பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி


 பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி 


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பல வருடங்களுக்கு முன்னர், அயோத்தியில் தசரத மஹாராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு  நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை புத்திர கமேஷ்டி என்ற ஒரு யாகத்தின் மூலம் ஒரே சமயத்தில் நான்கு குழந்தை பெறும் பாக்கியம் பெற்றனர். அதில் கௌசல்யா தேவிக்கு பகவான் ஶ்ரீ ராமசந்திரமூர்த்தியும் கைகேயிக்கு பரதனும் .சுமித்ரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்னனும்  பிறந்தனர். இவர்களில் ராமர் மூத்தவர்.


இளவரசர்கள் நால்வரும் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினர் - போர் கலை, வில் அம்பு பிரயோகிப்பது, வாள் வீச்சு, நாட்டு மக்களை பாதுகாத்தல், அரச கடமைகளை எவ்வாறு செவ்வனே செய்வது - போன்ற அனைத்தையும் கற்றனர். சில காலத்திற்கு பின்னர், ராமர் "சீதா" என்ற அழகிய இளவரசியை மணந்தார். அவர்கள் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். 


தனக்கு வயதாகி விட்டது என்றுணர்ந்த தசரத மகாராஜா, தனது மந்திரிகளுடன் ஆலோசித்து, ஶ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு, தான் துறவறம் ஏற்று. கானகம் செல்ல முடிவு செய்தார். இதையறிந்த அயோத்தி மக்கள் அனைவரும் பேரானந்தம் கொண்டனர். பட்டாபிஷேக விழாவிற்காக நகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தினர். வாசனை திரவியங்கள், மலர் மாலைகள், கொடிக்கம்பங்கள், வண்ண தோரணங்கள் போன்றவற்றை கொண்டு அலங்கரித்தனர்.  நகரம் முழுவதும் இவ்வாறிருக்க, அரண்மனைக்குள் இருந்த கூனி என்ற பணி பெண்ணிற்கு மட்டும் இந்த பட்டாபிஷேகத்தில் இஷ்டமில்லை. அவள் தசரதரின் ஒரு ராணியான கைகேயியின் பணிப்பெண் ஆவாள். கூனி, கைகேயியிடம், ராமருக்கு பதிலாக கைகேயியின் மகனான பரதனுக்கு பட்டாபிஷேகம் நடக்க விரும்புவதாக கூறினாள். மேலும் கைகேயியின் மனதையும் மாற்றினாள். குழப்பமடைந்த கைகேயியும் தசரதரின் அறைக்கு மிகுந்த கோபத்துடன் சென்றாள். இதை கண்ட தசரதர், "எனதன்பு கைகேயி! ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? நான் என்ன செய்தால் உன் கோபம் தீரும்?" என்று வினவினார். 


கைகேயி, தன் கணவரிம் "உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நான் உங்கள் உயிரை காப்பாற்றிய போது, நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்களித்தீர்கள். அந்த வரங்களை நான் இப்போது கேட்கப்போகிறேன். முதலாவதாக என் மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். இரண்டாவதாக ராமனை பதினான்கு ஆண்டுகள் வனத்திற்கு அனுப்ப வேண்டும்", என்று கூறினார். 


இதை கேட்டு அதிர்ச்சியில் தசரதருக்கு மயக்கமே வந்து விட்டது. மீண்டும் சுய நினைவிற்கு வந்த தசரதர், "உன்னுடைய வஞ்சம் நிறைந்த வார்த்தைகள் வாளை விட கூர்மையாக இருக்கிறது. நான் என் வாக்கை காப்பாற்றாவிட்டால் அது மரணத்திற்கு சமமாகும்", என்று வருந்தினார்.


ஆனால் தன் வாக்கை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்திலிருந்த தசரதருக்கு வேறு வழியில்லை. கைகேயியின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டிய கட்டாயம். ஆகையால் உடனடியாக ராமரை அழைத்து இந்த விஷயத்தை கூறினார். ராமரோ எந்த வித சலனமும் காட்டவில்லை. மாறாக அழுதுகொண்டிருந்த தனது தந்தையை சமாதானப்படுத்தினார். சீதா தேவியும் லக்ஷ்மணரும், ராமர் இல்லாமல் அரண்மனையில் வாழ முடியாது என்று முடிவு செய்து, ராமாருடனே, வனவாசத்திற்கு செல்ல தயாரானார்கள். மூவரும், தங்களுடைய பட்டாடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை தியாகம் செய்து, மரவுரி தரித்தார்கள். தங்கள் குடும்பத்தினரையும், அயோத்திய நகர வாசிகளையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தி, வனத்திற்கு சென்றார்கள். 


வனத்தில் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. ராமரும் லக்ஷ்மணரும் எளிமையாக ஒரு குடில் அமைத்தனர். சீதா தேவி, மரங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் சேகரித்து உணவு தயார் செய்தார். அதேபோல் தினமும் தங்கள் வாழ்வை இனிமையாக கழித்தனர். சாதுக்கள் மற்றும் முனிவர்களின் சங்கத்தில் பதினான்கு ஆண்டு வரை மகிழ்ச்சியாக கழித்தனர். 


ஒரு நாள், மிகவும் கொடூரமான நர மாமிசம் தின்னும் சூர்ப்பனகை என்னும் அரக்கி, இவர்களின் குடிலுக்கு அருகில் வர நேர்ந்தது. அங்கிருந்த ராமரை பார்த்தவுடன் அவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டாள். உடனடியாக ராமரை அணுகி, அவளின் விருப்பத்தை கூறினாள். ராமரோ, "நான் திருமணமானவன். என்னுடைய மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்", என்று பதிலளித்தார்.


எத்தனை முறை வேண்டியும் ராமர் சம்மதிக்காததால், கோபம் கொண்ட சூர்ப்பனகை அங்கிருந்த சீதா தேவியை தாக்க முற்பட்டார். இதை கண்ட லக்ஷ்மணர், ஒரு நொடி கூட தாமதிக்காமல், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்துவிட்டார். வலியால் அலறிக்கொண்டே, வனத்திற்குள் மறைந்தாள் அந்த அரக்கி.  


சிறிது நாட்களுக்கு பிறகு, ஒரு நாள் சீதாதேவி தனது குடிலின் முன் ஒரு அழகிய பொன்னிற மான் நிற்பதை கண்டாள். ராமரிடம், "பிரபு! இந்த மான் எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை நான் என்னுடன் வளர்க்க விரும்புகிறேன். எனக்காக அந்த மானை பிடித்து தருவீர்களா?", என்று வேண்டினார். 


அந்த மானை பார்த்தவுடன் ராமருக்கு சந்தேகம் வந்தது. வனத்திற்குள் இவ்வாறு ஒரு அற்புத மானை இதற்கு முன் கண்டதேயில்லை. இந்த மான மாயையாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினார். எனவே, லக்ஷ்மணரிடம், சீதா தேவியை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அந்த மானிற்கு பின்னால் சென்றார். "எக்காரணத்தை கொண்டும் நீ சீதா தேவியை தனித்து விட்டு வெளியே செல்ல கூடாது", என்று லக்ஷ்மணரை எச்சரித்தார். சிறிது நேரத்திற்கு பின், அந்த மான் ஓரிடத்தில் நின்றது. அதற்கு குறி வைத்தார் ராமர். அம்பு அதன் உடம்பில் பட்டதும் அது தன் சுய ரூபத்திற்கு மாறியது. உண்மையில் அதுவும் ஒரு அரக்கன். அந்த அரக்கன் இறப்பதற்கு முன்னர், ராமருடைய குரலில், "லக்ஷ்மணா! என்னை காப்பாற்று", என்று கத்திவிட்டு இறந்தது. 


ஆனால் இந்த அழுகுரலை கேட்ட லக்ஷ்மணன் சிறிதும் சலனமடையவில்லை. ஏனெனில், தனது சகோதரருக்கு எந்த ஆபத்தும் நேராது என்று அவருக்கு தெரியும். ஆனால் சீதா தேவி மிகவும் வருந்தினார். லக்ஷ்மணரிடம், ராமருக்கு உதவ செல்லும்படி வேண்டினார். லக்ஷ்மணர், சீதா தேவியை தனிமையில் விட்டு செல்ல மறுத்தார். சீதா தேவி மிகவும் கோபமாக, "லக்ஷ்மணா, உன்னுடைய திட்டம் இப்போது எனக்கு தெரிகிறது. ராமர் இறந்துவிட்டால் அவருக்கு சொந்தமானவற்றை நீ அனுபவிக்கலாம் என்று திட்டம் வைத்திருக்கிறாய். ஆகையால் தான் அவரை காப்பாற்ற செல்ல மறுக்கிறாய்", என்று கடுமையான வார்த்தைகளால் லக்ஷ்மணரின் தூய இதயத்தை தாக்கினார். ஆகையால், தன்னை நிரூபிக்க வேறு வழியின்றி சீதா தேவியை தனியாக விட்டு, ராமரை தேடி சென்றார், லக்ஷ்மணர்.


இத்தனை நிகழ்வுகளையும் மரத்திற்கு பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராவணனுக்கு, இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது - தன் தங்கையின் (சூர்ப்பனகையின்) அவமானத்திற்கு பழி தீர்க்க. எனவே, லக்ஷ்மணன் அங்கிருந்து  சென்றதை உறுதி செய்து கொண்டு, இப்போது சீதா தேவியை நோக்கி சென்றான். சீதா தேவியின் அழகில் மயங்கிய அந்த அரக்கன், சீதா தேவி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவரின் கரத்தை பிடித்திழுத்து, கழுதைகள் பூட்டப்பட்டிருந்த தன்னுடைய ரதத்தில் வலுக்கட்டாயமாக அமர்த்தினார். சீதா தேவி, உதவிக்கு அழைத்தும், அதை பொருட்படுத்தாமல், அந்த ரதத்தை, இலங்கை நோக்கி விண்ணில் செலுத்தினான் ராவணன். மீண்டும் குடிலுக்கு திரும்பி வந்த ராமரும் லக்ஷ்மணரும், சீதா தேவியை காணாது தவித்தனர். ராமரை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்றே லக்ஷ்மணருக்கு தெரியவில்லை. இருவரும் சீதா தேவியை தேடினர். மலைகள், காடுகள், பள்ள தாக்குகள், குகைகள் என அனைத்து இடங்களுக்கும் சென்றனர். பல நாட்களுக்கு பிறகு, சுக்ரீவனோடு நட்பு கிடைக்க அவர்கள், சுக்ரீவனின் உதவியால் சீதாதேவியை தேட முடிவெடுத்தனர். சுக்ரீவனின் தலைமையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து திசைகளிலும் தேட வானரங்களை அனுப்பினார். ஆனாலும் எந்த தகவலும் இல்லை. சீதா தேவியை தேடும் முயற்சியை கைவிட்டு விடலாம் என்று அனைவரும் எண்ணிய சமயத்தில், சம்பாதி என்ற பருந்து ஒன்று, சீதா தேவி இலங்கையில் இருக்கிறார் என்று கூறியது. இந்த தகவலை உறுதி செய்ய யாரேனும் இலங்கைக்கு செல்ல வேண்டும். இந்த ஆபத்தான காரியத்தை மேற்கொள்ள ஹனுமான் முன்வந்தார். சீதா தேவியை காண்பதோடு மட்டுமல்லாது, எதிரியின் படை பலத்தையும் அறிந்து வர உத்தரவிட்டார் சுக்ரீவன். சமுத்திரத்தை ஒரே தாவாக தாவிய ஹனுமான், பல தடைகளுக்கு பின்னர் அசோக வனத்தில் சீதாதேவியை கண்டார். சீதா தேவி மிகவும் மெலிந்து காணப்பட்டார். தன் கணவரை நினைத்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். ராமரின் தூதன் ஹனுமனை என்று அறிந்த சீதா தேவி மிகவும் மகிழ்ந்தார். "இந்த வருடத்தின் இறுதிக்குள் தன்னுடைய மனைவியாக வேண்டும் இல்லையென்றால் என்னுடைய சமையல்காரர்கள் உன்னை கொன்று எனக்கு விருந்தளிப்பார்கள்",என்று ராவணன் தன்னை மிரட்டுவதாக கூறி அழுதார். சீதா தேவியை சமாதானப்படுத்திய ஹனுமான், தான் ராமருடன் விரைவில் வந்து காப்பாற்றுவதாக வாக்களித்தார்.


மீண்டும் சமுத்திரத்தை எளிதாக கடந்து, விரைவில் திரும்பிய ஹனுமான், ராமர் முன் வந்து நின்று, "கண்டேன் சீதையை", என்று மகிழ்ச்சியோடு கூறினார். அனைவரும் ஆரவாரம் செய்தனர். சிறிதும் தாமதிக்காமல், ராமர் அங்கிருந்த வானரங்களிடம், கிடைக்கும் கற்களையும் பாறைகளையும் சமுத்திரத்தில் வீசி எறியச்சொன்னார். ராமச்சந்திர மூர்த்தியின் சக்தியால், அவையனைத்தும் நீரில் மிதந்தன. வேகு விரைவில், இலங்கைக்கு செல்வதற்கான பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ராமரின் தலைமையில், அனைவரும் போர் புரிந்து சீதாதேவியை மீட்டுவதற்காக, இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். 


அவர்களின் வருகையை அறிந்த ராவணன், போருக்கு தயாரானான். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த போர் மிக கடுமையாக இருந்தது. அரக்கர்கள் - பாறைகள், அம்புகள், கம்புகள் - போன்றவற்றை வானரங்கள் மீது வீசினர். பதிலுக்கு வானரங்கள் - கல் குண்டுகள், மர கிளைகள் மற்றும் பாறைகளை அசுரர்கள் மீது வீசினர். ராமரின் பக்கம் வெற்றி பெரும் தருணம் வந்தது.  ராவணனின் இரு மகன்களையும் ராமர் கொன்றார். இதையறிந்த ராவணன், தன்னுடைய விமானத்தை வானரங்களின் மீது பறக்க விட்டு அதிலிருந்து ஆயுதங்கள் கொண்டு வானரங்களை தாக்கினான். சினம் கொண்ட ராமர், ராவணனை துவந்தத்திற்கு அழைத்தார். "நர மாமிசம் உண்பவனே! நீ நாய்க்கு சமமானவன். ஒரு நாய், தன்னுடைய எஜமானர் இல்லாத போது, வீட்டிற்குள் சென்று உணவு திருடும். அதேபோல், நான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து நீ என் மனைவி சீதாவை கவர்ந்து வந்து விட்டாய். ஆகையால், இன்று நீ யமலோகம் செல்வாய் என்று நான் வாக்களிக்கிறேன்", என்று கூறினார்.  சக்தி வாய்ந்த ஒரு அம்பை தன் வில்லில் பூட்டி, ராவணனின் இதயத்தை குறி வைத்து அதை எய்தார். விஷம் காக்கும் நாகம் போல, அந்த அம்பு, ராவணனின் இதயத்தை துளைத்தது. ராவணன் தனது விமானத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து மடிந்தான். இதை கண்ட வானரங்கள் அனைத்தும் தங்களது வாலை ஆட்டியும் கீச்சிட்டும், தங்கள் மகிழ்ச்சையை வெளிப்படுத்தின. 


தன் கணவரை கண்ட சீதா தேவியின் முகம், தாமரை போல மலர்ந்தது. ஒரு அழகிய விமானம் மூலம் அங்கிருந்த அனைவரும் அயோத்யா நோக்கி புறப்பட்டனர். அம்மாவாசை நாளான அன்று வானம் இருண்டிருந்தது. அந்த இருளை போக்க அயோத்யாவாசிகள் அனைவரும், நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்தனர். ராமரை கண்டதும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.  


மலர் மாலைகள், பொன்னாடைகள் போன்றவற்றை கொண்டு ராமரையும் சீதாதேவியையும் வரவேற்றனர். பரதர், மிகுந்த மகிழ்ச்சியோடு ராமரை கட்டி தழுவினார். ராமரின் பட்டாபிஷேகம் நிகழ்ந்தது. ராமரின் ஆட்சியில், மக்களுக்கு உடலிலும் மனத்திலும் எந்த குறையும் இருந்ததில்லை. நோய், முதுமை, பயம், தளர்ச்சி போன்றவை யாரிடமும் காணப்படவில்லை. ஆகையால் தான் இன்றும் "ராம ராஜ்ஜியம்" அனைவராலும் புகழ்ந்து போற்றப்படுகிறது. ஒரு மன்னன் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ராமச்சந்திர மூர்த்தி ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்தார்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


https://suddhabhaktitamil.blogspot.com.


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more