நரசிம்ம அவதாரம்


 நரசிம்ம அவதாரம் 

வழங்கியவர் - சுத்தபக்தி குழு


🍁🍁🍁🍁🍁🍁🍁


தன்னுடைய சகோதரனின் மரண செய்தியை கேட்ட ஹிரண்யகசிபு, மிகுந்த கோபம் கொண்டான். விண்ணை நோக்கி, "எனதன்பு அசுர  நண்பர்களே! நான் தேவர்களை தோற்கடித்து இந்த அண்டம் முழுவதையும் எனதாக்குவேன். விஷ்ணுவின் சிரம் கொய்து அவனை கொல்வேன்", என்று ஓலமிட்டான். 


சாகாவரம் பெற எண்ணிய ஹிரண்யகசிபு, ஒரு தனிமையான இடத்திற்கு சென்றான். தன் பாதத்தின் நுனியில் நின்றவாறு, கைகளை சிரஸிற்கு மேல் கூப்பி தன்னுடைய பார்வையை விண்ணை நோக்கி நிலை நிறுத்தினான். இவ்வாறு நூற்றி இருபத்தி ஐந்து வருடங்கள் இருந்தான். இந்த காலம் முழுவதும் உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை. எறும்புகள் அவனை சுற்றி புற்று கட்டி, அவனுடைய உடலையும் அரித்திருந்தது. அவனுடைய சிரத்திலிருந்து வந்த நெருப்பு ஜுவாலை, சமுத்திரத்தின் நீரை வற்ற செய்தது. மூவுலகங்களும் வெட்பத்தால் தகித்தது.


பிரம்ம தேவர் உடனடியாக ஹிரண்யகசிபுவின் முன் தோன்றினார். "அசுரர் குலத்தின் அரசே! உன் உறுதியை கண்டு நான் வியக்கிறேன்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்", என்று கூறினார். அதேசமயம், அவனுடைய உடலின் மீது சிறிது ஜலத்தை தெளித்தார். உடனடியாக, எலும்பாகியிருந்த அவனது உடல் பழைய நிலைக்கு மாறியது. இளமையான அழகான தோற்றத்தை பெற்றான் ஹிரண்யகசிபு. 


மிகவும் மகிழ்ந்த அவன், "எனக்கு சாகாவரம் அளியுங்கள்", என்று பிரம்மாவிடம் ஹிரண்யகசிபு கேட்டான் . உடனே பிரம்மதேவர், "அது என்னால் முடியாது. பல லட்சம் வருடங்கள் வாழ்ந்தாலும் நானும் ஒரு நாள் இறக்கக்கூடியவனே. அவ்வாறு இருக்கையில் நான் எப்படி உனக்கு சாகாவரம் அளிக்க முடியும்?", என்று  பிரம்மதேவர் பதிலளித்தார். 


ஹிரண்யகசிபு மிகுந்த ஏமாற்றம் அடைந்தான். இத்தனை வருட தவம் வீணாகிவிட கூடாது என்று எண்ணிய அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.


"தங்களால் படைக்கப்பட்ட உயிரினங்கள் மூலமாக எனக்கு  மரணம் நேர கூடாது", என்று பிரம்மதேவரிடம் வேண்டினான். "இந்த வரத்தை என்னால் அளிக்க முடியும்", என்று பிரம்மதேவர் கூறினார் . "நான் யாருடைய இல்லத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இறக்கக்கூடாது", என்று வேண்டினான். பிரம்மதேவர் ஒப்புக்கொண்டார். "நான் பகலிலும் இறக்க கூடாது; இரவிலும் இறக்க கூடாது; ஆகாயத்திலோ, நிலத்திலோ அல்லது நீரிலோ இறக்கக்கூடாது; எந்த ஒரு ஆயுதமும் என் மரணத்திற்கு காரணமாக கூடாது", என்று ஹிரண்யகசிபு வேண்டினான் . "இந்த அனைத்து வரங்களும் நான் உனக்கு அளிக்கிறேன்", என்று  பிரம்மதேவர் வரமளித்து மறைந்தார்.


தனக்கு சாகாவரம் கிடைத்துவிட்டதாக எண்ணி   ஹிரண்யகசிபு மிகவும் மகிழ்ந்தான். அண்டம் முழுவதும் பயணித்து ஒவ்வொரு லோகங்களையும் கைப்பற்றி இறுதியாக தேவேந்திரரையும் தோற்கடித்து, அவனுடைய செல்வங்களை அபகரித்து, விரட்டினன். தவனுடைய படைவலிமை, அழகான மனைவி மற்றும் புதல்வனான பிரஹலாதன் ஆகியோரை கண்டு மிகவும் கர்வம் கொண்டான்.


அவன் எப்போதும் சோம பானத்திற்கு அடிமையாகி இருந்தான். இருப்பினும் விஷ்ணுவை கொல்வதில் அவன் உறுதியாக இருந்தான். பிரஹலாதன் ஐந்து வயதை எட்டியதும் அவனுடைய நடவடிக்கைகளை ஹிரண்யகசிபு கவனிக்க துவங்கினான் . அசுர குணங்களான கர்வம், பேராசை, கோபம் - எதுவும் பிரஹ்லாதனிடம் இல்லை. மாறாக பிரஹலாதன், அமைதியாகவும் அன்புள்ளம் கொண்டவனாகவும் இருந்தார். ஒரு நாள், தன் மகனை அன்போடு மடியில் அமர்த்தி, "இன்று பள்ளியில் என்ன கற்று கொண்டாய்?" என்று ஹிரண்யகசிபு வினவினான் .


உடனே பிரஹலாதன், "அரசியல் மற்றும் போர்க்கலைகள் பயில்வது வீணான செயல்களாகும். ஏனெனில் அனைவரது உள்ளங்களில் வீற்றிருக்கும் பகவான் விஷ்ணுவை புரிந்து கொண்டவர்களுக்கு எதிரிகளே கிடையாது. அனைவரும் விஷ்ணுவின் சேவகர்கள்", என்று பிரஹலாதன் கூறினார். 


மிகுந்த கோபம் கொண்ட ஹிரண்யகசிபு, பிரஹலாதன் தரையில் தள்ளி விட்டு, "இந்த முட்டாள் என்னுடைய எதிரிக்கு சேவை செய்து கொண்டிருக்கிறான். ஆகையால் இவனை கொன்று விடுங்கள்", என்று தனது காவலர்களுக்கு உத்தரவிட்டான்.


ஹிரண்யகசிபுவின் காவலர்கள் மிகவும் கொடுரமானவர்கள். அவர்கள் பிரஹலாதரை சூழ்ந்து தங்களுடைய ஆயுதங்களில் தாக்கினர். ஆனாலும் பிரஹலாதருக்கு ஒன்றும் ஆகவில்லை.


இதையறிந்த ஹிரண்யகசிபு, பிரஹலாதரை மலையுச்சிலிருந்து கிழே தள்ளி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் பகவானால் பாதுகாக்கப்பட்டு, பிரஹலாதர் ஒரு சிறகை போல நிலத்தில் மிதந்தார். அடுத்த முயற்சியாக ஒரு மதம் பிடித்த யானையின் காலடியில் பிரஹலாதரை படுக்க வைத்தனர். ஆனால் அந்த யானை பிரஹலாதரை கண்டதும் அவருக்கு மண்டியிட்டு மரியாதை செலுத்தியது. அடுத்ததாக சீறி வரும் விஷ நாகங்களின் மத்தியில் பிரஹலாதரை விட்டனர். ஆனால் அவைகளும் பிரஹலாதரை தீண்ட தவறி விட்டன. அடுத்தடுத்த முயற்சிகளாக அவரை பட்டினி போட செய்வது, அவரை எரிப்பது, எண்ணெய் கொப்பரையில் வறுத்தெடுப்பது - போன்ற அனைத்தையும் செய்து பார்த்து விட்டனர். ஆனால் பகவானால் பாதுகாக்கப்பட்ட பிரஹலாதர். இத்தகைய துன்பங்களால் பாதிப்படையவில்லை.


தோல்வியடைந்த காவலர்கள் மீண்டும் பிரஹலாதரை, ஹிரண்யகசிபுவின் முன் நிறுத்தினர். மிகவும் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு, "இந்த மூவுலகங்களும் என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வாறிருக்க  உன்னை பாதுகாப்பது யாரீ ?", என்று வினவினான்.


மிகவும் அமைதியாக சிரித்துக்கொண்டே, பிரஹலாதர், "எனதன்பு தந்தையே! என்னையும், உங்களையும், அனைவரையும் பாதுகாப்பது பகவான் விஷ்ணு", என்று பதிலளித்தார். இதை கேட்ட ஹிரண்யகசிபுவிற்கு கோபம் அதிகரித்தது. "எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை விட ஒரு உயரிய சக்தி இருக்கிறது என்று என்னிடமே நீ வாதிடுவாய்? உன் கடவுள் உன்னை காப்பாற்றுகிறாரல்லவா? அப்படியானால் உன் கடவுள் எங்கிருக்கிறார் என்று எனக்கு கூறு?", என்று பிரஹலாதரிடம் கேட்டார்.


"பகவான் எங்கும் இருக்கிறார்", என்று பிரஹலாதர் பதிலளித்தார். 


உடனடியாக தனதருகில் இருக்கும் ஒரு தூணை காண்பித்து, "உனது கடவுள் இந்த தூணில் இருக்கிறாரா ? அப்படியானால் இந்த தூணிலிருந்து வந்து உன்னை அவர் காப்பாற்றட்டும்", என்று கூறிய கையோடு தனது வாளை கொண்டு அந்த தூணை பலமாக தாக்கினான். மிகுந்த சத்தத்தோடும் புகையோடும் அந்த தூண் இடிந்து விழ, அதே சமயம் ஒரு பயங்கரமான கர்ஜனை அங்கு கேட்டது. நிலம் அதிர்ந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தேடிய ஹிரண்யகசிபுவின் கண்களுக்கு, அந்த தூணிலிருந்து மிகப்பெரிய உருவம் ஒன்று வெளிவருவது தெரிந்தது. இரு கால்கள், சிங்கத்தின் முகம், தங்கத்தை போன்று ஜொலிக்கும் பிடரிகள், கூர்மையான நாக்கு, தீ ஜுவாலையை போன்ற கண்கள் - இவற்றை பார்த்த ஹிரண்யகசிபு, "யார் இந்த விசித்திரமான உருவம்? ஒரு வேளை இது தான் என்னுடைய எதிரி விஷ்ணுவா?" என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். பகவான் நரசிம்மதேவரை பார்த்தவுடன் பயந்திருந்தாலும், தான் சாகாவரம் பெற்றிருப்பதை நினைவுகூர்ந்த ஹிரண்யகசிபு, உடனடியாக நரசிம்மதேவரை தனது வாளால் தாக்க தொடங்கினான்.


இருவரும் சிறிது நேரம் நிலத்திலும் சிறிது நேரம் ஆகாயத்திலும் சண்டையிட்டனர். ஒரு பருந்து எலியுடன் விளையாடுவதை போல் நரசிம்மதேவர் அந்த அசுரனுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.  இறுதியாக அரண்மனையின் நுழைவாயிலில் பகவான் அவனை கைப்பற்றினர் . அவனை தன் தொடையில் படுக்க வைத்து தன்னுடைய கூறிய நகங்களால் அவனுடைய வயிற்றை கிழித்தெடுத்து அவனை கொன்றார். 


ஹிரண்யகசிபு பிராம்மதேவரிடம் வேண்டிய படியே, அவன் பகலிலும் இறக்கவில்லை; இரவிலும் இறக்கவில்லை; மாறாக பொழுது சாயும் வேளையில் வதம் செய்யப்பட்டான். அதேபோல் நிலத்திலோ, நீரிலோ ஆகாயத்திலோ இறக்கவில்லை; பகவானுடைய தொடையில் படுத்திருந்தபடி உயிர் நீத்தான். அரண்மனைக்குள்ளும் இறக்கவில்லை; அரண்மனைக்கு வெளியேயும் இறக்கவில்லை; இரண்டிற்கும் இடையேயான நுழைவாயிலில் இறந்தான். எந்த ஒரு ஆயுதமும் அவன் உயிரை பரிக்கவில்லை; பகவான் தன்னுடைய நகங்களாலேயே அவனை கிழித்தெடுத்தார். பிரம்மதேவரால் படைக்கப்பட்ட எந்தவொரு உயிரினத்தாலும் அவன் மரணிக்கவில்லை. ஏனெனில் பகவான் நரசிம்மதேவர் , பிரம்மனால் படைக்கப்பட்டவர் அல்ல. மேலும் அவர் மனிதனுமல்ல மிருகமும் அல்ல. பாதி மனிதன் பாதி சிங்கம் உருவம் கொண்டவர் நரசிம்மதேவர்.


இவ்வாறு பிரம்மதேவர் ஹிரண்யகசிபுவிற்கு அளித்த வரங்களை காப்பாற்றிய அதே சமயம், ப்ரஹலாதரையும் காப்பாற்றி, அந்த அசுரனையும் வதம் செய்தார் பகவான் நரசிம்மதேவர். அசுரனை வதம் செய்த பிறகும் மிகுந்த கோபத்துடன் இருந்த நரசிம்மதேவரை, பிரஹலாதர் தனது பிரார்த்தனைகளால் சாந்தப்படுத்தினார். பிரார்த்தனையில் மகிழ்ந்த நரசிம்மதேவர், "எனதன்பு பிரகலாதா! நீ அசுரர்களில் சிறந்தவன். உனக்கு என்ன வரம் வேண்டும்?", என்று கேட்டார். 


பிரஹலாதர், "ஓ பிரியமான பகவானே! நான் உங்களை புகழ்ந்து துதிகள் பாடி, அதன் மூலம் நான் வேண்டியதை பெற்று ஒரு வியாபாரியாக விரும்பவில்லை. எனக்கு உங்கள் கருணை மட்டும் போதும். எப்போதும் நான் உங்களுடைய சேவகனாக இருக்க வேண்டும்", என்று வேண்டினார். 


இந்த பதிலை கேட்டு மேலும் மகிழ்ந்த பகவான், ஏதேனும் ஒரு வரத்தை வேண்டும்படி பிரஹலாதரிடம்  கேட்டார். பிரஹலாதர், "அப்படியானால் எனக்கு ஒரே ஒரு வரமளியுங்கள். என் பொருட்டு என் தந்தையின் பாவங்கள் அனைத்தையும் மன்னியுங்கள்", என்று வேண்டினார்.


இதை கேட்டு மகிழ்ந்த பகவான் நரசிம்மதேவர், "எனதன்பு பிரகலாதா! உன்னுடைய பக்தியின்  காரணமாக உன் தந்தை மட்டுமல்ல. உன்னுடைய  இருபத்தியொரு தலைமுறையினர் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்", என்று கூறினார். 


இன்றும் கூட பக்தர்களுக்கு என்ன ஆபத்து வந்தாலும், பகவானுடைய பக்தர்கள், நரசிம்மதேவரின் லீலையை நினைவில் கொண்டு அவரிடம் அபயம் தேடி சரணடைவார்கள்.

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more