குருக்ஷேத்திரம்


 குருக்ஷேத்திரம் 

(பகவத் கீதை பிறந்த பூமி )


வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் 


🍁🍁🍁🍁🍁🍁


இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எண்ணற்ற லீலைகளைப் புரிந்திருக்கிறார். பதினெட்டு நாள்கள் நீடித்த மஹாபாரதப் போர், குருக்ஷேத்திரத்தில் அரங்கேறியது என்பதை அனைவரும் அறிவர். இப்புண்ணிய பூமியை தர்மக்ஷேத்திரம் என்றும் அழைப்பதுண்டு. குருக்ஷேத்திரத்தில் தற்போது காணப்படும் முக்கிய இடங்களைப் பற்றி சற்று பார்ப்போம். 


ஜோதிசர் 


🍁🍁🍁🍁🍁🍁


கீதா உபதேச ஸ்தலம் என்று அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு (அதன் மூலமாக உலக மக்களுக்கு) பகவத் கீதையை உரைத்தார். இவ்விடத்தில் ஒரு பெரிய ஆலமரம் தற்போதும் காணப்படுகிறது. இம்மரத்தின் கீழ்தான் கிருஷ்ணர் பகவத் கீதையை உரைத்ததாகக் கூறப்படுகிறது. 5,000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலமரம், பகவத் கீதைக்கு சாட்சியாக இன்றும் போற்றப்படுகிறது. ஜோதிசர் என்று அழைக்கப்படுகிற இவ்விடம், இன்றைய குருக்ஷேத்திர நகரிலிருந்து 15 கி.மீ. 



தொலைவில் உள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டியதை நினைவுபடுத்தும் வகையில், தற்போது பளிங்கு கற்களால் செய்யப்பட்ட தேர் ஒன்று இவ்விடத்தில் அமர்த்தப்பட்டுள்ளது. மஹாபாரத போர் முடிந்தவுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை தேரிலிருந்து முதலில் இறங்குமாறு கட்டளையிட்டார். கடைசியாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரிலிருந்து இறங்கினார், அவர் இறங்கியதும் தேர் சுக்கு நூறாக வெடித்து சிதறியது. அப்போது அர்ஜுனன் தனது எஜமானர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேரிலிருந்த காரணத்தினாலேயே போரில் தான் காப்பாற்றப்பட்டதை முழுமையாக உணர்ந்தான். வெடித்து சிதறிய ரதத்தின் ஒரு சிறு பகுதியை தற்போதும் ஆலமரத்தின் கீழ் கண்கூடாகப் பார்க்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ஜுனன் மிக நெருங்கிய நண்பனாகவும் பக்தனாகவும் இருந்த காரணத்தினால், அர்ஜுனன் மூலமாக உலக மக்களுக்காக பகவத் கீதையை கிருஷ்ணர் உபதேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



பீஷ்ம குண்டம் 


🍁🍁🍁🍁🍁🍁


போர் தொடங்கிய முதல் ஒன்பது நாள்களில், கௌரவர்கள் தரப்பிலும் பாண்டவர்கள் தரப்பிலும் பேரழிவு ஏற்பட்டபோதிலும், யார் வெற்றி பெறுவார்கள் என்பதற்கான அறிகுறி துளியும் தென்படவில்லை. அதன் பின்னர், பத்தாம் நாள் போரில், பாண்டவர்கள் சிகண்டியை பீஷ்மருக்கு முன்னால் நிறுத்தி, அவரை வீழ்த்தினர். பீஷ்மரை அம்புப் படுக்கையில் வீழ்த்திய பிறகே போரில் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகளை பாண்டவர்கள் உணர்ந்தனர். 


அர்ஜுனன் பீஷ்மரை ஷரய்யா என்னும் அம்புப் படுக்கையில் வீழ்த்தியபோது வானுலக தேவர் களும் குருக்ஷேத்திரத்தில் இருந்த படைவீரர்களும் அதிர்ச்சியுற்றனர். அம்புப் படுக்கையில் பீஷ்மரின் தலை தொங்கிக் கொண்டிருந்தபோது தனக்கு உகந்த தலையணை கொடுக்குமாறு பீஷ்மர் கேட்டுக் கொண்டார். பட்டு துணியினாலான தலையணையை அவர் ஏற்க மறுத்தபோது, அர்ஜுனன் மூன்று அம்புகளை எய்து அம்புப் படுக் கைக்கு உகந்த தலையணை யினை பீஷ்மருக்கு வழங்கினான். பீஷ்மரும் அர்ஜுனனின் அச்செயலை வெகுவாகப் பாராட்டினார். 


அச்சமயம் பீஷ்மருக்கு தாகம் ஏற்பட்டது, அப்போது அர்ஜுனன் பார்ஜன்ய மந்திரத்தை ஓதி அம்பை பூமியில் எய்தபோது, கங்கை நீர் பீறிட்டு பீஷ்மரின் தாகத்தைத் தணித்தது. இதைக் கண்ட மற்ற மன்னர்கள் அர்ஜுனனின் வலிமையைக் கண்டு அசந்து போனார்கள். அப்போது பூமியி லிருந்து வெளிவந்த கங்கை நீர் தற்போது “பான கங்கை” என்றும் “பீஷ்ம குண்டம்” என்றும் கூறப்படுகிறது, இது தற்போது சிறு குளமாக இங்கிருப்பதை பயணிகள் காணலாம். இவ்விடத்திற்கு அருகிலேயே அம்புப் படுக்கையால் வீழ்த்தப்பட்ட பீஷ்மருக்கு ஒரு கோயிலும் காணப்படுகிறது. 


குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய அறிவுரையின்படி, பாண்டவர்கள் மாமன்னர் யுதிஷ்டிரரின் தலைமையில் ராஜ தர்மத்தையும் மற்ற தர்மங்களையும் பீஷ்மரிடமிருந்து செவியுற்றனர்.



அமின் 


🍁🍁🍁🍁🍁🍁


குருக்ஷேத்திரத்தில் முக்கிய பகுதியாகக் கருதப்படும் ஸ்தானேஸ்வரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தென் திசையில் அமைந்திருப்பதே அமின் என்னும் அபிமன்யு கேரா ஸ்தலம். போரின் பதிமூன்றாம் நாளில், அர்ஜுனனின் புதல்வனான அபிமன்யுவை கௌரவர்கள் சக்கர வியூகம் அமைத்து கொன்றார்கள். சிறு குன்றினைப் போல காட்சியளிக்கும் இவ்விடத்தில் அதிதிக்கும் சூரிய தேவனுக்கும் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 


பிருதுதாகம் 


🍁🍁🍁🍁🍁🍁


ஸ்தானேஸ்வரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு திசையில் அமைந்திருப்பதே பிருதுதாகம் என்னும் இடம். ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டுள்ளபடி மாமன்னர் பிருது தனது தந்தை வேனனை தகனம் செய்தபிறகு சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து சிரார்த்தம் செய்தார். அங்கு வந்த அனைவருக்கும் மாமன்னர் பிருது நீர் வழங்கினார். ஆகையால் இவ்விடம் பிருதுதாகம் என்று கூறப்படுகிறது. இவ்விடம் பிரார்த்தனைக்கும் பிண்ட தானத்திற்கும் புகழ் பெற்றது. இதன் பெயரானது காலப்போக்கில் உருமாறி இன்று பெஹோவா என கூறப்படுகிறது. மாமன்னர் பிருது ஆளுமையின் திறனை வெளிப்படுத்திய பகவானுடைய சக்தி-ஆவேஷ அவதாரம் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் போற்றப்படுகிறார். 


ஸன்னிஹித் ஸரோவர் 


🍁🍁🍁🍁🍁🍁


குருக்ஷேத்திரத்திற்கு ஸமந்த-பஞ்சகம் என மற்றொரு பெயரும் உண்டு. பரசுராமர் 21 தலைமுறை சத்திரியர்களை வதம் செய்தபோது குருதி நதிபோல் பாய்ந்தோடியது. அதனை பரசுராமர் ஐந்து நதிகளாகப் பிரித்தார். பின்னாளில் அக்குருதியானது நீர்நிலையாக மாறிவிட்டது. அதில் ஒரு நதியே ஸன்னிஹித் ஸரோவர் என்று அழைக்கப்படுகிறது. இது பகவான் விஷ்ணுவின் இருப்பிடமாகப் போற்றப்படுவதால், எல்லா புனித ஸ்தலங்களின் அதிபதிகளும் சூரிய கிரகணத்தின்போது இங்கு கூடுவதால் அந்நாளில் பெருந்திரளான பக்தர்கள் இதில் நீராடுவதுண்டு. 



பராசர முனிவரின் குடில் 


🍁🍁🍁🍁🍁🍁


ஸ்தானேஸ்வரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் வியாஸதேவரின் தந்தை பராசர முனிவர் வசித்த ஆசிரமம் உள்ளது. துரியோதனன் போர்க்களத்திலிருந்து ஓடி ஒளிவதற்கு இங்கிருக்கும் துவைபாயன நதியைத் தேர்ந் தெடுத்தான். போரின் முடிவில் துரியோதனனைத் தேடி பாண்ட வர்கள் இவ்விடத்திற்கு வந்தனர். யுதிஷ்டிரரின் சவாலை ஏற்று துரியோதனன் வெகுண்டெழுந்து நீரிலிருந்து வெளியே வந்தான். பீமன் அங்கே துரியோதனனைக் கொன்றான், சூரிய குண்டம் என தற்போது அவ்விடம் கூறப்படுகிறது.



ததீச்சி தீர்த்தம் 


🍁🍁🍁🍁🍁🍁


இந்திரன் சக்தி வாய்ந்த விருத்தாசுரனை அழிப்பதற்கு வேறு வழி அறியாது, ததீச்சி முனிவரின் முதுகெலும்பை ஆயுதமாக வேண்டினான். தாராள மனப்பான்மை கொண்ட ததீச்சி முனிவர் இதற்கு உடன்பட்டு உயிர் நீத்தார். அவ்விடம் இன்று ததீச்சி தீர்த்தமாகக் கூறப்படுகிறது.  


பிரம்ம ஸரோவர்


🍁🍁🍁🍁🍁🍁


பிரம்மதேவர் தன் படைப்பிற்கு இவ்விடத்தை உகந்ததாகத் தேர்ந்தெடுத்தார். இது மிகப்பெரிய நதியாகவும் தென்படுகிறது. இதன் மையப்பகுதியில் ஸர்வேஸ்வர மஹாதேவரின் ஆலயம் அமைந்துள்ளது. பிரம்ம ஸரோவருக்கு வடதிசையில் அழகான ராதா-கிருஷ்ணரின் கோயில் கௌடீய மடத்தால் பராமரிக்கப்படுகிறது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவான பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இக்கோயிலை நிறுவினார். 


இக்கோயிலின் நுழைவாயிலில் ஒரு மகிழ மரம் தென்படுகிறது. குருக்ஷேத்திரத்தில் இருந்த கிருஷ்ணரை விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல ஸ்ரீமதி ராதாராணி கோபியர்களுடன் வருகை தந்தபோது, இம்மரத்தின் கீழ் அமர்ந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.



இஸ்கான் ஜோதிசர்


🍁🍁🍁🍁🍁🍁


குருக்ஷேத்திரத்தில் இஸ்கானிற்கு தற்போது மூன்று கோயில்கள் உள்ளன. முதலாவது முக்கிய கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா-ராதாகாந்தரின் திருக்கோயில், இரண்டாவது ஸ்தானேஸ்வரில் அமைந்துள்ள சிறிய கோவில், மூன்றாவது பகவத் கீதை பேசப்பட்ட ஜோதிஸருக்கு வெகு அருகில் மிக பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ண-அர்ஜுனரின் திருக்கோயில். 



ஸ்ரீல பிரபுபாதர் குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் மிகப்பெரிய கோயிலை எழுப்ப வேண்டும் என விரும்பினார். அதன்படி, கடுமையான எதிர்ப்புகள், போராட்டங்கள், சட்ட சிக்கல்களைக் கடந்து, அரியானா மாநில அரசினால் இஸ்கான் இயக்கத்திற்கு ஜோதிசரில் ஆறு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இவ்விடத்தில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான கோயிலை அமைப்பதற்கான திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் நிச்சயம் குருக்ஷேத்திரத்திற்கு திருப்புமுனையாக அமையும், யாத்திரிகர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். 


குருக்ஷேத்திர தொடர்பு 


🍁🍁🍁🍁🍁🍁


இஸ்கான் இயக்கத்திற்கும் குருக்ஷேத்திரத்திற்கும் மிக முக்கிய தொடர்பு ஒன்று உண்டு. ஸ்ரீல பிரபுபாதர் 1965ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு கப்பல் நிறுவன உரிமையாளரான சுமதி மொரார்ஜி உதவி செய்தார். ஸ்ரீல பிரபுபாதரும் சுமதி மொரார்ஜியும் முதன்முதலில் 1950ஆம் ஆண்டு குருக்ஷேத்திரத்தில்தான் சந்தித்தனர். அப்போது ஸ்ரீல பிரபுபாதர் ஒரு மரத்தடியில் நாம ஜபம் செய்து கொண்டிருந்தபோது, அவரது பணிவும் பக்தியும் அவ்விடத்திற்கு வருகை புரிந்த சுமதி மொரார்ஜியை வெகுவாகக் கவர்ந்தது. 


குருக்ஷேத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை தேரில் அமர வைத்து, ஸ்ரீமதி ராதாராணியின் தலைமையிலான கோபியர்கள் அவரை விருந்தாவனத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த ரத யாத்திரையானது, நீண்ட காலமாக புரி ஜகந்நாதரின் கோயிலில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இன்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில், ஸ்ரீல பிரபுபாதர் தொடங்கிய இஸ்கான் இயக்கத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ரத யாத்திரைகள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றன. 


மஹாபாரதம் ஒரு கட்டுக் கதையல்ல. குருக்ஷேத்திரம் செல்பவர்கள் கிருஷ்ணரின் இருப்பை நன்கு உணர்ந்து கொள்ளலாம். கிருஷ்ணரின் இருப்பை உணர்பவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைகின்றனர். இதுவே பகவத் கீதையின் சாரமாகும்.



"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more