சூரியன் கடக ராசியிலிருந்து மகர ராசிக்கு நகர்வதே ‘மகர சங்கராந்தி’ என்ற பெயர் வந்ததற்குக் காரணம் மேலும் தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.
உத்தம வாழ்வு தரும் உத்திராயணம்
உத்திராயண காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி 1 முதல் மார்கழி 30 வரையான தட்சிணாயனம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை. சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment