ப ஆரம்பிக்கப்பட்டது. கடலைக் கடைந்ததன் பலனாக, மிகப்பெரும் அளவு கொண்ட விஷம் உற்பத்தி செய்யப்பட்டது. அவர்களைக் காப்பாற்ற வேறொருவரும் இல்லாததைக் கண்ட பிரஜாபதிகள் சிவபெருமானை அணுகி, அவரிடம் உண்மையான பிரார்த்தனைகள் செய்தனர். ஒருவர் பக்தராக இருப்பதைக் கண்டு சிவபெருமான் மிகவும் திருப்தி அடைந்து விடுவதால் அவர் ஆகதோஷ என்று அழைக்கப்படுகிறார். ஆகவே கடலைக் கடைந்ததால் உற்பத்தியான விணம் முழுவதையும் குடித்து விடுவதற்கு அவர் எளிதில் சம்மதித்து விட்டார். சிவபெருமானின் சக்தியை துர்கா தேவி, அல்லது சிவனின் மனைவியான பவானீ நன்கு அறிந்திருந்ததால், சிவபெருமான் விஷத்தைக் குடிக்க ஒப்புக் கொண்ட போது, அவள் சிறிதும் கலக்கமடையவில்லை. உண்மையில், சிவன் இதற்கு ஒப்புக் கொண்டதைக் கண்டு அவள் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். பிறகு எல்லா இடங்களிலும் பரவியிருந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் திரட்டினார். அதை அவர் தமது கைகளில் எடுத்து குடித்துவிட்டார். விஷத்தைக் குடித்ததும் அவரது கழுத்து நீல நிறமாக மாறியது. ஒரு சிறிய அளவு கொண்ட விஷம் அவரது கைகளிலிருந்து நிலத்தின் மேல் விழுந்தது. இப்படி விழுந்த இந்த விஷத்தினால்தான் இவ்வுலகில் விஷம் வாய்ந்த பாம்புகள், தேள்கள், விஷச்செடிகள் மற்றும் பிற விஷப் பொருட்கள் ஆகியவை உள்ளன.


விஷம் முழுவதையும் சிவபெருமான் குடித்துவிட்டபின், தேவராசுரர்கள் உற்சாகமடைந்து, கடையும் வேலையைத் திரும்ப ஆரம்பித்தனர். இவ்வாறு கடையப்பட்டதும், முதலில் ஒரு சுரபி பசு உற்பத்தியானது. இப்பசுவின் பாலிலிருந்து நெய்யைப் பெற்று, அதைப் பெரும் யாகங்களில் நிவேதனம் செய்வதற்காக அப்பசுவை பெரும் முனிவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்பிறகு எச்சைஹ்ஸ்ரவா எனும் பெயர் கொண்ட குதிரை உற்பத்தியானது. இக்குதிரை பலி மகாராஜனால் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு எங்கும், எத்திக்கிலும் செல்லக் கூடிய ஐராவதமும், மற்ற யானைகளும் தோன்றின. மேலும் பெண் யானைகளும் கூட தோன்றின. கௌஸ்துபம் எனப்படும் இரத்தினமும் உற்பத்தியானது. அதை பகவான் விஷ்ணு எடுத்தும் தமது மார்பின் மீது அணிந்து கொண்டார். அதன்பிறகு, ஒரு பாரிஜாத மலரும், பிரபஞ்சத்திலேயே மிகவும் அழகான பெண்களாகிய அப்ஸரஸ்களும் உற்பத்தி செய்யப்பட்டனர். பிறகு திருமகளாகிய லக்ஷ்மி தேவி தோன்றினாள். தேவர்களும், பெரும் முனிவர்களும், கந்தர்வர்களும் மற்றும் பிறரும் அவருக்குத் தங்களது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்தனர். தமது கணவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரையும் லக்ஷ்மி தேவியால் காண முடியவில்லை. இறுதியாக பகவான் விஷ்ணு, தமது மார்பின் மீது நிரந்தரமாக குடிகொள்வதற்காக அவருக்கு ஓரிடத்தைக் கொடுத்தார். லக்ஷ்மி மற்றும் நாராயணரின் இச் சேர்க்கையால், தேவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் உட்பட அங்கிருந்த அனைவரும் மிகவும் திருப்தியடைந்தனர். ஆனால் திருமகளாகிய லக்ஷ்மியால் அலட்சியம் செய்யப்பட்டதால் அசுரர்கள் மிகவும் விகாரமடைந்தனர். பிறகு குடிப்பதற்குரிய தேவதையான வாருணீ தோன்றினாள். பகவான் விஷ்ணுவின் கட்டளைப்படி அசுரர்கள் அவளை ஏற்றுக் கொண்டனர். பிறகு அசுரர்களும் தேவர்களும் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் மீண்டும் கடையத் துவங்கினர்.


நாளை .. .


பகவான் தன்வந்திரியின் தோற்றம் மற்றும் மோகினி அவதாரம்.


தொடரும்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more