புலியும், பசுவும்




 புலியும், பசுவும்

ஆதாரம் : பத்ம புராணம்


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


முன் காலத்தில் பிரபஞ்சன் என்ற ஒரு அரசன் இருந்தான் மகாபலசாலியாகிய அந்த மன்னன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் ஒரு மான் வருவதைக் கண்டான் உடனே அந்த மானை நோக்கி ஒரு கூரிய அம்பை எய்தான் துள்ளிக் குதித்து விழுந்த மான் வேகமாகச் சுற்றுமுற்றும் பார்த்த போது கைகளில் வில் அம்புடன் ஓடி வந்து கொண்டிருந்த மன்னனைப் பார்த்தது . உடனே அந்த மான், "அடே முடா , என்ன காரியம் செய்துவிட்டாய் நான் தலையைக் குனிந்தபடி என் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதைக் கவனிக்காமல் என்னுடைய மாமிசத்தைத் தின்பதற்கு ஆசைப்பட்டு என்மேல் அம்பு எய்துவிட்டாயே? பால்கொடுக்கும் தாயைக் கொல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா ? இரக்கமில்லாத ராட்சசனைப்போல் இக்கொடிய காரியத்தைச் செய்த நீ அரக்க சுபாவத்துடன் அலையும் கொடிய புலியாக மாறிவிடக்கடவாயாக" என்று சபித்தது


அரசன் அதிர்ச்சியடைந்து போய் நின்றுவிட்டான். அந்த மானைப் பார்த்து இருகரங்களும் கூப்பியவனாய், "மானே , நீ உன் குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருப்பதை நான் பார்க்கவில்லை அறியாமையால் தவறு செய்துவிட்டேன். புலிரூபம் மாறி எனக்கு மீண்டும் மனித ரூபம் எப்போது கிடைக்கும்? அருள் கூர்ந்து எனக்கு சாப விமோசனம் கிடைக்க வழி கூறுவாயாக" என்று வேண்டினான்.


அதைக் கேட்ட அந்த மான் அரசனிடம் இரக்கம் கொண்டதாக ஒரு நூறு வருஷத்திற்குப் பின்னர் நந்தா என்னும் பசுவோடு பேசும் காலம் வரும். அந்த பசுவின் உபதேசத்தால் ஞானம் பெற்றவுடன் உனக்கு சாபவிமோசனம் ஏற்படும்," என்று கூறியது


சற்று நேரத்திற்குள் பிரபஞ்சன் என்ற அந்த மன்னனுக்கு புலியின் உருவம் வந்துவிட்டது. நீண்ட தாடையும், கூறிய நகங்களும் உடைய கொடிய மிருகமாக மாறி விட்டான். அன்றுமுதல் அந்தப்புலி அந்தக் கானகத்தில் சுற்றி அலைந்து பிராணிகளை அடித்துத்தின்று உயிர் வாழ்ந்தது. சிலசமயங்களில் அது மனிதர்களை கூட விட வில்லை . அதன் பயங்கரமான தோற்றத்தைக் கண்டவர்கள் பயந்து நடுங்கினர் மிருகங்கள் அந்தப் புலி பக்கமே போக அஞ்சின.ஒ


இவ்வாறாக ஒரு நூறு வருஷம் கழிந்தன பயங்கரமான மிருகமாக, பிராணிகளைக் கொன்று தின்று வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் பிரபஞ்சனின் உள்மனம் தனக்கு மீண்டும் மனிதவாழ்வு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தது. மாமிச ஆசையினால் வேட்டைக்குச் சென்ற எனக்கு மனிதர்களே அஞ்சி நடுங்கும் படியான கொடிய விலங்கின் வாழ்க்கை ஏற்பட்டு விட்டது உத்தமர்களான அரசர்களின் வம்சத்தில் பிறந்த நான் கொடிய பாவத்தை செய்து இந்தகதிக்கு ஆளாகிவிட்டேன். இனி மீண்டும் எனக்கு நற்கதி ஏற்படுமா என்னுடைய ஜென்மம் கடைத்தேற வேண்டுமானால் பிராணிகளைக் கொன்றுதின்னும் விலங்கின் நிலை ஒழிந்து மனிதனாக வேண்டும். அதன் பிறகாவது எந்தப் பிராணியையும் துன்புறுத்தாத அகிம்சை நெறிப்படி வாழவேண்டும் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமா? என்று ஏங்கிக்கொண்டிருந்தது.


இவ்வாறு இருக்கையில் அந்த வனத்தின் சமீபமாக கோபாலர்களின் கூட்டம் ஒன்று வந்து தங்கியது பசுக்களும் கன்றுகளும் நடமாடத் தொடங்கின. ஆயர்கள் மாடுகளை ஒட்டும் ஓசையும், மாலை வேலைகளில் ஆய்ச்சியர் பசுக்களைத் தொழுவத்தில் கட்டுவதும், கன்றுகளை அவிழ்த்துவடுவதும், பிறகு பால் கறப்பதும் போன்ற ஓசைகளும் கேட்கத் தொடங்கின


அந்தப் பசுக் கூட்டத்தில் நந்தா என்ற பெயரையுடைய அழகான பசு ஒன்றும் இருந்தது. மந்தையில் இருந்த பசுக்களுக்கு எல்லாம் ராணிபோன்று விளங்கியது. அதன் அழகிய தோற்றமும் அங்க அமைப்புகளும் , சுபலட்சணங்கள் உடையவையாய் இருந்தன. காலையில் எழுந்தவுடன் அந்தப் பசுவின் முகத்தில் விழித்தாலே கஷ்டங்கள் எல்லாம் பறந்துபோகும். காரியங்கள் சுலபமாக நிறைவேறும் என்று ஆயர்கள் நம்பினர்.  மற்ற பசுக்களோடு அது வனத்தில் புல்மேய்வதும் கூட மிக அழகாக இருக்கும். ஒருநாள் அந்தப் பசு மேய்ந்தபடியே வனத்திற்குள் வெகுதூரம் சென்றுவிட்டது. வனத்தை ஒட்டியிருந்த மலைச்சரிவில் பல குகைகளும், அடர்த்தியான புதர்களும் இருந்தன. பயங்கரமான மிருகங்கள் வாழும் இடம் அது. நந்தா என்னும் பசு புல்வெளியைத் தாண்டி சமீபமாக வந்துவிட்டதை ஒரு பெரிய மலைப்பாறையின் மேல் நின்று கொண்டிருந்த புலி கண்டது. கொழு கொழு என்றிருந்த பசுவைக்கண்டவுடனேயே புலியின் நாவில் நீர் ஊறியது நில் அங்கே! அங்கேயே நில்,' என்று கர்ஜித்துக் கொண்டு புலி அந்தப் பசுவை நோக்கிப் பாய்ந்து வந்தது.


புலியைப் பார்த்தவுடன் பசு பயந்துபோய் நின்று விட்டது அதனாற் அசையக்கூட முடியவில்லை. புலி அதைப் பயங்கரமாகப் பார்த்தபடி, "எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது, நான் உன்னைத் தின்னப் போகின்றேன்." என்றது


பசுவின் உடல் எல்லாம் நடுங்கியது. அப்பொழுது அதற்கு வீட்டில் பசியுடன் தன்னை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் தன் குட்டியின் ஞாபகம் தான் வந்தது அதை நினைத்துக் கொண்டவுடனேயே பசுவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன. மீண்டும் தன் குட்டியைப் பார்க்க முடியும் என்ற எண்ணமே அதன் மனதிலிருந்து அகன்றுவிட்டது.


அதைப்பார்த்து புலி ஏன் அழுகிறாய் தெய்வாதீனமாக இன்று என் முன் நீ அகப்பட்டாய். உன்னைப்போன்ற பிராணிகளை என்னைப் போன்ற மிருகங்களுக்கு இரையாவதற்காகவே கடவுள் படைத்திருக்கிறார். நீ அழுதாலும் சரி, சிரித்தாலும் சரி நான் உன்னை விடப் போவதில்லை. மற்ற பிராணிகளை கொன்று தின்னாமல் நான் உயிர் வாழ முடியாது ஒன்றைத் தின்றுதான் இன்னொன்று ஜீவிக்கவேண்டும் என்பது இந்த உலகத்தின் நியதி பசுவே இது உனக்குத் தெரியாதா ? தெரிந்திருந்தும் ஏன் அழுகிறாய் ? யாருக்காக அழுகிறாய்” என்று கேட்டது.


பயங்கரமான தோற்றமுடைய அந்தப் புலி அவ்வாறு பேசியதைக் கேட்டதும் பசு ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தது.


புலி மேலும் கூறியது, "பசுவே! நீ அழுவதைப் பார்தவுடன் என் மனதில் ஏதோ ஒரு சலனம் ஏற்பட்ட காரணத்தாலேயே கேட்கிறேன். இல்லாவிட்டால் இதற்குள் நான் உன்மீது பாய்ந்து தின்றிருப்பேன்," என்றது.


பசு அந்தப் புலியைப் பார்த்து, "அழகான தோற்றமுடைய வீர புருஷனே, உன்னை நான் வணங்குகிறேன். என்னுடைய உயிருக்காக நான் அழவில்லை ஏனென்றால் எந்த ஜென்மம் எடுத்தபோதிலும் பிறப்பு என்பதொன்று ஏற்பட்டவுடனேயே இறப்பு என்பது ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. மிருகேந்திரா, சாவைக் கண்டு அஞ்சி நான் அழவில்லை பாசத்தினாலேயே அழுகிறேன். சில நாட்களுக்கு முன்னர்தான் நான் ஒரு கன்றை ஈன்றேன். அதற்குப் பால் குடிப்பதற்கு மட்டும் தான் தெரியும் புல் தின்பதற்குக் கூட அது இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. ஆயர்பாடியில் அதைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள் பசியோடு அது என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அதன் பசியை யார் ஆற்றுவார்கள்? நான் இறந்து போனபின் அது எவ்வாறு வாழப் போகிறது என்பதை நினைத்து அழுதேன். என்னுடைய ஒரே வேண்டுகோள் கடைசியாக நான் ஒருமுறை என் கன்றைப் பார்த்துவிட்டு அதற்குப் பால் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன். என்னுடைய தோழிமாரான மற்ற பசுக்களிடம் சொல்லி அதைப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு வந்து விடுகிறேன். எனக்கு அனுமதி கொடுப்பாயாக, நான் திரும்பி வந்த பின் உன்னுடைய விருப்பம் போல் என்னைத் தின்று பசியை ஆற்றிக் கொள்வாயாக" என்று கூறியது.


அதைக் கேட்ட புலி, "பசுவே! நீ சொல்வதை நான் நம்பமாட்டேன் சகல பிராணிகளும் என்னைக் கண்டவுடனேயே பயந்து நடுங்கி பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விடுகின்றன காலனால் பீடிக்கப்படும் பொழுது மிகச்சிறந்த மனிதர்களைக் கூட அவர்கள் செய்த தானம், தவம், தாய், தந்தை, குரு எவராலுமே காப்பாற்ற முடிவதில்லை அவர்கள் எல்லாம் யாரை நினைத்து அழுகிறார்கள் ? நீ இங்கிருந்து போனவுடனே கோபிகள் உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள். பசுக்களின் அரசியாய் வைத்துப் பூசிப்பார்கள். கோலோகம் போன்ற உனது இருப்பிடத்தைப் பார்த்த பிறகு மறுபடியும் இங்கேவர உனக்கு மனம் வராது உன்னுடைய கன்றைப் பார்த்தவுடன் மேலும் அதிகமான அன்பின் வசப்பட்டு நீ பரிதவிப்பாய் இப்போது சொல்கின்ற வார்த்தைகளையெல்லாம் மறந்து விடுவாய் உன்னுடைய இரத்தத்தைக் குடிப்பதற்காக என்னுடைய ஆவி துடிக்கிறது. நான் உன்னைவிட மாட்டேன் என்று கூறியது.


அதைக் கேட்ட பசு, 'மிருகேந்திரா! முதலில் என் வார்த்தையைக் கேள். நான், என்னுடைய பிள்ளைகள், பந்துக்கள் தோழிகள், கோத ஜனங்கள் எல்லோர் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன் நான் என் கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டுக் கண்டிப்பாகத் திரும்பி வந்துவிடுகிறேன். அப்படி வராவிட்டால் பிராமணனைக் கொலை செய்தவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேனாக! தாய் தந்தையர்களைப் பட்டினிப்போட்டுக் கொன்றவன் எத்தகைய பாவத்திற்கு ஆளாவானோ அத்தகைய கொடிய பாபத்திற்கு ஆளாவேனாக நம்பியவர்க்கு நஞ்சை வைத்தபாவி அடையும் நரகத்தை அடைவேனாக! பசுக்களை வதைத்தவன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கொன்றவன் தன் பெண்ணை ஒருவனுக்கு தானம் கொடுத்து பிறகு மறுபடியும் வேறொருவனுக்கு கன்னிகாதானம் செய்பவன் நம்பிக்கையோடு வந்த நண்பன் ஏமாற்றமடைந்து மனம் வருந்தித் திரும்பிப் போகும்படியாகச் செய்தவன் இன்னும் இதைப் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் எந்த கதிக்கு ஆளாகிறார்களோ? அந்த கதிக்கு ஆளாவேனாக மிருகேந்திரா! இப்போது என்னைப் போகவிடு நான் ஒருக்காலும் சொன்ன சொல் தவறமாட்டேன்' என்று கூறியது.


புலிக்கு நம்பிக்கை ஏற்பட்டது அது பசுவைப் பார்த்து பசுவே! உன்னுடைய வார்த்தைகளை நான் நம்புகிறேன். நான் மூர்க்க சுபாவமுடையவனாக இருந்த போதிலும் உன்னுடைய சபதம் எனக்கு நம்பிக்கையூட்டுவதால் உன்னைப் போக அனுமதிக்கிறேன் ஆனால் ஆசைப்படுகின்ற பொருளை அடைவதற்காகவும், விவாஹ காரியத்திலும், பசுக்களுக்கு நன்மை செய்வதற்காகவும், சொன்ன சொல். தவறுவதால் பாதகம் இல்லை என்று உலகம் கருதுகின்றது. எனக்குத் தெரியும் மேலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம் என்பவர்கள் உள்ளனர். சாஸ்திரங்களுக்கு வேறு வேறு அர்த்தம் கற்பிப்பவர்களும் உள்ளனர். ஆயினும் நீ என்னை வஞ்சிக்க மாட்டாய் என்ற நம்பிக்கையோடு போகவிடுகிறேன். நீ என்ன செய்வாயோ செய்" என்று கூறியது.


அதைக் கேட்ட பசு, " மிருகேந்திரா, உன்னை வஞ்சிப்பதற்குப் போதிய சக்தி யாருக்கு இருக்கிறது அன்னியரை வஞ்சிப்பவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்கிறான் என்பதல்லவா உண்மை என்றது.


பசுவே! நீ போய் உன் கன்றைப் பார்த்துவிட்டு, ஆசைதீர அதனுடன் அளவளாவி அதற்குப் பசியாரப் பால் கொடுத்துவிட்டுப் பிறகு வா" என்று புலி கூறியது.


பசு அவ்விடமிருந்து தன்னுடைய மந்தையை நோக்கி அழுதுகொண்டே ஓடி வந்தது. தேம்பிக்கொண்டே வேகமாக நடந்து கோகுலத்தை அடைந்தது. அங்கு தன் கன்றைப் பார்த்தவுடன் ஓடிப்போய் அதைத் தழுவிக் கொண்டு நாவால் நக்கியும் முகத்தால் தடவியும் கண்ணீரால் நனைத்தும் பலவாறு சீராட்டியபடி அதற்கு பால் கொடுக்க முயன்றது. அப்பொழுது அந்தக் கன்று தன் தாயைப் பார்த்து, "அம்மா இன்று நீ வழக்கத்திற்கு மாறாக என்னென்னவோ செய்கிறாயே காரணம் என்ன? இன்று உன் கண்களில் அளவு கடந்த பயக்குறி தோன்றுகிறதே? அதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டது 


பசு "மகனே! இன்று என்னிடம் ஆசைதீரப் பால் குடித்துக்கொள், இதற்குப் பிறகு நீ என்னிடம் பால் அருந்த முடியாது. காரணம் என்னவென்று கேட்காதே? அதைச் சொல்வதற்கு என்னால் முடியாது இனிமேல் நீ என்னை பார்க்க முடியாமல் போகும். நான் ஒருத்தி இருக்கிறேன் எனக்குப் பிறகு உனக்கு யார் பால் கொடுக்கப் போகிறார்கள்? நான் உன்னை விட்டுவிட்டுப் போய்விடுவேன் ஏனென்றால் நான் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவளாய் இருக்கிறேன் பசியோடு இருக்கும் புலிக்கு இரையாவதற்காகப் போகிறேன்" என்று கூறியது.


அதைக் கேட்டவுடன் அந்தப் பசுவின் கன்று துடித்துப் போயவிட்டது. அம்மா! நீ எங்கே போகிறாயோ அங்கே நானும் வருகிறேன் உன்னோடு நானும் உயிரை விடுவேன் அதில் சந்தேகமே வேண்டாம், நீ இங்கிருந்து போன பின் தனிமையாக இருந்து பலவிதங்களில் இன்னல்பட்டு மரணமடைவதைவிட உன்னோடு கூடவே அந்தப் புலிக்கு இரையாய் மடிவதே மேல் என்று நினைக்கிறேன், அப்படியில்லாவிட்டால், அம்மா! நீ இங்கே இரு. உன்னுடைய சபதத்தைப் பூர்த்தி செய்வதற்காக நான் புலியிடம் செல்கிறேன். தாயே தாய்க்கு உதவாத பிள்ளை உயிரோடு இருந்தும் என்ன பயன்? குழந்தைகளுக்கு தாயைவிடச் சிறந்த ஒரு தெய்வமும் கிடையாது என்று தானே சகல சாஸ்திரங்களும் கூறுகின்றன. இந்த உலகத்திலும் சரி, பரலோகத்திலும் சரி, தாய்க்குச் சமமான தெய்வம் யாரும் கிடையாது என்பதுதானே பிரம்மன் விதித்த விதி?" என்று கூறியது.


அதைக் கேட்ட பசு விம்மி அழுதபடி ஐயோ மகனே என்ன வார்த்தை சொல்கிறாய் உன்னை ஒருக்காலும் மரணத்திற்கு அனுப்பமாட்டேன், காலதேவன் வகுத்த விதிப்படி யார் சாக வேண்டுமோ அவர்தான் சாக முடியும் ஒருவருக்காக மற்றவர் சாவதென்பது முடியவே முடியாத காரியம் என் மகனே ! என் சொல்லைக் கேள். நீ இங்கேயே இரு. இவ்விடத்தில் இருந்த போதிலும் தவறான காரியங்களைச் செய்யாதே. மனதில் ஒரு போதும் ஆசைக்கு இடம் கொடுக்காதே ஆசையின் காரணமாகவே மனிதர்கள் அக்ரமங்களைச் செய்து நாசம் அடைகிறார்கள். பேராசை, பிறர் வருந்தும்படியான காரியங்களைச் செய்தல், தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற அகந்தை, இவை மூன்றுமே ஆத்மாவின் அழிவுக்கு காரணமான செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. நீ எப்பொழுதும் உன்னுடைய ஆத்மாவைக் களங்கமில்லாமல் காப்பாற்றிக் கொள்வதற்கே முயற்சி செய் என்று பல நீதிகளை எடுத்துக் கூறியது.


அதன் பிறகு நந்தா என்ற அந்தப் பசு ஆயர்பாடியிலிருந்த மற்ற பசுக்கள் எல்லாவற்றையும் அழைத்துத் தனக்கு நேரிட்டுள்ள துன்பத்தைப் பற்றிக் கூறியது. " நான் இறந்த பிறகு என் குழந்தையை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அனாதையாகிவிட்ட என் பிள்ளையை உங்கள் பிள்ளையைப் போல் பார்த்துக் கொள்ளுங்கள்.


உங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாப்பீர்களோ அதே போல் இதற்கும் பாலூட்டி வளர்த்து விடுங்கள் தாயில்லாப்பிள்ளையான இதற்கு தாயில்லை என்ற குறையே தோன்றாமல் காப்பற்ற வேண்டியது உங்கள் கடமை" என்று கண்ணீர் வடித்தபடி கூறியது


நந்தாவின் கதையைக் கேட்ட மற்ற பசுக்கள் சத்தியத்தைக் காப்பற்ற வேண்டும் என்ற அதன் வைராக்கியத்தைப் பாராட்டிய போதிலும் அது தானாகப் போய் புலிக்கு பலியாக வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தன. "நீ செய்ய நினைப்பது உலகத்திலே யாருமே செய்யமுடியாத வீரத்தனமான காரியம் என்றாலும் அப்படிச் செய்யவேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் பிரம்மவாதிகளான ரிஷிகள் கூட ஒருவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாக்கை மீறுவது பாவம் அல்ல என்றே கருதுகிறார்கள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சொல்லப்படும் பொய்யும் உண்மைக்குச் சமமே என்று நீதிநூல்கள் கூறுகின்றன பிறர் உயிரைக் காப்பற்றுவதற்காகவும் விவாஹ சம்பந்தம் பேசி முடிப்பதற்காகவும் பசுக்கள் பிராமணர்களை ரக்ஷிப்பதறகாகவும் பொய் சொல்லலாம் அதனால் பாவம் ஏற்படாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆகையால் நீ உன் குழந்தையை அனாதையாக விட்டுவிட்டுப் போக வேண்டிய அவசியமில்லை என்று பல நியாயங்களை எடுத்துக் கூறின.


ஆனால் நந்தா அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை இன்னொரு உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லத் தயங்கமாட்டேன். ஆனால் பொய் சொல்லி சபதத்தை மீறி , கொடுத்த வாக்குத் தவறி என்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பவில்லை. இந்த உலகமே சத்தியம் என்ற அஸ்திவாரத்தின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது. ஜனனம் எடுக்கின்ற பிராணிகளுக்கு சுகம், துக்கம், மரணம் எல்லாம் ஏற்படக் கூடியவைதான். இவற்றிலிருந்து எந்தப் பிராணியும் தப்பவே முடியாது. அசுரர்களின் அரசனான மகாபலி தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக தன் ராஜ்யத்தையே இழந்தான். தன்னையும் இழந்தான். ஆயினும் அழியாப் புகழ் பெற்றான் அமரேந்திரனுக்கும் கிடைக்காத அரிய பதவி அவனுக்கு கிடைத்ததன்றோ? தன்னுடைய வாக்கை காப்பாற்ற முடியாதவன் வேறு எந்த தர்மத்தையும் காப்பாற்ற முடியாது. தன்னைத் தனக்கு அன்னியமாகக் கருதி வேறொருவன் நம்மிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதே போல் நாமும் நடந்து கொள்வதுதான் தருமம் ஆகும். " என்று கூறியது .


அதன் பிறகு நந்தா என்ற அந்தப்பசு தன் பிரிய நண்பர்கள் தோழிகள் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கோகுலத்தை ஒருமுறை சுற்றிவலம் வந்தது. பிறகு சகல தேவகணங்கள், தருக்கள் செடி கொடிகள் முதலியன எல்லாவற்றிடமும் தன் குழந்தையைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டது பின் சோகமே உருவாகப் புலியை நோக்கி நடக்கத் தொடங்கியது. தன் குழந்தையைத் திரும்பி பார்ப்பதும், அழுவதும், தள்ளாடி விழுவதுமாக அது மிகுந்த துக்கத்துடன் நடந்து மாமிச பக்ஷணியான புலி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்த்தது. நீண்ட தாடையும் கூரிய பற்களுமாக மஹாபயங்கரமான தோற்றமுடையதான அந்தப்புலி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது


இதற்குள் நந்தாவின் பிள்ளையான கன்று தன் வாலைத் தூக்கிக் கொண்டு வெகு வேகமாக ஓடி நந்தா சென்ற இடத்திற்கு வந்துவிட்டது பசு தன் குட்டியைப் பார்த்தது, பிறகு எமனுடைய உருவமாக நின்று கொண்டிருந்த புலியைப் பார்த்து மிருகேந்திரா உனக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி திரும்பி வந்துவிட்டேன் என்னுடைய மாமிசத்தைத் தின்று பசி ஆற்றிக் கொள். ரத்தத்தைக் குடித்து உன் தாகத்தைத் தணித்துக் கொள். பஞ்ச பூதங்களாலான என்னுடைய சரீரம உனது தேகத்திலுள்ள பஞ்ச பூதங்களைத் திருப்திப் படுத்தட்டும். என்னைக் கொன்று தின்ற பிறகு இதோ இங்கே நிற்கும் என்னுடைய குட்டியையும் கொன்று சாப்பிட்டு விடு என்று கூறியது


நந்தா கூறியதைக் கேட்ட புலி, "பசுக்களில் சிறந்த உத்தமியே! சத்தியத்தைக் காப்பாற்றும் உன்னுடைய சலனமில்லாத உறுதியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் சத்திய பரிபாலனம் செய்தவர்களுக்கு ஒருக்காலும் துன்பம் நேர முடியாது. நீ மீண்டும் திரும்பி வருவேன் என்று என்னிடம் உறுதி கூறி வாதாடிய போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது உன்னை பரிசோதிப்பதற்காகவே அனுப்பிவைத்தேன். ஆனால் சொன்ன சொல்லைக் காப்பாற்றி நீ என்னை வென்று விட்டாய், இன்று முதல் உன்னை என் தாயாக கருதுவேன் இங்கே நிற்கும் உன் குட்டியையும் என் தம்பியாக கருதுவேன். நல்லவளே! மகாபாவியாகிய என் கண்களைத் திறந்து விட்டாய்! உன்னுடைய செயலால் சத்தியமே சகல லோகங்களுக்கும் ஆதாரம். சத்தியத்தின் மேல்தான் தருமமே நிலைத்துக் நிற்கிறது என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டாய் உன்னைப் போன்ற சத்திய விரதையான தேனுவின் பாலை அருந்தி உயிர் வாழ்கின்ற கோபாலர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும். 


இதுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான பிராணிகளைக் கொன்று தின்று அளவு கடந்த பாவங்களைச் செய்துவிட்டேன். எனக்கு என்ன கதி கிடைக்குமோ, என்று நினைக்கும் போது என் உயிரே நடுங்குகிறது. மகாபாவியும் கெட்ட நடத்தை உடையவனும் மிகக்கொடூரமான சுபாவம் உடையவனும் கொலைகாரனுமான இந்தப் பாவியின் பாவத்தைக் கழுவப் புண்ணியத் தீர்த்தங்களால் முடியுமா? ஒருக்காலும் முடியாது. என்ன செய்து இந்த பாவத்தைத் தீர்ப்பேன். மலை உச்சியில் இருந்து விழுந்து மரணத்தைத் தழுவட்டுமா? வெந்தணலில் பிரவேசித்து இந்த உடலை வாட்டி வதைத்துப் பொசுக்கட்டுமா? என்ன செய்தால் என் பாவம் தீரும் தேனுவே? சுருக்கமாகச் சொல். ஏனென்றால் விளக்கமாகப் பேசிக் கொள்ள இப்போது நேரமில்லை" என்றது.


அதைக் கேட்ட பசு புலியைப் பரிவுடன் பார்த்தபடி கிருதயுகத்தில் தவம் செய்வதே மிகச் சிறந்த காரியமாகக் கருதப்பட்டது. திரோதாயுகத்தில் ஞானத்தினால் ஆன்ம விடுதலை கிடைத்தது துவாபர யுகத்தில் யாகம் முதலான கருமங்களைச் செய்வதால் ஜீவன்கள் முக்தி அடைந்தனர். ஆனால் கலியுகத்தில் தானம் செய்வது ஒன்றினால் மட்டுமே ஜீவன்கள் சகல நன்மைகளையும் அடைய முடியும் தானங்களில் சிறந்தது பிராணிகளுக்கு அபயதானம் அளிப்பதாகும். அதைவிடச் சிறந்த தானம் வேறு எதுவும் கிடையாது. இந்த சராசரம் எங்கிலும் பிறர்க்கு அபயதானம் அளிக்கும் உத்தமனே மிகச்சிறந்தவன் ஆவான் பந்தங்களிலிருந்து விடுபட்ட பரப்பிரம்ம சுவருபியாகவும் கருதப்படுவான் அஹிம்சையை விடச் சிறந்த தருமம் வேறொன்றுமில்லை. யானையின் காலடிச் சுவட்டின் மேல் சிங்கமே அடியெடுத்து வைத்தபோதிலும் அதன் சுவடு எப்படித் தெரியாமல் போகிறதோ அதைப்போல் அஹிம்சை மற்ற தர்மங்கள். எல்லாவற்றையும் விட மிகப் பிரம்மாண்டமானதாக மேலோங்கி நிற்கிறது. யோகருடமான மரத்தின் கீழ் விழும் நிழல் மிக உயர்ந்ததும், தெய்வீகமானதும், ஆன்மீக ரூபமானதும் ஆகும். பௌதிக, ஆன்மிக, தெய்வீக தாபங்களிலிருந்து ஜீவன்களுக்குச் சாந்தி அளிப்பதற்காகவே யோகம் என்ற மரத்தின் நிழல் தரையில் விழுகின்றது. நிர்வாண பத்த்தை அடைந்து விடட  பிறகு  ஜீவன் எதனாலும் கட்டப்படுவதுமில்லை எனக்குத் தெரிந்தவரை சுருக்கமாகக் கூறிவிட்டேன் எதை அனுசரிப்பது உசிதமோ அதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன்படி நடப்பிராக " என்றது.


அதைக் கேட்ட புலி மிகவும் மகிழ்ச்சியடைந்தது. பிறகு பசுவே நானும் ஒரு காலத்தில் மனிதனாகவே இருந்தேன் மனிதர்களிலும் சிறந்த அரசனாக இருந்தேன். மதியீனத்தால் ஒரு மானின் சாபத்திற்கு ஆளாகிவிட்டேன். உன்னுடைய உபதேசங்களைக் கேட்ட பிறகுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பழைய கதை நினைவுக்கு வருகிறது. பசுவே, நான் புலியாக மாறி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நல்லவர் சேர்க்கையால் தரும சிந்தனையும் தருமத்தால் யோகமும், யோகத்தால் பக்தி என்ற பாக்கியமும் உண்டாகிறது உன்னைத் தரிசித்ததால் மிகக் சிறந்த பலனை அடைந்துவிட்டேன் ஆனால் இதுவரை உன் பெயர் என்னவென்று கூட நான் அறிந்து கொள்ளவில்லை தயவுசெய்து உன் பெயரைச் சொல் என்று கேட்டது.


என் பெயர் நந்தா என்னை வளர்க்கும் கோபாலன் பெயர் நந்தன். அவர் என்னை நந்தா என்றே அழைப்பார்," என்றது பசு அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே புலியின் உருவம் மறைந்துவிட்டது. பிரபஞ்சன் என்ற மன்னன் தான் முன்பிருந்ததைவிட அதிகமான அழகோடும், வீர பராக்ரமத்தோடும் தோன்றி நின்றான். அதே சமயம் தரும தேவனும் அங்கு தோன்றினார். அவர் பசுவைப் பார்த்து, ' நீ சத்தியத்தைக் காப்பாற்றிய விதம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நந்தா உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். தருகிறேன்” என்றார்


நந்தா, தருமதேவனை வணங்கி, "எப்பொழுது தங்கள் தரிசனம் கிடைத்ததோ அப்பொழுதே நானும் என் புதல்வனும் மிக மேலான பதத்தை அடைந்து விட்டோம். ஆயினும் என் பெயர் விளங்குபடியாக இங்கே ஓடும் தீர்த்தம் நந்தா தீர்த்தம் என்று அழைக்கப்பட வேண்டும். அது தன்னிடம் ஸ்நானம் செய்பவர்களுக்கு சகல பாவங்களிலிருந்தும் விமோசனம் அளிக்க வேண்டும். இதுவே என் கோரிக்கை' என்று வேண்டியது. தருமதேவன் அவ்வாறே வரம் அளித்து மறைந்தார். 


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami


Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more