🍁🍁🍁🍁🍁🍁🍁
முன்னொரு காலத்தில், ஜமதக்னி என்னும் முனிவர், வனத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் பக்தி கொண்டவர். அவருக்கு ஏழு குழந்தைகள்; பரசுராமர் முதல் மகன். மேலும் அவரிடம், கேட்ட வரத்தை அளிக்கும் காமதேனு என்ற அற்புத பசுவும் இருந்தது. இருப்பினும், பேராசை இல்லாமல், வனத்தில் சிறிய குடிலிலேயே வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் பரசுராமர் வெளியே சென்றிருந்த சமயம், கார்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் தன் படை வீரர்களோடு அங்கு வந்தான். ஜமதக்னி முனிவர், அரசனையும், அவனது வீரர்களையும், மந்திரிகளையும், வாகனங்களையும் நன்கு வரவேற்று உபசரித்தார். விரும்பியதையெல்லாம் அளிக்கக் கூடிய ஒரு காமதேனு பசுவை அவர் வைத்திருந்ததால், இவ்விருந்தினர்களை உபசரிப்பதற்குத் தேவையானதை எல்லாம் அவர் கொடுத்தார். ஜமதக்னி, காமதேனுவின் உருவில் ஓர் இரத்தினத்தை வைத்திருந்ததால், அவர் தன்னைவிட சக்திவாய்ந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்ததாக கார்த்தவீர்யார்ஜுனன் நினைத்தான். எனவே அவனும், அவனது ஆட்களான ஹேஹயர்களும் ஜமதக்னியின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அக்னிஹோத்திர யாகம் செய்வதற்குப் பயன்பட்ட அக்காமதேனுவை அவர்கள் அடைய விரும்பினர். தன் பௌதிக சக்தியால் திமிர்பிடித்தவனாக இருந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஜமதக்னியின் காமதேனுவைக் கவர்ந்து செல்லும்படி தனது ஆட்களைத் தூண்டினான். அவர்களும் கதறும் அப்பசுவையும், அதன் கன்றையும் பலாத்காரமாக மாஹிஷ்மதிக்குக் கொண்டு சென்றனர்.
காமதேனுவுடன் அரசன் சென்றபின், பரசுராமர் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தார். ஜமதக்னியின் இளைய புத்திரரான பரசுராமர் கார்த்தவீர்யார்ஜுனனின் தகாத செயலைப்பற்றி கேள்விப்பட்டதும் மிதிபட்ட பாம்புபோல் வெகுண்டார். பயங்கரமான தமது கோடரியையும், கேடயத்தையும், வில்லுடன் அம்பறாத் தூணியையும் கைக்கொண்ட பகவான் பரசுராமர், கடுங்கோபத்துடன், ஒரு சிங்கம் யானையை துரத்துவதுபோல் கார்த்தவீர்யார்ஜுனனை துரத்திச் சென்றார். தன் தலைநகரமான மாஹிஷ்மதிக்குள் நுழைந்த கார்த்தவீர்யார்ஜுனன், பிருகு வம்சத்தில் சிறந்தவரான பகவான் பரசுராமர் ஒரு கோடரியையும், கேடயத்தையும், வில்லுடன் அம்புகளையும் கைக் கொண்ட தன்னைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டான். பகவான் பரசுராமர் ஒரு கருப்பு மான்தோலை அணிந்திருந்தார். அவரது ஜடா முடி சூரியஒளி போல் பிரகாசித்தது.
பரசுராமரைக் கண்டு அஞ்சிய கார்த்தவீர்யார்ஜுனன், உடனே கதாயுதங்கள், வாள்கள், ரிஷ்டிகள், சதக்னிகள் மற்றும் சக்திகள் முதலான பல்வேறு ஆயுதங்களைக் கொண்ட பல யானைப்படைகளையும், தேர்ப்படைகளையும், குதிரைப்படைகளையும் மற்றும் காலாட்படைகளையும் அனுப்பி அவருடன் போரிடச் செய்தான். பரசுராமரைத் தடுப்பதற்காக கார்த்தவீர்யார்ஜுனன் மொத்தத்தில் பதினேழு முழு அக்ஷௌணிகளை அனுப்பினான். ஆனால் பகவான் பரசுராமர் தனியாக அவர்களனைவரையும் கொன்றார்.
பகவான் பரசுராமர் எதிரிகளின் படைபலத்தைக் கொல்வதில் கைதேர்ந்தவர் என்பதால், மனோவேகத்திலும், காற்று வேகத்திலும் செயற்பட்டு எதிரிகளைத் தமது கோடாரியால் (பரசு) வெட்டித் தள்ளினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் எதிரிகள் தங்களுடைய கால்களும், கைகளும், தோள்களும் துண்டிக்கப்பட்டு விழுந்தனர். அவர்களுடைய தேரோட்டிகள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய வாகனங்களான யானைகளும், குதிரைகளும் நாசம் செய்யப்பட்டன.
தமது கோடரியையும், அம்புகளையும் திறமையாகக் கையாண்ட பகவான் பரசுராமர் கேடயங்களையும், கொடிகளையும், விற்களையும் மற்றும் கார்த்தவீர்யார்ஜுனனுடைய வீரர்களின் உடல்களையும் கண்டதுண்டமாக வெட்டித் தள்ளினார். போர்க்களத்தில் விழுந்த அவர்களுடைய உடல்களிலிருந்து பெருக்கெடுத்த இரத்தம் பூமியைச் சகதியாக்கியது. நேர்மாறான அச்செயலைக் கண்டு கடுங்கோபங் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன் போர்க்களத்தை நோக்கி விரைந்தான்.
பிறகு கார்த்தவீர்யார்ஜுனன், தன்னுடைய ஆயிரம் கரங்களைக் கொண்டு, பகவான் பரசுராமரை கொள்வதற்காக, ஒரே சமயத்தில் ஐநூறு விற்களில் அம்புகளைப் பொருத்தினான், ஆனால் வீரசிரோ மணியான பகவான் பரசுராமர் ஒரே வில்லில் போதுமான அம்புகளை விட்டு, கார்த்தவீர்யார்ஜுனனின் கைகளிலிருந்த அம்புகளையும், விற்களையும் கண்டந்துண்டமாக வெட்டித் தள்ளினார். தன் அம்புகள் கண்டந்துண்டமாக வெட்டி எறியப்பட்டதும், கார்த்தவீர்யார்ஜுனன் பல மரங்களையும், குன்றுகளையும் தன் கரங்களால் பிடிங்கியெடுத்துக் கொண்டு, பகவான் பரசுராமரைக் கொல்ல மீண்டும் அவரை நோக்கி ஓடினான். ஆனால் பரசுராமர் பிறகு, பாம்பின் படங்களை ஒருவன் வெட்டி வீழ்த்துவது போல், கார்த்தவீர்யார்ஜுனனின் கரங்களை வெட்டி வீழ்த்தினார்.
அதன்பிறகு, தன் கரங்களை இழந்த கார்த்தவீர்யார்ஜுனனின் தலையை பரசுராமர், ஒரு மலைச் சிகரத்தை துண்டிப்பது போல் வெட்டி வீழ்த்தினார். தங்களுடைய தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட கார்த்தவீர்யார்ஜுனனின் பத்தாயிரம் மகன்களும் பயத்தால் ஓட்டம் பிடித்தனர். எதிரிகளைக் கொன்றபின், பெரும்துன்பத்திற்கு ஆளாகியிருந்த காமதேனுவை விடுவித்த பரசுராமர், கன்றுடன் அதைத் தமது ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து, தம் தந்தையான ஜமதக்னியிடம் அதை ஒப்படைத்தார். தனது தந்தையிடம் நடந்தவற்றை விளக்கினார். ஆனால் இதை கேட்ட ஜமதக்னி திருப்தியடையவில்லை. "மகனே! மக்களை காக்கும் பொறுப்பில் இருக்கும் ஒரு அரசனை கொன்றதன் மூலம் நீ பாவம் செய்து விட்டாய். ஒரு பிராமணனுக்கு மன்னிக்கும் மனோபாவம் இருக்க வேண்டும். அடுத்தவர்களை மன்னிப்பவர்களை பகவானுக்கு மிகவும் பிடிக்கும்", என்று கூறினார்.
தந்தையின் அறிவுரையை கேட்ட பரசுராமர், தனது கோபத்தையும் அறியாமையையும் நினைத்து வருந்தினார். தன்னுடைய பாவத்தை போக்க தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்த அவர், அவ்வாறே செய்தார். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் தன் இல்லத்திற்கு திரும்பினார்.
ஒரு சமயம் ஜமதக்னியின் மனைவியான ரேணுகா நீர் கொண்டு வருவதற்காக கங்கை நதிக்கரைக்குச் சென்றாள். அங்கு தாமரை மாலை அணிந்திருந்த கந்தர்வராஜன் சுவர்க்கலோகப் பெண்களுடன் (அப்ஸரஸ்த்ரீகளுடன்) கங்கையில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள். கங்கையிலிருந்து நீர் கொண்டுவருவதற்காகச் சென்றவள், கந்தர்வராஜனான சித்திரரதன் சுவர்க்கலோகப் பெண்களுடன் விளையாடுவதைக் கண்டு, அவனிடம் சபலங் கொண்டவளாய், யாகத்திற்குரிய நேரம் கடப்பதையும் மறந்துவிட்டாள். பிறகு யாக காலம் கடந்துவிட்டதை உணர்ந்து, கணவர் சபித்துவிடுவாரோ என்றஞ்சிய ரேணுகா, திரும்பி வந்ததும் கலசத்தை அவர் முன் வைத்து கரம்கூப்பி நின்றாள்.
தன் மனைவியின் மனம் சஞ்சலமடைந்ததை உணர்ந்த மாமுனிவரான ஜமதக்னி, “புத்திரர்களே பாவமிழைத்த இவளை கொல்லுங்கள்!” என்று கோபத்துடன் தன் புத்திரர்களிடம் கூறினார். ஆனால் அவரது கட்டளையை மகன்கள் நிறைவேற்றவில்லை. பிறகு, இக்கட்டளையை மீறிய சகோதரர்களையும், மனதால் விபச்சாரம் செய்த தாயையும் கொல்லும்படி, ஜமதக்னி தம் இளைய மகனான பரசுராமருக்கு உத்தரவிட்டார். தியானத்தாலும், தவத்தாலும் தம் தந்தை பெற்றிருந்த சக்தியை அறிந்திருந்த பகவான் பரசுராமர் உடனே தம் தாயையும், சகோதரர்களையும் கொன்றார்.
பரசுராமரிடம் மகிழ்ந்த சத்தியவதியின் புத்திரரான ஜமதக்னி, வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூற, பகவான் பரசுராமர் கேட்டார், “என் தாயும், சகோதரர்களும் என்னால் கொல்லப்பட்ட ஞாபகமே இல்லாமல் உயிர் பெறட்டும். இதுதான் நான் கேட்கும் வரம்.” அதன்பிறகு, ஜமதக்னியின் வரத்தால், பகவான் பரசுராமரின் தாயும், சகோதரர்களும், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுவதைப் போல் உடனே மகிழ்ச்சியுடன் உயிர் பெற்றேழுந்தனர்.
பகவான் பரசுராமர் தம் தந்தையின் தவவலிமையுயம், புலமையையும் நன்கு அறிந்திருந்ததால், தந்தையின் கட்டளைப்படி தாயும், சகோதரர்களும் கொல்ல சம்மதம் தெரிவித்தார்.
ஒரு நாள் பரசுராமரும் அவருடைய சகோதரர்களும் இலத்தின் அருகில் வேலை செய்துகொண்டிருந்த போது, கார்த்தவீர்யார்ஜுனனுடைய மகன்கள், தங்கள் தந்தையின் மரணத்திற்கு பழி தீர்க்க வந்தனர். த்யானத்தில் ஆழ்ந்திருந்த ஜமதக்னியை, பின்னாலிருந்து தாக்கி அவருடைய சிரத்தை கொய்து அவர்களோடு எடுத்து சென்றுவிட்டனர்.
தங்கள் தாயின் அலறலை கேட்ட அனைவரும் ஆசிரமத்தை நோக்கி ஓடினர். அங்கிருந்த தந்தையின் உடலை கண்டு அனைவரும் அழுது துடித்தனர். ஆனால் இம்முறையும் மிகுந்த கோபம் கொண்ட பரசுராமர், தன் கோடாரியை எடுத்துக்கொண்டு மீண்டும் அரண்மனையை நோக்கி சென்றார். பெரும் போர் நடந்தது. அர்ஜுனனின் புதர்வர்கள் அனைவரின் சிரம் கொய்து, நகரத்தின் நடுவில் ஒரு மலை போல குவித்தார். அவர்களின் சிரத்தில் இருந்து வழிந்த குருதி ஒரு ஆறாகவே ஓடியது. ஆயினும், கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்களைக் கொன்றதால் மட்டும் பரசுராமர் திருப்தியடையவில்லை; பிறகு, க்ஷத்திரியர்கள் தொல்லை கொடுப்பவர்களாக மாறியபோது, பூமியில் க்ஷத்திரிர்களே இல்லாதபடி இருபத்தொரு முறை அவர்களை அவர் கொன்றார். அதன்பிறகு தம் தந்தையின் தலையை உயிரற்ற உடலுடன் இணைத்த பரசுராமர், பல யாகங்களைச் செய்து பரமபுருஷரை திருப்திப்படுத்தினார். இவ்வாறாக மீண்டும் உயிர் பெற்ற ஜமதக்னி பிறகு உயர்கிரகத்திற்கு உயர்த்தப்பட்டார்.
ஜமதக்னியின் புத்திரரான பரசுராமர் மகேந்ர பர்வதத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார். அடுத்த மன்வந்தரத்தில் அவர் ஒரு வேத ஞான போதகராக இருப்பார்.
( ஶ்ரீமத் பாகவதம் / காண்டம் 9 / அத்தியாயம் 15-16 )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment