மன்னன் ரிதத்வஜாவுக்குப் பின் அயோத்தியை அரசாண்டவன் ருக்மாங்கதன். முற்பிறவியில் அவன் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன். ஒரு அந்தணருடன் ஏற்பட்ட நட்பால் அவருடன் தீர்த்த யாத்திரை சென்று, ஏகாதசி விரதத்தை அனுசரித்ததால் கிடைக்கப் பெற்ற புண்ணியத்தால் மறுபிறவியில் பார்புகழும் மன்னனாய்ப் பிறந்தான். அவனது பட்டத்து ராணி சந்தியாவளி, இளவரசன் தர்மாங்கதன். அரசன் ஆழ்ந்த விஷ்ணு பக்தன். மன்னன் எவ்வழி, மக்களும் அவ்வழி என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைபிடிக்க வைத்தான். அதன்படி ஏகாதசி விரதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான். விரதநாளுக்கு முன், யானை மீதேறி ராஜாங்கம் முழுதும் ஏகாதசி தினம் என்றைக்கு வருகிறது என முரசொலித்து அறிவிக்கச் செய்வான். அன்றைக்கு 8-லிருந்து 85 வயதானவர்கள் வரை அனைவரும் உள்ளத்தூய்மையுடன் விரதமேற்க வேண்டும் என ஆணையிடுவான்.
அரச கட்டளையால் மக்களும் உறுதியுடன் விரதம் மேற்கொண்டதால், யமதர்மராஜனுக்கு வேலை பளு அறவே குறைந்து விட்டது. பாபம், புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் சித்திர குப்தனின் மசி எழுதுகோல் காய்ந்து போய், பாபம், புண்ணியம் குறிப்பெடுக்கும் பேரோடும் மக்கிப் போக ஆரம்பித்து விட்டது. எப்போதும் அமளியாய்க் கூச்சலும், கூக்குரலுமாக இருக்கும் நரகம் அமைதியாகி விட்டதையும், அதே சமயம் வைகுண்டம் ஆன்மாக்களின் புது வரவால் கலகலப்பாய் மாறி விட்டதையும், நேரில் கண்ட நாரதர், அதற்கு ஒரு வழி காண யமனையும், சித்திரகுப்தனையும் பிரம்மாவிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நிலைமையைத் தெரிவித்தனர்.
நரகத்தின் விதிமுறைகளின்படி, கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை விவரித்த யமன், அதையே மன்னன் ருக்மாங்கதனும் அனுபவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஹரி என்று வாய் விட்டுச் சொன்னாலேயே காசி, குருக்ஷேத்திரம் தீர்த்த யாத்திரையினால் கிடைக்கும் பலனை விட அதிகம் புண்ணியம் சேரும். மேலும் ஏகாதசி விரதம் அனுசரிப்பதால் யாகம் செய்த பலன் விரதம் மேற்கொண்டவர் கணக்கில் கூடும். ஆகையால் ருக்மாங்கதனின் செயலை மெச்சிப் பாராட்ட வேண்டுமே தவிர குறை கூறக் கூடாது! என்ற பிரம்மதேவன், மன்னன், யமன் இருவரின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் ஓர் உபாயத்தைக் கையாண்டார்.
உள்ளத்தை மயக்கி, கிறங்கடித்து, ஆசைவலையில் விழவைக்கத் தகுந்த ஓர் அழகான மோகினி எனும் பெண்ணை சிருஷ்டித்துப் பூவுலகுக்கு அனுப்பினார். அவளும் மந்தார மலையில் இருந்தவாறு சிவபூஜையில் ஈடுபட்டிருக்க, ஒருநாள் அவளை ருக்மாங்கதன் எதிர்கொண்டு காதல் வயப்பட்டான். காந்தர்வ மணம் புரிய முயற்சித்தான். அப்போது மோகினி, மன்னா! உம்முடைய ராஜ்ஜியம், பொன், பொருள் எதுவும் எனக்கு வேண்டாம். எப்போதாவது நான் விரும்பிக்கேட்பதை மறுப்பேச்சின்றி உடனே நிறைவேற்றி வைத்தால் அது ஒன்றே போதும். மேலும், நான் நான்முகனின் புத்திரியானதால் வேத முறைப்படி தகுந்த சாட்சியங்களுடன் நம் திருமணம் நடைபெற வேண்டியது அவசியம் என்றாள்.
அன்பே! இக்ஷ்வாகு குலத் தோன்றலான நான் வாக்குத் தவற மாட்டேன். அரண்மனை திரும்பியவுடன் உன் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பேன் எனக் கூறி அவளுடன் ராஜ்ஜியம் நோக்கிப் பயணமானான். போகும் வழியில், மன்னனின் குதிரை ஒரு பெரிய மரப்பல்லியின் மீது தன் பாதக்குளம்பைப் பதிக்க, நசுங்கி உயிருக்குப் போராடிய நிலையில் அது ஒரு பெண்குரலில் பேசிற்று: ராஜசிரேஷ்டரே! பூர்வ ஜென்மத்தில் பல கொடுஞ்செயல்களைப் புரிந்துள்ளேன். கணவனை அடக்கியாள சூனியாக்காரி கொடுத்த மருந்தைக் கணவனுக்குக் கொடுக்க, நாளடைவில் அவன் காசநோய்க்கு உள்ளாகி மாண்டான். நான் இறந்த பிறகு நரகத்தில் உழன்றேன். பின்பு, மாற்றுத் தண்டனையாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படியொரு மரப்பல்லியாய் வாழ்ந்து உயிர்விட இருக்கிறேன். உன்னால்தான் எனக்குக் கதிமோட்சம் கிடைக்கும் என்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டுவிட்ட விதி. அதனால் உன்னிடம் நான் கோருவது, நீ சேர்த்து வைத்துள்ள ஸ்ராவண துவாதசி பாரணைப் பலன்களை எனக்களித்து உய்விப்பாயாக! எனக் கூறினாள்.
பல்லியின் கோரிக்கைக்கு இணங்கக் கூடாது. அதை உதாசீனப்படுத்தி விடுங்கள். நாம் நம்வழியைப் பார்த்துக் கொண்டு முன்னேறுவோம். என்று மன்னனை மோகினி வற்புறுத்தினாள். அதைச் செவிடுமடுக்காமல், தன்னிடமிருந்த ஸ்ராவண துவாதசிப் பாரணைப் பலன்களை அதற்களித்து, அதை நற்கதி பெற வைத்து, நாடு போய்ச் சேர்ந்தான். அரசி, அரசகுமாரன் மற்றும் ராணிகள் நடந்ததை அறிந்து அரசன் மனம் கோணாமல் இருவருக்கும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மோகினி அவ்வப்போது இகழ்ந்தும், ஏசியும், அவமானப்படுத்தியதை மன்னன் பொறுத்துக் கொண்டான். ஆனால் ஒரு நாள் அவள், ஏகாதசி விரதத்தைக் கைவிடவும், அன்று அன்னம் புசிக்கவும் மன்னனை வற்புறுத்தினாள்.
அதை மட்டும் செய்யக் கேட்க வேண்டாம் என்று கெஞ்சினான் அரசன். மக்களுக்குத் தான் ஒரு வழிகாட்டியாக இருப்பதை எடுத்துக் கூறினான். ஏகாதசி விரதமிருந்தால் கொடுஞ்செயல்கள் பல செய்திருந்தாலும், தவறிழைத்து நுகர்வோரை பலவிதத்தில் ஏமாற்றியிருந்தாலும் அவைகளிலிருந்து விடுபடலாம் என எடுத்துச் சொல்லி மன்றாடினான். மோகினியோ கொடுத்த வாக்கை அவன் மதிக்கவில்லை எனக் கோபப்பட்டாள். விதவைகளும், துறவிகளும் தான் ஏகாதசி உபவாசம் ஏற்பதில் நியாயமுண்டு என்று வாதாடினாள். அரசி சந்தியாவளியின் பேச்சையும் கேட்க மறுத்து, ஏகாதசி விரதத்தைக் கைவிட மறுத்ததால், மன்னன் தன் உடைவாளினால் இளவரசனின் சிரசைத் துண்டித்து மோகினியின் மடியில் வைக்கட்டும் என்று அரசியே மன்னனிடம் சொல்லட்டும் என்றாள்.
தந்தையின் ஏகாதசி விரதத்துக்குப் பங்கம் ஏற்படக்கூடாது, அவரைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த இளவரசன் தர்மாங்கதன், மோகினியின் எதிர்பார்ப்புக்கு மகிழ்ச்சியுடன் இணங்கி முன் வந்தான். ருக்மாங்கதனும், தயங்கியபடியே உருவியவாளுடன் தயாரானான். அதே சமயம் மோகினி எதிர்பாராத விதமாய் மயங்கி விழுந்தாள். அப்போது அனந்தசயனன் அங்கு தோன்றி ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் அளவிலாப் பற்றும், உறுதியும் கொண்ட அரசன், அரசி மற்றும் இளவரசன் ஆகியோருக்கு வைகுண்டப் பிராப்தி அளித்து மறைந்தார்.
மயக்கம் தெளிந்த மோகினி மூவர் உடல்களையும் கண்டு அதிரிச்சி அடைந்தாள். அதுநாள் வரை நீரில் ஆழ்ந்த நிஷ்டையிலிருந்த ராஜகுரு அதிலிருந்து விடுபட்டு வந்தவர், நடந்ததை அறிந்து மிகுந்த சினத்துடன் மோகினிக்குச் சாபமிட்டு அவளைச் சாம்பலாக்கினார். பாபச் செயல் புரிந்த அவள் ஆன்மாவை வாயு தேவன் மேலுலகுக்கு எடுத்துச் செல்ல மறுத்தான். பாதாளம் மற்றும் பல லோகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டது. பிரம்மலோகத்துப் பிரதமப் புரோகிதர் வாசுதேவர் மோகினியின் ஆன்மா மீது அனுதாபம் கொண்டார். பிரம்மா, சிவன் முதலிய தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க அவளுக்கு மறு உயிர் வழங்கி, பாப விமோசனம் அளித்தார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment