முகுந்தமாலை ஸ்தோத்திரம்


 

முகுந்தமாலை ஸ்தோத்திரம்

பதம் 1 - 53

*****************************************************************************

பதம் – 1

ஸ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதி

பக்தப்ரியேதி பவலுண்டன கோவிதேதி

நாதேதி நாகஷயனேதி ஜகந்நிவாஸேத்ய்

ஆலாபனிம் ப்ரதிதினம் குரு மாம் முகுந்த

 

மொழிபெயர்ப்பு

என் பிரபு முகுந்தரே! தங்களை ஸ்ரீ வல்லபர் (லஷ்மிக்குப் பிரியமானவர், வாதர் (வரங்களைத் தருபவர்), தயாபரர் (அபாரகருணைகொண்டர்), பக்தப்பிரியர் (தன்னுடைய பக்தர்களிடம் பிரியமானவர்); பவலுண்டன கோவிதர் (பிறப்பு இறப்பு தொடரை மாய்ப்பவர்), நாதர் (முழுமுதற் கடவுள்), ஜகந்நிவாஸர் (பிரபஞ்சம் உறையும் நாதர்), நாகசயனர் (பாம்புப் படுக்கையில் படுத்திருப்பவர்) என்று தங்கள் நாமங்களை நான் எப்பொழுதும் ஓதுபவனாகட்டும்.

 

பதம் - 2

ஐயது ஐயது தேவோ தேவகிநத்தனோ()யம்

ஐயது ஜயது க்ருஷ்ணா வ்ருஷ்ணிவம்சப்ரதீப:

ஐயது ஜயது மேகஷ்யாமள: கோமளாங்கோ

ஐயது ஜயது ப்ருத்வீபாரனாசோ முகுந்த:

மொழிபெயர்ப்பு

திருமதி தேவகிதேவியின் மைந்தன் என்றறியப்படும் முழுமுதற் கடவுளே போற்றி போற்றி! வ்ருஷ்ணி குலத்தின் பிரகாசமான வம்ஸ விளக்கே போற்றி! புது மேகம் போன்ற கருப்பு நிறம் யாருடைய மென்மையான உடலில் தெரிகிறதோ அந்த முழுமுதற் கடவுளே போற்றி! பூமியின் பாரங்களை அகற்றும் பிரபு முகுந்தரே போற்றி!

பதம் – 3

முகுந்த மூர்த்ன ப்ரணிபத்ய யாசே

பவந்தம் ஏகாந்தம் த்யந்தம் அர்தம்

அவிஸ்ம்ருதிஸ் த்வச்-சரணாரவிந்தே

பவ பவே மே ()ஸ்து பவத்-ப்ரஸாதாத்

மொழிபெயர்ப்பு

பிரபோ முகுந்தா! தங்கள் மாட்சிமைக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த என்னுடைய ஒரு ஆசையை நிறை வேற்றும்படி நான் தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்; அதாவது மறுபிறவிகளில் தங்கள் கருணையினால் தங்கள் தாமரைத் திருவடியை எப்போதும் மறக்காமல் நினைத்தவாறே இருப்பேன்.

 

பதம் – 4

நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த்வம் அத்வந்தவ-ஹேதோ:

கும்பீபாகம் குரும் அபி ஹரே நாரகம் நாபநேதும்

ரம்யா-ராமா-ம்ருது-தனு-லதா நந்தனே நாபி ரந்தும்

பாவே பாவே ஹ்ருதய-பவனே பாவயேயம் பவந்தம்

மொழிபெயர்ப்பு

பிரபு ஹரியே, ஜட வாழ்க்கையின் இருமைகளினின்றோ அல்லது கும்பீபாக நரகத்தின் கடுமையான சோதனைகளின்றோ விடுதலையடைவதற்காக நான் தங்கள் தாமரைத் திருவடியை பிரார்க்திக்கலில்லை. சொர்க்க வனங்களில் வசிக்கும் மென்தோல் அழகு மங்கையரை அனுபவிக்கவோ எனக்கு நோக்கமில்லை. என் உள் இதயத்தில் பிறவிதோறும் தங்களயே நினைத்திருக்கும் பொருட்டு நான் தங்கள் தாமரைத் திருவடியை பிரார்த்திக்கிறேன்.

பதம் – 5

நாஸ்தா தர்மே வஸுநிசயே நைவ காமோபபோகே

யத்பாவ்யம் தத்பவது பகவன் பூர்வ-கர்மானுரூபம்

ஏதத் ப்ரார்த்யம் மம பஹுமதம் ஜன்ம-ஜன்மாந்தரே ()பி

தவத்-பாதாம்போருஹ-யுக-கதா நிஷ்சலா பக்திர் அஸ்து

மொழிபெயர்ப்பு

என் பிரபோ! நான் சமயப்பற்றுடையவன் அல்லன்; செல்வம் கொழிக்கவோ புலன் இன்பம் அனுபவிக்கவோ என்னிடம் பற்றில்லை. என் முன் வினைகளுக்கு ஏற்ப இவை நிச்சயம் வரத்தான் செய்யும், அப்படியே வரட்டும். ஆனால் இந்த மிக மிக உன்னத வரத்தை மட்டும் கோருகின்றேன்: பிறவி தோறும் நான் தங்கள் தாமரைத் திருவடிகளுக்கு குறையாத பக்தி சேவை செய்யவேண்டும்.

 

பதம் – 6

திவி வா புவி வா மமாஸ்து வாஸோ

நரகே வா நரகாந்தக ப்ரகாமம்

அவதீரித-சாரதாரவிந்தெள

சரணெள தே மரணே ()பி சிந்தயாமி

மொழிபெயர்ப்பு

நரகாசூரனை கொன்ற பிரபுவே! தங்கள் விருப்பப்படி நான் தேவர்கள் உலகிலோ, மனிதர்கள் வாழும் மண்ணுலகிலோ, அல்லது நரகத்திலோ இருக்கக்கடவது. நான் பிரார்த்திப்பது மரணம் சம்பவிக்கும் நேரத்தில் தங்களுடைய இரண்டு தாமரை பாதங்களை நினைக்க வேண்டும் என்பது. இப்பாதங்களின் அழகு சரத் பருவத்தில் பூக்கின்ற தாமரை மலரின் அழகையும் மிஞ்சுவது.

 

பதம் – 7

சிந்தயாமி ஹரிம் ஏவ ஸந்ததம்

மந்த-ஹாஸ-முதிதானனாம்புஜம்

நந்த-கோப-தனயம் பராத் பரம்

நாரதாதி-முனி-விருந்த-வந்திதம்

 

 

மொழிபெயர்ப்பு

தன்னுடைய தாமரை முகத்தில் தோன்றும் மென் புன்சிரிப்பையுடைய பிரபு ஹரியை நான் எப்பொழுதும் நினைக்கிறேன். இடைக்குல நந்தரின் குமாரனான போதிலும் நாரதர் போன்ற பெரிய ரிஷிகள் வணங்கும் உயர்ந்த பரம்பொருள் அவர்.

பதம் – 8

கர-சரண-ஸரோஜே காந்திமன்-நேத்ர-மீனே

ஸ்ரம-முஷி புஜ-வீசி-வியாகுலே ()காத-மார்கே

ஹரி-ஸரஸி விகாஹ்யாபீய தேஜோ-ஜலௌகம்

பவ-மரு-பரிகின்ன: க்லேஷம் அத்ய த்யஜாமி

மொழிபெயர்ப்பு

ஜடவாழ்க்கை என்ற பாலைவனம் எனக்கு அலுத்துவிட்டது. ஆனால் நான் இன்று என்னுடைய துயரங்கள் அனைத்தையும ஒதுக்கிதள்ளி பகவான் ஹரி என்ற குளத்தில் குதித்து அவருடைய மேனிஎழில் என்ற தண்ணீரை தாராளமாகப் பருகுவேன். அந்த குளத்தில் உள்ள தாமரைகள் அவருடைய பாதங்கள்; அங்கேயுள்ள மீன்கள் அவருடைய ஒளிவீசும் கண்கள். அந்த குளத்தின் நீர் எல்லாவித சோர்வையும் போக்குகிறது. பகவானுடைய கரங்களின் இயக்கத்தால் அங்கே சிற்றலைகள் ஏற்படுகின்றன.

 

பதம் – 9

ஸரஸிஜ-நயனே -சங்க-சக்ரே

முர-பி'தி மா விரமஸ்வ சித்த ரந்தும்

சுக-தரம் அபரம் ஜாது ஜானே

ஹரி-சரண-ஸ்மரணாம்ருதேன துல்யம்

மொழிபெயர்ப்பு

மனமே, அரக்கன் முரனை வதைத்தவரைப் பற்றிய நினைப்பினால் எழுகின்ற மகிழ்ச்சியை எப்போதும் தடுத்து நிறுத்தாதே. அவர் தாமரை கண்களும், சங்கும் சக்கரமும் தரித்தவர். உண்மையில் பிரபு ஹரியின் திவ்ய பாதத்தை தியானிக்கும் போது ஏற்படுகின்ற அபார சந்தோஷத்தை தவிரநான் அறிந்தது வேறு எதுவும் இல்லை.

 

பதம் – 10

மாபீர் மந்த-மனோ விசிந்திய பஹுதா யாமீஸ் சிரம் யாதனா

நைவாமீ பிரபவந்தி பாப-ரிபவ: ஸ்வாமி நனு ஸ்ரீதர:

ஆலஸ்யம் வியபனீய பக்தி-ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வியாஸனாபனோதன - கரோ தாஸஸ்ய கிம் க்ஷம:

மொழிபெயர்ப்பு

மூட மனமே, யமராஜன் அளிக்கின்ற தண்டனைகளைப்பற்றி நினைத்து அஞ்சாதே. நீ புரிந்துள்ள பாவச் செயல்களான எதிரிகள் உன்னைத் தொடமுடியுமா? உன்னுடைய தலைவர் பரம்பொருளான ஸ்ரீ லக்ஷ்மியின் கணவர் இல்லையா? எல்லா தயக்கத்தையும் ஒதுக்கிவிட்டு உன்நினைவுகளை பகவான் நாராயணர் மீது செலுத்துவாயாக. அவரை ஒருவர் பக்தி சேவையின் மூலம் எளிதில் அடைகிறார் எல்லா உலகத்தின் தொல்லைகளையும் போக்குகிற அவரால் தன்னுடைய தொண்டனுக்கு என்ன தான் செய்ய முடியாது.

 

பதம் – 11

பவ-ஜலதி-கதானாம் த்வந்த்வ - வாதாஹதானாம்

ஸுத-துஹித்ரு-கலத்ர - த்ராண பாரார்திதானாம்

விஷம்-விஷய-தோயே மஜ்ஜதாம் அப்லவானாம்

பவதி சரணம் ஏகோ விஷ்ணு - போதோ நராணாம்

மொழிபெயர்ப்பு

இந்த பிறப்பு இறப்பு என்ற பெருங்கடலில் உள்ள மக்கள் ஜட இருமைகள் என்ற காற்று வீசி திணறச்செய்யப்படுகிறார்கள். அவர்கள் புலனின்பம் என்ற ஆபத்தான தண்ணீரில் கரை சேர்வதற்கு படகொன்றும் இல்லாமல் தத்தளிக்க அவர்களுக்கு தங்கள் பிள்ளைகள், பெண்கள், மனைவிமார் ஆகியவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அவர்களை வாட்டுகிறது. பிரவு விஷ்ணு என்ற படகு மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும்.

  

பதம் – 12

பவ-ஜலதிம் அகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்

கதீம் அஹம் இதி சேதோ மா ஸ்ம கா: காதரத்வம்

ஸரஸிஜ-த்ரிஷி தேவே தாரகீ பக்திர் ஏகா

நரக-பிதி நிஷண்ணா தாரயிஷ்யதி அவஸ்யம்

மொழிபெயர்ப்பு

மனமே, நான் எப்படி இந்த ஆழமில்லாத மற்றும் கடக்க முடியாத சம்சார கடலைக் கடப்பேன் என்று கவலைப்பட்டு நினைத்து குழம்ப வேண்டாம் உங்களை காப்பாற்றுபவர் ஒருவர் உண்டு; அவரே பக்தி. அந்த பக்தி என்ற மங்கையை நரகாசூரனை வதைத்தவரும் கமலக்கண்ணனுமான பகவானுக்கு அர்ப்பணித்தால் அவர் உங்களை தவறாமல் சம்சாரக் கடலை கடந்து அழைத்துச்செல்வாள்.

 

பதம் – 13

த்ருஷ்ணா - தோயே மதன-பவனோத்தூத - மோஹோர்மி - மாலே

தாராவர்தே தனய - ஸஹஜ - க்'ராஹ - ஸங்காகுலே

ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரி - தாமன்

பாதாம்போஜே வர- பவதோ பக்தி - நாவம் ப்ரயச்ச

மொழிபெயர்ப்பு

மூவுலக பகவானே, சம்சாரம் என்ற பிரம்மாண்டக் கடலில் நாங்கள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம். இந்த சம்சாரக் கடல் லெளகித வேட்கை என்ற தண்ணீரால் நிரம்பியது. இக்கடலில் மாயை என்ற அலைகள் காமம் என்ற காற்றினால் வீசி கலக்கப்படுகின்றன. இக்கடலில் மனைவியர் என்ற நீர்சுழற்சியும், மைந்தர்கள் மற்றும் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் சுறாமீன் கூட்டங்களும் பிற கடற்பிராணிகளும் நிறைந்துள்ளன. வரங்களை அள்ளித் தருபவரே, தயவு செய்து எனக்கு தங்களுடைய தாமரைத் திருவடி என்ற பக்திப் படகில் ஓர் இடம் கொடுங்கள்.

 

 

 

பதம் – 14

ப்ருத்வீ ரேணுர் அணு: பயாம்ஸி கணிகா: ஃபல்கு: ஸ்ஃபுலிங்கோலகுஸ்

தேஜோ நி: ஷ்வஸனம் மருத் தனு - தரம் ரந்திரம் ஸு-ஸூக்ஷ்மம் நப

க்ஷுத்ரா ருத்ர - பிதாமஹ - பிரப்ர்தய: கீடா: ஸமஸ்தா: ஸுரா

த்ருஷ்டே யத்ர தாரகோ விஜயதே ஸ்ரீ - பாத - தூளீ - கண:

மொழிபெயர்ப்பு

நம்முடைய இரட்சகரை பார்த்ததும் இந்த பூமியே தூசிக்கு சமானமாகிறது கடல் நீர் தண்ணீர்த் துளிகளாகிறது; ஒட்டுமொத்த தீ சிறு பொறியாகிறது; காற்று இலேசாகக் கேட்கும் மூச்சாகிறது; அண்டை வெளி சிறு துவாரமாகிறது. சிவபெருமானும், பாட்டனார் பிரம்மன் போன்ற பெருந்தேவர்களும் அற்பமாகிறார்கள். சிறு தேவர்கள் சிறு பூச்சிகளைப் போல் ஆகிறார்கள் உண்மையிலேயே பகவானுடைய உள்ளங்கால் மண்துளியும் எல்லோரையும் வெல்கிறது.

 

பதம் – 15

ஹே லோகா: ஷ்ருணுத ப்ரஸூதி - மரண - வ்யாதேஷ் சிகித்ஸம் இமாம்

யோக - ஞான: ஸமுதாஹரந்தி முனயோ யாம் யாக்ஞவல்க்யாதய:

அந்தர் - ஜ்யோதிர் அமேயம் ஏகம் அம்ருதம் கிருஷ்ணாக்யம் ஆபீயதாம்

தத் பீதம் பரமெளஷதம் விதனுதே நிர்வாணம் ஆத்யந்திகம்

மொழிபெயர்ப்பு

மக்களே! பிறப்பு இறப்பு என்ற நோயின் சிகிச்சைப் பற்றி தயவு செய்து கேளுங்கள். அது கிருஷ்ணருடைய நாமம். ஞானத்தில் ஊறிய யாக்ஞவல்க்யரும், பிற தேர்ந்த யோகிகளும் பரிந்துரைத்த இந்த வரம்பில்லாத நிரந்தரமான அகத்தே உள்ள விளக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இந்த மருந்தை உண்டதும் இறுதி முக்தி கிடைக்கிறது. சற்றே அதைப் பருகவும்!

 

பதம் – 16

ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஷ்ருணத வோ வக்ஷ்யாமி ஸங்க்ஷேபத:

ஸம்ஸாரார்ணவம் ஆபத்-ஊர்மி-பஹுலம் ஸம்யக் ப்ரவிஷ்ய ஸ்திதா:

நானா-ஞானம் அபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேதி அமும்

மந்த்ரம் -ப்ரணவம் ப்ரணாம - ஸஹிதம் ப்ராவர்தயத்வம் முஹு:

மொழிபெயர்ப்பு

மடியக்கூடிய மனிதர்களே, நீங்கள் பௌளதிக வாழ்க்கை என்ற கடலில் முழுமையாக மூழ்கியிருக்கிறீர்கள். இந்த கடலில் துன்ப அலைகள் நிறைந்துள்ளன. அதி உன்னத நன்மையை அடைவது எப்படி என்பதை நான் சுருக்கமாக சொல்லக் கேளுங்கள். அறிவை அடையக் கூடிய உங்கள் முயற்சிகள் அனைத்தையும் சற்றே ஒதுக்குங்கள். அதற்குப் பதிலாக தொடர்ந்து ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை ஒதி பகவானிடம் சிரம் தாழ்த்துங்கள்.

 

பதம் – 17

நாதே : புருஷோத்தமே த்ரி-ஜகதாம் ஏகாதிபே சேதஸா

ஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி பரே நாராயணே திஷ்டதி

யம் கஞ்சித் புருஷாதமம் கதிபய-கிராமேஷம் அல்பார்த்த-தம்

ஸேவாயை ம்ருகயாமஹே நரம் அஹோ மூடா வராகா வயம்

மொழிபெயர்ப்பு

மூவுலகங்களையும் ஆளுபவரும், தியானத்தின் மூலம் சேவை செய்யப்படக் கூடியவரும், தன்னுடைய சொந்த இருப்பிடத்தை மகிழ்ச்சியுடன் பங்குப்போட்டுக் கொள்பவருமான நமது எஜமானரான முழுமுதற் கடவுள் நாராயணர் நம் முன்னே தோன்றியிருக்கிறார். ஆயினும் நாம் சில கிராமங்களுக்கு மட்டுமே அதிபதியாக இருக்கும் சின்ன எஜமானரையும், சில தாழ்ந்த மனிதனையும் சேவை செய்யக் கெஞ்சுகிறோம். இவர்கள் அற்ப அளவில் மட்டுமே நமக்கு நன்மை செய்யக் கூடியவர்கள். அந்தோ, என்னே நமது மடமை!


பதம் – 18

பத்தே நாஞ்ஜலினா நதேன சிரஸா காத்ரை: -ரோமோத்கமை:

கண்டேன ஸ்வர - கத்கதேன - நயனேனோத்கீர்ண - பாஷ்பாம்புனா

நித்யம் த்வச்-சரணாரவிந்த - யுகல-தியானாம்ருதாஸ்வாதினாம்

அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம்

 

மொழிபெயர்ப்பு

தாமரைக் கண்ணா, எங்கள் ஜீவனத்தைக் காப்பாற்றுங்கள். நாங்கள் தங்கள் தாமரை திருவடியை தியானம் செய்வது என்ற அமிர்தத்தை எப்பொழுதும் பருகுகிறோம். கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்து, தலை குனிந்து, ஆனந்தத்தால் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்க, தொண்டை அடைக்க கண்கள் நீர் சொரிந்து நிற்கிறோம்.

 

பதம் – 19

யத் கிருஷ்ண-ப்ரணிபாத-தூளி-தவலம் தத் வர்ஷ்ம தத் வை ஷிரஸ்

தே நேத்ரே தமஸோஜ்ஜிதே ஸு - ருசிரே யாப்யாம் ஹரிர் த்ருஷ்யதே

ஸா புத்திர் விமலேந்து - சங்கதவலா யா மாதவ - த்யாயினீ

ஸா ஜிஹ்வாம் ருத - வர்ஷிணீப்ரதி - பதம் யா ஸ்தௌதி நாராயணம்

 

மொழிபெயர்ப்பு

பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு தலை வணங்கும் போது தலையில் படிந்திருக்கும் மண் தூளியால் வெண்மையாக காட்சி தரும் சிரம் மிக மிக உயர்ந்தது. . பிரபு ஹரியின் தரிசனத்தால் இருள் அகன்ற கண்களே மிக மிக அழகான கண்கள். பிரபு மாதவனை தியானிக்கின்ற அறிவு அப்பழுக்கற்றது, அதாவது சந்திரனின் வெண்மை ஒளி அல்லது ஒரு வெண்சங்கு போல கலங்கமற்றதா ஒளிர்கிறது. எப்போதும் பகவான் ஶ்ரீமன் நாராயணரை போற்றித் துதிக்கும் நாவு அமிர்த மழையைப் பொழிகின்றன.

 

பதம் – 20

ஜிஹ்வே கீர்தய கேஷவம் முர-ரிபும் சேதோ பஜ ஸ்ரீதரம்

பாணி - த்வந்த்வ ஸமர்சயாச்யுத-கதா: ஸ்ரோத்ர - த்வய த்வம் ஷ்ருணு

கிருஷ்ணம் லோகய லோசன - த்வய ஹரேர் கச்சாங்ரி - யுக்மாலயம்

ஜிக்ர க்ராண முகுந்த - பாத - துளஸீம் மூர்தன் நமாதோக்ஷஜம்

 

மொழிபெயர்ப்பு

நாவே, பிரபு கேசவரின் பெருமையை துதிப்பாயாக. மனமே முரனின் சத்ருவை வழிபடுவாயாக. கரங்களே, ஸ்ரீ லக்ஷ்மி நாதரை சேவை செய்து இருப்பாயாக, காதுகளே, பிரபு அச்சுயுதரைப் பற்றிய கதைகளை கேட்பாயாக. கண்களே எப்போதும் ஶ்ரீ கிருஷ்ணரை  தரிசிப்பாயாக, பாதங்களே பகவான் ஶ்ரீ ஹரியின் ஆலயம் நோக்கி செல்வாயாக நாசியே, பகவான் ஶ்ரீ முகுந்தரின் திருவடி அர்ப்பணிதத துளசி தளங்களை நுகர்வாயாக. சிரமே , பிரபு அதோக்ஷஜர் முன் தலகுனிந்து வணங்குவாயாக.

 

பதம் – 21

ஆம்னாயாப்'யஸனானி அரண்ய - ருதிதம் வேத-வ்ரதன்ய ன்வஹம்

மேத'ஸ்-சேத-ஃபலானி பூர்த்த - விதய: ஸர்வம் ஹுதம் பஸ்மனி

தீர்த்தானாம் அவகாஹனானி கஜ - ஸ்னானம் வினா யத்-பத-

த்வந்த்வாம்போருஹ - ஸம்ஸ்ரமிருதிம் விஜயதே தேவ: நாராயண:

 

மொழிபெயர்ப்பு

பகவான் ஶ்ரீமன் நாராயணருக்கு எல்லாப் புகழும் உரித்தாகுக ! அவருடைய தாமரைத் திருவடியை நினைத்துப் பார்க்காமல் வேதங்களை உச்சரிப்பது கானகத்தில் அலறி கத்துவது போலாகும், வேதங்களில் கூறப்பட்டுள்ள கடுமையான விரதங்களை அனுஷ்டிப்பது உடல் எடையை குறைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை அதேபோல் பகவான் ஶ்ரீமன் நாராயணனின் தாமரைத் திருவடியை நினைத்துப் பார்க்காமல் நாம் செய்யும் அனைத்து தார்மீக கர்மங்கள் சாம்பலில் நெய் ஊற்றுவது போல வீணான செயலாகும். ஶ்ரீமன் நாராயணனின் தாமரைத் திருவடியை நினைத்துப் பார்க்காமல் புண்ணியத்தலங்களில் நீராடுவது ஒரு யானையின் குளியலையும்விட கீழானதாகும்.

 

பதம் – 22

மதன பரிஹர ஸ்திதிம் மதீயே

மனஸி முகுந்த - பதாரவிந்த-தாம்னி

ஹர-நயன-க்ருஷானுனாக்ருஷோ ()ஸி

ஸ்மரஸி சக்ர-பராக்ரமம் முராரே:

மொழிபெயர்ப்பு

மன்மதா, இப்போது எனது மணம் பகவான் முகுந்தரின் தாமரை பாதங்களின் உறைவிடமானதால் என்  மனதை விட்டு நீ வெளியேறு. நீ ஏற்கனவே சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வையால் எரிந்து சாம்பலானாய். அப்படியிருக்கையில் பகவான் ஶ்ரீ முராரியின் சக்கரத்தின் பராக்கிரமத்தை  மறந்தது ஏனோ ?

 

பதம் – 23

நாதே தாதரி போகி-போக-ஷயனே நாராயணே மாதவே

தேவே தேவகி - நந்தனே ஸுர-வரே சக்ராயுதே சார்ங்கிணி

லீலாசேஷ - ஜகத் - ப்ரபஞ்ச ஜடரே விஸ்வேஷ்வரே ஸ்ரீதரே

கோவிந்தே குரு சித்த - வ்ருதிம் அசலாம் அன்யைஸ் துகிம் வர்த்தனை:

 

மொழிபெயர்ப்பு

தங்களுடைய எஜமானரும் போஷகருமான பரம புருஷரை  மட்டுமே நினைத்திருங்கள். அவர் நாராயணர், மாதவர் என்று அறியப்படுபவர். அவர் அனந்தன் என்ற பாம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் கையில் சக்கரம் மற்றும், சாரங்கம் என்ற வில்லும் ஏந்தி நிற்கும் அவர் தேவகியின் அருமை மைந்தன் , தேவர்களுக்கு எல்லாம் நாயகன்.பசுக்களின் பகவான். லக்ஷ்மிபதியான அவர் அண்ட சராசரங்களை கட்டுப்படுத்துபவர். இவற்றை தன் உதரத்திளிலிருந்து அவர் பொழுது போக்காக தோன்றச் செய்கிறார். இதைத் தவிர வேறு எதையாவது நினைப்பதால் என்ன பயன் ?

 

பதம் – 24

மா த்ராக்ஷம் க்ஷீ - புண்யான் க்ஷணம் அபி பவதோ பக்தி-ஹீனான் பதாப்ஜே

மா ஸ்ரெளஷம் ஸ்ராவ்ய-பந்தம் தவ சரிதம் அபாஸ்யான்யத் ஆக்யான-ஜாதம்

மா ஸ்மார்ஷம் மாதவா த்வாம் அபி புவன-பதே சேதஸாபஹ்னுவானான்

மா பூவம் த்வத்-ஸபர்யா-வ்யதிகர - ரஹிதோ ஜன்ம-ஜன்மாந்தரே ()பி

 

மொழிபெயர்ப்பு

மாதவா, யாருடைய புண்ணியங்கள் தீர்ந்து போய் தங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு பக்தி செய்வதில்லையோ அவர்களை நான் கடைக்கண்ணாலும் பார்க்காமல் இருப்பேனாக. தங்களுடைய திவ்யமான லீலா வர்ணனைகளை கேட்பதிலிருந்து மனம் சிதறி பிற விஷயங்களில் ஆவல் கொள்ளாமல் என்னை இருக்கச் செய்யவும். ஜகந்நாதரே, தங்களைப் பற்றி நினைக்காமல் இருப்பவர்களிடம் நான் கவனம் செலுத்தாமல் இருப்பேனாக. பிறவிதோறும் தாழ்மையான வழியானாலும் தங்களுக்கு சேவைப் புரிந்து கிடப்பேனாக.

 

பதம் – 25

மஜ்-ஜன்மன: ஃபலம் இதம் மது-கைடபாரே

மத்-ப்ரார்தனீய-மத்-அனுக்ரஹ ஏஷ ஏவ

த்வத் - ப்ருத்ய-ப் ருத்ய-பரிசாரக - ப்ருத்ய-ப் ருத்ய-

ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோக்-நாத

 

மொழிபெயர்ப்பு

மது மற்றும் கைடபரை வீழ்த்தியவரே, பிரபஞ்ச நாதரே, என்னைத் தங்கள் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனின் ஊழியனாகக் கருதுவீராக. இதுவே தாங்கள் என்பால் கொண்ட மிக மிக உயர்ந்த கருணையும், என்னுடைய வாழ்க்கையின் பூர்ணமும் ஆகும்.

பதம் – 26

தத்த்வம் ப்ரூவாணானி பரம் பரஸ்தான்

மது க்ஷரந்தீவ முதாவஹானி

ப்ராவர்தய ப்ராஞ்ஜலிர் அஸ்மி ஜிஹ்வே

நாமானி நாராயண - கோசராணி

 

மொழிபெயர்ப்பு

என் பிரிய நாக்கே, நான் உன் முன் நின்று, கைக்கூப்பி, ஸ்ரீநாராயணரின் நாமங்களை உச்சரிக்குமாறு கெஞ்சுகிறேன். உயர்ந்த மெய்ப்பொருளை விளக்குகின்ற இந்த நாமங்கள் தேன் துளிகளை போல மகிழ்ச்சியைத் தருகின்றன.

 

பதம் – 27

நமாமி நாராயண-பாத-பங்கஜம்

கரோமி நாராயண - பூஜனம் ஸதா

வதாமி நாராயண - நாம நிர்மலம்

ஸ்மராமி நாராயண - தத்த்வம் அவ்யயம்

 

மொழிபெயர்ப்பு

ஒவ்வொரு கணமும் நான் பகவான் ஸ்ரீமன் நாராயணரின் தாமரைத் திருவடிக்கு தலைவணங்குகிறேன்; நாராயணருக்கு பூஜை செய்கிறேன்; நாராயணருடைய திவ்ய நாமத்தை ஜபம் செய்கிறேன்; நாராயணர் என்ற அப்பழுக்கற்ற உண்மையை நினைத்துப் பார்க்கிறேன்.

 

பதம் - 28, 29

ஸ்ரீ-நாத நாராயண வாஸுதேவ

ஸ்ரீ-கிருஷ்ண பக்த-ப்ரிய சக்ர-பாணே

ஸ்ரீ-பத்மநாபாச்யுத கைடபாரே

ஸ்ரீ-ராம பத்மாக்ஷ ஹரே முராரே

 

அனந்த வைகுண்ட முகுந்த கிருஷ்ண

கோவிந்த தாமோதர மாதவேதி

வக்தும் ஸமர்தோ ()பி வக்தி கஸ்சித்

அஹோ ஜனானாம் வியஸனாபிமுக்யம்.

 

மொழிபெயர்ப்பு

ஸ்ரீநாதா, நாராயணா, வாஸுதேவா, ஶ்ரீ கிருஷ்ணா, பக்தவத்சலா, சக்ரபாணியே, பத்மநாபா, அச்யுதா, கைடபாரியே, இராமா பத்மாக்ஷா, ஹரி, முராரி! அனந்தா, வைகுண்டா, முகுந்தா, கிருஷ்ணா, கோவிந்தா, தாமோதரா, மாதவா ! எல்லா மக்களும் தங்களை கூவி அழைக்கமுடியும் என்றாலும் அவர்கள் மெளனமாய் இருக்கிறார்கள் இவ்விதமாக தங்களின் ஆபத்தை தாங்களாகவே தேடிக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள் என்பதை சற்றே பாருங்கள்!

 

பதம் – 30

பக்தாபாய-புஜாங்க-காருட-மணிஸ் த்ரைலோக்ய - ரக்ஷா-மணிர்

கோபீ-லோசன-சாதகாம்புத-மணி: சௌளந்தீர்ய-முத்ரா-மணி:

: காந்தா-மணி-ருக்மிணீ-கன-குச்ச - த்வந்த்வைக - பூஷா - மணி:

ஸ்ரேயோ தேவோ சிகா-மணிர் திசது நோ கோபால-சூடா-மணி:

 

மொழிபெயர்ப்பு

கருட வாகனத்தில் பயணிக்கும் இரத்தினம் மணி அவர். அவர் மூன்று உலகங்களையும் பாதுகாக்கின்ற மந்திர இரத்தினம் ; கோபியரின் சாதகப் பறவை போன்ற கண்களை வசீகரிக்கின்ற இரத்தினம் போன்ற மேகம், கண்ணியமாக நடையுடை பாவனை கொண்டவர்களில் அவர் இரத்தினம் மணி. இராணி ருக்மிணியின் அகன்ற மார்பகங்களில் தவழ்கின்ற ஒரே இரத்தினாபரனம் அவர். ருக்மிணியே பகவானின் பத்தினியருள் இரத்தினம் போன்றவள். அணைத்து தேவர்களின் சிகாமணியானவரும், ஆயர்குலத்தில் மிக மிகச் சிறந்தவருமான அவர் மிக உயர்ந்த வரத்தைத் தரட்டும்.

பதம் – 31

சத்ரு-ச்சேதைக - மந்த்ரம் ஸகலம் உபநிஷத் - வாக்ய - ஸம்பூஜ்யமந்த்ரம்

லம்ஸாரோச்சேத - மந்த்ரம் ஸமுச்சித - தமஸ: ஸங்க - நிர்யாண - மந்த்ரம்

ஸர்வைஸ்வர்யைக - மந்த்ரம் வ்யஸன - புஜக - ஸந்தஷ்ட - ஸந்த்ராண - மந்த்ரம்

ஜிஹ்வே ஸ்ரீ-கிருஷ்ண - மந்த்ரம் ஜப ஜப ஸததம் ஜன்ம - ஸாஃப்ல்ய - மந்த்ரம்

 

மொழிபெயர்ப்பு

நாவே, ஸ்ரீ கிருஷ்ணருடைய நாமங்கள் அடங்கிய மந்திரத்தை எப்பொழுதும் தயவு செய்து ஜபிப்பாயாக. விரோதிகளை வீழ்த்துவதற்கான ஒரே மந்திரம் இதுவே. உபநிஷதங்களின் ஒவ்வொரு வார்த்தையும் இந்த மந்திரத்தை வணங்கி போற்றுகின்றன. இந்த மந்திரம், சம்சார சக்ரத்தை வேரோடு சாய்க்கின்ற மந்திரம்; அறியாமை என்ற அந்தகாரத்தை (இருள்) அகற்றுகின்ற மந்திரம்; அழியாச் செல்வத்தை அடைவதற்கான மந்திரம்; உலகத்தொல்லை என்ற நச்சரவத்தால்(கொடிய விஷமுள்ள நாகத்தால்) தீண்டப்பட்டவர்களை சொஸ்தப்படுத்தும் மந்திரம்; பெற்ற பிறவியை வெற்றிகரமாக்கிக் கொள்ளும் மந்திரம்.

 

பதம் – 32

வ்யாமோஹ-ப்ரசமௌஷதம் முனி-மனோ-வ்ருத்தி-ப்ரவ்ருத்தி - ஒளஷதம்

தைத்யேந்த்ரார்தி - கரௌஷதம் த்ரி-புவனே - சஞ்ஜீவநைகெளஷதம்

பக்தாத்யத்த - ஹிதெளஷதம் பவ-பய-ப்ரத்வம்ஸனைகெளஷதம்

ச்ரேய:- ப்ராப்தி - கரெளஷதம் பிப மன: ஸ்ரீ-கிருஷ்ணதிவ்யௌஷதம்

 

மொழிபெயர்ப்பு

மனமே ! ஸ்ரீ கிருஷ்ணருடைய மகிமை  என்ற திவ்ய மருந்தை சற்றே பருகுவாயாக அதுவே மனக்குழப்பம் என்ற வியாதியை குணப்படுத்தக்கூடிய பூர்ணமருந்து. அதுவே முனிவர்களை ஊக்கப்படுத்தி தியானத்தில் மனதைச் செலுத்தச் செய்யும் மருந்து. அதுவே தைத்ய அரக்கர்களை வாட்டுகின்ற மருந்து. அதுவே மூன்று உலகங்களையும் பிழைக்க வைக்கக்கூடிய ஒரே மருந்து. அதுவே பரமபுருஷ பகவானின் பக்தர்களுக்கு அருளை அள்ளித்தரும் அருமருந்து. இன்னும் சொல்லப்போனால் மனித வாழ்க்கை என்ற ஒருவரின் அச்சத்தைப் போக்கி அவரை பரம நன்மை பெறச் செய்யக் கூடிய அருமருந்து அதுவே.

 

பதம் – 33

கிருஷ்ண த்வதீய - பத-பங்கஜ - பஞ்ஜராந்தம்

அத்யைவ மே விசது மானஸ் - ராஜ-ஹம்ஸ:

ப்ராண - ப்ரயாண - ஸமயே கஃப-வாத-பித்தை:

கண்டாவரோதன விதெள ஸ்மரணம் குதஸ் தே

 

மொழிபெயர்ப்பு

பிரபு கிருஷ்ணா, இந்த சமயத்தில் என்னுடைய மனம் என்ற அன்னப் பறவையை, தங்களுடைய தாமரைப் பாதத் தண்டுகளில் இப்போதே அடைக்கலம் கொடுங்கள். மரண வேளையின்பொழுது என்னுடைய தொண்டையை கபம், வாதம், பித்தம்போன்றவைகளால் தடைபடும்போது தங்களை எப்படி என்னால் நினைக்க  முடியும்?

 

பதம் – 34

சேதஸ் சிந்தய கீர்த்தயஸ்வ ரஸனே நம்ரீ-பவ த்வம் சிரோ

ஹஸ்தாவ் அஞ்ஜலி-ஸம்புடம் ரசயதம் வந்தஸ்வ தீர்கம் வபு:

ஆத்மன் ஸம்ச்ரய புண்டரீக - நயனம் நாகாசலேந்த்ர-ஸ்திதம்

தன்யம் புண்ய-தமம் தத் ஏவ பரமம் தைவம் ஹி ஸத்-ஸித்த யே

 

மொழிபெயர்ப்பு

மனமே, மலைபோன்ற அனந்தநாகத்தின் மீது படுத்திருக்கின்ற தாமரைக் கண்களுடைய பகவானை சற்றே நினைத்துப் பார்ப்பாயாக. நாக்கே, அவர் துதி பாடுக; சிரமே, அவர் முன் தாழ்க; கரங்களே, அவர் முன் கூப்பி அஞ்சலி செய்க. உடலே, அவர் முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கவும். இதயமே, அவரிடம் முழுமையாகச் சரணடை. அந்த மஹாபுருஷர் அதிஉன்னத மூர்த்தி. அவர் மட்டுமே சர்வமங்களமும், தூய்மையுமானவர். அவர் மட்டுமே நிரந்தர பூர்ணத்தை அளிக்க வல்லவர்.


பதம் – 35

ஸ்ருண்வன் ஜனார்தன - கதா-குண-கீர்த்தனானி

தேஹே யஸ்ய-புலகோத்கம-ரோம-ராஜி:

நோத்பத்யதே நயனயோர் விமலாம்பு-மாலா

திக் தஸ்ய ஜீவிதம் அஹோ புருஷாத மஸ்ய

மொழிபெயர்ப்பு

பிரபு ஜனார்தரின் லீலைகளையும் புகழையும் கேட்கின்றவரின் அங்க ரோமங்கள் பக்தி பரவசத்தில் குத்திட்டு நிற்கவில்லை என்றாலும், கண்ளகள் தூய அன்பினால் நீர் சிந்தாவிட்டாலும் அத்தகைய மனிதன் உண்மையிலே மிக மிகக் கேவலமான நீசன். கேவலமான வாழ்க்கையை அல்லவா அவர் வாழ்கிறார்!

 

பதம் – 36

அந்தஸ்ய மே ஹ்ருத-விவேக-மஹா-தனஸ்ய

செளரை: பிரபோ பலிபிர் இந்த்ரிய-நாமதேயை:

மோஹாந்த-கூப-குஹரே வினிபாதிதஸ்ய

தேவேஷ தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்

மொழிபெயர்ப்பு

பகவானே, என்னுடைய புலன்கள் என்ற பயங்கர திருடர்கள் என்னுடைய விவேகம் என்ற அரிய சொத்தை களவாடி என்னை குருடாக்கி மாயை என்ற இருண்ட ஆழமான கிணற்றினுள் எறிந்துவிட்டார்கள். தேவர்களின் ஈஸ்வரனே, தயவு செய்து அபயக்கரம் நீட்டி இந்த பாவாத்மாவை இரட்சியுங்கள்.

பதம் – 37

இதம் ஷரீரம் பரிணாம-பேஷலம்

பததி அவஷ்யம் ஸத-ஸந்தி-ஜர்ஜரம்

கிம் ஒளஷதம் ப்ருச்சஸி மூட துர்மதே

நிராமயம் கிருஷ்ண-ரஸாயனம் பிப

மொழிபெயர்ப்பு

இந்த சரீரம் மாற்றங்களுக்கு உட்பட்டு கொண்டிருக்கின்றது. சரீரத்திலுள்ள நூற்றுக்கணக்கான சந்திகள், கடைசியில் சக்தியிழந்து வீழ்ச்சியடைகிறது  இந்த உடல் முதுமைக்கு வயப்படேயாக வேண்டும். மதிகெட்ட மூடரே ! மருந்துண்டு ஆககூடியது என்ன ? கிருஷ்ணர் என்ற அருமருந்தைப் பருகுங்கள்.

 

பதம் – 38

ஆஷ்சர்யம் ஏதத்தி மனுஷ்ய-லோகே

ஸுதாம் பரித்யஜ்ய விஷம் பிபந்தி

நாமானி நாராயண - கோசராணி

த்யக்த்வான்ய - வாச: குஹகா: படந்தி

மொழிபெயர்ப்பு

மனித சமுதாயத்தின் மிக மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் அமுதினும் இனிய ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்களை தவிர்த்து , விஷத்திற்கு ஒப்பான  தேவையில்லாத மற்ற விஷயங்களைப் பற்றி பேசிகின்றனர் .

 

பதம் - 39

த்யஜந்து பாந்தவா: ஸர்வே நிந்தந்து குரவோ ஜனா:

ததாபி பரமானந்தோ கோவிந்தே மம ஜீவனம்

 

மொழிபெயர்ப்பு

என்னுடைய உறவினர்கள் என்னைக் கைவிட்டாலும் ; மூத்தோர் என்னைக் கண்டனம் செய்தாலும். பரமானந்தமான கோவிந்தரே என்னுடைய வாழ்வின்  ஆதாரமாவார்.

பதம் – 40

ஸத்யம் ப்ரவீமி மனுஜா: ஸ்வயம் ஊர்த்வ - பாஹுர்

யோ யோ முகுந்த நரஸிம்ம ஜனார்தனேதி

ஜீவோ ஜபதி அனு-தினம் மரணே ரணே வா

பாஷாண - காஷ்ட - ஸத்ருஷாய ததாதி அபீஷ்டம்

மொழிபெயர்ப்பு

மனித குலமே, உயர்த்திய கரங்களுடன் நான் உண்மையை பரை சாற்றுகிறேன்! முகுந்தா, நரசிம்மா, ஜனார்தனா என்ற நாமங்களை நாள்தோறுமோ, போரின்போதோ அல்லது மரண சமயத்தின் போதோ யார் உச்சரிக்கிறரோ அவர் தன்னுடைய உளமார்ந்த ஆசைகளை கல் அல்லது மரக்கட்டைக்கு கீழாகவே கருதுவார்.

 

பதம் – 41

நாராயணாய நம இதி அமும் ஏவ மந்த்ரம்

ஸம்ஸார-கோர-விஷ-நிர்ஹரணாய நித்யம்

ஷ்ருண்வந்து பவ்ய-மதயோ யதயோ ()நுராகாத்

உச்சைஸ்தராம் உபதிஷாமி அஹம் ஊர்த்வ-பாஹு:

மொழிபெயர்ப்பு

என்னுடைய கரங்களை உயர்த்தி என்னால் முடிந்த அளவுக்கு உரத்த குரலில் இந்த தயைமிகுந்த ஆலோசனையைக் கூறுகிறேன். துறவறத்தைச் சார்ந்தவர்கள் பௌதிக வாழ்க்கை என்ற பயங்கரமான மற்றும் நஞ்சுமிகுந்த சூழ்நிலையிலிருந்து விடுதலையடைய விரும்பினால் அவர்கள் சதாசர்வ காலமும் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தைக் கேட்பதற்கான நற்புத்தியை பெற்றிருக்க வேண்டும்.

 

பதம் – 42

சித்தம் நைவ நிவர்ததே க்ஷணம் அபி ஸ்ரீக்ருஷ்ண-பாதாம்புஜான்

நிந்தந்து ப்ரிய-பாந்தவா குரு-ஜனா க்ருணந்து முஞ்சந்து வா

துர்வாதம் பரிகோஷயந்து மனுஜா வம்சே கலங்கோ ()ஸ்து வா

தாத்ருக்-பிரேம தரானுராகா - மதுனா மத்தாய மானம் து மே

 

மொழிபெயர்ப்பு

என் மனம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடியை விட்டு ஒரு நொடி பொழுது கூட பிரிந்திருக்க இயலாது. அதனால் என்னுடைய உற்றார் உறவினர்கள் என்னை இடித்துரைத்தாலும்; என்னுடைய மேலோர் தங்கள் விருப்பப்படி என்னை ஏற்கவோ மறுக்கவோ செய்யதாலும்; ஊரார் என்னைப் பற்றி அவதூறு பேசினாலும் என்னுடைய குடும்ப கௌரவம் கெட்டாலும். என்னைப் போன்ற பித்தனுக்கு கடவுள் பிரேமை என்ற ஊற்றுப்பெருக்கை உணரக் கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதுகின்றேன். இந்த கெளரவம் நான்  பகவான் மீது நான் கொண்ட  பிரேமையை  மேலும் இனிமையுற செய்கிறது.

 

பதம் – 43

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்-த்ரய-குரு: க்ருஷ்ணா நமத்வம் ஸதா

க்ருஷ்ணேனாகில - ஸத்ரவோ வினிஹதா: க்ருஷ்ணாய தஸ்மை நம:

க்ருஷ்ணாத் ஏவ ஸமுத்திதம் ஜகத் இதம் க்ருஷ்ணஸ்ய தாஸோ ()ஸ்மி அஹம்

க்ருஷ்ணே திஷ்டதி விஷ்வம் ஏதீத் அகிலம் ஹேக்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம்

 

 

 

மொழிபெயர்ப்பு

திரிலோகங்களுக்கும்  குருவாகிய  பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை இரட்சிக்கட்டும். எப்போதும் கிருஷ்ணரை வணங்குங்கள். கிருஷ்ணர் நம்முடைய விரோதிகளை அழித்தவர். கிருஷ்ணருக்கு வந்தனங்கள். கிருஷ்ணரிடமிருந்தே இந்த உலகம் தோன்றியிருக்கிறது. நான் கிருஷ்ணரின் நித்ய தொண்டன். இந்த முழு பிரபஞ்சமும் கிருஷ்ணரில் அடங்கியிருக்கிறது கிருஷ்ணா, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்!

 

பதம் – 44

ஹே கோபாலக ஹேக்ருபா-ஜல-நிதே ஹே ஸிந்து-கன்யா-பதே

ஹே கம்ஸாந்தக ஹே கஜேந்திர - கருணா-பாரீண ஹே மாதவ

ஹே ராமானுஜ ஹே ஜகத்-த்ரயோ-குரோ ஹே புண்டரீகா க்ஷமாம்

ஹே கோபீஜன-நாத பாலய பரம் ஜானாமி த்வாம் வினா

 

மொழிபெயர்ப்பு

இடையர்க்குல சிறுவனே! கருணைக்கடலே! அலைமகள் லட்சுமியின் நாதரே! கம்சனை அழித்தவரே! கஜேந்திரனுக்கு நற்கதி அளித்தவரே! மாதவா! இராமரின் தம்பியே! மூவுலகங்களின் குருவே ! கோபியரின் பிரபுவான தாமரைக் கண்ணனே! நான் தங்களைத் தவிர உயர்ந்ததொன்றை அறியேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.

 

பதம் – 45

தாரா வார்-ஆகர-வர-ஸுதா-தே தனூஜோ விரிஞ்சி:

ஸ்தோதா வேதஸ் தவ ஸுர - கணா ப்ருத்ய-வர்க: ப்ரஸாத:

முக்திர் மாயா ஜகத் அவிகலம் தாவகீ தேவகீ தே

மாதா மித்ரம் பல-ரிபு-ஸுதஸ் தத் த்வத் அன்யம் ஜானே

 

மொழிபெயர்ப்பு

தங்களுடைய பத்தினி சமுத்திர இராஜனின் மகள்; தங்களுடைய மைந்தன் பிரம்ம தேவர்; வேதங்கள் தங்களைப் புகழும் துதிப்பாடல்; தேவர்கள் தங்களுடைய தொண்டர்களின் சமூகத்தில் அடங்குவர்; முக்தி என்பது தாங்கள் தரும் வரம்; இந்த முழு உலகமே தங்களுடைய மாயசக்தியின் தோற்றம். திருமதி தேவகி தங்களுடைய அன்னை; இந்திரனின்மைந்தன் அர்ஜுனன் தங்களுடைய நண்பன். இந்தக் காரணங்களால் எனக்கு தங்களைத் தவிர வேறு யாரிடமும் பற்றில்லை.

 

பதம் – 46

ப்ரணாமம் ஈசஸ்ய சிர:- ஃபலம் விதுஸ்

தத்-அர்ச்சனம் ப்ராண-ஃபலம் திவெளகஸ:

மன:- ஃபலம் தத்-குண-தத்த்வ சிந்தனம்

வச:- ஃபலம் தத்-குண-கீர்த்தனம் புதா:

மொழிபெயர்ப்பு

சிரசின் பூர்ணம் முழுமுதற் கடவுளுக்கு வந்தனங்களைச் செய்வதாகும் ,உயிர் மூச்சின் பூர்ணம் பகவானை வழிபடுவதாகும். மனதின் பூர்ணம் அவருடைய திவ்ய குணங்களை தியானிப்பதும், பேச்சின் பூர்ணம் அவரை போற்றி புகழ்வதாகும் என்பதை  தேவர்கள் அறிவார்கள்.

 

பதம் – 47

ஸ்ரீமன்-நாம ப்ரோச்ய நாராயணாக்யம்

கே ப்ராபுர் வாஞ்சிதம் பாபினோ ()பி

ஹா : பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா தஸ்மிம்ஸ்

தேன ப்ராப்தம் கர்ப்-வாஸாதி-து:கம்

 

 

மொழிபெயர்ப்பு

ஶ்ரீமன் நாராயணன் என்ற திருநாமத்தை உரக்க உச்சரித்த யார் ஓருவனுக்கும்  ஏன் பாவியாக  இருந்தாலும் கூட அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேறாமல் போனதுண்டோ ? அந்தோ ! நாம் மட்டும் நம்முடைய பேச்சுத்தன்மையை இந்த வழியில் பயன்படுத்துவதில்லை. ஆதலினால் கர்ப வாசம் போன்ற பல துயரங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

 

பதம் - 48

த்யாயந்தி யே விஷ்ணும் அனந்தம் அவ்யயம்

ஹ்ருத்-பத்ம-மத்யே ஸததம் வ்யவஸ்திதம்

ஸமாஹிதானாம் ஸததாபயா - ப்ரதம்

தே யாந்தி ஸித்திம் பரமாம் து வைஷ்ணவீம்

மொழிபெயர்ப்பு

எல்லையற்றவரும், வீழ்ச்சியடையாதவருமான பகவான் ஶ்ரீ  விஷ்ணு எப்போதும் நம் இதயத் தாமரையில் வீற்றிருப்பவராவார்; தங்கள் அறிவை அவர் மீது செலுத்தியவர்களுக்கு அபயம் அளிப்பவராவார். அவரை தியானிக்கும் பக்தர்கள் வைஷ்ணவர்கள் அடையும் உன்னத பூர்ணத்தை அடைவார்கள்.

 

பதம் – 49

தத் த்வம் ப்ரஸீத பகவன் குரு மய்ய் அனாதே

விஷ்ணோ க்ருபாம் பரம-காருணிக: கலு த்வம்

ஸம்ஸார-ஸாகர-நிமக்னம் அனந்த தீனம்

உத்தீர்தும் அர்ஹஸி ஹரே  புருஷாத்தமோ ()ஸி

 

மொழிபெயர்ப்பு

ஆதி பகவானான விஷ்ணுவே, தாங்கள் மிக மிக தயை கொண்டவர் இப்போது

எனக்கு தங்கள் கருணையைக் காட்டுங்கள். இந்த ஏதுமறியா ஆத்மாவிற்கு அருள் புரியுங்கள். முடிவில்லாதவரே, சம்சாரம் என்ற கடலில் மூழ்குகின்ற இந்தக் கேடுகெட்ட ஆத்மாவை கைகொடுத்துத் தூக்குங்கள். ஹரியே, தாங்களே முழுமுதற் கடவுள்.

 

பதம் – 50

க்ஷீர-ஸாகர-தரங்க-ஷீகரா

ஸார-தாரகித-சாரு-மூர்த்தயே

போகி-போக-ஷயனீய-ஷாயினே

மாதவாய மது-வித்விஷே நம:

மொழிபெயர்ப்பு

மது என்ற அரக்கனை வென்ற மாதவா, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். அவருடைய திவ்ய ரூபம் அனந்தநாக மஞ்சத்தில் படுத்த நிலையில் பாற்கடலின் அலைகள் அவர் மீது முத்துகளை தெளிப்பதுப் போல் அலங்காரிக்கின்றன.

 

பதம் – 51

அலம் அலம் அலம் ஏகா ப்ராணினாம் பாதகானாம்

நிரஸன-விஷயே யா கிருஷ்ண கிருஷ்ணேதி வாணீ

யதி பவதி முகுந்தே பக்திர் ஆனந்த-ஸாந்த்ரா

கரதல-கலிதா ஸா மோக்ஷ-ஸாம்ராஜ்ய-லஷ்மீ:

 

மொழிபெயர்ப்பு

கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, என்ற வார்த்தைகளே எல்லா உயிர் வாழிகளின் பாவங்களையும் போக்க போதுமானது. பிரபு முகுந்தரிடத்தில் யாருக்கு பக்தி இருக்கிறதோ, அந்த பக்தி பரவசப்பெருக்கில் பக்தனின் உள்ளங்கைகளில் மோக்ஷம், உலகச் செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றை தாங்கி நிற்கிறது.

பதம் - 52

யஸ்ய ப்ரியெள ஷ்ருதி-தரெள கவி-லோக-வீரெள

மித்ரெள த்வி-ஜன்ம-வர-பத்ம-ஷராவ் அபூதாம்

தேனாம்பு ஜா க்ஷ-சரணாம்புஜ-ஷட்-பதேன

ராக்ஞா க்ருதா க்ருதிர் இயம் குலசேகரேண

மொழிபெயர்ப்பு

இந்தப் பாமாலையை தீட்டியவர் இராஜா குலசேகரர் என்ற தாமரைக் கண்ணனின் தாமரைத் திருவடியில் ரீங்காரம் செய்யும் வண்டாவார். இராஜாவின் இரண்டு பிரியமான நண்பர்கள் பிராமணசமுதாயம் என்ற நேர்த்தியான தாமரையின் இரட்டைத்தண்டுகள். இந்த சமுதாயத்தவர்கள், கவிஞர்கள் சமூகத்தின் தலைவர்கள் என்று புகழபெற்ற வேத விற்பன்னர்கள்.

 

பதம் – 53

முகுந்த-மாலாம் படதாம் நராணாம்

அஷேஷ-செளக்யம் லபதே : ஸ்வித்

ஸமஸ்த-பாப- க்ஷயம் ஏத்ய தேஹீ

ப்ரயாதி விஷ்ணோ: பரமம் பதம் தத்

மொழிபெயர்ப்பு

இந்த முகுந்த மாலையை ஓதுபவர்கள் யாருக்குத் தான் மகிழ்ச்சி கிடைக்காமல் போகும்? மனித சரீரம்படைத்த ஒருவர் இந்தப் பிரார்த்தனைகளை ஓதினால் அவருடைய பாவங்கள் அனைத்தும் தொலைந்து அவர் பகவான் விஷ்ணுவின் பரமபதத்திற்கு நேராகச் செல்வார்கள்.


Comments

  1. very beautifully translated . thank you so much for your wonderful service. may Lord Mukunda shower his causeless mercy upon the devotees team. very useful for preaching. if you could include pronunciation numbers it will be very autenticate to recite and learn

    ReplyDelete
  2. ஹரே கிருஷ்ண ! மிகவும் நன்றி 🙏

    ReplyDelete

Post a Comment

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more