பௌதிகத்தில் ஆழ்ந்துள்ள ஜீவராசிகளின் துன்பத்திற்கான மூலகாரணம், அதிலிருந்து விடுபடுவதற்கான பரிகாரம் மற்றும் அடையப்பட வேண்டிய முடிவான பூரணத்துவம் ஆகிய அனைத்தும் இப்பதத்தில் கூறப்பட்டுள்ளன. ஜீவராசி அவனுடைய இயற்கையான அமைப்புப்படி, சிறைப்பட்டுள்ள ஜட வாழ்விற்கு மேற்பட்டவனாவான். ஆனால் இப்போது அவன் பகிரங்க சக்தியினால் சிறைப்படுத்தப்பட்டு உள்ளான். இதனால் தன்னை அவன் ஜட சக்தியின் ஒரு விளைபொருள் என்று எண்ணிக் கொள்கிறான். புனிதமற்ற இத்தொடர்பினால், தூய ஆன்மீகத் தன்மையைக் கொண்ட ஜீவன், ஜட இயற்கைக் குணங்களின் கீழ் பௌதிக துன்பங்களை அனுபவிக்கிறான். தான் பௌதிகத்தின் ஒரு விளைபொருள் என்று ஜீவராசி தன்னை தவறாக புரிந்துகொள்கிறான். தற்போது பௌதிக சூழ்நிலைகளின் கீழ் அவன் கொண்டுள்ள முறைகேடான எண்ணம், உணர்வு மற்றும் விருப்பம் ஆகியவை அவனுக்கு இயற்கையானவை அல்ல என்பதையே இது குறிக்கிறது. ஜீவராசி அவனுடைய பந்தப்படாத நிலையில் சிந்தனை, விருப்பம் மற்றும் உணர்வு ஆகிய இயல்பான சக்திகளைக் கொண்டுள்ளான். பந்தப்பட்ட நிலையில் அவனது அறிவு அறியாமையால் மூடப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக ஜீவராசி, பூரண அருவ பிரம்மாவாக இருக்கிறான் என்ற தத்துவம் இங்கு தவறென நிரூபிக்கப்படுகிறது. ஏனெனில், ஜீவராசி அவனுடைய ஆதியான பந்தப்படாத நிலையிலும் அவனுடைய சுயமான சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டவனாகவே இருக்கிறான். தற்போதுள்ள பந்தப்பட்ட நிலைக்கு பகிரங்க சக்தியின் ஆதிக்கமே காரணம். அதாவது, பரம புருஷர் விலகியிருக்கும்போது, மாயா சக்தி தைரியமாக அதன் காரியத்தைத் துவங்குகிறது. பகிரங்க சக்தியினால் ஜீவராசி மாயைக்கு உட்பட்டிருப்பதை பகவான் விரும்பவில்லை. பகிரங்க சக்தித்கு இவ்வுண்மை தெரியும். இருப்பினும் அவள் மறதியுள்ள ஆத்மாக்களை மாயையின் பிடியில் வைத்திருக்கும் நன்றியற்ற பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். பந்தப்பட்ட ஆத்மாக்களை திருத்துவதற்கு மாயா சக்தியின் இத்தகைய செயலும் தேவைப்படுவதால், மாயா சக்தியின் செயல்களில் பகவான் குறுக்கிடுவதில்லை. பாசமுள்ள தந்தையொருவர், தனது குழந்தைகள் மற்றவர்களால் தண்டிக்கப்படுவதை விரும்பமாட்டார். என்றாலும் அவருக்குக் கீழ்ப்படியாத குழந்தைகளை திருத்துவதற்காக, ஒரு கடுமையான மனிதனின் கண்காணிப்பில் அவர்களை விட்டு வைக்கிறார். ஆனால் அதேசமயம் பூரண பாசம் கொண்டவரான சர்வ சக்தி படைத்த தந்தை (பகவான்), பந்தப்பட்ட ஆத்மாக்கள் மாயா சக்தியின் பிடியிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்றும் விரும்புகிறார். அரசர் கீழ்ப்படிய மறுக்கும் பிரஜைகளை சிறைக்குள் அடைத்துவிடுகிறார். ஆனால் கைதியை விடுவிக்கும் எண்ணத்துடன், சில சமயங்களில் அரசர் தாமாகவே சிறைக்கூடத்திற்கு சென்று, தன்னை திருத்திக் கொள்ளும்படி அவனுக்கு அறிவுரை கூறுகிறார். அரசர் அவ்வாறு செய்ததும் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அதைப் போலவே, பகவான் தமது ஆன்மீக உலகிலிருந்து பௌதிக உலகிற்கு இறங்கிவந்து, பகவத் கீதையின் வடிவில் ஜீவராசிகளின் துன்பத்தை அகற்றுகிறார். மாயா சக்தியை வெல்லுவது மிகவும் கடினம் என்றாலும், பகவானின் தாமரைப் பாதங்களில் சரணடைபவர் உடனே விடுவிக்கப்படுகிறார் என்று கீதையில் அவர் அறிவுறுத்துகிறார். மாயா சக்தியின் குழப்பமான செயல்முறைகளிலிருந்து விடுபடுவதற்கு இந்த சரணடையும் முறைதான் சரியான பரிகாரமாகும். இம்முறை நல்ல சகவாசத்தினால் முழுமையடைகிறது. ஆகவே பரம புருஷ பகவானை உண்மையாக உணர்ந்துள்ள புண்ணிய புருஷர்களின் சொற்பொழிவுகளால் தூண்டப்பட்டு, பகவானின் உன்னத அன்புத் தொண்டில் மக்கள் ஈடுபடுகின்றனர் என்று பகவான் கூறுகிறார். பந்தப்பட்ட ஆத்மா பகவானைப் பற்றி கேட்பதில் ஒரு சுவையைப் பெறுகிறான். இத்தகைய கேட்கும் முறையினால் மட்டுமே, பகவானிடம் மரியாதை, பக்தி மற்றும் பற்று ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைக்கு அவன் படிப்படியாக உயர்த்தப்படுகிறான். சரணாகதி முறையினால் அனைத்தும் முழுமை அடைகின்றன. வியாசதேவரின் உருவில் அவதரித்த பகவான் இந்த இடத்திலும் அதே அறிவுரையைத்தான் கூறுகிறார். அதாவது, பந்தப்பட்ட ஆத்மாக்கள் இரு வழிகளில் பகவானால் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். பகவானின் பகிரங்க சக்தியால் தண்டிக்கப்படும் முறை ஒரு வழியாகும். பகவான் தாமாகவே உள்ளும், புறமும் ஆன்மீக குருவாக இருந்து ஜீவன்களை அழைத்துக் கொள்வது மற்றொரு வழியாகும். ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திற்குள்ளும் பகவான், பரமாத்மாவின் வடிவில் ஆன்மீக குருவாக இருக்கிறார். மேலும் அவர் சாஸ்திரங்கள், முனிவர்கள் மற்றும் தீட்சை குரு ஆகியோரின் வடிவில் வெளியிலுள்ள ஆன்மீக குருவாகவும் இருக்கிறார். இது அடுத்த சுலோகத்தில் இன்னும் தெளிவாக்கப்படுகிறது.
( ஸ்ரீமத் பாகவதம் 1.7.5 / பொருளுரை )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment