ஆதாரம் - பத்ம புராணம்
ஆதாரம் - பத்ம புராணம் / உத்தர காண்டம் / அத்தியாயம் 6
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முன்னொரு காலத்தில் "கர்மவீரபும்" என்ற ஊரில் தர்மதத்தன் என்ற பெயருடைய ஒரு பிராமணன் வசித்தான். அவன் சதா காலமும் பகவான் விஷ்ணுவை ஆராதித்து வந்ததோடு பகவானுக்குப் பிரியமான விரதங்களையும் நியமம் தவறாமல் அனுசரித்து வந்தான், துவதாச அட்சர மந்திரத்தையும் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தையும் இடையறாமல் ஜெபித்துவந்தான். அதிதிகளை உபகரிப்பதிலும் சிறந்து விளங்கினான்.
கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் இரவு பகவான் ஹரியை தியானித்தபடி விழித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பயங்கரமாக அலறிக்கொண்டு வந்த ராட்சசியைக் கண்டான். ரத்தத்தைப் போல் சிவந்த கண்களும் அகன்ற தாடையில் வெளிப்பட்டுக் காணப்பட்ட கோரப் பற்களுமாக அவள் மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்தாள் உடம்பில் ஆடையில்லாமலும், பிணவாடைவீசக்கூடிய நீண்ட கரங்களை அசைத்தபடியாகவும், பயங்கரமான அலறலோடு அவள் வந்துகொண்டிருந்தாள். அந்த ராட்சசியைப் பார்த்தவுடன் தர்மதத்தன் பயந்து நடுங்கிப்போய் விட்டான். தன் கையிலிருந்த பூஜைக்குரிய பொருளால் அவளை நோக்கி வேகமாக அடித்தான். பகவானுடைய நாமம் ஜெபிக்கப்பட்ட துளசி தீர்த்தம் அந்த ராட்சசியின் மேல் விழுந்துவுடன் அவள் அங்கேயே மடிந்து விழுந்துவிட்டாள். உடனே அவளுடைய பாவங்கள் நீங்கி விட்டதால் பூர்வ ஜென்ம ஞாபகத்துடன் கூடிய பிராமணப் பெண்ணாக உருமாறி தர்மதத்தன் முன் விழுந்து வணங்கினாள். "பிராமண சிரேஷ்டரே, தங்கள் கருணையால் நான் ராட்சச ஜென்மம் நீங்கிப் புனர் வாழ்வு பெற்றேன். நான் நற்கதியடைய என்ன காரியம் செய்ய வேண்டும். தயவு செய்து கூறுவீராக" என்று கேட்டாள்
தாமதத்தன் ராட்சசியின் உருவம் மறைந்து போய் விட்டதையும் தன் முன்னால் ஒரு பெண் உருவமும் விழுந்து வணங்குவதையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தவனாக, "பெண்ணே, நீ யார் எங்கிருந்து வருகிறாய்? ராட்சஸ் ஜென்மம் எடுக்கத்தக்க கொடிய பாவம் என்ன செய்தாய் எதனால் உனக்கு இந்தக் கொடுமை நிலைமை ஏற்பட்டது? இந்த விஷயங்களைச் சொல்வாயாக என்று கேட்டான்.
அந்த பெண் கூறினாள். "பிராமணரே, என் பெயர் கலகராணி. நான் ஒரு பிராமணப்பெண் சௌராஷ்டிர நகரில் பிட்சு என்ற பிராமணனுடைய மனைவி நான். என் கணவரை மதியாமல் அலட்சியமாக நடந்து கொண்டேன் கொடுமைகளைச் செயதேன் அவருக்குப் பல அவர் செய்ய வேண்டிய சுபகாரியங்களை எதிர்த்தேன். அவர் விரும்பிய உணவை சமைத்துப் போடமாட்டேன். சதா காலமும் அவரோடு சண்டை பிடிப்பதிலேயே விருப்பமுடையவளாகவும் இருந்தேன். அது ஒன்றுதான் எனக்குப் பிடித்த காரியமாக இருந்தது
என் கணவருக்கு என்னைக் கண்டாலே பயம் அதனால் என்னை விலக்கி விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்ள விரும்பினார் அது தெரிந்தவுடன் எனக்கு வந்த கோபத்தில் விஷத்தை உண்டு உயிரை விட்டுவிட்டேன். எமதூதர்கள் என்னை பிடித்துக் கொண்டு போய் எமதர்மராஜனிடம் நிறுத்தினார்கள். அவர் சித்திரகுப்தனைப் பார்த்து, "இந்தப் பெண் செய்த புண்ணிய பாவங்களை கூறுவாயாக என்று கட்டளையிட்டார்.
சிதரகுப்தன் ஏட்டை புரட்டி பார்த்துவிட்டு, "இவள் செய்த புண்ணியம் எதுவுமேயில்லை. செய்த பாவங்கள் அநேகம் கணவனுக்குச் சோறு போடாமல் தான் விரும்பியதை சமைத்து தானே உண்டுவிடுவாள். சதா காலமும் தன் கணவனை எதிர்த்துச் சண்டை பிடித்துக் கொண்டேயிருப்பாள். இவள் போடுகிற கூச்சலால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூட பயந்து நடுங்குவார்கள் என்று கூறினார்
இவளுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?" என்று எமதர்மராஜன் கேட்க சித்திரகுப்தன் எப்போதும் தின்பதையே தொழிலாகக் கொண்டிருந்த இவள் அசுத்தங்களை உண்ணும் பன்றியாக பிறக்கவேண்டும். எப்போதும் கணவனை நிந்திப்பதே தொழிலாகக் கொண்டிருந்த இவள் தான் போட்ட குட்டியையே தின்னும் தாயாகவும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும். கடைசியாக ஆத்ம ஹத்தி ( தற்கொலை) செய்து கொண்டதால் பிரேத பைசாசங்களுக்கு நடுவில் வசிக்க வேண்டும். பிரேத சரீரத்தோடு இவள் அநேக காலம் பேயாக அலைந்து திரிய வேண்டும் என்று கூறினார்.
பிரமணரே. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக நான் பன்றியாகவும், நாயாகவும் பிறந்து அநேகவருஷகாலம் அலைந்தேன் அதன்பின் பிரேத தேகத்தோடு ராட்சசியாக அலைந்து கொண்டிருந்தேன். பசியால் மிருகங்களையும் மனிதர்களையும் பிடித்துக் கொன்று தின்றேன். உங்களை தரிசித்ததால் அந்தக் கொடிய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றேன் என் மேல் துளசி தீர்த்தம் பட்ட காரணத்தால் என்னுடைய பைசாச ஜென்மம் நீங்கியது இனி என்னுடைய பாவங்கள் நீங்கி முக்தியடையும் மார்க்கத்தையும் நீங்களே கூற வேண்டும்' என்று வேண்டினாள்.
கலகராணி கூறியதைக் கேட்டு தர்மதத்தனுக்கு மிகவும் வருத்தம் உண்டாயிற்று. அவள் மேல் கொண்ட கருணை காரணமாக என்ன செய்தால் அவளுடைய பாவம் நீங்குமென்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தான் பிறகு பகவானை தியானித்தபடி "பெண்னே , நீ பிரேத தேகத்துடன் இருப்பதால் தானம் விரதம் முதலான உத்தம காமங்களை அனுசரிப்பதற்கோ தீர்த்தஸ்நானம் செய்வதற்கோ முடியாது உன்னை இந்த நிலையில் பார்ப்பதற்கு நான் மிகவும் வருந்துகிறன். உன்னை இந்த துக்கத்திலிருந்து விடுதலையடையச் செய்யாவிட்டால் என் மனம் சாந்தியடையாது. ஆனால் நீ செய்த பாவமோ மிகவும் கொடியது. ஈனஜென்மங்கள் எடுத்த பின்பும் அந்த பாவங்கள் நீங்கவில்லை அதனால் உன்னுடைய பிரேதஜென்மம் நீங்குவதற்காக நான் இதுவரை கார்த்திகை விரதம் அனுசரித்ததால் கிடைத்த புண்ணிய பலனின் பாதியை உனக்குத் தருகிறேன். அதனால் நீ பிரேத ஜென்மத்திலிருந்து விமோசனம் பெறுவாய். வேறு எந்தப் புண்ணியத்தாலும் உன்னுடைய கஷ்டத்தைத் தீர்க்க முடியாது என்பதாலேயே என்னுடைய கார்த்திகை விரதத்தால் சேர்ந்துள்ள புண்ணியத்தில் பாதியைத் தருகிறேன்" என்று கூறி கமண்டலத்திலிருந்த நீரைத் தன் கையில் வார்த்து அவள் மேல் தெளித்தான். உடனே கலகராணியின் பிரேத ரூபம் நீங்கிவிட்டது. தீக்கொழுந்து போல் ஜொலிக்கின்ற திவ்ய தேகம் பெற்றவளாய் தர்மதத்தன் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்.
"பிராமணசிரேஷ்டரே, பிரேத ஜென்மம் என்ற பாவசாகரத்தில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த எனக்குத் தோணியாக வந்து கரையேற்றினீர்கள். தங்களை என்றும் நான் மறக்கமாட்டேன்” என்று கூறினாள். அதே சமயம் ஆகாயத்திலிருந்து திவ்யமான ஒரு விமானம் இறங்கி வந்து அவளை அழைத்துக் கொண்டு வைகுந்தத்தை நோக்கிச் சென்றது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment