மஹாபாரதம் / அனுஷாஸன-பர்வம், / அத்தியாயம் ஒன்று
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மாஹாபாரத போரில் பெரும் உயிர்சேதத்திற்கு தானே காரணம் என்று மனம்வருந்திய யுதிஷ்டிர மஹாராஜரின் கேள்விகளுக்கு , பீஷ்மர் பிதாமகர் இங்கே ஒரு சிறிய கதையின் மூலக பதிலளிக்கிறார்:
“நீ கடவுளையும், கர்மாவையும், காலத்தையும் நம்பியிருக்கும்போது, எதற்காக நீ உன்னையே காரணகர்த்தாவாக நினைக்கின்றாய்? இது தொடர்பான கதை ஒன்றில் ம்ருத்யு (மரண புருஷர்), காலம் (கால புருஷர்), புத்திசாலி பெண்மணியான கௌதமி, வேடன் மற்றும் ஒரு பாம்பு, இவர்களிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறுகிறேன் கேள்” என்றார்.
ஒருகாலத்தில் கௌதமி என்ற ஒரு மூதாட்டி இருந்தாள், அவள் பொறுமை மற்றும் மனஅமைதியின் சிகரமாக திகழ்ந்தாள். ஒருநாள் தனது மகன் பாம்பு கடித்து இறந்திருப்பதைக் கண்டாள். அர்ஜுனகா என்ற கோபக்கார வேடன் பாம்பை கயிற்றினால் கட்டி எடுத்துவந்து கௌதமியிடம் காண்பித்தான். அவன் அவளிடம், “மதிப்பிற்குரிய பெண்மணியே, இந்த கொடும் நாகம் தான் உனது மகனை கொன்றுள்ளது. இந்த பாவியை எவ்வாறு அழிப்பது என்று உடனே உத்தரவிடு. இதனை நெருப்பிலிட்டு கொளுத்தவா அல்லது கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்தவா? சிறுவனைக் கொன்ற இந்த துரோகி உயிரோடு இருக்கக்கூடாது” என்றான்.
அதற்கு கௌதமி, “மதியற்ற அர்ஜுனகா, இந்த பாம்பை விட்டுவிடு. இதனை நீ கொல்லவேண்டாம். முட்டாள்களே, தனக்காக காத்திருக்கும் விதியை புறக்கணித்து, தன்மேல் பாவச் சுமைகளை சுமத்திக் கொள்வதற்கு அஞ்சுவதில்லை. அதேசமயம் அறிவுடையவன் தன்னை ஒழுக்க விதிகளுக்கு, கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்படுத்திக் கொண்டு, கப்பல் கடலை கடந்து செல்வதுபோல, இந்த பவ சாகரத்தை கடந்துவிடுகிறான். ஆனால் தன்னை பாவ விளைவுகளால் சுமையேற்றிக் கொள்பவனோ, நீருக்குள் எய்தப்பட்ட அம்பைபோன்று காணமல்போய்விடுகிறான். இந்த பாம்பை கொல்வதின் மூலமாக எனது மகன் உயிருடன் எழுந்துவரப்போவதுமில்லை, இதனைக் கொன்று நான் அடையப்போவதும் எதுவுமில்லை. மேன்மேலும் இதனை துன்புறுத்தாமல் உயிருடன் விட்டுவிடு” என்றாள்.
அதற்கு வேடன், “மஹாத்மாக்கள் மற்ற உயிர்வாழிகளின் காரணமாக உண்டாகும் துன்பங்களை பொறுத்துக் கொள்வர் என்பது நானறிந்ததே. ஆனால், உங்களால் பேசப்பட்டவைகள் அனைத்தும் சுயக்கட்டுப்பாடு உடையவனுக்கு மட்டுமேயன்றி, உங்களை போன்ற மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளவனுக்கு அல்ல. எனவே, நான் இதனை கொன்றே தீருவேன். மனம் அமைதியாக இருக்கும்போது காலமே அனைத்திற்கும் காரணம் என்று நினைக்கும் பெருந்தகையாளர்களும்கூட, நடைமுறை என்றுவரும்போது, உடனடியாக பழிவாங்குவதின் மூலமாகவே தங்களுடைய துயரத்தை போக்கிக்கொள்கின்றனர்.
ந சைவார்திர் வித்யதே ‘ஸ்மத்விதானாம்
தர்மாராம: ஸததம் ஸஜ்ஜனோ ஹி
நித்யாயஸ்தோ பால-ஜனோ ந சாஸ்தி
தர்மோ ஹி யேஷ ப்ராபவாத்மி அஸ்ய நாஹம்
“எங்களைப் போன்றவர்கள் ஒருபோதும் துயரமடைவதில்லை. நல்லவர்கள் எப்போதும் நற்செயல்களில்தான் ஆர்வம் கொள்வர். சிறுவனின் மரணம் ஏற்கனவே விதிக்கப்பட்டதே. எனவே, இந்த பாம்பை கொல்வதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். (1.19)
ந ப்ராமணானாம் கோபோ ‘ஸ்தி குத: கோபாச் ச யாதனா
மார்தவாத் க்ஷ்மயதாம் ஸாதோ முச்யதாம் யேஷ பன்னக:
“பிராமணர்கள் மனவருத்தத்திற்கு இடமளிக்க மாட்டார்கள், ஏனெனில் மனவருத்தம் துயரத்தையே விளைவிக்கும். பெருந்தகையாளனே, கருணைகொண்டு, இந்த பாம்பை மன்னித்து விட்டுவிடு.” (1.20)
அதற்கு வேடன், “உயிரினங்களை பலியிடுவதின் மூலமாக மனிதன் தகுதிபெறுவதைப் போலவே, இத்தகைய உயிரை கொல்வதின் மூலமாக மறுஉலகிற்கான தகுதியை பெறுகின்றோம். எதிரிகளை கொல்வதின் மூலமாகத்தான் மதிக்கப்படுவோம், வெறுக்கத்தக்க இந்த உயிரை கொல்வதின் மூலமாக இந்த உலகில் நீங்கள் உண்மையான மதிப்பை அடைவீர்கள்” என்றான்.
அதற்கு கௌதமி பதிலளித்தாள் :
கார்தப்ராப்திர் க்ருஹ்ய ஷத்ரும் நிஹத்ய
கா வா ஷாந்தி: ப்ராப்ய ஷத்ரும் ந முக்த்வா
கஸ்மாத் சௌம்யா பூஜகே ந க்ஷ்மேயம்
மோக்ஷ்ம் வா கிம் காரணாம் நாஷ்ய குர்யாம்
எதிரிகளை துன்புறுத்துவதின் மூலமாகவும், அழிப்பதின் மூலமாகவும் என்ன நன்மை உண்டாகப் போகிறது? எதிரியை அடக்கியாள்வதால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது? கருணையுடையவனே, இந்த பாம்பை மன்னித்து விட்டு விடுவதின் மூலமாக, நாம் நன்மை பெற முயற்சிக்கலாமே? (1.22)
அதற்கு வேடன் கூறினான், “இந்த ஒரு உயிரைக் கொல்வதின் மூலமாக, எண்ணற்ற உயிரினங்கள் பாதுகாக்கப்படும். நல்லவர்கள் துஷ்டர்களைக் கண்டு விலகிவிடுவார்கள். எனவே, இந்த பொல்லாத பாம்பை கொல்லவேண்டும்.”
வேடன் பாம்பைக் கொல்வதற்கு கௌதமியை அவசரப்படுத்தினான், ஆனால் கௌதமியோ, தனது மகனுடைய மரணத்திற்கான பழியை பாம்பின்மேல் சுமத்த விரும்பவில்லை. அவள் அவனுடைய மனதை மாற்றுவதற்கே முயற்சித்தாளேயன்றி, தனது மனதை மாற்றிக்கொள்வதாக இல்லை.
அச்சமயத்தில், கயிற்றினால் கட்டப்பட்டு வேதனையுடன் இருந்த பாம்பு, பெருமூச்சுவிட்டவாறு, மனித குரலில் பேசியது, “முட்டாள் அர்ஜுனகா, என்மீது என்ன குற்றம் உள்ளது? நானாக எதுவும் செய்யவுமில்லை, நான் சுதந்திரமானவனும் இல்லை. ம்ருத்யு, மரணமே என்னை இங்கு தனது தூதுவனாக அனுப்பியுள்ளது. அவனுடைய வழிநடத்தலின்படிதான், நான் சிறுவனைக் கடித்துள்ளேன். இதில் எனது தனிப்பட்ட கோபமோ அல்லது தனிப்பட்ட விருப்பமோ எதுவும் கிடையாது. சிறுவனின் மரணத்திற்கு நான் தனிபட்ட காரணமல்ல, இது யாகத்தை செய்துவைக்கும் பிராமணர் தனது சுய நலனுக்காக யாகத்தில் நெய் ஊற்றுவதில்லை, யாகத்தை மேற்கொள்ள வைத்தவரின் நலனுக்காகவே யாகம் செய்வதைப் போன்றதாகும். எனவே இதில் பாவம் ஏதும் இருப்பின் அது ம்ருத்யுவிற்கே சொந்தமாகும்.”
அப்போது ம்ருத்யு அங்கே தோன்றி கூறினார், “பாம்பே, நான் உன்னை இங்கே, காலத்தின் கட்டளையால் தான் அனுப்பிவைத்தேன். எனவே இந்த சிறுவனின் மரணத்திற்கு நானோ நீயோ காரணமல்ல. காலத்தினால் செயல்படுத்தப்படும் ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களே காரணமாகின்றன. பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள அசையும் மற்றும் அசையாத உயிர்வாழிகளின் செயலும் செயலற்ற தன்மையும் காலத்தினால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன். பாம்பே, பிரபஞ்சம் முழுவதுமே காலத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதனை நன்கறிந்த நீ எதற்காக என்னை குறை சொல்கின்றாய்? நாம் இருவருமே சுதந்திரமான முகவர்கள் அல்ல. நாம் காலத்திற்கு கட்டுப்பட்டவர்களே, நமக்கு கட்டளையிடப்பட்ட பணியை நாம் மேற்கொள்கின்றோம், அவ்வளவே.”
வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குவந்த கால புருஷன் கூறினார், “வேடனே, எந்த உயிர்வாழியின் மரணத்திற்கும், நானோ, மரணபுருஷரோ அல்லது இந்த பாம்போ காரணமில்லை. நாங்கள் அனைவருமே செயலுக்கான உடனடி காரணம் மட்டுமே. அர்ஜுனகா, இந்த சிறுவனுடைய கர்ம வினைதான் எங்களை இவ்வாறு செயல்பட வைத்துள்ளது. இந்த சிறுவனுடைய மரணத்திற்கு வேறு எதுவும் காரணமில்லை. இவன் தனது கடந்த கால கர்ம வினையின் காரணமாகத்தான் கொல்லப்பட்டுள்ளான்.”
“நாம் அனைவருமே நமது வினைகளுக்கேற்பவே செயல்படுகின்றோம். கர்மா நமது மகன்களைப் போன்றே, நமது முக்திக்கு உதவியாக உள்ளது, மேலும் கர்மாவே நல்லவரையும் தீயவரையும் வெளிப்படுத்துகிறது. களிமண்ணைக் கொண்டு குயவன் தான் விரும்பும் வடிவில் பொருட்களை உற்பத்தி செய்வதுபோலவே, நமது கர்மவினைகளின காரணமாகவே நாம் பல்வேறுவிதமான பலன்களை அடைகின்றோம். எனவே நானோ, நீயோ, ம்ருத்யுவோ, இந்த பாம்போ அல்லது இந்த வயதான பிராமிணியோ இந்த சிறுவனுடைய மரணத்திற்கு காரணமில்லை. அவனுடைய மரணத்திற்கு அவனேதான் காரணம்.”
கால புருஷனுடைய வார்த்தைகளைக் கேட்ட, கௌதமி அர்ஜுனகனிடம் கூறினாள், “இந்த சிறுவன் தனது கர்ம வினையின் காரணமாகத்தான் மரணமடைந்துள்ளான். மேலும் எனது கடந்த கால கர்மவினையில் காரணமாகவும்தான், நான் எனது மகனின் மரணத்தை சந்திக்கவேண்டியுள்ளது. காலம் மற்றும் ம்ருத்யு புருஷர்களே இங்கிருந்து செல்லுங்கள், அர்ஜுனகா, இந்த பாம்பை விடுவித்துவிடு” என்றாள்.
காலம், ம்ருத்யு, மற்றும் பாம்பு என அனைவரும் தத்தமது இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர், கௌதமியும் வேடனும் மனநிம்மதியடைந்தனர்.”
இவ்வாறாக விவரித்துக் கொண்டிருந்த பீஷ்மர் கூறினார், “யுதிஷ்டிரா, உனது துயரத்தை விடுத்து மனம் அமைதி கொள்வாயாக. மனிதர்கள் நரகமாயினும் சொர்க்கமாயினும் தத்தமது கர்மவினைகளையே அனுபவிக்கின்றனர். இந்த போருக்கான காரணம் நீயோ அல்லது துரியோதனனோ அல்ல. இந்த போரில் கொல்லப்பட்டுள்ள அரசர்கள் அனைவரும் தங்களுடைய விதியின் பலனாகத்தான் மரணமடைந்துள்ளனர்.” இதனைக் கேட்ட வெற்றிகொள்ளப்படாதவரான யுதிஷ்டிரர் மனநிம்மதியடைந்தார்.
பூரணத்தில் பக்குவமடைந்தவர்கள் தங்களுடைய கடந்த கால விளைவுகளின் காரணமாக வரும் துன்பங்கள் எதுவாகினும் அதனை மறுப்பின்றி, பொறுமையுடன் ஏற்றுக்கொள்கின்றனர். வாழ்க்கையின் பாடங்களை மற்றவர்களை குறைகூறுவதின் மூலமாகவோ அல்லது மரண புருஷரை நிந்திப்பதின் மூலமாகவோ திசைதிருப்ப முயற்சிக்க மாட்டார்கள். இதனை இவ்வாறாக ஏற்றுக்கொள்வதே ஆன்மீக வாழ்வின் அடிப்படையான, முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றப் படியாகும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
Comments
Post a Comment