நாரத மகரிஷி


 நாரத மகரிஷி


வழங்கியவர்கள் :- சுத்தபக்தி குழுவினர்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரு காலத்தில் உபபர்ஹணா என்ற கந்தர்வர் ஒருவர் வாழ்ந்தார்.  அவர் ஒரு வைஷ்ணவ பக்தராவார்.  அவர் இசையில் தேர்ந்து விளங்கியதால் பகவானை போற்றிப் பாடுவதன் மூலம் சேவைகள் செய்து வந்தார்.  மேலும் உபபர்ஹணா பார்ப்பதற்கு மிக அழகாக விளங்கியதால் மற்ற கந்தர்வர்களின் மரியாதைக்கும் உரியவரானார். அதை அவர் மிக சந்தோஷமாக அனுபவித்தார்.  ஒருநாள் கந்தர்வர்களும் அப்சரஸ் களும் தேவர்களின்  சபைக்கு பிரஜாபதிகளால் அழைக்கப்பட்டிருந்தனர். பகவானின் மகிமைகளை போற்றிப்பாடுவதற்காகவும்,  நடனமாடவும் உபபர்ஹணா கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அங்கு குழுமியிருந்த சுவர்க்க லோக வாசிகளால் திசை திருப்பப்பட்ட உபபர்ஹணா அவர்களை சந்தோஷப்படுத்தும் பொருட்டு அவர்களைப் போற்றிப் பாட ஆரம்பித்தார்.  இதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்த பிரஜாபதிகள் தனது திறமையை துஷ்பிரயோகம் செய்த உபபர்ஹணாவை ஒரு சூத்திர குடும்பத்தில் பிறக்கும்படி சபித்தனர்.  இதனால் உபபர்ஹணா தனது அடுத்த பிறவியில் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தார். அதிர்ஷ்டவசமாக அவனுடைய தாய் தூய வைஷ்ணவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தாள்.  சிறுவன் வளர்ந்ததும் தன் தாயுடன் அந்த சேவையில் தானும் கலந்து கொண்டான். அவன் அந்த சாதுக்களின் ஆசீர்வாதத்தை பெற்றதோடு ஞானத்துடன் நிறைய ஆன்மீக விஷயங்களையும் கற்றுக் கொண்டான்.  அந்த சிறுவனது பக்தி சேவையில் திருப்தியடைந்த சாதுக்கள் தாங்கள் உண்டது போக எஞ்சியிருக்கும் பிரசாதத்தை உண்ணும் வாய்ப்பை அவனுக்குக் கொடுத்தனர்.  அது சிறுவனது ஆன்மீக விழிப்புணர்ச்சியை தூண்டுவதற்கு மிகவும் உதவியது.  இதன் காரணமாக அவன் தனது அடுத்த பிறவியில் பிரம்மதேவரின் குழந்தையாகப்  பிறக்கும் வாய்ப்பைப் பெற்றார்.   மேலும் நன்றாகப் பாடும் திறமையும் கந்தர்வர்களைப் போல எல்லா லோகங்களுக்கும் சஞ்சரிக்கும் வாய்ப்பினையும் பெற்றார். இந்தப் பிறவியில் அவர் "நாரத முனிவர்" என்று அழைக்கப்பட்டார். 


நாரதமுனிவர் அகிலமெங்கும் பக்தி சேவையைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் சக்தி அளிக்கப்பட்ட ஒரு சக்தி ஆவேச அவதாரமாவார்.  அவருடைய சீடர்கள் பிரபஞ்சமெங்கும் வெவ்வேறு கிரகங்களிலும் பிற ஜீவராசிகளிலும் கூட உள்ளனர்.  "நாரத" என்ற சொல்லுக்கு   "முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மற்றவர்களுக்கு அவரால் வழங்க முடியும்" என்று பொருள்படுகிறது. "நார" என்ற சொல் "முழுமுதற் கடவுளைக்" குறிக்கிறது.  "தா" என்ற சொல் - "வழங்குபவர் என்று பொருள் படுகின்றது.  எனவே அவர் "தேவரிஷி" அல்லது "தேவர்களின் பிரதான முனிவர்" என்று அழைக்கப்படுகிறார்.  அவர் மிகவும் பிரசித்திபெற்ற பக்தர்களான பிரகலாதர், துருவ மகராஜ், வேத இலக்கியங்களைத் தொகுத்த  ஶ்ரீல வியாசதேவர் ஆகியோரின் ஆன்மீக குருவுமாவார்.  நாரத மகரிஷி பற்பல காலங்களில் பல்வேறு மன்னர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.  அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவருக்கும் யுதிஷ்டிர மகாராஜாவிற்கும் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்.  சில நேரங்களில் நாரதமுனிவர் சிலரை சபித்து இருந்தாலும் முடிவில் அது அவர்களுக்கு அனுக்கிரஹமாகவே (வரமாகவே) அமைந்திருக்கிறது.  அவர் முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதில் நிலைத்து இருந்ததால் எந்த ஒரு தடையும் இல்லாமல் எந்த ஒரு வாகனத்தின் உதவியும் இல்லாமல் அனைத்து லோகங்களுக்கும் செல்லும் வாய்ப்பைப்  நாரத முனிவர் பெற்றிருந்தார்.



நாரதமுனிவர் ஒவ்வொரு கிரகங்களுக்கும் பயணிக்கும்போது பகவானின் ஶ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளையும் அவரைப் பற்றிய திவ்யமான லீலைகளையும், செய்திகளையும் தொடர்ந்து தனது வீணையின் மூலம் பாடிக் கொண்டே செல்வார்.  இந்த வீணை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நாரத முனிவருக்கு வழங்க்கப்பட்டதாகும்.


நாரத முனிவர்" நாரத பக்தி சூத்திரம்" மற்றும் "நாரத பாஞ்சராத்ரம்" எனும் இரண்டு நூல்களை இயற்றியதாக அறியப்படுகிறது.  நாரத முனிவரின் அனைத்து நூல்களும் வைஷ்ணவ இலக்கிய  பயணத்திற்குக் கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷமாகும்.  நாரத முனிவர் இயற்றிய "நாரதீய புராணத்தை"  பகவான்  அனுக்ரஹித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் (கேரளாவின் இன்றைய ஆலப்புழா) ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களில் ஒன்றான குமார சம்பிரதாயத்தில் அல்லது நிம்பார்க்க சம்பிரதாயமத்தில் நாரதரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்.  நாரதமுனிவர் நித்தியமாக வாழ்பவர். எல்லையற்ற ஞானம் உடையவர். நம்மால் புரிந்து கொள்ள இயலாத பேரின்பத்தில் ஆழ்ந்திருப்பவர்.  சரியான மூலத்திடமிருந்து அதாவது அங்கீகரிக்கப்பட்ட குரு சிஷ்ய பரம்பரையில் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகளை மிக கவனமாக செவியுறுவதன் மூலம் நாரத முனிவரின் மிக உயர்ந்த அந்த பக்குவ நிலையை நாமும் அடையலாம்.


 (நாரதர் தனது முந்தைய பிறவியில் தூய பக்தர்களிடம் இருந்து கேட்டதைப் போல).  தூய பக்தர்களின் சங்கத்திலிருந்து பகவானைப் பற்றிய செய்திகளை கேட்கும் இந்த முறையானது குறிப்பாக சண்டை சச்சரவுகள் நிறைந்த இந்த கலியுகத்திற்கு வெகுவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாரத முனிவர் தனது தவத்தின் மூலமும் அங்கீகரிக்கப்பட்ட பரம்பரை கொள்கைகளை மிகச்சரியாக நிறைவேற்றியதன் மூலமும் மகாஜனங்களில் ஒருவரானார்.


நாரதருக்கென்று இரண்டு கோவில்கள் உள்ளன.  ஒன்று கர்நாடகத்தில் உள்ள "சிகட்டேரி கோயில்" (தாவனாகியர் அருகிலுள்ள) மற்றொன்று "நாரத கத்தே கோயில்"  (ராய்ச்சூர் அருகில்). இக்கோயில்கள் பசுமையான இயற்கை அழகிற்கு மத்தியில் அமைந்துள்ளது.  இக்கோயில்கள் ஆன்மீக ரீதியில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more