சாட்சி கோபாலன்


 சாட்சி கோபாலன்


🍁🍁🍁🍁🍁🍁🍁


முன்பு ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் வித்யா நகரம் என்ற ஊரில் இரண்டு அந்தணர்கள் வசித்து வந்தனர். இருவரும் ஒன்றாக க்ஷேத்ராடனம் செய்தனர். கயா, காசி, பிரயாகை, மதுரா இப்படி சென்றவர்கள் பன்னிரெண்டு ஆரண்யங்களையும்  விருந்தாவனத்தில் உள்ள கோவர்த்தன மலையையும் சென்று சேவித்தார்கள். 


யமுனை நதியின் பல படித்துறைகளில் நீராடிய பிறகு இருவரும் விருந்தாவனத்திற்கு வருகை தந்து கோபாலனின் கோயிலைக் கண்ணுற்றார்கள்.  . கோபாலனின் கோயில்  பிரம்மாண்டமானது.பூஜையோ  அதி பகட்டானது. கோபாலனின் அர்ச்சாவதார அழகு அந்தணர்களை கொள்ளை கொண்டது. அவர்கள் இருவரும் இந்தக் கோயிலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கினார்கள்


இந்த இருவரில் ஒருவர் வயதானவர், மற்றவர் இளைஞர் இளைஞர் முதியவருக்கு உதவியாக இருந்தார். தனக்கு அலுப்பு சலுப்பு இல்லாமல் பணிவிடை செய்யும் இளைஞனைப் பார்த்து முதியவர் பூரிப்படைந்தார். "இளைஞனே. நீயில்லாமல் போனால் எவ்வளவு திண்டாடியிருப்பேன்! துளி கஷ்டம் கூட எனக்குத் தெரியவில்லையே" என்று இளைஞனை மெச்சிப் பேசினார் அந்த மூத்த அந்தணர்.


இளைஞனுக்கு என்ன கொடுத்தால் சரியாய் இருக்கும் என்று யோசித்த பிறகு கடைசியில் தன் மகளை அவனுக்கு கன்னிகா தானம் செய்து தருவதாய் வாக்களித்தார்


இதைக் கேட்ட இளைஞன் திடுக்கிட்டான். "முதியவரே, நீரோ செல்வச் சீமான், படித்தவர், நானோ வறியவன், படிப்பறிவில்லாதவன், ஆகையால் உங்கள் பெண்ணுக்கு ஏற்ற மணமகன் நான் அல்லன். நடக்கமுடியாததை ஏன் யோசித்துப் பார்க்கிறீர்? பகவான் பெயரைச் சொல்லி உமக்கு பணிவிடை செய்தேன். அந்தணருக்கு பணிவிடை செய்யப்படும் போது பிரபு கிருஷ்ணர் உள்ளம் குளிர்கிறார். பகவான் மனம் குளிர்ந்தால் பக்தனின் பக்திப் பெருக்கு பன்மடங்கு கூடுகிறது . இவ்வாறு வயதில்  இளையவனின் வார்த்தைகள் முதியவர் வியக்கும் வண்ணம் இருந்தது..


முதியவர் இளைஞரிடம் "இளைஞனே, என் வார்த்தைகளை சந்தேகிக்காதே, நான் முன்னமேயே முடிவெடுத்தபடி உனக்கு என் பெண்ணை கன்னிகா தானம் செய்து கொடுப்பது நிச்சயம்" என்றார் விடாப்பிடியாக .


இளைஞன் தன் தரப்பு வாதத்தை தர்க்க ரீதியாக பெரியவர் முன்பு பொழிந்தான். பெரியவரோ பெண்டாட்டி பிள்ளை உற்றார் உறவினர்களுடன் கூடியவர். அவர்களை கலந்தாலோசிக்காமல் எங்ஙனம் அவரால் இந்த இளைஞனுக்கு. தன் பெண்ணை கன்னிகா தானம் செய்து தர முடியும்! "இப்படித்தான் பீஷ்மகன் தன் மகள் ருக்மிணியை பகவான் கிருஷ்ணருக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க விரும்பினான். ஆனால் ருக்மிணியின் அண்ணன் ருக்மி குறுக்கே நின்றதால் முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுக்கமுடியாமல் போயிற்று" இப்படியாக இளைஞன் ஆணித்தரமாகவும் அழகாகவும் பேசினான்.


முதிய பிராமணர் கூறினார், "என் மகள் எனது சொந்த சொத்து. என்னுடைய சொத்தினை யாருக்கேனும் வழங்குவதற்கு நான் முடிவு செய்தால், எந்த சக்தியினால் என்னைத் தடுக்கவியலும். அன்புள்ள இளைஞரே, நான் என் மகளை உங்களுக்கு தானம் வழங்குவேன், மற்றவர்களின் நிலையைப் புறக்கணிப்பேன். இதில் என்மீது சந்தேகம் வேண்டாம்;


பெரியவரின் இந்த முடிவு உறுதியானதென்றால் கோபாலன் சந்நிதிக்கு வந்து சத்தியம் செய்வீர்களா ? என்று இளைஞன் கேட்டான்.


பெரியவர் ஒப்புக்கொண்டார். இளைஞன் கோபாலனின் சந்நிதியில் பெரியவர் முன்னிலையில்."பகவானே நீரே எமது சாட்சி !  பிற்பாடு தேவைப்பட்டால் என் பொருட்டு சாட்சியளிக்க உம்மை அழைப்பேன்" என்றான் இளைஞன்.


பின்னர் இந்த இரண்டு அந்தணர்களும் ஊர் திரும்பினர் பயணத்தின் இறுதிக் கட்டம் வரை முதியவரை தன் ஆன்மீக வழிகாட்டி போல் நடத்தினான் இளைஞன்,


வித்யா நகரம் திரும்பிய இருவரும் தத்தம் இல்லங்களுக்கு சென்றார்கள், சில நாட்கள் சென்ற பின்னர் வயோதிக அந்தணன் நினைத்துப் பார்த்தார். "அட்டா புண்ணிய க்ஷேத்திரத்தில் அல்லவா அந்த அந்தண இளைஞனுக்கு வாக்குக் கொடுத்தேன், சொன்னது போல் நடந்து கொள்ள வேண்டுமே. இப்போதே போய் நடந்த விஷயத்தை பெண்டாட்டி பிள்ளைகளிடம் சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று. எண்ணினார்.


ஒருநாள் பெரியவர் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து கோபாலன் சந்நிதியில் நடந்தவற்றை கூறினார். இதைக்கேட்ட பிராமணனின்  குடும்பத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்மாதிரி வாக்குறுதி எதையும் மீண்டும் அளிக்காமல் இருக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினார்கள்.


போயும் போயும் அந்த தரித்திரனுக்கு உம் பெண்ணைக் கொடுத்தால் உங்கள் அந்தஸ்து என்னாகும் என்று யோசித்துப் பார்த்தீர்களா? மக்கள் காரி உமிழமாட்டார்களா?" என்று அனைவரும் கேட்டனர்.


கிழவரிடம் சத்தியத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற அச்சமே ஒட்டிக் கொண்டிருந்தது. கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் காற்றில் பறக்கவிடுவதா? வருவது வரட்டும். அந்த எழைப் பிராமண இளைஞனுக்கே கன்னிகா தானம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்க்கலாம், என்று பெரியவர் கொஞ்சம் பிடிவாதம் பிடித்தார். கூடியிருந்த உறவினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்த சம்பந்தத்தை முடித்தால் அவருடன் தங்களுக்குள்ள உறவை அறுத்துக் கொள்ளப்போவதாகப் பயமுறுத்தினார்கள், பெரியவரின் மனைவியும் மைந்தர்களும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாகப் பயமுறுத்தினர்.


வாக்குக் கொடுத்த இளைஞனுக்கு என் பெண்ணை மணம் முடித்து கொடுக்காவிட்டால், அவன் கோபாலனை அல்லவா சாட்சிக்கு அழைப்பான், நடந்ததை கோபாலன் சாட்சி கூறினால் என் பெண்ணை இளைஞன் திருமணம் செய்து கொண்டு விடுவான் என்று நம்பினார் பெரியவர்.


பெரியவரின் மைந்தன் கூறினான்: "கோபாலன் சாட்சியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் எங்கேயோ தூரத்தில் இருக்கிறாரே மெனக்கெட்டு சாட்சி சொல்வதற்காக இங்க வரப்போகிறாரா என்ன ஏன் கவலைப்படுகிறீர்கள்? இம்மாதிரி ஒரு வாக்குறுதியை எங்கே எப்போது கொடுத்தேன் என்று கூறத் தேவையில்லை. வாக்குறுதி கொடுத்ததாக நினைலில்லை என்று சொன்னாலே போதும், மீதி விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலாக மைந்தன் கூறினான். என்ன செய்வதென்று அறியாத பெரியவர் கோபாலனின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தார். 


மறுநாள் இது பற்றியே பெரியவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த இளைஞன் வந்தான். பெரியவரின் காலில் வீழ்ந்து வணங்கிய பிறகு அவர் தனக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவு படுத்தினான்.


பெரியவர் மௌனம் சாதித்தார் அவரது மைந்தன் கையில் தடியுடன் வந்து இளைஞனிடம். " இழிந்தவனே ! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?" என்று பொரிந்து தள்ளினான். எங்கே பெரியவரின் மகன் தன்னை அடித்து விடுவானோ என்று பயந்த இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடினான். 



மறுநாள் ஊர் மக்களை அனைவரையும் ஓன்றுகூட்டிய இளைஞன், பஞ்சாயத்திற்கு ஏற்பாடு செய்தான். பஞ்சாயத்தார்கள் பிராமணனையும் அவரது குடும்பத்தினரையும்  அழைத்து விசாரணை செய்தனர். 


சபையோர் முன் இளைஞன், பெரியவர் தனக்கு பெண் தருவதாக கோபாலனின் முன் வாக்கு தந்துவிட்டு இப்போது மறுப்பதாக பெரியவர் மேல் பற்றி புகார் கூறினான். பஞ்சாயத்தார்கள் அவரிடம் தீவிரமாக விசாரித்தார்கள். தனக்கு எப்போது வாக்கு கொடுத்தோம் என்று சரியாக நினைவில்லை என்று பெரியவர் சமாளித்தார்..


இந்த சமயத்தில் பெரியவரின் மகன் பேசினான். "க்ஷேத்ராடனம் செய்கையில் என் தகப்பனார் தன்னுடன் ஏராளமான பணத்தை எடுத்துச்சென்றார். இந்த இளைஞன் தான்,  என்  தகப்பனாருடன் சென்றான், அவருடைய பணத்தை எடுத்துக் கொள்ள நினைத்த இவன் அவருக்கு ஊமத்தம்பூவை எதிலோ கலந்து கொடுத்து விட்டான், இதனால் என் தந்தை பித்து பிடித்தவராகி விட்டார். பிரக்ஞை திரும்பியதும் அவருடைய பணத்தை திருடன் திருடியதாக அவருக்கு கதை கட்டிவிட்டான் இந்த நீசன், இப்போது, என் தந்தை இவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக வாக்களித்ததாக கூறுகிறான். இங்கு குழுமியிருக்கும் நீங்கள் கண்ணியவான்கள். நீங்களே சொல்லுங்கள் என் சகோதரியை இந்த தரித்திரனுக்குக் கொடுப்பது சரியாகுமா என்று ?


பெரியவரின் மைந்தன் கூறியதைக் கேட்ட சபையினர் ஏழ்மை காரணமாக இளைஞன். இப்படியும் செய்திருக்கலாம் என்ற எண்ணலாயினர்.


"நாட்டாரே நல்லோரே நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள், உங்களை நம்ப வைப்பதற்காக இவருடைய மகன் இப்படி பேசுகிறான். உண்மை என்னவென்றால் என் சேவையில் மகிழ்ந்த இந்த வயோதிக பிராமணன் எனக்கு தன் பெண்ணை மணமுடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார், நான் அவருக்கு மருமகனாக ஆகும் தகுதி என்னிடம் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே சொன்னேன். பெரியவர் கேட்கவில்லை. அவருடைய வாக்குறுதியை நம்புமாறு பெரியவர் என்னிடம் திரும்பத் திரும்பச்சொன்னார். அவருடைய உறவினர்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று நான் அப்போதே சொன்னேன் நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காததால் அவரை கோபாலன் சந்நிதியில் நின்று சத்தியம் செய்து தருமாறு கோரினேன்" "இதன் பின்னர் பகவானிடத்தில் நான் முறையிட்டேன் பிற்காலத்தில் இந்த பிராமணன் எனக்குப் பெண் தராவிட்டால் உன்னை நான் சாட்சியாக அழைப்பேன் இப்படி நான் பகவானை சாட்சியாக்கினேன். இந்த உலகமே அவரது மாட்சிமைக்கு சாட்சி. இவ்வாறு இளைஞன் கூறியதைக் கேட்ட முதியவர் கோபாலன் சாட்சி சொல்லவரும் பட்சத்தில் தான் வார்த்தையைக் காப்பாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார்.


இது சரியான ஏற்பாடு" என்று கூறினான் பெரியவரின் மைந்தன் பகவான் கோபாலன் கருணாமூர்த்தியானதால் இங்கு நிச்சயம் எழுந்து என் வார்த்தையைக் காப்பாற்ற உதவுவான்" என்று பெரியவர் நினைத்தார். கோபாலனாவது வருவதாவது, நடக்கிற காரியமா இது?" என்று நினைத்தான் தெய்வ நம்பிக்கையில்லாத தனயன். தகப்பனும் தனயனும் இதற்கு ஒப்புக் கொண்டனர். தாளில் இந்த உறுதி மொழியை எழுதித் தருமாறு அந்தண இளைஞன் வேண்டினான், சாட்சியிருப்பதால் வார்த்தை மாறமாட்டார்களே என்ற நம்பிக்கைதான். சமரசம் செய்ய வந்தவர்கள் இரு தரப்பினரிடமும் இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். பெரியவர் சொன்ன சொல் தவறாதவர் என்றும் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்றும் தனக்குத் தோன்றுவதாக பிராமண இளைஞன் கூறினான். எங்கே தன் உறவினர்கள் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் முதியவர் இப்படிப் பேசுவதாக எண்ணினான். எனவேதான் கடவுளிடம் சாட்சி வேண்டிக் கேட்டுக் கொண்டானாம். பகவான் கருணாமூர்த்தியாயிற்றே. அவர் விரும்பினால் இங்கு வரக்கூடும் என்று சில தெய்வ நம்பிக்கையற்ற இளைஞர்கள் கிண்டலடித்தார்கள். 


இதன் பின்னர் இளைஞன் விருந்தாவன் புறப்பட்டான் கோபாலன் விக்ரகத்தின் முன் விழுந்து நடந்ததைப் புலம்பினான். பகவானே பிராமணர்களை இரட்சிப்பவன் நீ. கருணையும் கொண்டவன், உன் முன் நாங்கள் இரண்டு அந்தணர்கள் வழக்கு கொணர்ந்திருக்கிறோம். எங்கள் கலாசாரத்தை காப்பாற்றுவாயாக, எனக்கு பெரியவரின் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லை. சொன்ன வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை என்பதே என்னை புண்படுத்துகிறது. எல்லாமறிந்த பகவானே, இந்த வழக்கில் நீ தான் சாட்சி. உண்மை தெரிந்தவன் அதை சொல்லாமல்விட்டால் பாவாத்மாவாகிறான்.


விக்ரகமாக இருக்கும் பகவான்  கோபாலன்  பேசினார். "என் அருமை பிராமணா, ஊர் திரும்பி பஞ்சாயத்தை கூட்டியதும் என்னை நினை. நான் நிச்சயம் அங்கு வந்து சாட்சி சொல்வேன். இப்போதே என்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதமாக கூறினான் இளைஞன்


"எங்காவது விக்ரம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்வதை கேள்விப்பட்டிருக்கிறாயா"  என்று பகவான் கேட்டார்.


"உண்மைதான், ஆனால், நீங்கள் வெறும் கற்சிலையல்ல; நீங்கள் புருஷோத்தமராகிய மூல முழுமுதற் கடவுள்.  நீங்கள் நந்த மஹாராஜாவின் மகன். நீங்கள் அர்சா விக்ரகமாக இருந்து  பேச முடியும் போது சாட்சி சொல்ல என்னுடன் வரவும் முடியும்.

   

இளைஞனின் பிடிவாதத்தைப் பார்த்த கோபாலன் தான் அவனை பின் தொடர்ந்து வருவதாகவும், ஆனால் எக்காரணம் கொண்டும் தன்னை திரும்பிப் பார்க்கக்கூடாதென்றும், அப்படி திரும்பிப் பார்த்தால்  நகராமல் அவ்விடத்திலேயே நின்று விடுவேன் என்று பகவான் நிபந்தனை விதித்தார், பின்னால் தான் வருவதை தன் கால் கொலுசு ஒலியை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.


மறுநாள் காலை இளைஞன் கோபாலனிடம் விடைபெற்று தன் சொந்த ஊர் புறப்படத் தயாரானார். கோபாலன் கொலுசு ஒலி எழுப்பி பின்னே சென்றார், இளைஞனுக்குத் மிகவும் திருப்தி. கடைசியில் ஊர் எல்லையை அடைந்ததும் இளைஞன் ஊர் மக்களிடம் இந்த சந்தோஷச் செய்தியை சொல்லலாம் என்று நினைத்தான். "நீ போய் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வரவும். நான் இவ்விடமே நிற்பேன்  என்றார் கோபாலன்.


இளைஞன் ஊர் மக்களிடம் கோபாலன் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிவித்ததும். பகவான் கோபாலனை காண ஊரே திரண்டது. பகவான் உண்மையிலேயே நின்று கொண்டிருப்பதைக் கண்டபோது அவர்கள் அனைவரும் தங்களது மரியாதைக்குரிய வணக்கங்களை அர்ப்பணித்தனர்.



மக்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, கோபாலரின் அழகைக் கண்டு பேரானந்தமடைந்தனர். அவர் அங்கே உண்மையிலேயே நடந்து வந்துள்ளார் என்பதைக் கேள்வியற்று அவர்கள் அனைவரும் வியப்பற்றனர்.அதன் பின்னர், மிகவும் மகிழ்ச்சியுற்ற மூத்த பிராமணர் உடனடியாக கோபாலரின் முன்வந்து ஒரு கம்பைப் போன்று விழுந்தார். இவ்வாறாக, எல்லா நகர மக்களின் முன்னிலையில், முதிர்ந்த பிராமணர் தமது மகளை இளம் பிராமணருக்கு கன்யாதானம் செய்தார் . அதற்கு பகவான் கோபாலர் சாட்சியாக இருந்தார்.. திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு, இரண்டு பிராமணர்களிடமும் பகவான் தெரிவித்தார், “பிராமணர்களான நீங்கள் இருவரும் பிறவிதோறும் என் நித்திய சேவகர்களாவீர்.


பகவான் தொடர்ந்தார், “நான் உங்கள் இருவருடைய வாய்மையினால் மிகவும் திருப்தியடைந்துள்ளேன். இப்போது நீங்கள் ஏதேனும் வரம் கேட்கலாம் இவ்வாறாக, பெரும் ஆனந்தத்துடன் இரு பிராமணர்களும் ஒரு வரத்தினை யாசித்தனர்.


பிராமணர்கள் கூறினர், "நீங்கள் உங்களுடைய சேவகர்களிடம் எவ்வளவு கருணையுள்ளவராக இருக்கிறீர்கள் என்பதை உலகிலுள்ள எல்லா மக்களும் அறியும் பொருட்டு நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும்.


பகவான் கோபாலர் அங்கேயே தங்கினார், இரு பிராமணர்களும் அவரது தொண்டில் ஈடுபட்டனர் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு வெவ்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு மக்கள் கோபாலரைக் காண்பதற்காக வரத் தொடங்கினர். காலப்போக்கில் அந்நாட்டு மன்னரும் இந்த அற்புதமான கதையினைச் செவியுற்றார். அவரும் கோபாலரை தரிசித்து மிகவும் மகிழ்ச்சியுற்றார்.


மன்னர் ஓர் அற்புதமான கோயிலை எழுப்பினார், தினசரி சேவைகள் நிறைவேற்றப்பட்டன. கோபாலர் “சாட்சி கோபாலர்” என்ற பெயரில் மிகவும் பிரபலமடைந்தார்.


பகவான் கோபாலரின் கதையினை நம்பிக்கையுடனும் அன்புடனும் கேட்பவர் வெகு விரைவில் பகவான் கோபாலரின் தாமரைத் திருவடிகளை அடைகிறார்.


தொடரும் . . . .


நாளை


முத்து மூக்குத்தி


Comments

Post a Comment

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more